ரத்த மகுடம்-115பிரமாண்டமான சரித்திரத் தொடர்

‘‘என்ன நங்கை... படல் எல்லாம் பலமாக இருக்கிறது...’’ மூங்கிலை அசைத்துப் பார்த்துவிட்டு நுழைந்தார் காபாலிகர்.‘‘அடடே... அடிகளாரா..? வாருங்கள்... வாருங்கள்...’’ திரும்பிய நங்கை மலர்ந்தாள். தேங்காய் மட்டையில் இருந்து மூலிகைச் சாற்றை மயிலிறகால் ஒற்றி எடுத்து, நெய்த துணிகளுக்கு வர்ணம் தீட்டிக் கொண்டிருந்தவள் அதை அப்படியே கீழே வைத்துவிட்டு எழுந்தாள். காபாலிகரை வணங்கினாள்.

காபாலிகரின் கண்கள் அனலைக் கக்கின. ‘‘கடந்த ஒரு திங்களாக உன்னை சந்திக்கவில்லை... இடைப்பட்ட முப்பது தினங்களில்
இப்படி மாறிவிட்டாயே...’’‘‘என்ன சொல்கிறீர்கள் அடிகளாரே...’’‘‘பார்த்தாயா... திரும்பவும் தராதரம் இல்லாமல் பேசுகிறாய்...’’ கர்ஜித்தார்.

‘‘தாங்கள் சொல்வது என்னவென்றே எனக்குப் புரியவில்லை... முதலில் அமருங்கள்... மோர் குடியுங்கள்... பிறகு பேசலாம்...’’
‘‘அமர்வதற்காக வரவில்லை...’’ சுற்றிலும் பார்த்தார். ‘‘வசதி பெருகியதும் நடவடிக்கையே மாறிவிடுமா..?’’
‘‘அடிகளாரே...’’‘‘இனி என்னை அப்படி அழைத்தால் உன் நாக்கையே அறுத்துவிடுவேன் நங்கை...’’ மூங்கில் படல்கள் அதிர சப்தமிட்டார்.
நங்கைக்கு எதுவும் புரியவில்லை. மிரட்சியுடன் அவரை ஏறிட்டார்.‘‘அடிகளாராம்... அடிகளார்... யார் அடிகளார்..? நானா..? நான் காபாலிகன்! மயான பேரரசரான ஈசனின் தொண்டன். என்னைப் போய் ஊரை ஏமாற்றும் பார்ப்பனர்களுடன் ஒப்பிடுகிறாயே... இதுதான் நீ மரியாதை கற்ற லட்சணமா..?’’
‘‘மன்னிக்க வேண்டும் அடி... காபாலிகரே!’’‘‘ம்... இதுதான் சரி...’’

‘‘ஊர் முழுக்க அடிகளாராக இருப்பதால்... திருநீறு அணிந்தவர்கள் அனைவரும் அடிகளார்களாக காட்சி அளிப்பதால்... வார்த்தைகள் தவறிவிட்டன... இந்த எளியவளை மன்னிக்க வேண்டும்...’’ சொன்னபடியே காபாலிகரை பாதம் தொட்டு வணங்கினாள்.

‘‘உன்மீது குற்றமில்லை நங்கையே... பார்ப்பனர்கள் அப்படி இந்த பல்லவ நாட்டையே கெடுத்து வைத்திருக்கிறார்கள்! மன்னர்களை மயக்கி... ஆலயங்களை எழுப்பி... கோயில்களைப் பராமரிக்க என்னும் பெயரில் கிராமங்களை நிவேதனமாக வாங்கி... குந்துமணி அளவுக்குக் கூட வரி செலுத்தாமல் உண்டு கொழிக்கிறார்கள்... ஊரை ஏமாற்றுகிறார்கள்...

எல்லாம் இந்த மகேந்திரவர்ம பல்லவரால் வந்த வினை... அவர்தான் இறக்கும் தருவாயில் இருந்த சைவத்துக்கு உயிர்கொடுத்தார்... அவரது மகன் நரசிம்மவர்ம பல்லவன் இன்னும் ஒருபடி மேலே சென்றார்... தனது படைத்தளபதியும் வாதாபியைத் தீக்கிரை ஆக்கியவருமான பரஞ்சோதியின் துணையுடன் பல்லவ நாடு முழுக்க சிவாலயங்களை எழுப்பினார்...

