கொரோனா தந்த பாசிட்டிவ்!தனியார் பள்ளி to அரசுப் பள்ளி…தமிழகத்தில் கொரோனாவால் பள்ளிகள் திறப்பது குறித்து இன்னும் முடிவாகவில்லை. இந்நிலையில், இந்த ஆண்டு நிறைய ெபற்றோர் தனியார் பள்ளிகளிலிருந்து விலக்கி அரசுப் பள்ளிகளுக்கு தங்கள் குழந்ைதகளை மாற்றியிருப்பது ஆச்சரியமளிக்கிறது.
கடந்த காலங்களில் அரசுப் பள்ளிகளுக்கு மாணவர்களை வரவழைக்க அந்தந்த அரசுப் பள்ளி ஆசிரியர்கள் எடுத்த முயற்சிகள் வார்த்தைகளில் சொல்ல முடியாதவை. மாணவர்களின் வீடுகளுக்கே போய் பெற்றோரிடம் பேசி, கெஞ்சி, புரிய வைத்து… என எடுக்கப்பட்டவை எதுவும் பலனளிக்கவில்லை. மாணவ சேர்க்கை இல்லாததால் நிறைய பள்ளிகள் மூடப்படும் நிலையே ஏற்பட்டது.

இப்போது இந்தக் கொரோனா காலம் அதை அடியோடு மாற்றியிருக்கிறது. கொரோனா தந்த பாசிட்டிவ் விஷயமாக இதை பார்க்கின்றனர் அரசுப் பள்ளி ஆசிரியர்கள். இதற்கு முக்கியமாக மூன்று காரணங்கள் சொல்லப்படுகின்றன. ஒன்று, கொரோனா காலத்தில் தனியார் பள்ளிகள் வசூலிக்கும் கட்டணத்தை பெற்றோரால் கட்டமுடியவில்லை.

இரண்டாவதாக, தனியார் பள்ளிகள் ஆன்லைனில் மோசமாக வகுப்பெடுக்கும் முறையை பெற்ேறார் நேரில் பார்த்தது. மூன்றாவதாக, லாக் டவுனின்ேபாது பெற்றோர் கல்வி குறித்து நிறைய விஷயங்களை சமூக வலைத்தளங்கள் மூலம் தெரிந்து கொண்டது.

இதனால், அரசுப் பள்ளியே சிறந்தது என்கிற முடிவுக்கு வந்துள்ளனர். இப்போது ஒன்று முதல் 12 ம் வகுப்பு வரை அனைத்து வகுப்புகளிலும் புதிதாக 2% மாணவர்கள் சேர்ந்துள்ளதாக பள்ளிக் கல்வித் துறை வட்டாரம் தெரிவிக்கிறது. இதில் பெரும்பாலும் தனியார் பள்ளிகளிலிருந்து வந்தவர்களாக உள்ளனர். பள்ளிகள் திறக்கும் தேதி அறிவிக்கப்பட்டால் இந்த சதவீத எண்ணிக்கை அதிகரிக்கும்.

இந்நிலையில் தனியார் பள்ளிகளிலிருந்து விலக்கி அரசுப் பள்ளிகளில் தங்கள் குழந்தைகளைச் சேர்த்திருக்கும் பெற்றோர் மற்றும் சம்பந்தப்பட்ட பள்ளி ஆசிரியர்கள் சிலரிடம் பேசினோம்.‘‘எனக்கு ஒரே பொண்ணு சார்... எட்டாவது வரை மெட்ரிகுலேஷன் பள்ளியில்தான் படிச்சா.

இப்ப ஒன்பதாம் வகுப்பை அரசுப் பள்ளியில சேர்த்திருக்கேன். ஏன்னா, நான் நெசவுத் தொழில் செய்றேன். கடந்த ஆறு மாசமா எனக்கு வேலையில்ல. கையில காசும் இல்ல. ஒரே பொண்ணு. தனியார் பள்ளியில் ஆங்கில வழியில் படிக்க வைக்கலாம்னு நினைச்சேன். இப்ப அந்தத் தனியார் பள்ளியில் ஃபீஸ் மற்றும் மற்ற செலவுகள்னு 50 ஆயிரம் ரூபாய் வரை வருது.

அவங்க கட்டணத்தைக் குறைக்க தயாரா இல்ல. என்னாலயும் கட்ட முடியல. பிறகு, அரசுப் பள்ளிகள் பற்றி விசாரிச்சு ஆங்கில வழியிலேயே சேர்த்திருக்கேன். மொத்த கட்டணமே 750 ரூபாய்தான். புத்தகமும் தந்துடறாங்க. இங்க நல்லா சொல்லித் தர்றதா தெரிஞ்சவங்க நிறைய பேர் சொன்னாங்க. முன்னாடியே எனக்கு இது தெரியாமப் போச்சு…’’ என வேதனையாகச் சொல்கிறார் திருவாரூர் மாவட்டம் வலங்கைமானைச் சேர்ந்த விஜயகுமார்.

