வண்டியை ஸ்டார்ட் செய்ய மறுக்கும் டாப் ஹீரோக்கள்...



கிடைத்தது க்ரீன் சிக்னல்...

கொரோனாவிலிருந்து தப்பி வந்து கொஞ்சம் மூச்சு விட ஆரம்பித்திருக்கிறது கோலிவுட். கிட்டத்தட்ட ஐந்தரை மாத ஊரடங்குக்குப் பிறகு இந்த மாதம் (செப்டம்பர்) முதல் தேதியில் இருந்து படப்பிடிப்புக்கு க்ரீன் சிக்னல் கிடைத்திருப்பதால் மகிழ்கிறது தமிழ் சினிமா வட்டாரம்.
மத்திய, மாநில அரசின் வழிகாட்டுதல் நெறிமுறைகளின் படி படப்பிடிப்புகள் நடத்தப்படலாம் என அறிவித்த அடுத்த நாளே சிலர் படப்பிடிப்புக்கு கிளம்பியும் விட்டார்கள்.

‘‘படப்பிடிப்பு நடத்தலாம் என்ற அறிவிப்பே நம்பிக்கை அளிக்குது. எல்லா படப்பிடிப்புக் குழுவினரும் படப்பிடிப்பைத் தொடங்குவார்கள் என்று நம்புகிறேன்...’’ என நம்பிக்கை தெரிவித்திருக்கிறார் விஷால்.

ஹீரோக்களை விட குஷியானவர்கள் புரொடக்‌ஷன் ஆட்களும், லைட்மேன் உள்ளிட்ட தொழிலாளர்களும்தான். ‘‘ஷூட்டிங்ல எந்நேரமும் டென்ஷனோட பம்பரமா சுத்திச் சுத்தி வேலை பார்த்தது பெரிய விஷயமா தெரியல.
இந்த ஐந்தரை மாசம் தொழில் இல்லாம வீட்டுக்குள்ளேயே முடங்கியிருந்தது மன அழுத்தத்தைத் தான் அதிகரிச்சது. இப்ப அதுக்கு ஒரு முடிவு வந்துடுச்சு...’’ என்று சொன்ன புரொடக்‌ஷன் மானேஜர் ஒருவர், ஆனால், எல்லா ஷூட்டிங்கும் உடனடியாக நடக்காது என்கிறார்.

‘‘இன்னும் பத்து நாள் ஷூட் போனா படம் முடிஞ்சுடும்... இன்னும் அஞ்சு நாள் பேட்ச் ஒர்க் ஷூட் இருக்கு... ஹீரோயின் போர்ஷன் மட்டும் எடுக்கணும்... இப்படி இருக்கற படங்களோட ஷூட்தான் உடனடியா நடக்கும். ஏன்னா 75 பேரை மட்டும் வைச்சு ஷூட் போகலாம்னு சொல்லியிருக்காங்க. அதனால முடியும் தருவாயில் இருக்கும் படங்களோட படப்பிடிப்புகள் சட்டுனு தொடங்கிடும். மத்தவங்க நிலவரம் போகப் போகத்தான் தெரியும்.

ஆனா, டாப்மோஸ்ட் ஹீரோக்கள் அடுத்த வருஷம் மார்ச்சுக்கு அப்புறம்தான் படப்பிடிப்புல கலந்துப்பாங்கனு செய்திகள் வருது...’’ என்கிறார் அவர்.
இது எந்தளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. ஆனால், பல படங்களின் படப்பிடிப்புகள் நடக்கத் தொடங்கியிருக்கின்றன.

தமிழில் டாப்ஸி நடிக்கும் ஒரு படத்தின் ஷூட், ராஜஸ்தானில் பரபரக்கிறது. ஜி.வி.பிரகாஷ் - கௌதம்மேனன் இணையும் படம், செல்வராகவன் ஹீரோவாக நடிக்கும் ‘சாணிக் காயிதம்’ உட்பட சில படங்கள் ஷூட்டுக்கு ரெடியாகிவிட்டன.