ஈசனின் இருப்பிடம் மயானம்... இதற்கு மாறாக அவரை கற்களுக்குள் சிறை வைத்து அதற்கு ஆலயம் எனப் பெயரிட்டு பார்ப்பனர்கள் வாழ வழிசெய்திருக்கிறார்கள் இந்தப் பல்லவர்கள்... இப்போதைய மன்னரான பரமேஸ்வரவர்மரோ சிவப்பழமாகத் திரிகிறார்...நாட்டைக் காக்க வேண்டியவர் ஓடி ஒளிந்து சிவபூஜை செய்து வருகிறார்...

விளைவு... உன்னைப் போன்ற சாமான்ய மக்கள் எல்லாம் மூளைச் சலவை செய்யப்பட்டு காண்பவர்களை எல்லாம் அடிகளார் என அழைத்துக் கொண்டிருக்கிறீர்கள்... எல்லா மத வழிபாட்டினரையும் சைவர்களாக்குகிறீர்கள். காபாலிகர்கள் சைவர்கள் அல்ல... புரிந்ததா..? நான் காபாலிகன்!’’ தன் கையில் இருந்த எலும்புத் தண்டத்தை தரையில் ஓங்கி அடித்தார்.

‘‘புரிந்தது காபாலிகரே...’’
‘‘ம்... மோர் எங்கே..?’’

நங்கை திரும்ப... பின்னால் நின்றிருந்த ஒரு பெண் மண் குவளையை அவளிடம் கொடுத்தாள்.நங்கை அதைப் பெற்று காபாலிகரிடம் பயபக்தியுடன் தந்தாள். ‘‘உங்களுக்குப் பிடித்த புளித்த மோர்தான் காபாலிகரே... இரண்டு நாட்கள் ஊறியது...’’

‘‘நல்லது...’’ வாங்கி ஒரே மூச்சில் குடித்தவர் நீண்ட ஏப்பம் ஒன்றை வெளியேற்றினார். ‘‘இன்னும் ஒருநாள் ஊறியிருக்கலாம்...’’
‘‘அடுத்தமுறை வருகையில் தங்கள் விருப்பப்படியே அளிக்கிறேன்...’’
‘‘அதாவது நாளை...’’ தாடியை நீவினார் காபாலிகர்.

நங்கை அவரை உற்றுப் பார்த்தாள்.
காபாலிகர் அவளது கண்களுக்குள் ஊடுருவினார்.
நான்கு நயனங்களும் உரையாடின.
‘‘மூன்று நாட்களுக்குப் பிறகு வாருங்கள்...’’
‘‘இனிதான் ஊற வைக்க வேண்டுமா நங்கை..?’’
‘‘ஆம் காபாலிகரே...’’

‘‘சரி... எதிர்பார்ப்பது போல் இருக்குமா..?’’
‘‘நீங்கள் விரும்புவது போல் இருக்கும்...’’
காபாலிகரின் பார்வை படலை அலசியது. ‘‘விரிவுபடுத்தி இருக்கிறாய் போல..?’’
‘‘சமாளிக்க வேண்டுமே? வணிகர்களிடம் இருந்து அதிக அளவில் ஒப்பந்தங்கள் வருகின்றன...’’
‘‘பல்லவனை விட சாளுக்கியன் நன்றாக ஆட்சி செய்கிறான் என்று சொல்...’’
நங்கை அமைதியாக நின்றாள்.

‘‘என் பங்குக்கு உன்னுடன் நானும் ஓர் ஒப்பந்தம் செய்கிறேன்...’’
நங்கையின் கண்கள் பளிச்சிட்டன. ‘‘காத்திருக்கிறோம் காபாலிகரே...’’
தன் இடுப்பில் இருந்து துணி ஒன்றை எடுத்தார்.
‘‘காபாலிகரே... இது..?’’ நங்கையின் கண்கள் விரிந்தன.

‘‘கச்சை! பெண்கள் அணிவது...’’
நங்கை அவரை உற்றுப் பார்த்தாள்.
காபாலிகர் அவளது கண்களுக்குள் ஊடுருவினார்.
நான்கு நயனங்களும் உரையாடின.

புரிந்ததற்கு அறிகுறியாகத் தலையசைத்த நங்கை, அவரிடம் இருந்து கச்சையை தன் கரங்களில் குனிந்து பெற்றாள்.

அப்படி அவள் பெற்றுக்கொண்ட கச்சையை ஒரு கரம் பிடுங்கியது.‘‘யார் அது..?’’ கோபத்துடன் நிமிர்ந்த நங்கையின் கண்களில் அச்சத்தின் ரேகைகள் படர்ந்தன.

