ஆபாசப் படங்களை எப்படி புரிந்து கொள்வது?இந்தியாவில் ஆபாசப் பட ரசிகர்களின் எண்ணிக்கை எகிறிவிட்டது. குறிப்பாக இந்த லாக் டவுனில் இந்தியர்களின் ஸ்மார்ட்போனில் அதிகமாக ஆபாசப்படங்கள்தான் ஓடிக் கொண்டிருக்கின்றன. ஆம்; உலகளவில் 70% பேரிடம் ஸ்மார்ட்போன்கள் இருக்கின்றன. இந்தியாவிலும் இவற்றின் பயன்பாடு அதிகம். இந்திய ஸ்மார்ட்போன் பயனாளிகளில் 89% பேர் ஆபாசப் படங்களின் ரசிகர்கள். அதாவது ஐந்தில் நான்கு பேர்!

ஆபாசப் படங்களில் பலவகை உண்டு. ஆனால், இந்தியாவில் சுற்றுக்கு வருவது என்னவோ ஒரே மாதிரியான படங்கள்தான். அதிலும் இந்தப் படங்கள் பலவும் ஆண்களைக் குறியாக வைத்து எடுக்கப்படுபவை.
இதில் பெண்கள் வெறும் பொம்மைகள். உலகளவில் பெண்களுக்கு என்றும், இளைஞர்களுக்கு என்றும் இன்னும் பல வகை வகையாக ஆபாசப் படங்கள் வெளியாகின்றன. ஆனால், இந்தியாவில் வெளியாகும் ஆபாசப் படங்கள் ஆண்களை வக்கிரக்காரர்களாக மாற்றக்கூடியது.

அது அவர்களைப் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் எதிரான குற்றங்களைச் செய்யத் தூண்டக்கூடியது என்று ஒரு தரப்பினர் சொல்ல, வன்முறையான திரைப்படங்கள் ஒருவரை வன்முறையாளராக மாற்றுவதற்கான ஆதாரம் எதுவுமில்லை என இன்னொரு தரப்பினர் சொல்கின்றனர். இந்த விஷயம் தொடர்பாக உளவியல் ஆய்வாளரான சஃபியிடம் பேசினோம்.

‘‘உலகளவில் பெரிய தொழிலாக மாறிவிட்டது ஆபாசப் படங்கள். அப்படியென்றால் உலகில் உள்ள எல்லோருமே மனப்பிறழ்வு அடைந்துவிட்டார்கள் என்று சொல்லமுடியுமா என உறுதியாக சொல்வதற்கில்லை. ஆபாசப் படங்கள் விதவிதமாக இருந்தாலும் இந்தியாவைப் பொறுத்தளவில் ஒரேமாதிரியாக இருப்பதாகச் சொல்லப்படுகிறது. இதை ஒருவர் எத்தனை காலத்துக்குத்தான் பார்த்துக்கொண்டிருப்பார் என்ற கேள்வியும் இயல்பாக எழுகிறது.

குறிப்பிட்ட வயதுக்குப் பிறகு இப்படங்களைத் தவிர்க்கும் மனப்பான்மையையே பலரும் கொண்டிருப்பார்கள்...’’ என்று ஆரம்பித்த சஃபி, தமிழகத்தில் ஆபாசப் படங்களுக்கு முன்னோடியாக இருந்தது தமிழ் சினிமாதான் என்ற உண்மையையும் போட்டுடைத்தார்.‘‘1977ல் வெளியான ‘காயத்ரி’ என்ற படத்தில் ரஜினியும் தேவியும் நடித்திருந்தனர். சுஜாதாவின் நாவலை அடிப்படையாகக் கொண்டது இப்படம். தேவியைத் திருமணம் செய்துகொண்டு, படுக்கையறைக் காட்சிகளைப் படம் பிடித்து அதை விற்பவராக நடித்திருப்பார் ரஜினி.