‘‘எங்க ‘எக்கோ’வும் தயாராகிட்டோம்...’’ என மகிழ்ச்சி பொங்க சொல்கிறார் ‘கில்லி’ ஒளிப்பதிவாளர் கோபிநாத். ‘‘ஸ்ரீகாந்த் ஹீரோ. நவீன் இயக்கறார். உண்மைல ஷூட்டிங் தொடங்கறது மகிழ்ச்சியா இருக்கு. இண்டஸ்ட்ரி மறுபடியும் இயங்கப் போகுது. பலருக்கு வேலை கிடைக்கும். இந்த எண்ணமே எனர்ஜியைத் தருது.

கடந்த ஐந்தாறு மாசங்களா லாக்டவுன்ல முடிங்கிக் கிடந்ததால இனி எப்படி நடந்துக்கணும்னு எல்லாருமே உணர்ந்திருக்காங்க. தேவையில்லாத செலவினங்கள் இனி இருக்காது. 75 பேர் மட்டும்தான் இருக்கணும் என்கிற கட்டுப்பாடு பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது. ஏன்னா, வெளிநாட்டு ஷூட்ல இதுல பாதிப்பேரைத்தான் கூட்டிட்டுப் போவோம். அதுமாதிரி நினைச்சு இங்கயும் வேலை பார்க்க வேண்டியதுதான். இது தற்காலிகம்தானே? நிலமை மாறும்வரை இப்படி வைச்சு சமாளிக்கலாம்.

சில சீன்களுக்கு அதிக ஆட்கள் தேவைப்படலாம். அப்படிப்பட்ட சீன்ஸை கொஞ்சம் மாத்தி எழுதி ஷூட் செய்யலாம். ஹோட்டல்லயும் அசிஸ்டெண்ட் டைரக்டர்ஸ் உட்பட எல்லாருக்கும் தனித்தனி ரூம் கொடுத்தா பிரச்னைகள் வராது. இதுவும் ஒருவகைல குவாரண்டைன்தானே?

ஆனா, எல்லாரும் உடனடியா ஷூட் கிளம்புவாங்கனு நான் நினைக்கலை. அதேசமயம் இந்த மாத இறுதிக்குள்ள நிச்சயமா பலரும் படப்பிடிப்பை தொடங்கிடுவாங்க.  

நான் ஒளிப்பதிவு பண்ணின ‘சினம்’ படத்தோட போஸ்ட் புரொடக்‌ஷன் ஒர்க் முடிஞ்சுடுச்சு. சசிகுமார் நடிக்கும் ‘பரமகுரு’வுக்கு இன்னும் ஐம்பது சதவிகித ஷூட்டிங் பேலன்ஸ் இருக்கு. அதுக்கு திண்டுக்கல் போகணும். ஆர்டிஸ்ட் தேதிகளை பொறுத்து அதனோட ஷூட் ஆரம்பிக்கும்.

இப்ப ‘எக்கோ’வுக்கு லொகேஷன் பார்க்கும் வேலை நடக்குது. இதனோட கதை சென்னையை மையம் கொண்டதால இங்க தான் ஷூட் நடக்கும்...’’ என்ற கோபிநாத், சில ஆலோசனைகளை தன் பங்குக்கு வழங்குகிறார்.

‘‘படப்பிடிப்புல ஒரு டாக்டர் இருப்பது நல்லது. பெருசா இதுக்கு செலவாகாது. டாக்டர் கூட இருக்கறதால எல்லாரும் நம்பிக்கையோடு ஸ்பாட்ல வேலை பார்ப்பாங்க. ஹீரோ - ஹீரோயின்ஸுக்கும் தைரியம் வரும்...’’ என்கிறார் கோபிநாத்.  இந்நிலையில் நூறு பேரை படப்பிடிப்புக்கு அனுமதிக்க வேண்டும் என பெப்சி குரல் கொடுத்துள்ளது.

