தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கருடன் நேருக்கு நேர்கொரோனா காலத்தில் தனியார் மருத்துவமனைகள் கொள்ளையடிக்கின்றன... இதற்கு எதிரான அரசின் நடவடிக்கை என்ன..?

கொரோனா நோய்த் தொற்றினால் உலகமே முடங்கிய நிலையில் சுகாதாரத்துறை மட்டுமே இயங்கிக் கொண்டிருந்தது; இயங்கிக்கொண்டிருக்கிறது.சுறுசுறுப்பாகவும், அர்ப்பணிப்போடும் தமிழகம் முழுவதும் உள்ள மருத்துவமனைகளுக்குச் சென்று நோயாளிகளுக்கு ஆறுதலும், மருத்துவர்கள் - செவிலியர்களுக்கு உற்சாகத்தையும் கொடுத்து வருகிறார் சுகாதாரத்துறை அமைச்சரான டாக்டர் விஜயபாஸ்கர்.

அப்படியொரு பயணத்தில் கண்டது இந்த நேர்காணல். பாரம்பரிய அதிமுக அரசியல் குடும்பம். மாணவர் அணியில் தீவிரமாக செயல்பட்டு, 26 வயதிலேயே எம்எல்ஏ ஆனவர். மூன்று முறை சட்டமன்ற உறுப்பினர். இருமுறை ஒரே துறையின் அமைச்சர். “‘குங்குமம்’, வீட்டில் பாரம்பரியமாகப் படிக்கும் பத்திரிகை. அம்மா பெரிய வாசகி. இந்த நேரத்தில் அரசியல் தவிர்த்து பேசலாமே! எது பேசினாலும் சர்ச்சையாகிறது...” என்று அன்பு வேண்டுகோளுடன் பேட்டிக்கு தயாரானார்.  

உங்கள் குடும்பப் பின்னணி?
புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் வட்டம், ராப்பூசல் கிராமம்தான் சொந்த ஊர். அப்பா விவசாயி. ரொம்ப கஷ்டப்பட்டு மேலே வந்த குடும்பம். உழைப்பால் உயர்ந்தவர். அவர் எங்களுக்கு ஒரு பாடம். அம்மா கண்டிப்போடு நான்கு குழந்தைகளையும் வளர்த்தாங்க. அவங்க பெருசா படிக்கலைனாலும் பிள்ளைகளை நல்லா படிக்க வைக்கணும்னு நினைச்சாங்க.

புதுக்கோட்டை மாவட்டத்தில் செயற்கை வைரம் பட்டை தீட்டும் வேலை ஓஹோனு போயிட்டு இருந்தது. அதில் அப்பா ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பை உருவாக்கிக் கொடுத்தார். அப்படியே சமூக சேவைகளிலும் ஈடுபட்டவருக்கு புரட்சித் தலைவர் எம்ஜிஆர், ஆர்.எம்.வீரப்பன் அன்பு கிடைத்து சேர்மன் ஆனார்.

எங்கள் நால்வரையும் நல்ல பள்ளிகளில் படிக்க வைத்தார். ஆறாம் வகுப்பு முதல், எம்எல்ஏ வரை விடுதிதான். கல்லூரிக் காலத்தில் எனக்கு அமைந்த நண்பர்கள் பெரும்பாலும் அரசியல் குடும்பத்தைச் சார்ந்தவர்கள். அவர்கள் மூலமாகவும், ஏற்கனவே அரசியல் குடும்பத்தைச் சார்ந்தவனாக நான் இருந்ததாலும் அரசியலை நோக்கி வந்தேன்.

புரட்சித் தலைவி அம்மா தேர்தல் பணிக்காக வந்திருந்தபோது, இரு முறை எங்கள் கல்லூரிக்கும் வந்தார்கள். அப்போது அவர்களை வரவேற்க அம்மாவின் முகத்தை ரங்கோலி கோலமாக வரைந்தேன். அதைப் பார்த்து ரூ.5000 கொடுத்தாங்க. எந்த ஒரு பிரச்னைனாலும் முன் நின்று கேட்பேன். இதனால் இறுதி ஆண்டு படிக்கும்போதே மாணவர் அணி மாவட்ட இணை செயலாளர் பதவி கிடைத்தது. அங்கு ஆரம்பித்ததுதான் என் அரசியல் பயணம். இந்தியாவில் பொது முடக்கம் அறிவிப்பதற்கு முன்பே தமிழகத்தில் முதல் கொரோனா வார்டு அமைக்கப்பட்டது. அந்த யோசனை உங்களுக்கு எப்படி வந்தது?

