நான்...கே.சிவசங்கர் மாஸ்டர்ஒரு விபத்துல என் முதுகுத்தண்டு முறிஞ்சிடுச்சு. ஆனா, அதையெல்லாம் மீறி குணமாகி நடனமாடி டான்ஸ் மாஸ்டர் அளவுக்கு வருவேன்னு என் அப்பா அம்மா கனவில் கூட நினைக்கலை.  7 டிசம்பர் 1948ல் சென்னை பாரிமுனையில் பிறந்தேன். பூர்வீகமா சென்னைவாசிகள்தான்.
அப்பா பெயர் கல்யாணசுந்தரம். அம்மா பெயர் கோமளம்மாள். அப்பா நல்ல வசதியானவர். ஹோல்சேல் பழ வியாபாரி. ஒவ்வொரு ஊருக்கும் பழங்களை ஏற்றுமதி செய்துட்டு இருந்தவர். பிறவியிலேயே உடல் சுகமில்லாத குழந்தையா நான் பிறந்தேன்.

அம்மா கூடப் பிறந்தவங்க மொத்தம் பத்து பேரு. அக்கா தங்கச்சின்னு பெரிய கூட்டம். எங்க அம்மா கடைசி பொண்ணு. எப்பவும் என் வீட்டில் ஒரு பெரிய கூட்டம் இருந்துட்டே இருக்கும். இந்தத் தெருவுல ஆரம்பிச்சு அடுத்த தெருவில் வாசல் முடிகிற அளவுக்கு பெரிய வீடு.
ஒரு வேளைக்கு 40 பேருக்கு சமைப்போம். வீட்டு வாசலில் பெரிய திண்ணை இருக்கும். அங்கே என் பெரியம்மா என்னைத் தூக்கி வெச்சுகிட்டு பேசிக்கிட்டு இருக்கும்போது ஒரு மாடு மிரண்டு ஓடி வந்திருக்கு.

பயந்து என்னை தூக்கிக்கிட்டு வீட்டுக்குள்ளே ஓடிப் போறதுக்கு முயற்சி செஞ்சிருக்காங்க. எதிர்பாராத விதமாக தடுக்கி விழுந்ததில் அவங்க அப்படியே என் மேல விழுந்துட்டாங்க. அதுல மொத்தமா என் முதுகெலும்பு உடைஞ்சு கொஞ்சமா ஒட்டிக்கிட்டு இருந்துச்சு. அதோட காய்ச்சல் வேற. பார்க்காத மருத்துவம் இல்லை, போகாத டாக்டர் இல்லை. எந்த ட்ரீட்மென்டும் எடுக்காமல் சுமார் இருபது நாள் அப்படியே இருந்தேன். தொட்டாலே ஒரு அழுகை. அப்புறம் தம்புச் செட்டித் தெருவில் ஒரு அனுபவமான டாக்டர் கிட்ட என்னை கொண்டு போனாங்க.  

அவர் தொட்டுப் பார்த்த உடனேயே சொல்லிட்டார்... இந்தப் பையனுக்கு முதுகெலும்பு உடைஞ்சிருக்கு... கொஞ்சம் ஒட்டிக்கிட்டு இருக்கு அப்படீன்னு. முழுமையா அவரே சிகிச்சை கொடுக்க முன்வந்தார். பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ்ல ஒரு போட் மாதிரி செஞ்சு என் இடுப்புக்கு கொடுத்து முழுமையா ரெண்டு வருஷத்துக்கு மேல அவர் கண் பார்வையிலேயே சிகிச்சையில் இருந்தேன்.

அப்பாவுடைய மொத்த வருமானமும் என் சிகிச்சைக்கு செலவாச்சு. டாக்டர் வீட்டுக்கு வருவார். என் படிப்பு முதற்கொண்டு வீட்டிலேயேதான். அடுத்தடுத்து எனக்கும் தம்பி தங்கைகள் பிறந்தாங்க.என் பெரியம்மா ‘நான் இவனை வளர்க்கிறேன். என்னாலதானே இப்படி ஆச்சு’ அப்படின்னு சொல்லி என்னைத் தூக்கிட்டுப் போயிட்டாங்க.

குழந்தைப் பருவம் முழுக்க வெறுமனே எல்லாத்தையும் வேடிக்கை பார்க்கிறதிலேயே போயிடுச்சு. ஸ்கூலுக்கு அனுப்பவும் பயந்தாங்க. அங்க பசங்க ஏதாவது தள்ளிவிட்டுட்டா மறுபடியும் முதுகுத்தண்டில் பிரச்சனை வந்துடும்னு பயம்.

