அணையா அடுப்பு-16அருட்பெருஞ்ஜோதி
அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை
அருட்பெருஞ்ஜோதி

அருட்பா - மருட்பா போர்!

வள்ளலாரின் வாழ்வு தெளிவான நீரோடையைப் போன்றது. அதில் குழப்பங்களுக்கோ, சர்ச்சைகளுக்கோ பெரும்பாலும் இடமில்லை.

தன்னால் ஏற்றுக் கொள்ள முடியாத கருத்துகளைக் கூட தன்னுடைய தன்னிகரில்லா தர்க்க பலம் கொண்டுதான் எதிர்கொள்வாரே தவிர, சண்டைக்கோ சர்ச்சைக்கோ கச்சை கட்டியதில்லை.
ஒரே ஒரு சம்பவம் தவிர.‘திருவருட்பா’.வள்ளலாரை வலிமையாக வரலாற்றில் நிலைநிறுத்தி இருக்கும் அந்த பேரிலக்கியம் தொடர்பாக அவர் நீதிமன்றப் படிகூட ஏறவேண்டியிருந்தது.

‘திருவருட்பா’வின் பல பாடல்கள் அன்று நடைமுறையிலிருந்த சனாதன சாதியக் கட்டமைப்பை விமர்சிப்பதாக அமைந்திருந்தன.சாதிய சமூகத்தில் பலனடைந்து கனி பறித்து புசித்து வாழ்ந்து வந்த பலபேருக்கும் வள்ளலாரின் கருத்துகள் வேப்பங்காயாகக் கசந்தன.

‘திருவருட்பா’வுக்கு சாதாரண மக்களிடம் கிடைத்து வந்த வரவேற்பும், அதனால் வள்ளலாருக்கு ஏற்பட்ட பெரும் புகழும் அவர்களுக்கு ஒவ்வாமை ஏற்
படுத்தின.

பலர் முணுமுணுப்போடு நிறுத்திக் கொண்டார்கள்.சிலர் வெளிப்படையாக விமர்சிக்கத் தொடங்கினார்கள்.இலங்கையின் யாழ்ப்பாணத்தைச் சார்ந்த பெரும் தமிழறிஞர் ஆறுமுக நாவலர்.சைவ சமயம் தொடர்பிலான மகத்தான அறிஞர்.வள்ளலாரின் பாடல்கள் திருமுறைகளாகத் தொகுக்கப்பட்டு, அவற்றுக்கு ‘திருவருட்பா’ என்று பெயர் வைக்கப்பட்டதை அவர் கடுமையாக எதிர்த்தார்.சைவ மதத்தில் ‘அருட்பா’ என்கிற அந்தஸ்து ‘தேவார’த்துக்கும், ‘திருவாசக’த்துக்குமே உண்டு.

அப்படியிருக்க வள்ளலார் தன்னுடைய பாடல்களை ‘திருவருட்பா’ என்கிற பெயரில் தொகுத்தது சைவ மரபைப் பின்பற்றியவர்களிடம் சலசலப்பை ஏற்படுத்தியது.தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்வதில் வள்ளலாருக்கு இருந்த தயக்கத்தை ஏற்கனவே கண்டோம். தன் பெயருக்குப் பின்னால் ‘சாமி’ என்கிற பின்னொட்டு கூட வேண்டாம் என்று கண்டித்தவர் அவர்.

வள்ளலாரின் பாடல்களைத் தொகுத்த அவரது மாணவர்கள் வைத்த பெயருக்கு, வள்ளலார் கடுமையாகக் கண்டிக்கப்பட்டார்.
குறிப்பாக -ஆறுமுக நாவலர் ஒரு படி மேலே போய், “அது திருவருட்பா அல்ல, மருட்பா...” என்று கொதித்து எழுந்தார்.
அதாவது போலிப் பாடல்கள் என்கிற அர்த்தத்தில்.

இதன் பின்னர் வள்ளலாரின் அபிமானிகளும், நாவலரின் தொண்டர்களும் ஆங்காங்கே விவாதங்களில் மோதிக் கொண்டார்கள்.
சில சமயங்களில் விவாதம் நாகரிகத்தின் எல்லையை மீறி தனிநபர் தாக்குதல்களாக அமைந்ததும் உண்டு.
வெறுமனே பேச்சு வார்த்தையாக மட்டுமின்றி எழுத்துரீதியாகவும் சண்டை தொடர்ந்தது.