‘‘அப்பதான் ஓரளவாவது தொழிலாளர்கள் பயனடைவாங்க. ஐந்தரை மாதங்களா அவங்க வாழ்வாதாரமே பாதிக்கப்பட்டிருக்கு. 75 பேர்னா பல தொழிலாளர்களுக்கு வேலை கிடைக்காது. அதனாலதான் அரசுக்கு எங்க கோரிக்கையை கடிதம் வழியா தெரிவிச்சிருக்கோம்...’’ என்கிறார் பெப்சியின் பொருளாளரான சுவாமிநாதன்.  

நடப்பு தயாரிப்பாளர் சங்கத்தின் இணைசெயலாளரான சுரேஷ் காமாட்சியோ, ‘‘பெப்சியோட பேச்சுவார்த்தை நடத்தின பிறகுதான் எத்தனை படங்கள் ஷூட் கிளம்பும்னு சொல்ல முடியும்...’’ என்கிறார்.‘‘வழிகாட்டுதல் நெறிமுறைகளின்படி எந்தெந்த படங்களின் ஷூட்கள் தொடங்க சாத்தியமிருக்குனு சங்கங்களோட உட்கார்ந்து பேசிதான் ஒரு முடிவுக்கு வரமுடியும்.

அதனாலதான் பெப்சியை பேச்சு வார்த்தைக்கு அழைச்சிருக்கோம்.
நான் தயாரிக்கற ‘மாநாடு’ படத்தின் ஷூட்டை வரும் 15ம் தேதி தொடங்கலாம்னு நினைக்கறேன். ஆனா, அசோசியேஷன்ல என்ன முடிவு எடுக்கறாங்கனு பார்த்தபிறகுதான் நானும் அடுத்தகட்டத்துக்கு நகர முடியும்.

விஷால், விஜய் சேதுபதி, சிம்பு, விஜய் ஆண்டனினு பல ஹீரோக்கள் ஷூட்டிங் கிளம்ப ரெடியா இருக்காங்க. ஆனா, ரஜினி சார், விஜய், அஜித் எல்லாம் இப்போதைக்கு ஷூட்டிங் கிளம்ப மாட்டாங்கனு நினைக்கறேன்...’’ என்கிறார் சுரேஷ் காமாட்சி.

இப்படி படப்பிடிப்பு தொடர்பாக மேக மூட்டம் நிலவி வரும் நிலையில் சில ஹீரோயின்கள் மகிழ்ச்சியில் துள்ளுகின்றனர்.‘பசங்க 2’, ‘மாரி 2’, ‘தடம்’ ஆகிய படங்களில் நடித்த வித்யா பிரதீப், இப்போது ‘ஒத்தைக்கு ஒத்த’, ‘தலைவி’ ‘அசுரகுலம்’ ஆகிய படங்களில் பரபரக்கிறார்.

‘‘ஒர்க் இல்லாம அஞ்சு மாசத்துக்கு மேல வீட்ல இருந்துட்டோம். ஜனவரில நாலு வெப்சீரீஸ், நாலு படங்கள்ல கமிட் ஆகியிருந்தேன். மார்ச் 20ம் தேதி வரை தொடர்ச்சியா ஷூட்டிங் போயிட்டு இருந்தேன். அதுக்கு அப்புறம் லாக்டவுன் வந்து ஷூட்டிங்கை மிஸ் பண்ணினேன்.

மறுபடியும் ஷூட்டிங் ஆரம்பிக்கலாம்னு கேள்விப்பட்டதும் சந்தோஷமாகிடுச்சு. இப்ப விளம்பரப் படங்கள்ல நடிச்சிட்டிருக்கேன். மறுபடியும் ஷூட்டிங் கிளம்ப ரெடியா இருக்கேன்....’’ என்கிறார் வித்யா. ஹீரோக்களின் நிலை என்ன..? விசாரித்தோம்.

