தாமரை மலர தண்ணீர் ஊற்றிய கரங்கள்!



FaceB(JP)ook -மினி தொடர் 8

மோடியை இந்தியப் பிரதமராக்குவதற்கான ஊர் அறிந்த ரகசியக் குழு உருவாகிக் கொண்டிருந்தது. வரலாற்றில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு இவர்கள் அரசியல் மார்க்கெட்டிங் என்ற புதிய கண்டுபிடிப்பை இந்திய அரசியலில் நிகழ்த்திக் காட்டினார்கள். ராஜேஷ் ஜெயின் நிதி டிஜிட்டல் (NITI Digital) என்ற நிறுவனத்தைத் தொடங்கினார்.
இந்தியாவின் மாற்றத்துக்கான புதிய தொடக்கம் (New Initiatives to Transform India - NITI) என்பதுதான் இதன் விரிவாக்கம். இந்தியில் ‘நிடி’ அல்லது ‘நிதி’ என்ற சொல், கொள்கை என்றோ அறம் என்றோ சூழலுக்கு ஏற்ற பொருளில் வழங்கப்படும். பின்னாளில் மோடி அரசு ‘நிதி ஆயோக்’ (NITI Aayog) என்ற அமைப்பைத் தொடங்கியதும் கிட்டத்தட்ட இப்படியான ஒரு மாற்றத்துக்கானது என்ற பொருளில்தான்.

ஜெயினின் தொடக்க கால நிறுவனங்களில் ஒன்று நிதிசென்ட்ரல்.காம் (Niticentral.com). இது பாஜகவுக்கு ஆதரவான செய்திகளை வெளியிடும் தளம். இதன் முதல் ஆசிரியராக கஞ்சன் குப்தா செயல்பட்டார். இந்த கஞ்சன் குப்தா, வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது, பிரதமர் அலுவலகத்தில் அப்போதைய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பிரஜேஷ் மிஸ்ராவுடன் இணைந்து பணியாற்றியவர். பின்னர், எகிப்தின் கெய்ரோவில் இருக்கும் மெளலானா ஆசாத் இந்திய கலாசார மையத்தின் தலைமைப் பொறுப்பில் இருந்தவர்.

அடுத்தடுத்த ஆண்டுகளில் இந்த மீடியா, மோடிக்காக ஆன்லைனில் மிகப் பெரிய செல்வாக்கை உருவாக்கும் நிறுவனமாக உயர்ந்தது. ஜெயின் அப்போதுதான் ‘இந்தியா272.காம்’ என்ற புதிய தளத்தை உருவாக்கினார்.
இதில் ‘272’ என்பது பாஜக அடைய வேண்டிய நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை. இதில், பி.ஜி.மகேஷ் என்ற பெங்களூருவைச் சேர்ந்த தொழிலதிபர், சசிசேகர் வேம்படி போன்றோர் உதவினர்.

இந்த சசிசேகர், சமீபத்தில்தான் அமெரிக்காவின் இன்போசிஸ் நிறுவனத்திலிருந்து ராஜினாமா செய்துவிட்டு, இந்தியா வந்திருக்கிறார்.

இது மட்டுமல்ல; மத்திய அரசின் பிரசார் பாரதி கார்ப்பரேஷனின் தலைமைப் பொறுப்பில் இப்போது இருப்பவர் இவர்தான். பிரசார் பாரதிதான் தூர்தர்ஷனையும் ஆல் இந்தியா ரேடியோவையும் நடத்தி வருகிறது என்பதைச் சொல்ல வேண்டியதில்லை.

என்.டி.டி.வியின் முன்னாள் ஆங்கராகப் பணியாற்றிவிட்டு பிறகு பல்வேறு வலதுசாரி கருத்தியல் சார்புடைய தொழில் நிறுவனங்களில் பணியாற்றிவிட்டு ஃபேஸ்புக் இந்தியாவிலும் பணியாற்றிய சிவ்நாத் துக்ரல், வங்கி முதலீட்டாளர் அனுஜ் குப்தா ஆகியோர் ஹிரான் ஜோஷிக்கு ‘மேரா பரோசா’ (எனது நம்பிக்கை) என்ற இணையதளத்தை நடத்த உதவினர்.

இதுவும் மோடியின் புகழ்பாட உருவாக்கப்பட்ட ஏற்பாடுதான். இந்த அனுஜ் குப்தா மிகத் தொடக்கத்திலிருந்தே அமைச்சர் பியுஷ் கோயலுடன் நல்ல தொடர்பில் இருப்பவர். இந்த முக்கியமான ஆட்டக்காரர்களைத் தவிர கேட்டி ஹர்பத் என்னும் அமெரிக்க ஃபேஸ்புக் அதிகாரி யும் அதிகார விளையாட்டில் இருக்கிறார். இவர்கள் ஒவ்வொருவரும் எப்படி மோடிக்கு உதவினார்கள் என்பதைப் பற்றி தனித் தனி அத்தியாயமே எழுதலாம்.

ராஜேஷ் ஜெயினின் முதன்மையான சாதனை இப்படியான பிரசார வாகனங்களை உருவாக்கியது மட்டுமல்ல. 2014ம் ஆண்டின் நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிக்க இருக்கும் வாக்காளர்கள் பற்றிய டேட்டா பேஸை திரட்டியதுதான். தங்களுடைய பொய், புரட்டான டார்கெட் மெசேஜ்களை இவர்கள் வாட்ஸ்அப் மற்றும் ஃபேஸ்புக் மூலம் இப்படித் திரட்டப்பட்ட கோடிக்கணக்கான வாக்காளர்களுக்குக் கொண்டு சென்றார்கள். இது நினைத்துப் பார்க்க முடியாத விஷயம்.

