நியூஸ் வேசிவகார்த்திகேயன், பொன்ராம் படத்திற்காக முழு கால்ஷீட் கொடுத்து விட்டார். இப்படித்தான் மற்ற தயாரிப்பாளர்களும் அவரிடம் டேட்ஸ் வாங்க முயற்சிக்கிறார்கள். ஆனால், ‘‘ஸாரி... இது பொன்ராமிற்கு மட்டுமே’’ என செக் வைக்கிறார் சிவகார்த்தி.

தினமும் ஏதாவது ஒரு வடிவத்தில் அசைவம் எடுத்துக் கொண்ட அஜித், திடீரென்று அதை விட்டுவிட்டார். இனி அவர் ப்யூர் வெஜிடேரியன். தன்னைச் சந்திக்கிற எல்லோரிடமும் வெஜிடேரியனாக இருப்பதின் அருமை பெருமைகளைச் சொல்கிறார். நியூ இயர் செய்தியாக இதைப் பிரபலப்படுத்தவும் முடிவு செய்திருக்கிறாராம். அப்ப இனிமே வெஜ் பிரியாணி மட்டும்தானா?

சமஸ்கிருதத்தை படிக்கச் சொல்லி கங்கணம் கட்டும் மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிரிதி இரானி எதிர்காலத்தில் குடியரசுத் தலைவர் ஆவாராம். ஒரு ஜோசியர் அவரது ஜாதகத்தை அலசி சொன்ன தகவல் இது! 

முத்தப் போராட்டம் பல நகரங்களில் பரவும் நேரத்தில் ஒரு பகீர் அறிவியல் உண்மையும் வந்திருக்கிறது. 10 நொடிகள் உதட்டோடு உதடு ஆழமாக முத்த மிடும்போது அதிகபட்சம் 8 கோடி பாக்டீரியாக்கள் பரவக்கூடும்.

‘மான் கராத்தே’ எடுத்த திருக்குமரன் அடுத்து உதயநிதியை வைத்து படம் எடுக்கிறார். அதில் உதயநிதியின் அப்பாவாக சத்யராஜ் நடிக்கிறார். கதை கேட்டு முடித்த அடுத்த விநாடியில் ஓகே சொன்னாராம் சத்யராஜ்.

மாடலிங்கிலிருந்து சினிமா ரூட்டைப் பிடித்தவர் நிக்கி கல்ரானி. தமிழில் 2 படங்களில் நடித்து வரும் பொண்ணு, கன்னடத்திலும் மலையாளத்திலும் தலா ரெண்டு படங்கள் கைவசம் இருப்பதால், பெங்களூரு, திருவனந்தபுரம், சென்னை என பறந்து கொண்டிருக்கிறார்.

விஜய்சேதுபதியின் ‘ஆரஞ்சு மிட்டாய்’ பட டீஸர் தனுஷை வெகுவாகக் கவர, உடனே பாராட்டி ட்விட்டி விட்டார். ‘‘தொடர்ந்து ஒவ்வொரு முறையும் வித்தியாசமான முயற்சிகளை செய்கிறார் விஜய்சேதுபதி’’ என சிலாகிக்கிறார் தனுஷ். இந்தியில் தனுஷ் - அக்ஷரா நடிக்கும் ‘ஷமிதாப்’பில் இருவருக்கும் டூயட்டோ, லவ் சீன்களோ கிடையாது என்பது கூடுதல் தகவல்.

இசைக்கோர்ப்புக்காக சமீபத்தில் ஜெர்மனி சென்று வந்த ஜி.வி.பிரகாஷ், அடுத்து அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்தின் பாடல்களுக்காக ரஷ்யா செல்கிறார். ‘‘நடிப்பு ஒரு புது அனுபவம்... அவ்ளோதான்! மத்தபடி மியூசிக்தான் முக்கியம்’’ என்கிறார் பிரகாஷ்.

இராக்கிலும் சிரியாவிலும் தங்கள் இஸ்லாமிய அரசை நிறுவியுள்ள ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பு தங்கள் நாட்டுக்கென தனியே நாணயத்தை வெளியிட்டுள்ளது. பல வளைகுடா நாடுகளின் கரன்ஸி போலவே இதன் பெயரும் ‘தினார்’. ஐந்து தினார் நாணயத்தில் சுமார் 21 கிராம் தங்கம் உள்ளது. எனினும் இந்தக் கரன்ஸியை உலக நாடுகள் அங்கீகரிக்கவில்லை.

