சிலுவையில் தொங்கும் நினைவுகள்!



இந்தியாவில் வெளியான தரமான சீரியல் கில்லர் படங்களைப் பட்டியலிட்டால் அதில் முதன்மையான இடத்தைப் பிடிக்கும் தகுதி வாய்ந்த ஒரு படம் ‘மெமரிஸ்’. ஹாட் ஸ்டாரில் இலவசமாகப் பார்க்கக் கிடைக்கிறது இந்த மலையாளப்படம்.

குடும்பத்தை இழந்ததால் கொலைகாரன் ஆனவன்... குடும்பத்தை இழந்ததால் மதுவுக்கு அடிமையான காவல்துறை அதிகாரி... இருவருக்கும் இடையிலான யுத்தம்தான் இப்படம். கேரளாவில் புதிதாக திருமணமான கணவர் ஒருவர் காணாமல் போகிறார். அடுத்த மூன்று நாட்களில் அவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டு ஒரு மரத்தில் சிலுவையில் அறையப்பட்டதைப் போல தொங்கவிடப்படுகிறார்.

கொலைகாரன் யார் என்று கண்டுபிடிக்க காவல்துறை களத்தில் இறங்குவதற்குள் இன்னொரு கொலை அதே மாதிரி நடக்கிறது. இருவரும் ஒரே மாதிரி கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள் என்று பிரேதப் பரிசோதனை சொல்கிறது.

கொலைகாரனைப் பிடிக்க எந்த தடயமும் கிடைக்காமல் திக்குமுக்காடிப் போகிறது காவல்துறை. சிறப்பு படை அமைத்து தேடுதல் வேட்டையில் இறங்குகிறது. ஆனால், எந்தப்பயனும் இல்லை. ஆம்; அடுத்தடுத்து இரண்டு கொலைகள் நடக்கின்றன. நாலாப்பக்கமிருந்தும் காவல்துறைக்கு அழுத்தம் அதிகமாகிறது.

இப்போதிருக்கும் ஆட்களை வைத்துக்கொண்டு கொலைகாரனைக் கண்டுபிடிக்க முடியாது. இதற்கு சரியான ஆள் சாம் அலெக்ஸ்தான் என்று நினைக்கிறார் உயர் அதிகாரி. ஒரு காலத்தில் திறமையான காவல்துறை அதிகாரியாக இருந்தவர் சாம். தன் கண் முன்னாடியே மனைவியையும் குழந்தையையும் எதிரிகளிடம் பறிகொடுக்கிறார். போலீஸ் வேலையால்தான் மனைவியும் குழந்தையும் இறந்தார்கள் என்ற குற்றவுணர்வால் மதுவுக்கு அடிமையாகிவிட்டார். எந்நேரமும் கையில் மதுபாட்டிலுடன் இருக்கும் அவரை மனைவி, குழந்தையைப்பற்றிய நினைவுகள் துரத்திக்கொண்டே இருக்கின்றன.

இந்தச் சூழலில் கொலைகாரனைக் கண்டுபிடிக்க சாமின் உதவியை நாடுகிறார் உயர் அதிகாரி. ஆரம்பத்தில் மறுக்கும் சாம் பிறகு சம்மதிக்கிறார்.
ஆனால், சாம் அலெக்ஸால் கொலைகாரனைக் கண்டுபிடிக்க முடியாது. அவர் போதைக்கு அடிமையாகிவிட்டார். அவர் பழைய பன்னீர்செல்வம் இல்லை. இது வீணான வேலை என்று சிறப்புப் படையைச் சேர்ந்தவர்கள் கிண்டல் செய்கின்றனர்.

சக காவல்துறையினரின் கேலி, கிண்டல் மற்றும் மனைவி, குழந்தையைப் பற்றிய நினைவுகளை மீறி கொலைகாரனை எப்படி சாம் கண்டுபிடிக்கிறார் என்பதே திக் திக் திரைக்கதை.மதுக்கடை திறப்பதற்கு முன்பே வாசலில் காத்திருக்கும் குடிகாரனாகவும் கொலைகாரனை வியூகம் அமைத்துக் கண்டுபிடிக்கும் திறமையான போலீஸ் அதிகாரியாகவும் நடிப்பில் டபுள் ஸ்கோர் செய்திருக்கிறார் சாம் அலெக்ஸாக நடித்த பிருத்விராஜ்.

‘திரிஷ்யம்’ படத்தின் மூலம் பட்டிதொட்டியெல்லாம் புகழடைந்த ஜீத்து ஜோசப்தான் இதற்கும் இயக்குநர். தமிழில் ‘ஆறாது சினம்’ என்று இந்தப் படம் ரீமேக் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.