பொதுமக்களிடமிருந்தும், வாக்காளர் பட்டியல்களிலிருந்தும், வாக்குச் சாவடி மையங்களின் படிவங்களிலிருந்தும் இந்த மாபெரும் டேட்டாவை இரவும் பகலுமாகத் திரட்டினார்கள். பொதுமக்களிடம் புழக்கத்தில் உள்ள டேட்டாக்களைக் கொண்டு வாக்களிக்கும் முறைமையைக் கணித்தார்கள். இதன் மூலம் பாஜக பலமாக உள்ள தொகுதிகள், பலவீனமாக உள்ள தொகுதிகள் அடையாளம் காணப்பட்டன.

இது இந்திய அளவிலிருந்து மாநிலங்கள் அளவில், மாநிலங்கள் அளவிலிருந்து மாவட்ட அளவில், மாவட்ட அளவிலிருந்து தொகுதி அளவில், தொகுதி அளவிலிருந்து வாக்குச் சாவடி அளவில்... என அடிமட்டம் வரை தொகுத்து எடுப்பதாக இருந்தது. இப்படி இறங்கி வேலை செய்ததுதான் பாஜகவின் வெற்றிக்குப் பிரதான காரணம்.இப்படி தொகுத்து எடுக்கப்பட்ட தகவல்களைக் கொண்டு அதற்கான பிரத்யேக அல்கோரிதம்கள் உருவாக்கப்பட்டன.
சாதி, நிலம், தொழில், வர்க்கம், நகரம், கிராமம் என்ற பகுப்பு மட்டுமல்ல, மதத்தின் அடிப்படையிலான பகுப்பும் முதன் முறையாக அனுசரிக்கப்பட்டது (இவர்களின் அரசியலே அதுதானே).

இப்படி வாக்காளர்களைப் பலதரப்பட்டவர்களாகப் பிரித்துக் கொள்வது, பாஜகவின் சமூக வலைத்தள மேலாளர்களுக்கு மைக்ரோ டார்கெட்கள் பிரித்துக் கொள்ள உதவியாக இருந்தது. நபருக்குத் தகுந்தாற்போல ஒவ்வொருவரையும் வளைப்பதற்கான திட்டங்கள் தீட்ட இந்தப் பகுத்துத் தொகுத்தல் முறை சிறப்பாக உதவியது. இதற்கு ஃபேஸ்புக், டுவிட்டர் போன்ற தளங்கள் சிறப்பாகப் பங்களித்தன.

இதில் குறிப்பிட வேண்டிய இன்னொரு விஷயம் என்னவெனில், இஸ்லாமியர்களையும் இன்னபிற மதச் சிறுபான்மையினரையும் அடையாளம் காண தனித் தனியான டேட்டா பேஸ்கள் உருவாக்கப்பட்டன என்பதுதான். இதன் மூலம் யாரிடம் எதைச் சொல்ல வேண்டும் என்பது மட்டுமல்ல, யாரிடம் எதைச் சொல்லக் கூடாது என்பதும் அறியப்பட்டது.பின்னர் இந்தத் தகவல்களைத்தான் பகுதி பகுதியாகப் பிரித்து ஜெயினின் அணியினர் தங்களுக்கு மிஸ்டு கால் கொடுத்தால் பிஜேபியில் இணையலாம் போன்ற பிரசாரங்களுக்கு எல்லாம் பயன்படுத்தினார்கள்.

பாஜகவில் இணைய மிஸ்டு கால் கொடுப்பவர்களிடம் அவர்களின் வோட்டர் ஐடி உள்ளிட்ட தகவல்கள் கேட்கப்பட்டன. பலர் இதனைக் கொடுத்தார்கள். இதன் மூலம் அவர்கள் தேர்தலுக்கு மிக முன்பே பாஜகவின் வாக்காளர்களாகக் கருதப்பட்டு, அந்த வாக்குகள் சிந்தாமல் சிதறாமல் வாக்கு இயந்திரத்தில் சேகரமாக்க பிரசாரம் வகுக்கப்பட்டது.இன்னொரு புறம் ராஜேஷ் ஜெயினைத் தவிரவும் பிஜேபியின் தகவல் தொழில்நுட்பப் பிரிவு தீவிரமாகக் களமாடத் தொடங்கியிருந்தது.

2013ம் ஆண்டே ஃபேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப் உடன் தங்கள் உரையாடலைத் தொடங்கினார்கள். அரசியல் களத்தில் பிஜேபிதான் இந்த மைக்ரோ டார்கெட் அரசியலை முதலில் கையில் எடுப்பவர்கள் என்பதான சித்திரத்தை கார்ப்பரேட்களிடம் உருவாக்க முயன்றார்கள். அதில், கணிசமான வெற்றியும் பெற்றார்கள். இந்தியாவில் உள்ள ஃபேஸ்புக் ஊழியர்கள் பிஜேபியின் தகவல் தொழில்நுட்ப அணியுடன் இணைந்து பயிற்சிப் பட்டறைகள் நடத்தினார்கள் என்ற உண்மையும் இப்போது வெளிவந்துள்ளது.

இப்படி, கொஞ்சம் கொஞ்சமாகத் திட்டமிட்டு காய்களை நகர்த்தித்தான் மோடி தன்னை ஒரு மாபெரும் அதிகார பிம்பமாக வளர்த்தெடுத்திருக்கிறார். இதன் பின் பல்வேறு கரங்கள் இருக்கின்றன. மோடியின் ஐடி ஆலோசகர்கள் அவருக்கு என்னென்ன ஆலோசனைகள் கொடுத்தார்கள்... எப்படி சமூக வலைத்தளங்களை வளைத்தார்கள்..?  

(தொடர்ந்து தேடுவோம்)

- இளங்கோ கிருஷ்ணன்