V



இந்த வருடத்தில் பெரிய எதிர்பார்ப்புகளைக் கிளப்பி ‘அமேசான் ப்ரைமி’ல் வெளியாகியிருக்கும் தெலுங்குப் படம் ‘வி’. தமிழ் டப்பிங்கிலும் பார்க்கக் கிடைக்கிறது.  சூப்பர் போலீஸுக்கும் சீரியல் கில்லருக்கும் இடையிலான யுத்தம்தான் ‘வி’. பலமுறை பார்த்து சலித்துப்போன ஒரு விளையாட்டை புதுப்பொலிவுடன் சொல்ல முயற்சித்திருக்கிறார்கள்.
ஹைதராபாத்தில் நடந்த ஒரு கலவரத்தைக் கட்டுப்படுத்தி மெடல்களை அள்ளுகிறார் டிசிபி ஆதித்யா. எந்த நாளிதழைத் திறந்தாலும் தலைப்புச் செய்தியாக அவரின் பெயரே அச்சாகியிருக்கிறது. ‘சூப்பர் காப்’, ‘ஸ்டைலீஷான போலீஸ்’ என மக்களால் கொண்டாடப்படுகிறார்.

ஊரே ஆதித்யாவின் கட்டுப்பாட்டில் அமைதியாக இருக்க, இன்ஸ்பெக்டர் ஒருவர் மர்மமான முறையில் கொல்லப்படுகிறார். தனது கண்காணிப்பில் இருக்கும் பகுதியில் கொலை விழுந்தது ஆதித்யாவைக் கோபமூட்ட, களத்தில் இறங்குகிறார். இதற்கிடையில் க்ரைம் நாவல் எழுதும் அபூர்வாவுடன் ரொமான்ஸ் வேறு.

அடுத்தடுத்து நான்கு பெருந்தலைகள் கொடூரமாக கொல்லப்படுகின்றனர். மேலிடத்தில் இருந்து கொலையாளியைப் பிடிக்க ஆதித்யாவுக்கு அழுத்தம் அதிகரிக்கிறது. ஒவ்வொரு கொலையின்போதும் அடுத்த கொலைக்கான க்ளூவைக் கொடுத்து ஆதித்யாவிடம் விளையாடுகிறான் சீரியல் கில்லர்.

அத்துடன் போனில் தொடர்பு கொண்டு தன்னைப் பிடிக்க முடியாது என்று ஆதித்யாவிடம் சவால் விடுகிறான். சவாலில் ஜெயித்தது சூப்பர் போலீஸா... சீரியல் கில்லரா... என்பதே திரைக்கதை. நானியின் 25வது படம், அவர் முதல் முறையாக எதிர் கதாபாத்திரத்தில் நடிக்கும் படம். ஆனால், பெரிதாக படம் கவரவில்லை. சீரியல் கில்லர் ரோலுக்கு நானி சுத்தமாகப் பொருந்தவே இல்லை. போலீஸாக சுதீர் பாபு ஸ்டைல் மட்டும் காட்டி ஸ்டண்ட்டில் ஸ்கோர் செய்திருக்கிறார்.

மக்கள் மத்தியில் பிரபலமான ஹீரோ, சீரியல் கில்லராக நடிக்கும் போது அவர் செய்கின்ற கொலைகளுக்குச் சரியான காரணம் இருக்கும்; கொலையாளியாக அவர் மாறுவதற்கு முன் நல்லவராக இருந்திருப்பார்; அவர் மனைவியோ அல்லது காதலியோ கொலை செய்யப்பட்டிருப்பார் போன்ற கிளிஷேக்கள் இப்படத்திலும் தவறாமல் இடம்பிடித்திருப்பது சலிப்பை உண்டாக்குகிறது.

‘ராட்சசன்’ தீம் மியூசிக்கை நினைவுபடுத்துகிறது தமனின் பின்னணி இசை. ஸ்டைலீஷான சண்டைக்காட்சிகள்... என ஒருசில மட்டுமே ரசிக்கும்விதமாக இருக்கிறது. அனாதை இல்லங்களில் வளரும் பெண் குழந்தைகளின் மீதான பாலியல் வன்முறையைச் சுட்டிக்காட்டியிருப்பதற்காக  இயக்குநர் மோகனகிருஷ்ண இந்திராகாந்தியைப் பாராட்டலாம்.