தொற்று நோய்களில் அதிகமாகவே கவனம் இருக்கணும். எப்போது வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் பரவும். இதை மருத்துவப் படிப்பு படிக்கும்போதே தெரிந்து கொண்டேன்.ஏற்கனவே எபோலோ வைரஸ், சிகா வைரஸ் மாதிரி நோய்கள் வந்திருக்கு. ஆனால், அவை இந்தளவு பரவவில்லை.

சீனாவின் வூகான் நகரில் கோவிட் 19 வைரஸ் பயங்கரமாக பரவுகிறது என்ற செய்தி வந்ததுமே எச்சரிக்கையானோம். எனக்குள் இருந்த டாக்டர், அபாய மணியை அடித்தார். எனவே ஜனவரி மாதமே ஆயத்தமாக ஆரம்பித்தோம்.  

இந்தியாவில் டெஸ்ட் பண்ணக் கூடிய ஒரே இடமான பூனேவில் உள்ள தேசிய வைராலஜி ஆராய்ச்சி நிறுவனத்தில்தான் நாம்கூட முதலில் அனுப்பி பரிசோதித்தோம். அதன் பின் இந்தியாவின் இரண்டாவது சோதனை மையத்தை சென்னை கிண்டியில் உள்ள கிங் இன்ஸ்டிடியூட்டில் ஆரம்பித்தோம். இன்று தமிழகத்தில் மட்டும் தனியார் மற்றும் அரசு ஆய்வகங்கள் 150 இருக்கின்றன!

அரசு மருத்துவமனைகளின் செயல்பாடு பாராட்டும்படியாக இருக்கிறது. அதற்காக மேற்கொண்ட பணிகள்..?

தமிழகத்தில் டெங்கு, பன்றிக் காய்ச்சல் ஓர் அனுபவத்தைக் கொடுத்திருக்கிறது. வளர்ந்த நாடுகளிலேயே நோயாளிகளுக்கு படுக்கை கொடுக்க முடியாமல், சாலைகளில் டென்ட் அடித்தும், சிலர் நடந்து செல்ல முடியாமல் மயங்கி விழுந்ததை எல்லாம் பார்த்தோம். தமிழகத்தில் அந்த மாதிரி நிலை வரக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தோம். அதனால்தான் யார் அரசு மருத்துவமனைக்கு வந்தாலும் அவர்களுக்கு படுக்கை இல்லை என்று சொல்லும் நிலை ஏற்படவில்லை.

20 படுக்கைகளோடு ஆரம்பித்த சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனை, இன்று 2000 படுக்கைகளைக் கொண்டிருக்கிறது. தமிழகம் முழுவதும் இப்போது 1,29,000 படுக்கைகள் தயாராக வைத்திருக்கிறோம். ஒரு நாளைக்கு 75,000 டெஸ்ட்களுக்கு மேல் எடுக்கிறோம்.

அதுவும் மற்ற இடங்களில் எடுக்கும் இன்ஸ்டன்ட் டெஸ்ட்கள் போல் இல்லாமல், இந்தியாவிலேயே நூறு சதவீதம் RT-PCR கன்ஃபர்மேஷன் டெஸ்ட் எடுக்கிற ஒரே மாநிலம் நாம்தான். அதேபோல் முதன் முதலில் மொபைல் ஆப் மூலமாக வீடியோ காலில் 93 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு மருத்துவர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.

கொரோனா காலத்தில் தனியார் மருத்துவமனைகளில் அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார்கள் வருகிறதே?
தனியார் மருத்துவமனைகளில் முதலமைச்சர் காப்பீட்டுத் திட்டம் இருக்கிறது. அதன்படி தமிழகத்தில் ஒரு கோடியே 58 லட்சம் பேர் காப்பீடு அட்டை வைத்துள்ளனர். அவர்கள் எந்தவித கட்டணமும் இல்லாமல் சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம்.