அவளையும் காபாலிகரையும் சுற்றி பத்துக்கும் மேற்பட்ட சாளுக்கிய வீரர்கள் உருவிய வாளுடன் நின்றிருந்தார்கள்.தலைவன் போல் காணப்பட்டவன், தான் கைப்பற்றிய கச்சையைச் சுருட்டி பாதுகாப்பாக தன் இடுப்பில் மறைத்து வைத்தான்.

‘‘போய் உன் பணியை கவனி...’’ நங்கைக்கு உத்தரவிட்ட தலைவன், காபாலிகரை நோக்கித் திரும்பினான். ‘‘செல்லலாமா..?’’
‘‘எங்கு..?’’ அலட்சியமாகக் கேட்டார் காபாலிகர்.

‘‘சொன்னால்தான் வருவீர்களா..? நடடா!’’ தன் வலது கையால் காபாலிகரைத் தள்ளினான்.‘‘தவறு செய்கிறாய்... இந்த விஷயம் மட்டும் சாளுக்கிய மன்னருக்குத் தெரிந்தால்..?’’ காபாலிகர் தன் கண்களை உருட்டினார்.

‘‘உன்னைக் கைது செய்யச் சொன்னதே அவர்தான்...’’ வாளினால் காபாலிகரின் கழுத்தைத் தடவினான் வீரர்களின் தலைவன். ‘‘நடடா பல்லவ ஒற்றனே!’’ஆடாமல் அசையாமல் தன் அந்தரங்க அறையில் அமைதியாக அமர்ந்திருந்தான் பாண்டிய இளவரசனான இரணதீரன்.
அவனது வலது கரம் நீண்டிருந்தது.

உள்ளங்கையில் மோதிரம் ஒன்று சாளரத்தின் வழியே ஊடுருவிய சூரிய ஒளியில் மின்னியது.பார்த்ததுமே அது முத்திரை மோதிரம் என்று இரணதீரனுக்கு புரிந்தது. ஓரளவு இதை அவன் எதிர்பார்த்தான்.

ஆனால், எதிர்பாராது அந்த மோதிரத்தில் செதுக்கப்பட்டிருந்த உருவம்.அதைப் பார்த்துதான் ஆடாமல் அசையாமல் அமர்ந்திருந்தான்.கணங்கள் நகர்ந்து ஓடி நிலைபெற்றதும் எழுந்தான்.அறையின் மூலையில் இருந்த விளக்கின் அருகில் சென்றவன் அதிலிருந்த எண்ணெய் கசடை எடுத்து மோதிரத்தின் மீது தடவினான்.பின்னர் தன் இடுப்பு வஸ்திரத்தால் மோதிரத்தைத் தேய்த்தான்.

மீண்டும் உயர்த்தி சூரிய ஒளியில் ஆராய்ந்தான். மோதிரத்தில் தென்பட்ட உருவம் முன்பை விட அதிகமாகப் பளபளத்தது.
அந்த உருவத்தையே இமைக்காமல் பார்த்தான். பாண்டிய மன்னரும் தன் தந்தையுமான அரிகேசரி மாறவர்மர் கூறியவை அனைத்தும் அவன் அகத்துக்குள் எதிரொலித்தன.

இந்த மோதிரம் எப்படி சிவகாமியின் கைகளுக்குச் சென்றது..? கரிகாலன் அதை ஏன் கைப்பற்றி தன் தந்தையிடம் கொடுத்தான்..? அப்படியானால்... இந்த பல்லவ - சாளுக்கிய - பாண்டிய ஆட்டத்தில் இவர்களும் நுழைகிறார்களா..?
கேள்வியுடன் தன் கண்களுக்கு அருகில் இரணதீரன் அந்த மோதிரத்தைக் கொண்டு வந்து அதிலிருந்த உருவத்தை உற்றுப் பார்த்தான்.
பளிச்சிட்ட உருவம் அவனைப் பார்த்து நகைத்தது.

மோதிரத்தை தன் கைக்குள் அடக்கியபடி பாண்டிய மன்னர் ஏற்பாடு செய்திருந்த மந்திராலோசனைக்கு புறப்பட்டான்.