இருதரப்பும் ஒருவரை ஒருவர் தாக்கி பிரசுரங்கள் வெளியிட்டனர்.இரண்டையும் வாசித்த மக்கள் கடுமையான குழப்பத்துக்கு உள்ளாயினர்.

அச்சமயத்தில் வள்ளலார் மீதும், ஆறுமுக நாவலர் மீதும் கற்பனைக்கெட்டாத ஆபாசமான குற்றச்சாட்டுகள் போகிற போக்கில் வீசப்பட்டன.
இரு தரப்புக்கும் இடையிலான இச்சண்டையை மேலும் மேலும் எண்ணெய் ஊற்றி வளர்த்தது ஒரு மூன்றாம் தரப்பு.
ஆம்.தில்லைவாழ் தீட்சிதர்கள்.

தீட்சிதர்களுக்கும், வள்ளலாருக்கும் நல்லுறவு நிலவவில்லை. அவர்களுக்கு எதிர்நிலை எடுத்தே வடலூரில் சங்கம் நிறுவினார்.

ஆயினும் -வள்ளலார் - நாவலர் மோதலில் வள்ளலாருக்கு ஆதரவு நிலை எடுத்ததைப் போன்ற தோற்றத்தை தீட்சிதர்களில் சிலர் உருவாக்கி நாவலருக்கு கடுமையான தர்மசங்கடத்தை ஏற்படுத்தினார்கள்.

காரணம்?
தீட்சிதர்களின் வேத அடிப்படையிலான வழிபாட்டு முறையை நாவலர் கடுமையாக எதிர்த்தார். திருமுறைகளான ‘தேவார’த்துக் கும், ‘திருவாசக’த் துக்கும் அவர்கள் சிதம்பரம் கோயிலில் முக்கியத்துவம் தரவேண்டுமென கடுமையாக வலியுறுத்தினார் நாவலர்.தங்களுக்குள் இரு பிரிவாகப் பிரிந்து இரு தரப்பையும் மோதவிட்டு குளிர்காய்ந்தார்கள் தீட்சிதர்கள்.

அவர்களில் சிலர் நாவலருக்கு ஆதரவளிப்பது போன்ற கருத்துகளை வெளிப்படுத்தி வள்ளலாருக்கு எதிராகவும் கொம்பு சீவி வந்தனர்.
தானே, அறியாமல் இந்த வலையில் சிக்கிக் கொண்டார் வள்ளலார்.தீட்சிதர்களில் ஒரு தரப்பு கூட்டிய கண்டனக் கூட்டத்தில் தன் வழக்கத்தை மீறி ஆவேசப்பட்டார்.“நாவலர் என்கிற சொல்லுக்கு பொய் பேசுபவர் எனப் பொருள் உண்டு...” என்று ‘மருட்பா’ விமர்சனத்துக்கு பதில் தரும் விதமாக வள்ளலார் பேசினார்.

அவரைத் தொடர்ந்து பேசிய தீட்சிதர்களின் தலைவர்களில் ஒருவரான சபா நடேச தீட்சிதர், “ஆறுமுகநாவலரை அடித்து நொறுக்க வேண்டும்...” என்று வன்முறையைத் தூண்டும் விதமாகப் பேசினார்.இந்தக் கூட்டத்தில் பேசப்பட்டவைகளின் அடிப்படையில் கடலூர் மஞ்சக்குப்பம் நீதிமன்றத்தில் நாவலர் சார்பாக வழக்கு தொடுக்கப்பட்டது.

அந்த வழக்கு நாவலருக்கும், வள்ளலாருக்கும் இடையிலான மோதல் என்றே பலராலும் சொல்லப்படுகிறது.ஆனால் -தன் மீது அவதூறு சுமத்தியவர்கள் என்று ஆறு பேரை வழக்கு மனுவில் குற்றம் சாட்டியிருந்தார் நாவலர்.அதில் ஆறாவது பெயராகத்தான் வள்ளலாரின் பெயர் இடம்பெற்றிருந்தது.

