இந்தி தெரியாது போடா!



தமிழர்கள் பற்றவைத்த நெருப்பு...

‘இந்தி தெரியலைன்னா இந்தியன் இல்லையா?’ என்னும் பிரச்னை இப்போது ‘இந்தி தெரியாது போடா' என்னும் அளவுக்கு இணையத்தில் விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, கலைஞர் தொடங்கி எத்தனையோ தலைவர்கள் இந்தி திணிப்புக்கு எதிரான போராட்டம் நடத்தி சிறை வரை சென்றாகிவிட்டது. எனினும் வடக்கர்கள் அடங்கிய பாடில்லை.

இதில் இந்தி தெரியவில்லை எனில் விமான நிலையம் உள்ளிட்ட பொது இடங்களில் அவமானப்படுத்துவதும் தொடர்ந்து அரங்கேறி வருகிறது.
இந்நிலையில் தனக்கு நடந்த சம்பவம் குறித்து இயக்குநர் வெற்றிமாறன், ‘‘நான், என் அம்மா பேசுற மொழி தமிழ். அதுதான் என் தாய்மொழி. மத்தவங்க கூட பேச எனக்கு ஆங்கிலம் தெரியும்னு சொன்னேன். ரொம்பக் கோபமாகி, ‘நீங்கல்லாம் இப்படித்தான்.

யூ தமிழன்ஸ் & காஷ்மீரீஸ் ஆர் பிரேக்கிங் திஸ் கன்ட்ரி. நீங்கல்லாம் தீவிரவாதிகள்’னு என்னவெல்லாமோ பேசி என்னைத் தனியா நிற்க வச்சிட்டார்...’’ என விமான நிலையத்தில் இந்தி தெரியாத ஒரே காரணத்திற்காக 45 நிமிடங்கள் வரை தன்னை காத்திருப்பில் வைத்ததாக வெற்றிமாறன் பகிர்ந்தார். அத்துடன் இதே பாணியில் கனிமொழி எம்பிக்கும் விமான நிலையத்தில் நடந்த அவமதிப்பைச் சுட்டிக்காட்டியிருக்கிறார் வெற்றிமாறன்.

இதனையடுத்து அவருக்கு குரல் கொடுக்கும் வகையில் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, ‘நான் தமிழ் பேசும் இந்தியன்’ என்னும் திருவள்ளுவர் படம் பொறிக்கப்பட்ட டி ஷர்ட் அணிந்து நடிகர் சிரிஷுடன் இருக்கும் படத்தை தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்தார். அப்போது சிரிஷ் அணிந்திருந்த டி- ஷர்ட்டில் ‘இந்தி தெரியாது போடா' என்னும் வாசகம் காணப்பட்டது.

அவ்வளவுதான். பற்றிக் கொண்டது இணையம்.தொடர்ந்து நடிகர் சாந்தனு பாக்யராஜ் தன் மனைவி கீர்த்தியுடனும், ஐஸ்வர்யா ராஜேஷ் தன் சகோதரருடனும் இதே வாசகம் பொறிக்கப்பட்ட டி-ஷர்ட்டை அணிந்து போஸ் கொடுக்க... திமுக தலைவர் ஸ்டாலின், திமுக இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் உட்பட பல்வேறு அரசியல் தலைவர்களும் இதே வாசகங்கள் அடங்கிய டி- ஷர்ட்டை அணிய... ‘இந்தி தெரியாது போடா' ஹேஷ்டேக் தேசிய அளவில் டிரெண்டாகிவிட்டது.

இதனைத் தொடர்ந்து, ‘இந்தி கற்க வேண்டியது அவசியம்’ என ஏற்கனவே டுவீட் போட்டிருந்த முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி மார்க்கண்டேய கட்ஜுவுக்கு தமிழர்கள் தொடர்ச்சியாக டுவிட்டரில் கண்டனம் தெரிவித்தனர். தமிழர்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு ‘இந்தி தெரியாது போடா’ ஹேஷ்டேக் டிரெண்ட் ஆகிறது... என அவர் டுவிட் போட... இந்தியா முழுக்க வைரலாகிவிட்டது.

விளைவு, பீகார் உட்பட பல வடமாநில மக்கள், ‘எங்கள் தாய்மொழியை அழித்துவிட்டுத்தான் இந்தி ஆதிக்கம் செலுத்துகிறது...’ என டுவிட் செய்ய ஆரம்பித்துள்ளனர். இந்த டி-ஷர்ட்டை உருவாக்கியவர்கள் யார் என்பது இந்த இதழ் அச்சுக்குச் செல்லும் வரை தெரியவில்லை.

ஆனால், யாரோ பற்றவைத்த நெருப்பு தேசம் முழுக்க பற்றிக்கொண்டிருக்கிறது! இந்த நவீன இந்தித் திணிப்பு எதிர்ப்பு போராட்டம் இப்போது மாநிலப் பிரச்னையாக சுருங்காமல் இந்திய பிரச்னையாக விஸ்வரூபம் எடுத்திருக்கிறது!

ஷாலினி நியூட்டன்