அக்கால மனிதன்



காலை எட்டு மணிக்கெல்லாம் பத்திரிகை அலுவலகம்  வந்துவிட்டார், அமிழ்தன். பக்கப்புனைவு, ஓவியம், மெய்ப்புப் பார்த்தல் இவை அமிழ்தனின் பணிகள். நேற்றிரவு ஆசிரியர் கோபிநாத் தலையங்கம் எழுதிவிட்டார்.
ஆசிரியர் ஒரு புது ஓவியரை அழைத்துத் தலையங்கத்திற்கேற்ப படத்திற்கு விவரங்கள் கூறியுள்ளார். புது ஓவியர் இன்று காலை பத்து மணிக்கு படம் கொண்டு வந்து தருவார். இரண்டு வடிவங்களில் படங்கள் கொணர்வார்.  இன்று புதன்கிழமை.  இதழ் முடித்தாக வேண்டும்.

அதன் எழுத்துவடிவ மெய்ப்பைப் படித்துத் திருத்தி வைத்துவிட்டார் அமிழ்தன். அறுபத்தைந்து வயது. எனினும் கோபிநாத்தின் அன்பு வேண்டுகோளைத் தட்டமுடியாமல் பணி ஓய்வுக்குப் பிறகும் வந்து பணிபுரிகிறார். கலைக்கு வயதேது, ஓய்வேது?  

பளிச்சென்ற முகம். உழைப்புக்கு அஞ்சாத படைப்பில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டதால் உடலைப் பார்த்து வயது சொல்ல இயலாது. கால மாறுதலுக்கு ஏற்ப தன்னையும் தனது ஓவியத் திறனையும் செதுக்கிக் கொண்டவர் - மாறுதலை உள்வாங்கிக் கொண்டு அவ்வகைகளிலும் பயணித்து வருபவர்.  

ஆறுக்கு ஆறு சிறு சிறு கண்ணாடிக் கதவுத் தடுப்பு அஞ்சறைப்பெட்டி அலுவலகம். அமிழ்தன் அறையில் வரைமேசை. சுழல் நாற்காலி. எதிரே  கைப்பிடியுடன் சிறிய மர நாற்காலி. இடப்பக்கம் ஓவிய உபகரணங்களுக்கான மர இழுப்பறைகள் கொண்ட சரிவு மேசை!

அலுவலகம் முழுமைக்கும் மத்திய குளிர் சாதன அமைப்பு. ஆசிரியர் கோபிநாத் தாராள மனசுக்காரர். தம்மைப்போலவே தம் கீழ் பணிபுரிபவரையும் நடத்துகிறவர். கெடுபிடிகள் கிடையாது. அவரவருக்குக் கொடுக்கும் வேலைகளை உரிய நேரத்தில், உரிய வகையில் செய்து முடிக்கவேண்டும்.
ஒன்பது மணிக்கெல்லாம் புது ஓவியர் வந்துவிட்டார். கீழ்த்தளத்திலிருந்து அலுவலகக் காவலர் வந்து ஓவியரின் முகவரியட்டையைக் கொடுத்தார்.
‘‘வரச் சொல்லுங்க சாமிநாதன்! முடிஞ்சா நம்ம ரத்னாவில நீங்க ஒரு காப்பி குடிச்சிட்டு, ரெண்டு காப்பி வாங்கிட்டு வந்துடுங்க!’’

சிறிது நேரத்தில் அந்தப் புது ஓவியர் வந்தார். திறந்திருக்கும் கதவை சுட்டு விரலை மடக்கி லேசாகத் தட்டிவிட்டுத் தயங்கி நின்றார்.‘‘வாங்க வர்மா!’’ கைகளால்  எதிர் நாற்காலியைக் காண்பித்து, ‘‘உட்காருங்க...’’ என்றார் அமிழ்தன்.‘‘வணக்கம் சார்! நான் ஓவியன். எழுத்தாளர் நந்தனோட மகன். வெளியில் தனியனாய்ப் பல துறைகளிலும் சிறுசிறு பணிகள் செய்கிறேன்...’’‘‘வர்மா! இரு, திருத்தம். ஓவியன் இல்லை - ஓவியர்! ம், நம்மை நாமே மதிக்கலைன்னா வேறு யார் மதிப்பார்கள்? இரண்டாவது, ‘தனியனாய்’  இல்லை - சுதந்திரமாய்! சரி, முதலில் நம்ம வேலையை ஆரம்பிப்போம்!’’