வசதி இருக்கிறவர்கள் தனியார் மருத்துவமனைக்குப் போகிறார்கள். அவர்களுக்கும் தொகையை நிர்ணயித்திருக்கிறோம். அதையும் தாண்டி கூடுதல் கட்டணம் வசூலித்த நான்கு மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுத்து அவர்களது லைசன்சை ரத்து செய்திருக்கிறோம். புகார் வந்தால் உடனடியாக நடவடிக்கை எடுப்போம்.  

கொரோனா எண்ணிக்கை, மரணம் குறித்தான வெளிப்படைத் தன்மை இல்லை என்ற குற்றச்சாட்டு எழுகிறதே? 

மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்திக் கொள்கிறோம். ஒரு கமிட்டி போட்டு நாங்கள்தானே வெளியே கொண்டு வருகிறோம். கலெக்‌ஷன் லிஸ்ட் வரத் தாமதமாகும். எனவே ஒவ்வொரு மாவட்டத்திலும் எவ்வளவு டெத் - பாசிட்டிவ் - குணமானவர்கள் என்று சரியான எண்ணிக்கை கிடைத்த பிறகே வெளியிடுகிறோம். மரணத்தைக் கடுமையாகக் குறைத்திருக்கிறோம்.

ஒட்டுமொத்த மரணத்தில் கொரோனாவால் மட்டும் இறந்தவர்கள் 10% மட்டுமே. மற்றபடி மத்திய அரசின் வழிகாட்டுதல்படி இணை நோய் உள்ளவர்கள், விபத்து, தற்கொலை… என்று கொரோனா தொற்று ஏற்பட்டு இறந்தவர்களையும் கொரோனா மரணமாகவே அறிவிக்கிறோம்.

மக்களைப் பதட்டப்பட வைக்காமல், பயப்படுத்தாமல், மன அழுத்தம் கொடுக்காமல்… எல்லாவற்றையும் அரசு, முதல்வர், மருத்துவர்கள், செவிலியர்கள், காவல்துறையினர், துப்புரவுத் தொழிலாளர்கள், தன்னார்வலர்கள்… என எல்லோரும் ஓர் அழுத்தத்தைத் தாங்கிக் கொண்டு மக்களுக்கு நம்பிக்கை கொடுத்துள்ளோம்.

அவர்களது சங்கோஜத்தை உடைத்து, சளி, இருமல், காய்ச்சல், உடல் வலி, சுவாசிக்க முடியாமல் கஷ்டப்பட்டால், சுவை - மணம் உணராமல் இருந்தால்… உடனே டெஸ்ட் எடுங்க என்று சொல்லி ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து குணப்படுத்துகிறோம். கொரோனா தொற்றோடு இணை நோய் உள்ள பலரையும், 4,500 கர்ப்பிணி தாய்மார்களையும் நல்ல முறையில் வீட்டிற்கு அனுப்பியுள்ளோம்.

கொரோனா கற்றுக் கொடுத்த பாடத்தை வைத்துக்கொண்டு இனி வரும் காலங்களில் சுகாதாரத் துறையில் அரசு எடுக்கும் நடவடிக்கைகள் எப்படியிருக்கும்?தொடர்ந்து சுகர், பிபி, கேன்சர்… போன்ற தொற்றா நோய்களில் கவனம் செலுத்துவோம். இந்த தொற்று நோய்கள், யாருக்கெல்லாம் தொற்றா நோய்கள் இருந்ததோ அவர்களுக்கு தொற்றும்போதுதான் அபாயகரமான சூழ்நிலைக்குப் போகிறது.

இந்த கொரோனா நிகழ்வு மக்கள் உடல் நலனில் அக்கறை கொண்டு ஆரோக்கியம் பேண வலியுறுத்தியிருக்கிறது. சுத்தமாக இருக்க கற்றுக் கொடுத்திருக்கிறது. தமிழகம் முழுவதும் தொற்றா நோய்களுக்குப் பெரிய அளவில் டிரைவ் கொடுத்திருக்கிறோம். வியாழன், வெள்ளி அன்று அரசு மருத்துவமனைகளில் பிபி, சுகர் இலவசமாகப் பரிசோதிப்பதோடு, மாஸ்டர் ஹெல்த் செக்கப்பும் பண்ணுகிறோம். மக்கள் இதைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

இந்தியாவில் சுகாதாரத்தில் வளர்ந்த மாநிலமாகத் தமிழகம் திகழ்கிறது. இன்னும் கூடுதல் கவனம் செலுத்துவோம். இந்த கொரோனா காலத்தில் அலோபதியோடு பாரம்பரிய மருத்துவ முறைகளையும் ஊக்குவிக்கிறோம்.