‘‘கலவரமாத்தான் இருக்கு. கொரோனா பீதி இன்னும் குறையலை. இப்ப ஊரடங்கை தளர்த்தியிருப்பதால் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரிக்குமோனு பயப்படறாங்க. ஷூட்டிங் கிளம்புறவங்க கிளம்பட்டும்... ஒரு மாசத்துக்குப் பிறகு நிலமை எப்படின்னு பார்த்துட்டு முடிவு செய்துக்கலாம்னு பலரும் நினைக்கறாங்க.

தவிர இப்ப ஹீரோக்களே தயாரிப்பாளர்களா இருக்கறதால, ஸ்பாட்டுல யாராவது ஒருத்தருக்கு தொற்று வந்தாகூட மொத்த ஷூட்டையும் நிறுத்த வேண்டி இருக்குமோ... பண இழப்பு அதிகரிக்குமோனு அச்சப்படறாங்க.முக்கியமா எல்லாரும் உயிருக்கு முக்கியத்தும் தர்றாங்க. சுவர் இருந்தாதான் சித்திரம்... ஒரு வருஷம் கழிச்சு கூட நடிச்சுக்கலாம்... அதுவே உயிர் போனா..?

இப்படித்தான் பல நடிகர்கள் நினைக்கறாங்க. அதனாலயே கொரோனாவுக்கு தடுப்பூசி வந்ததும் ஷூட்டிங் போகலாம்னு முடிவு செய்திருக்காங்க...’’ என்கிறது ஹீரோக்கள் வட்டாரம். துணை நடிகர் நடிகைகளோ படப்பிடிப்பு தொடங்கலாம் என அறிவித்தபிறகும் தலையில் கைவைத்தபடி சோகத்தில் இருக்கிறார்கள்.‘‘நாங்க பெப்சி கண்ட்ரோல்ல வரமாட்டோம்.

நடிகர் சங்கத்துக்குக் கீழ வருவோம். இப்ப ஷூட்டிங்ல 75 பேர்தான் இருக்கணும்னு சொல்லியிருக்காங்க. அப்படீன்னா முதல்ல எங்க தலைலதான் புரொடக்‌ஷன் ஹவுஸ் கை வைக்கும்.

நூறு பேர் தேவைப்படற சீனுக்கு 50 பேர் போதும்னு முடிவு செய்வாங்க. ஆக எங்கள்ல 50 பேருக்கு வேலை இருக்காது.பொதுவாகவே ஜூனியர்ஆர்ட்டிஸ்ட்டுகளுக்கு வேலை கிடைப்பது குதிரைக் கொம்பு. அப்படியிருக்கிறப்ப இந்தக் கட்டுப்பாடு எங்களைத்தான் அதிகம் பாதிக்கும். அட்மாஸ்ஃபியரை எல்லாம் கட் பண்ணிட்டு இண்டோர் ஷூட்டுக்கே திட்டமிடுவாங்க.

நாங்க கேள்விப்பட்டவரை பெரிய ஹீரோக்களின் கால்ஷீட் இப்போதைக்கு கிடைக்காதுனு சொல்லியிருக்காங்களாம். பெரிய படங்களின் ஷூட் நடந்தாதான் ஓப்பனிங் சீன், அரசியல் கூட்ட சீன், மார்க்கெட் சீன்ல எல்லாம் எங்களுக்கு வேலை கிடைக்கும்.

ஆக, டாப் ஹீரோக்களின் படங்கள் ஆரம்பிக்கிற வரை நாங்க பட்டினிதான் கிடக்கணும் இல்லைனா அரை வயிறு கஞ்சி குடிக்கணும்...’’ என தழுதழுக்கிறார் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் ஒருவர்.

மை.பாரதிராஜா