அணையா அடுப்பு - 22



அருட்பெருஞ்ஜோதி
அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை
அருட்பெருஞ்ஜோதி

தேகத்தை சுடாதே!

வள்ளலாருக்கு சகுனங்கள் குறித்த நம்பிக்கை இருந்ததாக அவருடன் வாழ்ந்த சிலர் குறிப்பிட்டிருக்கிறார்கள்.எனினும் -அந்த சகுனங்களை தனக்கானதாகக் கருதாமல், அதனால் எவருக்கு என்ன நேருமோ என்றுதான் அச்சப்படு வாராம்.பல்லி கத்தும்போதெல்லாம் பதறுவாராம்.
ஆந்தைகள் அலறும்போதெல்லாம் ‘ஆண்டவனே’ என்று வேண்டிக்கொள்வாராம்.காக்கைகள் கரைவது, பருந்தின் சத்தம், நாய்களின் ஓலம் போன்ற சகுனங்களைக் கருத்தில் கொண்டு, தன்னுடைய அன்பர்களில் எவருக்கு என்ன ஆகுமோ என்று மனம் பதைபதைப்பாராம்.

ஆனால் -தனிப்பட்ட முறையில் தனக்காக அவர் சகுனம் பார்த்ததற்கு எவ்வித ஆதாரமுமில்லை.வெளியே செல்லும்போது பூனை குறுக்கில் ஓடுவது, ஒற்றை பிராமணர் வருவது, விதவைகள் எதிர்ப்படுவது போன்றவை அந்தக் காலத்தில் பெரும் சகுனத் தடைகளாக நம்பப்பட்டன.
வள்ளலார், இவற்றையெல்லாம் துச்சமாக எண்ணினார். அவருடைய கவலை அவரைப் பற்றியது அல்ல. உலகத்தைப் பற்றியது.புரட்சித் துறவியாக இருந்தும் அடிப்படையில் மிகவும் மென்மையான குணங்களைக் கொண்டவராகவே இருந்தார்.

குறிப்பாக வடலூரில் வாழத் தொடங்கிய பின்னர் எவரேனும் இருவர் ஒருவரோடு ஒருவர் உரத்துப் பேசுவதைக் கேட்டால் அவரது உள்ளம் நடுங்கத் தொடங்கியது.கதவுகள் காற்றில் டப்பென்று சப்தத்தோடு மூடினால் திடுக்கிடுவார். எங்கேனும் ‘ஐயோ’, ‘அம்மா’, ‘அப்பா’ என்று பிறர் அலறுவதைக் கேட்டாலே பதறி விடுவார்.

எனினும் -மூடநம்பிக்கைகளைக் கண்டாலே வள்ளலார் கொதித்தெழுந்து விடுவார்.பாரதத்தில் ராஜாராம் மோகன்ராய்க்கு முன்பாகவே மதச் சீர்திருத்தத்தில் ஈடுபட்டு செய்து காட்டிய மகான் அவர்.குழந்தைகளுக்கு காது குத்துதல், மூக்கு  குத்துதல் போன்றவை தேவையற்ற சடங்குகள் என்று விமர்சித்தார்.அப்போதெல்லாம் கணவரை இழந்துவிட்டால் பெண்களுக்கு கைம்மைக் கோலம் போடப்படும்.

மொட்டை அடிக்கப்பட்டு, நகைகளை முற்றிலுமாக துறந்து, வெள்ளை அல்லது காவி உடை உடுத்தப்பட்டு வீட்டின் ஒரு மூலையில் எவருக்கும் பயனற்றவர்களாக அமர வைக்கப்படுவார்கள்.
இந்த கைம்மைக் கோல வழக்கத்தை வள்ளலார் மிகவும் கடுமையாக எதிர்த்தார்.

கணவரை இழந்த பெண்கள் எப்போதும் போலவே இருக்க அனுமதிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். அது குறித்த பிரசாரங்களை தன்னுடைய சீடர்கள் மூலமாக முன்னெடுத்தார்.

மாறாக -
மனைவியை இழந்த கணவர்கள் உடனடியாக மறுமணம் செய்துகொள்வார்கள். ஆணுக்கு ஒரு நீதி, பெண்ணுக்கு ஒரு நீதியென்று தனித்தனியாக நீதி இருக்க முடியாது என்று வள்ளலார் தீவிரமாக நம்பினார்.’ஒருவனுக்கு ஒருத்தி’ என்கிற கருத்தாக்கம் பெண்ணுக்கு மட்டுமல்ல; ஆணுக்கும் வலியுறுத்தப்பட வேண்டிய பண்பாடு என்றார்.வள்ளலார் பெரும் எதிர்ப்பை சம்பாதித்தது இறப்பு குறித்த சடங்கின் போதுதான்.