வழியெங்கும் மோதிரத்தில் இருந்த உருவமே அவன் முன் நிழலாடியது.அது சிங்க உருவம். சிங்கள அரசின் முத்திரை மோதிரம்!‘‘வணக்கம் மன்னா...’’குரல் கேட்டு நிமிர்ந்தார் சாளுக்கிய மன்னரான விக்கிரமாதித்தர்.‘‘நீங்கள் கட்டளையிட்டபடி கலியூர்க் கோட்டம் சென்றோம்...’’ குனிந்து கரங்களால் தன் வாயைப் பொத்தியபடி சாளுக்கிய வீரர்களின் தலைவன் பேசினான்.

‘‘ம்...’’
‘‘நீங்கள் சொன்னபடியே காபாலிகரை அங்கு கண்டோம்... கைது செய்து விட்டோம்...’’
விக்கிரமாதித்தர் தன் வலது கையை நீட்டினார்.வீரர்களின் தலைவன் தன் இடுப்பில் இருந்த கச்சையை எடுத்து பவ்யமாக அதை மன்னரின் கரத்தில் வைத்தான்.புன்னகைத்த சாளுக்கிய மன்னர், சைகையால் அவனுக்கு விடை கொடுத்தார்.‘‘மன்னா... காபாலிகன்..?’’ வீரர்களின் தலைவன் இழுத்தான்.‘‘சிறையில் அடைத்து விடு...’’
‘‘உத்தரவு மன்னா...’’

‘‘இங்கு அல்ல. மயிலை சுங்கத் தலைவனையும் எனது சகோதரர் அனந்தவர்மரையும் எந்தச் சிறையில் அடைத்திருக்கிறாயோ
அங்கு! கையோடு கலியூர்க் கோட்டத்தில் எந்த நெசவாளியைச் சந்தித்து காபாலிகன் இந்த கச்சையைக் கொடுத்தானோ அந்த
நெசவாளியின் தலையை உடனடியாக சீவி விடு!’’
‘‘மன்னா... அந்த நெசவாளர் ஆண் அல்ல... பெண்!’’
‘‘எனில் என் உத்தரவு சாசனமாகிறது!’’

வீரர்களின் தலைவன் அதிர்ச்சியில் தன் இமைகளை உயர்த்தினான். சாளுக்கிய மன்னரை வணங்கிவிட்டு வெளியேறினான்.அறைக்கதவு மூடப்பட்டதும் கச்சையின் ஒருபக்க நுனியைப் பிடித்தபடி விக்கிரமாதித்தர் உதறினார். உயர்த்தினார்.

அறைக்குள் சூரிய வெளிச்சம் பாய்ந்திருந்ததால் அங்கிருந்த பொருட்கள் எல்லாம் துல்லியமாகத் தெரிந்தன. கச்சையின் வழியே தன் அந்தரங்க அறையை விக்கிரமாதித்தர் பார்த்தார்.

மிக மிக மெல்லியதாக நெய்யப்பட்டிருந்ததால் கச்சைக்கு அந்தப் பக்கம் இருந்த அறையின் பொருட்களை அவரால் பிசிறின்றி பார்க்க முடிந்தது.
ஆனால், கச்சையின் வழியே விக்கிரமாதித்தர் கண்டது அறையின் பொருட்களை அல்ல; கோடுகளை!

ஆம்! கச்சையின் மீது ஊசியினால் குறுக்கும் நெடுக்குமாக கோடுகள் தீட்டப்பட்டிருந்தன. கைகளில் ஏந்தி விரித்தபோது தெரியாத அந்தக் கோடுகள் சூரிய ஒளியில் உயர்த்திப் பார்த்தபோது பளிச்சிட்டன!

புன்னகைத்தபடியே மான் தோலில் இருந்த பல்லவ வரைபடத்தையும் கச்சையில் இருந்த கோடுகளையும் மாறி மாறிப் பார்த்தார் விக்கிரமாதித்தர்!
பல்லவ நாட்டின் இருபத்து நான்கு கோட்டங்களில் ஐந்தாவதாக இருந்த பையூர்க் கோட்டத்துக்குள் நுழைந்த கடிகை பாலகன், குறுக்கு சந்துகளின் வழியே கிழக்கு நோக்கி அமைக்கப்பட்டிருந்த மூங்கில் படல் ஒன்றை அடைந்தான்.

நெசவு செய்துகொண்டிருந்த பெண்கள் அவனை நிமிர்ந்து பார்த்துவிட்டு தங்கள் பணியைத் தொடர்ந்தார்கள்.படலுக்குள் நுழைந்த கடிகை பாலகன், தன் இடுப்பில் இருந்து ஒரு பொருளை எடுத்தான்.அது கச்சை!

(தொடரும்)

கே.என்.சிவராமன்

ஓவியம்: ஸ்யாம்