ஒருங்கிணைந்த கூட்டு மருத்துவ சிகிச்சையினால்தான் மருந்தே இல்லாத இந்த நோயிலிருந்து இப்போது வரை மூன்றரை லட்சத்திற்கு மேற்பட்டவர்களை குணப்படுத்தியிருக்கிறோம்.

மருத்துவப் படிப்பிற்கான நீட் நுழைவுத் தேர்வு அவசியமா?

அம்மா காலத்திலிருந்து இப்போது வரை நீட் வேண்டாம் என்பதுதான் அரசின் கொள்கை. நீட் உச்ச நீதிமன்றத்தின் பெஞ்சின் தீர்ப்புப் படி நடக்கிறது. அதை எதிர்த்து மிகக் கடுமையாகச் சட்டப் போராட்டம் நடத்துகிறோம். அரசியல் அழுத்தமும் கொடுக்கிறோம். 

குடும்பத்தாரின் மனநிலை எப்படி இருக்கிறது?

இருமாதம் கோவையில்தான் இருந்தாங்க. மகள்களை பார்க்காமல் இருக்க முடியவில்லை. எனக்கு மட்டுமல்ல, பலருக்கும் இந்த சூழல்தான். இப்போது ஒரே வீட்டில் இருந்தாலும் அவர்கள் மேல் அறையிலும், நான் கீழ் அறையிலும் இருக்கிறோம். ஒருவகையான குவாரண்டைன்.

தினமும் எல்லா மாவட்டங்களுக்கும் செல்கிறேன். மருத்துவமனைகளை ஆராய்கிறேன். தமிழகம் முழுவதும் 3,000 கி.மீக்கு மேல் மூன்றே நாட்களில் காரிலேயே பயணிக்கிறேன்.

கொரோனா காலத்தில் நன்றாகத் தூங்க வேண்டும். ஆனால், அதற்கு வாய்ப்பில்லாமல் பயணிக்கிறேன். ஐந்து கிலோவிற்கு மேல் உடல் எடை குறைந்திருக்கிறது. இப்போது மட்டுமல்ல... பொதுவாகவே குடும்பத்தினரோடு நேரம் செலவழிப்பது அபூர்வம்தான்.

அதையெல்லாம் அட்ஜஸ்ட் பண்ணிக்கிறாங்க. எனக்கு இரண்டு மகள்கள். பெரிய பெண், கஜா புயல் நேரத்தில் என்னோடு களத்தில் வந்து வேலை பார்த்தாங்க. குடும்ப இஷ்யூ எதையும் மனைவி ரம்யா என் கவனத்துக்கு கொண்டு வந்தது கிடையாது. என் வேலையின் தன்மையைப் புரிந்து, ‘குடும்பத்தை நான் பார்த்துக்கிறேன்’னு பக்குவப்பட்டிருக்காங்க.

இன்று நான் முழுமையாக பொதுப்பணியில் ஈடுபடுவதற்கு இவங்க கொடுக்கிற அன்பும், ஆதரவும் முதன்மையானது.புத்தக வாசிப்பு..?பேச்சு ரொம்ப பிடிக்கும். அதனால் குமரி அனந்தனோட ‘நீங்களும் பேச்சாளர் ஆகலாம்’ புத்தகம் எனக்குப் பெரிய வழிகாட்டுதல்.

முன்னாடி தீவிரமா படிப்பேன். இப்ப நேரமில்லை. வைரமுத்து சாரோட ‘கள்ளிக்காட்டு இதிகாசம்’ ஆர்வமா படிச்சேன். அதில் நம் மண்வாசனை வீசும். ஹைக்கூ கவிதைகள் நிறையப் படிப்பேன். குறிப்பா கவிஞர் தங்கம் மூர்த்தியின் ஹைக்கூ ரொம்ப பிடிக்கும்.

செய்தி: அன்னம் அரசு

படங்கள்: ஆ.வின்சென்ட் பால்