இறந்தவரின் உடலை எரிப்பது தவறு என்பது அவரது வாதம். இறந்தவரை புதைக்க வேண்டும். அவர்கள் மற்றவர்கள் நினைவில் வாழ சமாதி அமைக்க வேண்டும். காரியம், கருமாதி கூடாது என்றார்.தர்க்கரீதியாக வள்ளலார் சொன்னதை பலரும் ஏற்றுக் கொண்டனர்.எனினும் -மதத்தையே மூலதனமாக்கி தங்கள் பிழைப்புக்கு தொழிலாக அதை மேற்கொண்டிருந்தவர்கள் எதிர்த்தார்கள்.

இறந்தவர்களை எரிக்க வேண்டும்; கருமாதி செய்ய வேண்டும் என்பதற்கு என்ன ஆன்மீக ஆதாரங்கள் இருக்கிறது என்று அவர்களோடு வாதிட்டார் வள்ளலார்.

பரன் அளிக்கும் தேகம் இது
சுடுவது அபராதம் எனப் பகிர்கின்றேன் நீர்
சிரம் நெளிக்கச் சுடுகின்றீர்
செத்தவர்கள் பற்பலரும் சித்த சாமி
உரனளிக்க எழுகின்ற திருநாள் வந்து
அடுத்தன ஈது உணர்ந்து நல்லோர்
வான் அளிக்க புதைத்த நிலை காணீரோ
கண் கெட்ட மானிடரே
- என்று பாடினார்.

வள்ளலார் இதுகுறித்து செய்த பிரசாரத்துக்கு பெரும் பலன் இருந்தது.இவரைப் பின்பற்றி வடலூருக்கு வந்த பிராமணர்கள் பலருமே கூட, தங்கள் மறைவுக்குப் பின் தங்கள் உடலைப் புதைக்க வேண்டுமென தங்கள் வாரிசுகளைக் கோரினார்கள்.வள்ளலாருக்கு இப்படிப்பட்ட பெரும் ஞானம் ஏற்பட அவரது வடமொழி வாசிப்பும் பெரும் உதவியாக இருந்தது.

பல நூற்றாண்டுகளாக எழுதப்பட்டு வந்த ஆன்மீகம் தொடர்பான கருத்துகளை வாசித்து உணர்ந்து கொள்வதற்காகவே அவர் வடமொழியில் பாண்டித்தியம் பெற்றார்.முறையான பள்ளிக் கல்வியறிவு பெறாத வள்ளலாரிடம், பன்மொழிகள் கற்ற பலரும் வந்து சந்தேகம் கேட்பதுண்டு.ஒருமுறை அப்போதைய காஞ்சி பீடாதிபதியே வடமொழியில் தனக்கிருந்த சந்தேகம் ஒன்று குறித்து வள்ளலாரிடம்தான் கேட்டுத் தெளிவு பெற்றிருக்கிறார்.

அதே நேரம் தமிழுக்கு ஒரு சிறுமையென்றால் பொங்கி எழவும் வள்ளலார் தயங்கியதில்லை. தன் தாய்மொழியை எவரிடமும், எப்போதும் அவர் விட்டுக் கொடுத்தாரில்லை.

வள்ளலாரிடம் வடமொழியில் ஒரு சந்தேகம் கேட்ட அதே சங்கராச்சாரியர், பின்னொரு முறை “சமஸ்கிருதம்தான் உலகத்தில் இருக்கும் அத்தனை மொழிகளுக்குமே தாய் மொழி...” என்கிற கருத்தினைக் கூறியிருந்தார்.இதுபற்றி வள்ளலாரிடம் கேட்டபோது, “அப்படியெனில் உலகத்தில் இருக்கும் அத்தனை மொழிகளுக்குமே தந்தை மொழி நம் தமிழ்தான்...” என்று பதிலடி கொடுத்தார்.

வள்ளலார் வடமொழியை வெறுத்ததில்லை. அதற்காக தமிழை எங்குமே விட்டுக் கொடுத்ததுமில்லை.வள்ளலார் தன் சமகாலத்தில் வாழ்ந்த மகான்கள் பலரோடும் அறிவுரீதியான உரையாடலிலும், உறவிலும் இருந்தார்.

மதுரை திருஞானசம்பந்தர் ஆதினத்தின் 288வது குருமகா சன்னிதானம் தவத்திரு ஆறுமுகத் திருஞானசம்பந்த தேசிகர், திருவாவடுதுறை ஆதின மடத்தம்பிரான் தாண்டவராய சுவாமிகள், மதுரை ஆதினம் சிதம்பர சுவாமிகள், கொண்ணூர் ஐயாசாமி முதலியார், காஞ்சிபுரம் மகாவித்வான் சபாபதி முதலியார், புதுவை சுப்பராய முதலியார் போன்ற பலரும் வள்ளலாரோடு கடிதத் தொடர்பிலும், நேர்த்தொடர்பிலும் இருந்து வந்திருக்கின்றனர்.

(அடுப்பு எரியும்)
 
தமிழ்மொழி

ஓவியம்: ஸ்யாம்

தமிழ்மொழி