வர்மா எழுந்து நின்று பெரிய ஜோல்னாப் பையிலிருந்து முரட்டுக் காதி காக்கிப் பையை எடுத்து இரு கரங்களாலும் பணிவுடன் தந்தார்.
அமிழ்தனின் கைகள் வர்மாவை அமரச் சொல்ல, கண்களோ ஆர்வத்துடன் அந்தப் படங்களைக் கூர்ந்து நோக்கின. இரண்டு படங்களையும்
அருகருகே வைத்துப் பார்த்த அமிழ்தன் ‘‘ம்!''இசைவான தலையாட்டல்! ‘‘இரண்டுமே நல்லாயிருக்கு. ஆசிரியர் தேர்வு செய்வார்...’’ தன் மேசையின் நடுவே அந்தப் படங்களை ஒவ்வொன்றாக வைத்து செல்பேசியில் படம் எடுத்து உடனடியாக ஆசிரியர் எண்ணுக்கு அனுப்பி வைத்தார்.
‘‘அப்ப நான் கிளம்புறேன் சார்...’’

‘‘உக்காருங்கப்பா. சார், மோர்லாம் வேணாம். அமிழ்தன்னே கூப்பிடுங்க. காப்பி வரும், குடிச்சுட்டுக் கிளம்பலாம்...’’
வந்ததிலிருந்து அமிழ்தனின் முகத்தையே கூர்ந்து நோக்கிக் கொண்டிருந்த வர்மா, சற்றே சந்தேகத்துடன் ‘‘சார்... அமிழ்தன் சார், உங்களை எங்கேயோ பார்த்த மாதிரியே இருக்கு... நீங்க எழுத்தாளர் விமலன் சாருக்கு உறவா?’’ என்று கேட்டான்.

‘‘ஆமா வர்மா! அவரோட மகன்தான் நான்!’’ புன்னகைத்தார்.சடக்கென நாற்காலியிலிருந்து எழுந்து நின்று இருகரம் கூப்பி வணக்கம் சொன்னான் வர்மா. ‘‘ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி சார்! எங்கப்பா, எங்க அக்கா சங்கரி எல்லோரும் அடிக்கடி உங்கப்பாவைப் பத்திச் சொல்லிக்கிட்டேயிருப்பாங்க. நான் கல்லூரிப் படிப்பு முடிச்சவுடனேயே சாந்திநிகேதன் போய்ட்டேன். அங்கேயே வேலை... சில வருஷம் முன்னே அப்பா உடம்பு சரியில்லாம இருந்தப்போ அம்மா இங்கயே வந்திடுன்னு சொன்னாங்க. அதான் வந்துட்டேன். எங்க அக்கா பையனுக்கு உங்க அப்பா பேர்தான் - விமலன்!’’
‘‘ரொம்ப மகிழ்ச்சி!’’

‘‘ஏன் உங்க அப்பாவின் பேரை எங்கக்கா தன் மகனுக்கு வைச்சாங்கன்னு கேட்க மாட்டீங்களா அமிழ்தன் சார்?’’
சிரித்தார். ‘‘சொல்லுங்க - ஏன்?’’‘‘எங்க அக்கா சங்கரி பிஎட் முடிச்சதும் நிறைய ஸ்கூலுக்கு ஆசிரியர் வேலைக்கு விண்ணப்பம் போட்டுக்கிட்டே இருந்தாங்க. சில இடத்தில இருந்து நேர்காணலுக்குக் கூப்பிடுவாங்க. பல இடத்தில் பதிலே வராது. ஒன்றரை வருஷம் ஓடிடுச்சு.

அப்பா ஒரு முழுநேர சுதந்திர எழுத்தாளர். சினிமாவை நம்பி, இருந்த, பத்திரிகை துணையாசிரியர் வேலையையும் விட்டுட்டுட்டார். வீட்டில் பொருளாதார நெருக்கடி. நான் அப்போதான் கல்கத்தா போனேன். என் செலவு போக மீதிப் பணத்தை அப்பிடியே இங்கே அனுப்பி வைப்பேன்.  
அம்மா சிக்கனமா குடும்பம் நடத்தினாங்க. அக்காவுக்கு வேலை கிடைச்சா அது பெரும் உதவியா இருக்கும்.  