இவர் தன் பெண்ணை சேர்த்திருக்கும் வலங்கைமான் அரசு பெண்கள் ேமல்நிலைப் பள்ளியில் மட்டும் கடந்த வாரம் வரை 23 மாணவியர் தனியார் பள்ளிகளிலிருந்து வந்துள்ளனர். ‘‘ஆறாம் வகுப்பிலிருந்து பத்தாம் வகுப்பு வரை 23 மாணவிகள் தனியார் பள்ளிகளிலிருந்து வந்திருக்காங்க. இந்த எண்ணிக்கை கூடும்னு எதிர்பார்க்கிறோம்.

எங்க பள்ளியைப் பொறுத்தவரை கடந்த ரெண்டு மூணு வருஷங்களா மாணவிகளுக்கு சிலம்பம் கத்துத் தர்றது, ஆளுமைத் திறனை வளர்க்கிறதுனு பாடத்திட்டம் சாராத நிறைய விஷயங்களை முன்னெடுக்குறோம். மாணவிகளை ரொம்ப ஃப்ரெண்ட்லியா அணுகுவோம்.

இதெல்லாம் பெற்றோருக்கு பிடிச்சு நிறைய பேர் குழந்தைகள சேர்த்தாங்க. இப்ப சில தனியார் பள்ளிகளின் கட்டண வற்புறுத்தலை பொறுக்க முடியாம சில பெற்றோர் வந்திருக்காங்க. கடந்த சில ஆண்டுகளாகவே அரசுப் பள்ளி ஆசிரியர்களே தங்கள் குழந்தைகளை அரசுப் பள்ளிகளில்தான் சேர்த்திட்டு வர்றாங்க. அதுபோலவே, முன்னாள் மாணவர்களும், ஊர்க்காரர்களும் தங்கள் கிராமத்திலுள்ள அரசுப் பள்ளியை மேம்படுத்த நிதியுதவி செய்றாங்க.

இப்ப அரசுப் பள்ளி தான் மக்களுக்கான பள்ளிங்கிற நல்லெண்ணம் எல்லோர் மனசுலயும் வந்திட்டு இருக்கு...’’ என்கிறார் வலங்கைமான் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் ஆசிரியை புவனேஸ்வரி. இதேபோல் மதுரையைச் சேர்ந்த பாலமுருகன் இந்த ஊரடங்கால் வேலைவாய்ப்பை இழந்தவர். இதனாலேயே மூன்றாம் வகுப்பு படிக்கும் தன் மகளை அரசு உதவிபெறும் பள்ளிக்கு மாற்றியுள்ளார்.

அவர் சேர்த்திருக்கும் பள்ளியின் தலைமை ஆசிரியர் சரவணன், ‘‘இப்ப எங்க பள்ளியில ஆறு குழந்தைங்க தனியார் பள்ளியிலிருந்து வந்திருக்காங்க. பல பெற்றோருக்கு அவங்க வேலை செய்ற நிறுவனத்துல பாதி சம்பளம்தான் கொடுக்கிறாங்க. இத வச்சு குடும்பத்தை நடத்த முடியுதே தவிர வேற செலவு எதுவும் செய்ய முடியலனு சொல்றாங்க.

முன்னாடியெல்லாம் எல்லோரும் நகரத்தை நோக்கி போவாங்க. இந்தக் கொரோனா காலம் பலரை சொந்த ஊருக்கு அழைச்சிட்டு வந்து இங்குள்ள பள்ளியில் அவங்க குழந்தைங்கள சேர்க்க வச்சிருக்கு. இந்த வாய்ப்பை அரசு பயன்படுத்தி, அரசுப் பள்ளிகள் மீது மக்களுக்கு நம்பிக்கை வரச் செய்யணும்...’’ என்கிறார்.    

சென்னை அஸ்தினாபுரத்தைச் சேர்ந்த பானுமதி ஆன்லைன் கல்வியின் குறைபாட்டால் தன் குழந்தைகளை அரசுப் பள்ளியில் தமிழ் வழிக் கல்விக்கு மாற்றியிருக்கார். ‘‘தனியார் பள்ளி நடத்தின ஆன்லைன் வகுப்பு மூலம் அவங்க எப்படி பாடம் நடத்துவாங்கனு புரிஞ்சுகிட்டேன். ஒவ்வொரு ஹோம்வொர்க்கையும் தேர்வையும் மொபைல்லயே கரெக்ட் பண்றாங்க. அப்புறம், ஃபீஸ் பத்தி கேட்கறாங்க.