ஐந்தாம் வகுப்பிலிருந்து ஸ்கூலுக்கு போக ஆரம்பிச்சேன். எனக்கு ஓர் அண்ணன். அவர் பெயர் குமரவேல். இன்னொரு அண்ணன் பெயர் உமாபதி. அக்கா பெயர் சௌந்தர்யா. தங்கச்சி பேரு சேதுராணி. எனக்குப் பிறகு ஒரு தம்பி இருந்தார். எதிர்பாராதவிதமாக இறந்துட்டார்.

அத்தனை குழந்தைகளிலும் என்னை மட்டும் தான் ரொம்ப ஜாக்கிரதையா குடும்பமே பார்த்துக்கிட்டாங்க. எங்க அண்ணா எல்லாம் நடந்து போவாங்க. என்னை மட்டும் அப்பா சைக்கிள்ல கூட்டிட்டுப் போய் விடுவார்.  இரண்டாவது பெல் அடிச்ச பிறகுதான் ஸ்கூலுக்கு போவேன்.

எப்பவுமே ஒரு கனமான பெல்ட் போட்டிருப்பேன். பசங்க பட்டம் விட்டால் அதை பார்க்கிறதுக்குக் கூட அனுப்ப மாட்டாங்க.  அடுத்தடுத்து மேற்படிப்புக்கு ரிக்‌ஷால போனேன். பத்தாவது வரையிலும் படிப்பு. எனக்கு பாட்டு கத்துக்கணும்னு ரொம்ப நாளா ஆசை. டி.கே.

பட்டம்மா ளுடைய குரு திருப்பதி நட்ராஜ் நாயுடு எங்க வீட்டுக்கே வந்து எனக்கு சொல்லிக் கொடுத்தார். 9 வயசுல பாட்டு கத்துக்க ஆரம்பிச்சேன்.
எங்க அப்பா எல்லா சபாவிலேயும் மெம்பரா இருந்தார். அதன் காரணமா அங்கே நடக்கிற எல்லா நடன நிகழ்ச்சிகளையும் பாட்டுக் கச்சேரிகளையும் பார்க்க வாய்ப்பு கிடைத்தது. அந்த பாட்டு, நடனங்கள் எல்லாம் பார்த்துப் பார்த்து எப்படி யாவது நாம டான்ஸ் பண்ணணும்னு ஆசை வந்தது.

குருவே இல்லாம எனக்கு நானே ஆசிரியரா மாறி இதுதான் சரியான முத்திரைகள்னு தெரியாம, ஆனா, சரியான முத்திரைகளைப் பிடித்து நடனமாடிப் பழக ஆரம்பிச்சுட்டேன். வீட்டுக்கு எதுவுமே தெரியாது. நானே ஆடி பழகிட்டு இருந்தேன். எப்பவும் கண்ணாடியைப் பார்த்து சினிமா வசனங்களையும் நடிப்பையும், டான்ஸையும் பயிற்சி செஞ்சுக்கிட்டே இருப்பேன்.

‘எப்ப பார்த்தாலும் கண்ணாடி முன்னாடி நின்னுகிட்டு இருக்கியே... பெரிய அழகன்னு நினைப்பா? ஒழுங்கா படிக்கிற வேலையை பாரு’ அப்பா திட்டுவார். ஒருமுறை பள்ளி நிகழ்ச்சியில் நடனமாடி னேன். கலைமாமணி விருது வாங்கின அப்பாவுடைய நண்பர்தான் எனக்கு பரிசு கொடுத்தார்.

அவர் மறுநாள் வீட்டுக்கு வந்து, ‘உங்க பையன் ரொம்ப நல்லா நடனம் ஆடுறான்... ஏன் டான்ஸ் கிளாஸ்ல சேர்க்கக் கூடாது?’னு கேட்டார்.
பத்தாவது முடிச்சதும் மேல படிக்க வைக்க வீட்ல விரும்பினாங்க. ஏன்னா, எங்க வீட்ல எல்லாருமே பட்டதாரிகள். ‘எனக்கு படிப்பு வேணாம்... நடனம் கத்துக்கறேன்’னு சொன்னேன். வீட்ல கோரசா எதிர்த்தாங்க. அப்பா எல்லா ஜோசியர்களையும் போய் பார்த்தார். ‘உங்க பையன் கலைத்
துறைல சாதிப்பான்’னு சொல்லி வைச்ச மாதிரி எல்லாரும் சொன்னாங்க.