நாவலில் நாயகியைக் காப்பாற்றி விடுவார்கள். படத்தில் நாயகி இறப்பதாக காண்பிப்பார்கள். ஓர் இலக்கியப் பிரதி திரைப்படைப்பாக வரும்போது கறை படிந்த நாயகியை இறப்பதாக காண்பிக்கும் ஒரு இரட்டை மனநிலைதான் நிலவியது. அதேமாதிரி கமல் நடித்த ‘சிகப்பு ரோஜாக்களி’ல் நாயகன் பெண்களை செட்யூஸ் செய்யும் நிகழ்வுகள் கேமராவில் படம் பிடிக்கப்படும். அதை நாயகனின் வளர்ப்புத் தந்தை பார்த்து ரசிப்பார்.

70களிலேயே தமிழ் சினிமா பாலியல் காட்சிகளை திரைப்படத்தில் அறிமுகம் செய்துவிட்டது. இரட்டை மனநிலைக்கு இன்னொரு எடுத்துக்காட்டு ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’. இது ஜெயகாந்தனின் நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட படம்.  நாவலில் கதாநாயகி மது அருந்துவார். ஆனால், திரைப்படத்தில் நாயகியை சுத்த சைவமாக படைத்திருப்பார் இயக்குநர்.

ஆகவே, பாலியலை எப்படி பேசுவது என்ற தயக்கம் தமிழ்த்திரைக்கு இருந்தாலும் ஏதோ ஒரு விதத்தில் அது பேச முற்பட்டது...’’ என்று சொல்லும் சஃபி இந்த ஆரம்பக் கட்ட முயற்சிகளை ஒட்டி தமிழ் சினிமாவோடு நிகழ்ந்த மேலும் சில நிகழ்வுகளையும் பட்டியலிட்டார்‘‘ஜெயகாந்தனின் ‘சினிமாவுக்கு போன சித்தாளு’ படத்தில் நாயகி, எம்ஜிஆரின் போஸ்டரின் மேல் உட்கார்ந்து தழுவுவது போல ஒரு காட்சி இருக்கும். பெண்களின் ஆசாபாசங்களை விவரித்த ஒரு திரைப்படமாகவே இதை எடுத்துக் கொள்ளவேண்டும்.

இதேபோல பல முயற்சிகள் உண்டு. அந்தக் காலத்தில் ஆங்கிலப் படங்களைப் பார்க்க பெண்களுக்கு அனுமதியில்லை. காரணம், அதில் ஆபாசம் இருக்கும் என்ற  நம்பிக்கை. அவ்வை சண்முகம் என்னும் தமிழ் நாடகத்தின் முன்னோடி ஒரு விஷயத்தை தன் சுயவரலாற்று நூலில் பதிவு செய்திருப்பார். அதாவது ‘மேனகா’ என்னும் படத்தின் ஷூட்டிங்கின் போது நாயகியையும் நாயகனையும் நெருங்கி நிற்கும்படியான ஒரு காட்சிக்கே பல தடைகள் இருந்ததாக அந்தக் குறிப்பு இருக்கும்.

ஆகவே, பாலியலை உரக்கப் பேசுவதற்கான காலமாகவே இன்றைய ஆபாசப் பட இண்டஸ்ட்ரியை எடுத்துக் கொள்ளவேண்டும்...’’ என்கிற சஃபி தமிழ் சமூகம் சிற்பம், ஓவியம், நாவல், சிறுகதை என பாலியலை விரிந்த தளத்தில் பேசிய விதத்தையும் விவரித்தார்.‘‘இந்திய அளவில் கஜுராஹோ, அஜந்தா ஓவியங்கள், கோயில்களில் உள்ள சிற்பங்கள் பாலியல் காட்சிகளைக் கொண்டவை. அதேபோல ‘காமசூத்ரா’ என்ற ஒரு பழங்கால பாலியல் இலக்கியமும் நம்மிடையே உண்டு. இந்த சிற்பம், ஓவியங்களுக்கு மக்கள் மத்தியில் ஒரு ஒப்புதல் இருந்தது.