அப்பிடித்தான் ஒரு நாள் அடையாறில் ஒரு பள்ளியில் நேர்காணல். பெரும்பாலும் அம்மாதான் அக்கா கூட வழக்கமாப் போவாங்க. ஆனா, அன்னைக்கு அப்பா, நேர்காணலுக்கு அக்கா கூடப் போயிருக்கார்...’’சாமிநாதன் கொண்டு வந்த காப்பியை இருவரும் எடுத்துக் கொண்டனர். பருகியபடி வர்மா சொல்லிக் கொண்டே போக, அமிழ்தன் தன் தங்கை  சாந்தியின் நினைவில் மூழ்கினார்.                                    
     
பல வருடங்களுக்கு முன் சாந்தி, அடையார் பள்ளி நேர்காணலுக்குச் சென்றாள். இளங்கலை முடித்து ஆசிரியர் பயிற்சிப் படிப்பும் முடித்து, ஆசிரியர் பணிக்கு விண்ணப்பம் செய்து காத்திருப்பவள். இதுவே அவளுக்கு முதல் நேர்காணல். அப்பா விமலன் உடன் சென்றார். பள்ளியின் நீண்ட செங்கல் கட்டட வராந்தாவில் நடந்து சென்று தலைமையாசிரியர் அறைக்குச் சென்றனர்.வாசலில் இருந்த உதவியாளர், சாந்தியிடம் பள்ளியிலிருந்து அனுப்பப்பட்ட கடிதத்தை மட்டும் பார்த்துவிட்டு உள்ளே சென்று அமரச் சொன்னார். விமலன் அவரிடம், ‘‘இன்னும் எத்தனை பேருப்பா வருவாங்க?’’ எனக் கேட்டார்.

இதுவரை இப்படி யாரும் தன்னிடம் கேட்டிருக்காத அதிர்ச்சியில் உதவியாளர், ‘‘எச்எம் இன்னும் வரலை. மொத்தம் ரெண்டே பேர்! உள்ளே உக்காருங்க...’’ என்றார்.ஒரு நிமிடம் யோசித்த விமலன், உள்ளே சென்று சாந்தியின் அருகே அமர்ந்தார். சாந்தியும் இவரும் மட்டுமே. ‘‘நான் மட்டுமே உள்ளே போறேன்பா. நீங்க இங்கேயே இருங்க. வேணும்னா கூப்பிடுறேன்...’’அப்போது அறை வாசலில் பன்னீர்ப் புகையிலை மணக்க நடுவயது நந்தன் வந்தார். உடன் அவரது மகள் சங்கரி.

நந்தனுக்கு ஆனந்த அதிர்ச்சி! நெஞ்சில் தனது சிறிய எவர்சில்வர் வெற்றிலைப் பெட்டியை அணைத்து விமலனுக்கு வணக்கம் தெரிவித்தார். ‘‘அடடே, நலமா இருக்கீங்களா அண்ணே? இங்கே, எம் மக சங்கரிக்கு வேலைக்கு நேர்காணல் அழைப்பு வந்திருக்கு. படிப்பு முடிச்சு ரெண்டு வருஷம் ஆகப்போகுது... இன்னும் எங்கயும் வேலை கிடைக்கலை... இவளுக்கு வேலை கிடைச்சா கொஞ்சம் வண்டி நல்லா ஓடும்... பையனும் இப்பதான்  படிப்பை முடிச்சான்; எங்கயோ கல்கத்தாவிலே வேலைக்குப் போறேன்கிறான்... நான் பாட்டுக்கு என் புராணம் பாடிக்கிட்டு... அண்ணே, நீங்க எங்கே இங்கே?’’

‘‘ஒண்ணுமில்லே, தலைமை ஆசிரியை பார்க்கணும்னாங்க, அதான் நானும் மகள் சாந்தியும் வந்தோம்... அம்மா சாந்தி! ஒரு நிமிஷம் வாம்மா!’’
சாந்தியை அவசரமாக அழைத்துக்கொண்டு, அறையை விட்டு வெளியேறினார்.சிறிது தூரம் சென்றபின், மிக ரகசியக் குரலில், ‘‘சாந்தி, தப்பா நினைச்சுக்காதே. இவர் - நந்தன். நம்மை விடப் பொருளாதாரத் தேவையிலிருக்கார். அவர் மகளுக்கு இந்த வேலையை நீ விட்டுத் தரலாம். நாம வேற எங்கயாவது...’’ இழுத்தார்.‘‘நீங்க நினைக்கிறது சரிப்பா!’’ ஒரே பதில். ஒரே அலைவரிசைச் சிந்தனை, மனப்போக்கு.

‘‘சாந்தி! உன்னை நினைக்கப் பெருமையா இருக்கும்மா...’’தொலைவில் நடந்து வந்தார் தலைமையாசிரியை திவ்யா! ஸ்டூலில் அமர்ந்திருந்த உதவியாளர் எழுந்து நின்று இங்கிருந்தே வணக்கம் தெரிவித்தார்.சாந்தியின் கரம் பற்றி, விமலன் தலைமையாசிரியையை நோக்கி வேகமாக நடந்தார். ‘‘வணக்கம்மா! விமலன்...’’‘‘அடடா, வாங்க உள்ளே போகலாம். ஏன், உங்க பொண்ணுக்கு என்கிட்டே பயமா? நீங்க எதுக்கு வந்தீங்க அவ கூட?’’
‘‘இல்லம்மா! ஒரு நிமிஷம் நில்லுங்க... ஒரு விஷயம் பேசணும்...’’திவ்யா விமலனை விநோதமாகப் பார்த்தாள். ‘‘சொல்லுங்க...’’
‘‘இங்கே நேர்காணலுக்கு எழுத்தாளர் நந்தனின் மகள் வந்திருக்காங்க.