அப்ப மயிலாப்பூர்ல பழம்பெரும் நடிகரான டி.எஸ்.துரைராஜ் இருந்தார். அவர் எங்க அண்ணி மூலமா குடும்ப நண்பர். அவர் மூலமா அப்ப பெரிய நடனக் கலைஞர்களா இருந்த நடராஜ் சகோதரர்கள்கிட்ட சேர்ந்தேன். முதல் இரண்டு வருஷங்கள் வீட்ல இருந்து போய் வந்துட்டு இருந்தேன். அப்புறம் 7 வருஷங்கள் குருகுலவாசம். 1974ல பார்த்தசாரதி சுவாமி சபால முதல் அரங்கேற்றம்.

என் அடுத்த குருநாதர் நட்ராஜ் சகுந்தலாதான் ஆண்கள் எப்படி நடனமாடணும்... பெண்கள் எப்படி நடனமாடணும்னு சொல்லிக் கொடுத்தாங்க.
பிறகு அடுத்தடுத்து நிறைய சவால்கள். ஒவ்வொரு சபாவா ஏறி இறங்கினேன். எங்கயும் வாய்ப்பு கிடைக்கலை.

ஏற்கனவே அப்பா எனக்காக நிறைய செலவு செய்திருந்தார். அதனால இனி உன்னை நீயே பார்த்துக்கனு சொல்லிட்டார்.ஒரு வருஷத்துக்கு அப்புறம் என் பெரியம்மா மூலமா அவங்க அக்காவுடைய கணவரை சந்திச்சேன். அவர் மிகப்பெரிய தயாரிப்பாளரான லேனா செட்டியார்கிட்ட சொல்லி... இவர் வழியா சலீம் மாஸ்டர்கிட்ட உதவியாளரா சேர்ந்தேன்.

எட்டு வருஷங்கள் அசிஸ்டெண்டா இருந்தேன். அப்புறம் 10க்கும் மேற்பட்ட மாஸ்டர்கள்கிட்ட உதவியாளனா பணிபுரிஞ்சேன். எல்லா நுணுக்கங்களையும் கத்துக்கிட்டேன். அந்த வகைல பிரபுதேவா மாஸ்டருடைய அப்பாவான சுந்தரம் மாஸ்டர்கிட்டயும் இருந்திருக்கேன். 

சலீம் மாஸ்டர் பரிந்துரையால இயக்குநர் பி.மாதவன் இயக்கின ‘குருவிக்கூடு’ படத்துல முதல்முறையா டான்ஸ் மாஸ்டரானேன். சரிதாவும் சுதாகரும் நடிச்ச அந்தப் படத்துல சத்யராஜ்தான் வில்லன்.   

சலீம் மாஸ்டர் தெலுங்குல நிறைய படங்கள் செய்திருக்கார். அதனால அந்த இண்டஸ்ட்ரியும் எனக்குத் தெரியும். அதனால சிரஞ்சீவி நடிச்ச ‘கைதி’ தெலுங்குப் படத்துல மாஸ்டரா பணிபுரிஞ்சேன். அந்தப் படம் மெகா மகா ஹிட். அதனால அடுத்தடுத்து தெலுங்குல வாய்ப்புகள். தொடர்ந்து பத்து வருஷங்கள்... ஏராளமான படங்கள். என்.டி.ராமாராவ், நாகேஸ்வரராவ், கிருஷ்ணா, மோகன்பாபு... இப்படி பலருக்கு நடனம் அமைச்சேன்.

நான் நடனம் அமைக்காத இரண்டே தெலுங்கு நடிகர்கள் மகேஷ்பாபுவும் பிரபாஸும்தான்.

இந்தநேரத்துல அர்ஜுனை வைச்சு ராமநாராயணன் சார் ‘மனைவி ஒரு மாணிக்கம்’ படம் எடுத்தார். அர்ஜுன் சார் கேட்டதால அந்தப் படத்துக்கு ஒப்பந்தமானேன். அதில் இருக்கும் பாம்பு பாட்டு ஹிட் ஆனதும் ராமநாராயணன் சார் தன் கம்பெனியின் நிரந்தர டான்ஸ் மாஸ்டரா என்னை அமர்த்திட்டார்! தொடர்ந்து 30 படங்கள் செய்தேன்.  

நிறைய நடிகைகள் என் பேரை சொல்லி ‘நான்தான் மாஸ்டரா வேணும்’னு கேட்டது... கேட்பது எல்லாம் கொடுப்பினைதான்.