முதல் பெயரே சபா நடேச தீட்சிதர். மேலும் அடுத்தடுத்து கூட்டத்தில் பேசிய நான்கு தீட்சிதர்களின் பெயர்களையும் குறிப்பிட்டிருந்தார் நாவலர்.
வழக்கு விசாரணைக்கு ஆஜராக வள்ளலாருக்கும் சம்மன் அனுப்பப்பட்டது.எந்த வாய்தாவும் கேட்காமல் தானே நீதிமன்றத்தில் ஆஜராகி, தன் தரப்பு நியாயத்தை எடுத்துரைக்கப் போவதாக அறிவித்தார் வள்ளலார்.

அப்போது ஆங்கிலேய ஆட்சி.ஆங்கிலேயரான ஒரு நீதிபதிதான் விசாரித்தார்.
நீதிமன்றத்துக்குள் வள்ளலார் வந்தபோது நீதிபதி, பார்வையாளர்கள், வழக்கு தொடுத்த ஆறுமுக நாவலர் உள்ளிட்ட அனைவருமே எழுந்து நின்று மரியாதை செலுத்தி அவரை வரவேற்றார்கள்.

“வழக்கில் குறிப்பிடப்பட்டிருக்கும் கூட்டத்தில் நான் பேசியது உண்மைதான். ஆறுமுக நாவலர் என்கிற தனிமனிதர் குறித்து நான் எதுவும் அவதூறாகப் பேசவில்லை. நாவலர் என்கிற சொல்லுக்கு ஏற்கனவே அகராதிகளில் நிறுவப்பட்டிருக்கும் அர்த்தத்தைத்தான் சொன்னேன்...” என்று தன் தரப்பை வலுவாக நிறுவினார் வள்ளலார்.

நீதிபதி அதை ஏற்றுக் கொண்டு வழக்கில் இருந்து வள்ளலாரை விடுவிடுத்தார்.எனினும் -சபா நடேச தீட்சிதர் குற்றம் செய்ததாக நிரூபிக்கப்பட்டு அவருக்கு ஐம்பது ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. நூற்று ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு ஐம்பது ரூபாய் என்பது இப்போது நாம் கற்பனையிலும் கருத முடியாத அளவுக்கு பெரும் மதிப்பு வாய்ந்தது.இந்த வழக்கோடு ‘அருட்பா - மருட்பா’ போர் முடிந்துவிடவில்லை.

அதன் பின்னரும் சமூகத்தில் வள்ளலாரின் ஆதரவாளர்களாக இருந்தவர்களுக்கும், நாவலரின் ஆதரவாளர்களாக இருந்தவர்களுக்கும் தொடர்ந்துகொண்டே இருந்தது.வள்ளலாரும், நாவலரும் இயற்கை எய்தியபின்னரும் தொடர்ச்சியாக மோதிக் கொண்டார்கள்.

கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டு காலம் நடந்த இலக்கியப் போர் அது.இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மக்கள் முக்கியத்துவம் தரவேண்டிய சுதந்திரப் போராட்டம் உள்ளிட்ட பிரச்னைகள் எழுந்தபிறகே ‘அருட்பா - மருட்பா’ போர் முடிவுக்கு வந்தது.

(அடுப்பு எரியும்)

வள்ளலாருக்கும், நாவலருக்கும் நிகழ்ந்த ‘அருட்பா - மருட்பா’ மோதல் தொடர்பான அத்தனை ஆவணங்களையும் தொகுத்து ‘அருட்பா மருட்பா கண்டனத் திரட்டு’ என்கிற நூலை ப.சரவணன் 1,190 பக்கங்களில் தொகுத்திருக்கிறார். அச்சூழலில் இருதரப்பும் வெளியிட்ட பிரசுரங்கள், வாதங்கள் அத்தனையும் இந்நூலில் ஆதாரங்களோடு தொகுக்கப்பட்டிருக்கின்றன. ‘காலச்சுவடு பதிப்பகம்’ இந்நூலை வெளியிட்டிருக்கிறது.

- தமிழ்மொழி

ஓவியம்: ஸ்யாம்