 நந்தனும் உடன் வந்திருக்காரு. என்னோட நிலைமையை விட அவரோட குடும்ப நிலைமை மோசம். அதிகத் தேவை  இருக்கு. இப்ப என்னைவிட அதிகப் பொருளாதாரக் கஷ்டத்திலிருக்கு அவர் குடும்பம். நான் என் மகள் சாந்திகிட்டே சொன்னேன். அவளும் ‘கொஞ்ச நாள் காத்திருக்கேன்’னு சொன்னா. நீங்க யோசிங்க. நான் இப்போவே இங்கிருந்தே கிளம்பறேன். உங்க எதிர்பார்ப்புக்கேற்ற தகுதிகள் நந்தனோட மகளுக்கு இருந்தா, தயவுசெய்து இந்த ஆசிரியப் பணியை அந்தப் பெண்ணுக்குக் கொடுங்க...’’சாந்தியும் மெதுவாகத் தலைமையாசிரியை அருகில் வந்து வணக்கம் தெரிவித்தாள்.
தலைமையாசிரியை அவர்களிருவரையும் சில நொடிகள் பார்த்து சிலையாக நின்றார்.

சாந்தியைத் தன்னோடு அணைத்து அவளது சிரத்தில் தம் கரம் பதித்தார். நா தழுதழுத்தது. ‘‘விமலன் சார், நான்
உங்க வாசகின்னு சொல்லிக்கிறதிலே பெருமிதம் அடையறேன்! உங்க மனசு பெரிய மனசு!’’சாந்தியைப் பார்த்தார்.

‘‘ஆல் தி பெஸ்ட் சாந்தி!
சீக்கிரமே உனக்கு வேலை கிடைக்கும்!’’
தந்தையும் மகளும்
இயல்பாக நடந்து, பள்ளியை
விட்டு வெளியேறினர்...

குண்டு பொஸுக்கு!

லிட்டில் புஷ்டியாக இருக்கிறார் டாப்ஸி. இப்போது அவர் இந்தியில் நடித்து வரும் ‘ரேஷ்மி ராக்கெட்’ டுக்காகத்தான் அந்த மெனக்கெடல். அதில் அவர் ஓட்டப்பந்தய வீராங்கனையாக நடிப்பதால், கொஞ்சம் குண்டாகி இருக்கிறார்.‘‘சதை பிடிக்கணும்னு நியூட்ரீஷியனின் ஆலோசனைப்படி மெனு எடுத்துட்டு வர்றேன். காலைல புரோட்டீன் பிரேக்ஃபாஸ்ட். உருளைக்கிழங்கில் செய்த டிஷ். ரொம்ப டேஸ்ட்டா இருக்கு!’’ சப்புக் கொட்டுகிறார் டாப்ஸி.

எழுத்தாளர் ஆன ஹீரோயின்!

‘குக்கூ’ மாளவிகா நாயர், இப்போது ஹைதராபாத்தில் வசிக்கிறார். பூர்வீகம் கேரளா என்றாலும், தில்லியில் பிறந்து வளர்ந்தவர். ஆங்கில நாவல்கள் அதிகம் படிக்கும் மாளவிகா, வீட்டில் மிகப்பெரிய லைப்ரரி வைத்துள்ளார். ஆங்கிலத்தில் சிறுகதைகளும் நாவல்களும் கூட எழுதி வருகிறார்!

மல்லு டூ கோலி... வழி தனுஷ்!

மல்லுவுட் ரஜிஷா விஜயன், இப்போது கோலிவுட்டில். மலையாளத்தில் ‘ஒரு சினிமாக்காரன்’, ‘ஜூன்’, ‘ஃபைனல்ஸ்’, ‘ஸ்டாண்ட் அப்’ என ஒரு டஜன் படங்களில் திறமையை நிரூபித்த ரஜிஷா தமிழில் தனுஷ் ஜோடியாக ‘கர்ணன்’ படத்தில் நடித்து வருகிறார்.

சின்னத்திரை தொகுப்பாளினியாக கேரியரைத் தொடங்கிய ரஜிஷா, மலையாளத்தில் அறிமுகமான முதல் படத்திலேயே கேரள அரசின் விருதை வென்று கவனம் ஈர்த்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அகிலன் கண்ணன்