‘‘பிரியாணிக்கு பெஸ்ட் சைட் டிஷ் எது?’’ என்று கேட்டால், நீங்கள் சொல்வது எதுவும் ஜீவாவின் டேஸ்ட்டிற்கு ஒத்துப் போகாது. காரணம், பிரியாணியுடன் ஊறுகாயை சைட் டிஷ்ஷாக ரசித்து சாப்பிடுவது ஜீவாவின் ஹேபிட்.

மோடி அரசின் நூறு நாள் சாதனைகளைப் பட்டியலிடும் புத்தகம் ஒன்றை மத்திய அரசு ரெடி செய்தது. மோடி புன்னகைக்கும் அட்டைப்படத்தோடு உருவான அந்த 98 பக்க புத்தகம், 500 அதிரடி முடிவுகளை மோடி அரசு எடுத்ததாக பட்டியலிட்டது. புத்தகம் ரெடியாகி வந்தபிறகுதான் கண்டுபிடித்தார்கள், அதில் பல கொள்கை முடிவுகள் கடந்த காங்கிரஸ் ஆட்சியில் எடுக்கப்பட்டவை! அதிகாரிகள் ஆர்வக் கோளாறில் சொதப்பி விட்டார்கள். அதனால் புத்தகத்தை அப்படியே தூக்கிப் போட்டுவிட்டார்கள்.

ஆதரவற்ற மற்றும் வயோதிக விலங்குகளுக்கான அமைப்பு ஒன்று சென்னை அருகே உள்ள முடிச்சூரில் உள்ளது. விலங்குகளின் காதலியான த்ரிஷா, இங்கே சென்று க்ளீன் இண்டியாவிற்கு வலு சேர்த்துள்ளார். ‘‘இந்த பூமி நமக்கு மட்டுமே அல்ல. மற்ற உயிர்களுக்குமானது. அவை வாழத் தகுதியான சூழலை அமைத்துத் தருவது நம் பொறுப்பு’’ என தத்துவம் உதிர்த்துள்ளார் த்ரிஷ்.

தெலுங்கு படத்தின் ஷூட்டிங்கிற்காக அமெரிக்கா பறந்திருக்கிறார் அஞ்சலி. திரும்பி வந்ததும், விமலுடன் நடிக்கும் படத்தின் ஷூட்டிங்கில் பங்கேற்கிறார்.

வரும் 2015 நயன்தாரா - ஹன்சிகா ஆண்டாக இருக்கும் போலிருக்கிறது. நயன் கையில் தெலுங்கு, மலையாளம் சேர்த்து லிஸ்ட் எட்டைத் தாண்டுகிறது. ஹன்சிக்கு தமிழிலேயே நடித்து முடித்த படங்கள் சேர்த்து ஆறு. பெரும் பாலும் அடுத்த ஆண்டுதான் இந்தப் படங்களின் ரிலீஸ் இருப்பதால் நிச்சயம் இருவருக்குமே இது ‘ஹேப்பி’ நியூ இயர்தான்.

‘லிங்கா’வில் சோனாக்ஷிக்கு டப்பிங் பேசியிருப்பவர் சின்மயி. அனுஷ்கா, சோனாக்ஷி இடையே காம்பினேஷன் சீன்கள் இல்லை என்பதால் படப்பிடிப்பில் இருவரும் சந்தித்துக்கொண்டதில்லை. சமீபத்தில் நடந்த ஆடியோ ஃபங்ஷனில்தான் இருவரும் சந்தித்திருக்கிறார்கள்.

ஏதோ ஒரு திரையைப் பார்த்தபடி மனித வாழ்க்கை கழிகிறது இப்போது. நவீனயுக மனிதர்கள் ஒருநாளில் எந்தத் திரையில் சராசரியாக எவ்வளவு நேரம் கண்களைப் பதிக்கிறார்கள் என்பது பற்றி ‘கோ குளோப்’ நடத்திய ஒரு சர்வே முடிவு:
ஸ்மார்ட் போன் - 147 நிமிடங்கள்
டி.வி. - 113 நிமிடங்கள்
டேப்லட் - 50 நிமிடங்கள்
லேப்டாப் - 108 நிமிடங்கள்

கிசுகிசுக்களை தைரியமாக எதிர்கொள்ளப் பழகி விட்டாராம் லட்சுமி மேனன். சுசீந்திரன், லிங்குசாமி டைரக்ஷனில் அடுத்தடுத்து விஷாலுடன் ஜோடி சேர்ந்திருப்பது, தான் ‘போல்ட் கேர்ள்’ என்பதை நிரூபிக்கத்தானாம்!