ஆனா, நடத்துறதைப் பார்த்தா கொஞ்சமும் திருப்தியில்ல. ஆசிரியர்கள் இங்கி லீஷ் சரியா பேசறதில்ல. பிறகு பசங்க எப்படி பேசுவாங்க?
என் பொண்ணுக்கு உயிரியல் பாடத்தை அரைகுறை ஆங்கிலத்துல நடத்தினாங்க. நான் அந்த ஆசிரியரை குறைசொல்லல. அவங்க நிலை அது. என் பொண்ணும் அப்படித்தானே படிப்பா? கஷ்டப்பட்டு ஆங்கிலத்துல புரியவைக்க திணறுறாங்க. அதை தமிழ்ல சொல்லியிருந்தா நான் ரொம்ப சந்தோஷப்பட்டிருப்பேன். ஆனா, அவங்க தமிழ் பயன்படுத்தக்கூடாதுனு அவ்வளவு விழிப்பா இருக்காங்க.

தமிழ் வகுப்பைத் தவிர மற்ற எல்லா பாட ஆசிரியர்களும் ஆங்கிலத்துலதான் பேசணுமாம். பசங்களுக்குப் புரியுதா இல்லையானு பார்க்கிறதில்ல. ஆங்கிலத்துல சொல்லிக் கொடுப்பதை பெருமையா நினைக்கறாங்க. கொரோனாவால ஆங்கில வழி தனியார் பள்ளி ஆசிரியர்களின் தரம் தெரிஞ்சது.
ஏற்கனவே நான் லாக்டவுன்ல பள்ளிக் கல்விகள் சம்பந்தமா நிறைய வீடியோக்கள் பார்த்தேன்.

அதுல தெளிவு கிடைச்சது. என் கணவர், குடும்பம், குழந்தைகள்னு எல்லோருமே பார்த்தாங்க. அப்பதான் தாய்மொழியில கத்துறது எவ்வளவு சுலபம்னு புரிஞ்சது. புரிஞ்சு படிப்பாங்கனு தெரிஞ்சது. நான் என் பொண்ணுக்கு வீட்டுல கணக்கு சொல்லித் தரும்போது ஆங்கிலத்துல அவளுக்குப் புரியாது. அதை நான் தமிழ்ல எளிமையா புரிய வைப்பேன். எல்லா பெற்றோரும் இதைத்தான் செய்றாங்க. அப்ப நேராவே ஏன் தமிழ் வழியில் பயிலக்கூடாதுனு தோணுச்சு. அதனால, தமிழ் மீடியத்துல சேர்க்கணும்னு நினைச்சேன்.

என்னால தனியார் பள்ளியில படிக்க வைக்க முடியும்தான். என் கணவர் கொல்கத்தாவுல லெதர் இண்டஸ்ட்ரியில வேலை பார்க்குறார். நான் இங்க ஒரு நிறுவனத்துல வேலை செய்றேன். ஆனா, தனியார் பள்ளி யில் இப்படி சொல்லித் தந்தா பசங்க நாளை க்கு புரியாமலே படிச்சிட்டு வந்து நிற்பாங்களே... பையன் ஐந்தாம் வகுப்பு போறான். அவனுக்கு எளிதா தொடக்கப்பள்ளியில இடம் கிடைச்சிடுச்சு. பொண்ணு ஆறாம் வகுப்பு. அவளுக்கான மாற்றுச் சான்றிதழ் வாங்கதான் அலைஞ்சிட்டு இருக்கேன்...’’ என்கிறார் பானுமதி.

சென்னை மாநகராட்சி தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் கிருஷ்ணவேணி, தன் பள்ளியில் ஆறு குழந்தைகள் தனியார் பள்ளிகளில் இருந்து வந்துள்ளதாகக் கூறுகிறார். இந்தக் குழந்தைகள் எல்லாம் புகழ்பெற்ற தனியார் பள்ளிகளில் பயின்றவர்களாம்.‘‘ஒரு பெற்றோர் சொன்ன விஷயம் இது. அவங்ககிட்ட தனியார் பள்ளியில 90 ஆயிரம் ரூபாய் கட்டணம் கேட்டிருக்காங்க. ‘பள்ளிகள் இன்னும் திறக்கல. நாலு மாசமா எதுவும் நடக்கல. ஏன் இவ்வளவு கட்டணம்’னு கேட்டதுக்கு எந்த பதிலும் கிடைக்கலை.

