சிதைவுற்ற முகம் கொண்ட சிறுவன்!



‘நெட்பிளிக்ஸி’ன் டாப் டிரெண்டில் இடம் பிடித்திருக்கும் ஹாலிவுட் படம், ‘வொண்டர்’.

சில வருடங்களுக்கு முன்பு அமெரிக்காவைச் சேர்ந்த பெண் எழுத்தாளர் ஆர்.ஜே.பலசியோ தன் மகனுடன் ஒரு ஐஸ்கிரீம் கடைக்குச் சென்றிருந்தார். திடீரென மகன் அழ ஆரம்பித்துள்ளான். என்னவென்று பலசியோ கேட்க, அவன் யாரையோ பார்த்து கை நீட்டியிருக்கிறான்.

மகன் கை நீட்டிய திசையில் முகம் சிதைவுற்ற ஒரு குழந்தை நின்றுகொண்டிருந்தது. இந்த தர்மசங்கடமான சூழலும் அந்தக் குழந்தையும் தந்த இன்ஸ்பிரேஷனில் ‘வொண்டர்’ என்ற நாவலை எழுதினார் பலசியோ. விற்பனையில் சக்கைப்போடு போட்ட இந்நாவலைத் தழுவி உருவாகியிருக்கிறது இப்படம்.

இஸபெல் - நேட் தம்பதியின் செல்லப்பிள்ளை ஆகஸ்ட் என்னும் ஆகி. தாயின் கருவில் இருக்கும்போதே ட்ரீச்சர் காலின்ஸ் சிண்ட்ரோமால் பாதிக்கப்பட்டு முகம் சிதைவுற்று பிறக்கிறான் ஆகி. மருத்துவத்துறையில் எப்போதாவது நிகழும் ஓர் அரிய துயர நிகழ்வு, இதை சரி செய்வது கடினம் என்று மருத்துவர்கள் சொல்ல, ஆடிப்போகின்றனர் இஸபெல்லும் நேட்டும்.

ஆகிக்கு 27 விதமான அறுவை சிகிச்சைகள் செய்யப்படுகின்றன. இருந்தாலும் முகச் சிதைவை சரி செய்யமுடியவில்லை. ஹோம் ஸ்கூலிங் முறையில் வீட்டிலிருந்தே கல்வி கற்கிறான். வீட்டைவிட்டு வெளியே எங்கேயும் அவன் வருவதில்லை. வீட்டுக்குள்ளே இருந்தாலும் முகச் சிதைவை மறைத்துக்கொள்ள எப்போதும் ஹெல்மெட் அணிந்துகொள்கிறான். அம்மா, அப்பா, அக்கா என அனைவரும் அவனிடம் அன்புடன் நடந்துகொள்கிறார்கள். இருந்தாலும் தன் முகத்தை நினைத்து நொந்துகொள்கிறான்.

அவனுக்கு நம்பிக்கையூட்டி பள்ளிக்கு அனுப்புகின்றனர் பெற்றோர்கள். தயங்கித் தயங்கி வீட்டைவிட்டு வெளியே வந்து பள்ளிக்குப்போகிறான். அங்கே அவனை வேற்றுகிரகவாசியைப் போல கேலி, கிண்டலுடன் பெரும்பாலான மாணவர்கள் அணுக, ஜாக் மட்டும் ஆகியை நண்பனாகப் பார்க்கிறான். ஜாக்கின் நட்பு ஆகிக்குப் புது நம்பிக்கையைத் தருகிறது.

முதன்முதலாக ஒரு நண்பன் கிடைத்த உற்சாகத்தில் மகிழ்ச்சியாக பள்ளிக்குப் போக ஆரம்பிக்கிறான். ஹாலோவீன் திருவிழா வருகிறது. பேய் வேடமணிந்து பள்ளிக்கு வருகிறான் ஆகி. அப்போது வகுப்பில் இருக்கும் ஜாக், ‘‘என் முகம் மட்டும் ஆகியைப் போல இருந்திருந்தால் நான் செத்துப்போயிருப்பேன்...’’ என்று சொல்ல, அது ஆகியின் காதில் விழுகிறது.

உடைந்து சுக்குநூறாகப் போகும் ஆகி, ஜாக்கை மட்டுமல்ல, பள்ளிக்குப் போவதையும் வெறுக்கிறான். இதிலிருந்து மீண்டு எப்படி பள்ளியிலேயே சிறந்த மாணவனாகிறான் என்பதே ‘வொண்டர்’ திரைக்கதை. ஆகியாக கண்ணீரை வரவழைக்கிறான் ஜேக்கப். குழந்தைகளுடன் சேர்ந்து பெரியவர்களும் பார்க்க ஓர் அற்புதமான படத்தை தந்திருக்கிறார் இயக்குநர் ஸ்டீபன் சோப்ஸ்கி.