காலம் செல்லச் செல்ல பாலியல் ரீதியான எழுத்துகள், திரைப்படங்கள், வீடியோக்களுக்கு சில தரப்புகளில் இருந்து எதிர்ப்பு கிளம்பியது. இது இன்றும் தொடர்கிறது. ஆனாலும் பாலியல் ரீதியான படைப்புகள் தொடர்ச்சியாக ஏதோ ஒருவிதத்தில் வந்துகொண்டுதான் இருக்கிறது. உதாரணமாக OTTயில் சாஃப்ட் போர்ன் என்னும் மெல்லிய பாலியல் படங்கள் சக்கைப்போடு போடுகிறது.

பிரபல பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் கூட ‘லஸ்ட் ஸ்டோரீஸ்’ என்று திரைப்படம் எடுக்கிறார்...’’ என்ற சஃபியிடம், ‘அழகியல் ரீதியாக பாலியலைச் சொல்லும் படைப்புகளையும், ஒரேமாதிரியாக ஆண் ரசிகர்களுக்காக எடுக்கப்படும் போர்ன் படங்களையும்
ஒன்றாகக் கருதமுடியுமா..?’ என்ற கேள்வியை முன்வைத்தோம்.

‘‘லிண்டா வில்லியம்ஸ் என்னும் ஆபாசப் பட ஆய்வாளர், ‘ஒருவர் பார்க்கும் போர்ன் படம் இன்னொருவருக்கு அழகியல் ரீதியான பாலியல் படமாக இருக்கும்...’ என்கிறார். அதாவது அது பார்ப்பவரின் கண்களைப் பொறுத்ததே என்று அவர் ஆணித்தரமாகச் சொல்கிறார்.
அதே வில்லியம்ஸ் மேற்குலகில் முழுநீள செக்ஸ் படங்கள் திரைவெளியை ஆக்கிரமித்த காலத்தையும் ஆய்வு செய்தார்.
ஆனால், இந்தியா போன்ற நாடுகளில் முழுநீள பாலியல் திரைப்படங்களுக்கு என்றுமே பெரிய வரவேற்பு இருந்ததில்லை. இலை
மறை காயாக மட்டுமே தமிழ்த் திரை பாலியலைச் சொல்ல முடியும்.

பிட்டு படத்தை பிட்டாகவே பார்த்து பழக்கப்பட்ட இந்திய, தமிழ் ரசிகர்களுக்கு முழுச் சோறுமே பாலியலாக இருந்தால் சுவைக்காது. இதிலிருந்து ஆபாசப் படங்களின் ரசிகர்களை ஆய்வு செய்யவேண்டியது அவசியம்...’’ என்கிற சஃபி ஆபாசம், வக்கிரம், கலைநேர்த்தி என்ற பிரிவுகளில் உள்ள வேறுபாடுகள், ஒற்றுமைகளை விளக்கினார்.

‘‘ஆபாசப் படங்களில் காதல் இருக்காது. காமத்துக்குத் தேவையான ஆண், பெண் இருவரிடையே பரஸ்பரமான ஃபோர்ப்ளே என்னும் முன்
விளையாட்டு கிடையாது. இது எல்லாம்தான் ஆபாசப் படங்களை ஆய்வு நோக்கில் அணுகவேண்டிய விஷயங்கள். ஆனால், இதனால் கேடு வரும், குற்றங்கள் பெருகும் என்று பதட்டமடைய வேண்டியதில்லை. இதைத் தாண்டி பாலியல் சம்பந்தமாக நடக்கும் தமிழக விவாதங்களில்தான் கவலைப்பட வேண்டும்.