அப்புறம், ஆன்லைன் கல்வியை பள்ளில நடத்தின விதம் இவங்களுக்குப் பிடிக்கல. கணக்கு ஆசிரியர் ஒரு கணக்கைப் போட்டுட்டு விடை கேட்டிருக்கார். நல்லா படிக்கிற ஒரு பையன் விடை சொன்னதும் அடுத்த கேள்விக்குப் போயிட்டார். அப்ப சுமாரா படிக்கிற இவங்க பையன் எப்படி புரிஞ்சுப்பான்? அவனுக்கு எப்படி அந்தக் கணக்கு செய்யப்பட்டதுனு சொல்லவேயில்ல.

இதை அவங்க அம்மா நேர்ல கவனிச்சிருக்காங்க. இப்படிதான் பள்ளியிலும் நடக்கும்போலனு நினைச்சிருக்காங்க. நம்ம பையனுக்கு புரியும்படியான கல்வி வேணும்னு இங்க அட்மிஷன் போட்டிருக்காங்க. இதை ரொம்ப நல்ல விஷயமா நான் பார்க்கிறேன். தனியார் பள்ளிக் கல்வி வியாபாரமா மாறிடுச்சுனு பெற்றோர் இப்பதான் புரிஞ்சிருக்கிறாங்க. அதனால, பெற்றோர் அரசுப் பள்ளிகளை நோக்கி வர்றாங்க. அரசுப் பள்ளியை நம்பி குழந்தைகளை சேர்க்கும்போது, அரசும் புதிதாய் நிறைய திட்டங்களை செயல்படுத்தும். அதுக்கு பெற்றோர்கள் நம்பிக்கையா உள்ள வரணும்.

அரசுப் பள்ளியில கழிப்பறை சரியில்லனா அரசுகிட்ட முறையிட்டு பெற்றோரால் வாங்க முடியும். எல்லா அரசு தொடக்கப் பள்ளியிலும் பள்ளி மேலாண்மைக் குழு இருக்கு. அது பெற்றோரால் நடத்தப்படுற அமைப்பு. பெற்றோர்தான் அந்தக் குழுவின் தலைவரா இருப்பாங்க. அதன்
வழியா சொல்லும்போது அரசு நிச்சயம் செய்யும்.

இப்ப உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள்ல - பெற்றோர் ஆசிரியர் கழகம் மாதிரி தொடக்கநிலை, நடுநிலையில் இந்த பள்ளி மேலாண்மைக் குழு இருக்குது. பெற்றோரே கூட்டம் நடத்தி அரசின் கவனத்திற்கு மேற்படி விஷயங்களைக் கொண்டு செல்லலாம். அல்லது அரசை எதிர்பார்க்காமல் பெற்றோரே சில விஷயங்களைச் செய்யலாம். அப்படி இருந்தா அரசுப் பள்ளிகளின் தரத்தை அடிச்சுக்க முடியாது...’’ என்கிறார் அவர்.

பள்ளிக் கல்வி பாதுகாப்பு இயக்கத்தின் மேற்கு மண்டல ஒருங்கிணைப்பாளராக இருக்கும் சேலத்தைச் சேர்ந்த செல்வம், ‘‘பள்ளிக் கல்வி பாதுகாப்பு இயக்கம் ஆரம்பிச்சதே அரசுப் பள்ளிகளை பாதுக்காக்கணும்னுதான். கல்வி வியாபாரமாகி தனியார் வசம் போயிடக்கூடாது. அரசே கல்வியை ஏற்று நடத்தணும். தாய்மொழி வழிக் கல்வியை ஊக்குவிக்கணும். சீனாவில் 80 சதவீதம் மக்கள் தாய்மொழியில்தான் படிக்கிறாங்க. இதுமாதிரி பல நாடுகள்ல செய்றாங்க.

தாய்மொழியில்தான் எல்லா விஷயங்களையும் புரிஞ்சுக்க முடியும். வேறு மொழி தேவைப்பட்டால் அதை கூடுதலா கத்துக்கலாம். ஆனா, இன்னொரு மொழிதான் சிறப்புனு சொல்லி கத்துக்க சொல்றது ஏற்புடையதல்ல. அதனாலதான் என் குழந்தையை அரசுப் பள்ளியில் தமிழ் வழியில் சேர்த்திருக்கேன். கொரோனாவுக்கு முன்பு ஏறக்குறைய 3 ஆயிரம் அரசுப் பள்ளிகள் மூடக்கூடிய நிலையில் இருந்தது. இப்ப இது கொஞ்சம் மாறும்னு நம்புறேன்...’’ என்கிறார் செல்வம்.                

பேராச்சி கண்ணன்