‘மன்மதராசா...’ பாட்டுக்கு தமிழ், தெலுங்கு, கன்னடம்னு எல்லா மொழிகள்லயும் டான்ஸ் அமைச்சேன். இப்படியான நேரத்துல ‘ஜேம்ஸ் பாண்டு’ படத்துல செல்வா என்னை நடிகனாக்கினார். பிரபு தேவா - பார்த்திபன் நடிச்ச அந்தப் படத்துல ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டரா நடிச்சேன்.

நடிப்புல விருப்பமில்லை. டான்ஸ்தான் என் வாழ்க்கை. அதனால வந்த நடிப்பு வாய்ப்புகளைத் தவிர்த்தேன். ஆனா, கே.எஸ்.ரவிக்குமார் ‘வரலாறு’ படத்துக்கு கூப்பிட்டப்ப மறுக்க முடியலை. அந்தப் படத்துக்கு நடனம் அமைச்சதோட ஒரு கேரக்டர்லயும் நடிச்சேன். அப்புறம் வரிசையா சின்னச் சின்ன கேரக்டர்கள்ல தலைகாட்டினேன். இப்ப டான்ஸ், நடிப்பு இரண்டிலும் கவனம் செலுத்தறேன்.

இத்தனை வருட சினிமா பயணத்துல யார்கூடவும் நெருங்கியும் பழகலை... சர்ச்சையிலும் சிக்கலை. இதனாலயே சினிமால எனக்கு மரியாதை இருக்கு.
பாலுமகேந்திரா சார் இயக்கின ‘மறுபடியும்’ படத்துல ‘ஆசை அதிகம் வைச்சு...’ பாடலுக்கு நடனம் அமைக்க பெங்களூர் போயிருந்தேன். அப்ப வீட்ல ஒரு பெண்ணை அப்படியே பார்த்துட்டு வந்துடுனு சொன்னாங்க. சொந்தக்காரங்க வழியா வந்த பெண்.

எனக்கு இஷ்டமில்லை. ஆனாலும் வலுக்கட்டாயமா பெண்ணை பார்க்க வைச்சாங்க. இன்னொரு தெலுங்குப் பட ஷூட் அப்ப எனக்கு கல்யாணமாச்சு.அவங்க பேரு சுகன்யா. 40 வருடங்கள் ஆச்சு. இறைவன் கொடுத்த வரமா எனக்கு அமைஞ்சிருக்காங்க.

எனக்கு கடவுள் பக்தி அதிகம். எலும்பு முறிஞ்சவனை டான்ஸ் மாஸ்டராக்கி, ஒரு குடும்பத்தையும் கொடுத்திருக்காரே கடவுள்... 

என் பெரிய மகன் பெயர் விஜய் சிவசங்கர். சின்னவர் பெயர் முரளி (எ) அஜய் சிவசங்கர். ரெண்டு பேருமே டான்ஸ் மாஸ்டர்ஸ்தான். பெரியவர் 150 படங்கள் செய்திருக்கிறார். சின்னவர் நூறு படங்களுக்கு மேல் நடனம் அமைச்சிருக்கார்.

பத்துக்கும் மேலான மொழிகள்... எண்ணிக்கையே இல்லாம பாடல்கள்... திரும்பிப் பார்க்கிறப்ப நிறைவா இருக்கு. என்னை கோபக்காரர்னு சொல்வாங்க. அதைத் தாண்டி தப்பா வேறு எதுவும் யாராலும் சொல்ல முடியாது. எனக்குத் தெரிந்த நடனக் கலையை நானே ஆடி வீடியோவா ரெக்கார்ட் செய்து யூ டியூப் தளத்தில் போட்டு வச்சிருக்கேன். பாவங்கள், முத்திரைகள்ல யாருக்கு எந்த சந்தேகம்னாலும் பார்த்துக்கலாம்.

நல்லா பேசப்படுகிற கதாபாத்திரங்கள் செய்ய ஆசை. ‘ஒன்பது ரூபா நோட்டு’ படத்துல தங்கர்பச்சான் கொடுத்த மாதிரி... ‘பரதேசி’ படத்தில் பாலா சார் கொடுத்த மாதிரியான பாத்திரங்கள் கிடைச்சா நடிகனாகவும் ஒரு முக்கிய கட்டத்துக்கு நகர்வேன்.

ஒரு தேசிய விருது, நாலு மாநில விருதுகள், சுமாரா ஆயிரம் மாணவர்கள்னு நிறைவா இருக்கேன். எதிர்காலத்துல டான்ஸ் ஸ்கூல் அமைக்கணும். இதுதான் என் ஆசை...

செய்தி: ஷாலினி நியூட்டன்

படங்கள்: முனைவர் எம்.கோபி