உதாரணமாக தமிழகத்தில் திரைப்பட நடிகைகள் சார்ந்து எவ்வளவோ விஷயங்கள் பொதுவெளியில் விவாதிக்கப்படுகின்றன. இது சார்ந்தும், எதிர்த்தும் உலாவும் கருத்துகள்தான் மிக ஆபாசமாக, வக்கிரமாக நம் சமூகத்தை மாற்றக்கூடியது. எடுத்துக்காட்டாக அண்மையில் நடிகை வனிதா விஷயத்தில் நடந்த வீடியோ விவாதங்கள். இந்த விவாதக் கருத்துகளை ஒருவர் தொகுத்துக் கொண்டாலே நம் சமூகம் எப்படியான ஒரு பாலியல் சுதந்திரத்தில் வாழ்கிறது என்ற ஒரு முடிவுக்கு வரமுடியும்.

அதேபோல பாலியல் விவாதங்களில் ஒரு விஷயத்தை எடுத்தேன் கவிழ்த்தேன் என்று விவாதிக்க வேண்டியதில்லை. உளவியலின் தந்தையான சிக்மண்ட் ஃபிராய்ட் ‘பாலியல் குறித்து 3 கட்டுரைகள்’ என்ற ஒரு புத்தகத்தை ஆரம்பத்தில் எழுதினார். குழந்தைகளை நாம் ஒரு தேவதை, தெய்வாம்சம் என்றுதானே கருதி வந்தோம். அதை எல்லாம் உடைத்து, குழந்தைகளுக்கு பாலியல் உந்துதல் இயற்கையாகவே உண்டு என்ற கருத்தை அந்தப் புத்தகத்தில் சொல்லியிருந்தார்.

இந்தப் புத்தகத்துக்கு பல தடைகள் வந்தது. ஆனாலும் அவர் பாலியலை சமயம், சமூகம் கடந்து ஒரு தனிமனித விஷயமாகப் பார்த்ததால் அவர் சொன்ன பல கருத்துகளையும் மக்கள் ஆர்வத்துடன் பரிசீலிக்க ஆரம்பித்தார்கள். நம்மிடையேகூட பழங்காலத்தில் ‘ரதி மன்மதன்’, ‘கூளப்ப நாயக்கன் கதை’ என்று பாலியல் இலக்கியப் பிரதிகள் உண்டு. பொதுமேடைகளில் கூத்தாக நடத்தப்பட்ட இலக்கியங்கள் இவை.

ஆகவே ஆபாசப் படங்கள் போன்ற பாலியல் சார்ந்த வெளிப்பாட்டை ஒரு சமூகம் எந்தளவுக்கு விவாதிக்கிறதோ அந்தளவுக்குத்தான் அது சுதந்திரத்தையும், சமுத்தவத்தையும் அடையும். அதைவிட்டுவிட்டு வெப்சைட்டுகளுக்கு தடை, சைபர் க்ரைம் என்ற பெயரைச் சொல்லி சிலரை சிறைக்கு அனுப்புதல் எல்லாம் இந்த விஷயத்தை மேலும் பேசவே தூண்டும்.

மிக்கேல் ஃபூக்கோ என்ற அறிஞர், ‘ஒரு பாலியல் காட்சி அல்லது கதை என்பது பார்வையாளனுக்கு இன்பத்தைக் கொடுப்பதற்கும் மேலாக இன்பத்தைப் பற்றிய ஒரு அறிவிற்கும், அந்த அறிவைப் பெற்றதற்கான இன்பமாக மாறுவதுமான ரசவாதத்தையும் நிகழ்த்துகிறது...’ என்கிறார்.

ஆகவே, பாலியலை ஆபாசம், வக்கிரம், கலைநேர்த்தி என்று வேறுபடுத்திப் பார்க்கும் ஆய்வுகளை நாம் வரவேற்றாலும், பாலியல் ஒருவருக்கு என்ன மாதிரியான செய்தியைப் பரிமாற விரும்புகிறது என்பதைப் புரிந்துகொண்டால் அதற்கு அடிமை யாவதும் விடுதலை
யாவதும் நம் கையில்தான் உள்ளது என்பதை உணர்வோம்...’’ அழுத்தமாகச் சொல்கிறார் சஃபி.  

டி.ரஞ்சித்