தல! sixers story-16விமான வேகம்!

தென் கிழக்கு ரயில்வேயின் மண்டல மேலாளராக அப்போது இருந்தவர் அனிமேஷ் கங்குலி. கிரிக்கெட் வெறியர் என்றே இவரைக் கூறலாம்.

ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் வேலையில் சேரும் கிரிக்கெட் வீரர்களுக்கு ஆர்வம் குன்றிவிடக் கூடாது என்பதில் கவனமாக இருப்பார்.ரஞ்சி கோப்பைப் போட்டிகளில் விளையாடியவர் என்பதால் ரயில்வே அணிக்கு மிகவும் பயன்படுவார் என்று தோனி குறித்து அவர் நம்பிக்கை கொண்டிருந்தார்.
இருப்பினும் -ரயில்வே அணியில் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு முன்பு தோனி, அனிமேஷ் கங்குலியின் நேரடி மேற்பார்வையில் பரிசோதிக்கப்பட்டார்.
வேகம், மிதவேகம், ஸ்பின் என்று வெவ்வேறு வகையான பவுலர்கள் பத்து ஓவர்கள் வீசினார்கள்.

கருணையே காட்டவில்லை. அறுபது பந்துகளையும் விண்ணுக்கு அனுப்பினார் தோனி. ஒரு பந்து கூட விக்கெட் கீப்பரின் கைக்குப் போகவில்லை.
பொதுவாக இதுபோல ஒரு பேட்ஸ்மேன் பரிசோதிக்கப்படும்போது, மிகக்கவனமாக ‘ஸ்டைல்’ காட்டுவார்கள்.தோனியின் ஸ்டைலோ காட்டு அடி மட்டுமே.சுப்ரதா பானர்ஜி என்கிற கிரிக்கெட் வீரர், அப்போது ரயில்வேக்காக விளையாடிக் கொண்டிருந்தார்.

தோனியின் அதிரடியை நேரில் பார்த்தவர், “இந்தப் பையனை ரயில்வே இழக்கவே கூடாது...” என்று அழுத்தமாக சிபாரிசு செய்தார்.
கிருஷ்ணாவின் அறையில் தங்கிக்கொண்டு வேலைக்குச் செல்ல ஆரம்பித்தார் தோனி.டிராஃபிக் காலனியில் அவர் தங்கியிருந்த கிருஷ்ணாவின் அறையில் ஜெய்சுக்லா, ராபின்குமார், தீபக்சிங்என்று ரயில்வே அணிக்கு ஆடும் மற்ற பிளேயர்களும் தங்கினார்கள்.

மைதானத்தில் பயிற்சி, ரயில்வே நிலையத்தில் எட்டு மணி நேரப் பணி என்று அவருக்கு மற்ற பொழுதுபோக்கு களுக்கு நேரமே கிடையாது.
தோனிக்கு அப்போது ஒரே ஒரு விசித்திரமான பழக்கம் இருந்தது.கரக்பூருக்கு அருகில் கலாய்குண்டா விமான நிலையம் இருந்தது. அந்நிலையத்தில் ஜெட் விமானங்களை ஓட்டும் பயிற்சி எப்போதும் நடந்துகொண்டிருக்கும்.

தாழ்வாகவும், வேகமாகவும் பறக்கும் ஜெட் விமானங்களைப் பார்ப்பது தோனிக்கு மிகவும் பிடித்தமான பொழுதுபோக்கு.
கொஞ்சம் ஓய்வு கிடைத்தாலும் விமான நிலையத்துக்கு அருகில் இருக்கும் குட்டிச்சுவர் ஒன்றில் போய் உட்கார்ந்து கொண்டு நேரம் போவது தெரியாமல் விமானங்களைப் பார்த்துக் கொண்டே இருப்பார்.

பொதுவாகவே விமான நிலையங்கள் இல்லாத ஊர்களில் இருந்து நகரங்களுக்கு வந்தவர்களுக்கு வானில் பறக்கும் விமானங்கள் ஆச்சரியம்தான்.
ஆனால் -தோனிக்கு விமானத்தின் வேகம் பிடிக்கும். குறிப்பாக சண்டை விமானங்கள் ஆகாயத்தில் அடிக்கும் டைவையெல்லாம் ரசித்துப் பார்ப்பார்.
விமானத்தின் பெரும் ஒலியும் அவருக்கு சங்கீதமாம்.

ஒருமுறை கிருஷ்ணா அவரைக் கேட்டார்.“ஏன்டா... எத்தனை முறை இதே ஃப்ளைட் மேலே போறதையும், கீழே இறங்குறதையும் பார்த்திருக்கே? உனக்கு சலிக்கவே சலிக்காதா?”“பொதுவா பார்த்தா அப்படிதான் தெரியும். ஃப்ளைட்டோட ஒவ்வொரு டேக்-ஆஃபும், ஒவ்வொரு லேண்டிங்கும் வேற வேற. நல்லா கவனிச்சாதான் இந்த வித்தியாசம் தெரியும்.

ஒரு பேட்ஸ்மேனா எனக்கு வீசப்படுற ஒவ்வொரு பந்துமே வேற வேற மாதிரிதான். ஆனா, பார்க்கிறவங்களுக்கு ஒரே மாதிரிதான் தெரியும். எனக்கும் எல்லா பாலும் ஒரே பாலா தெரிஞ்சா, நான் கிரிக்கெட்டே ஆடமுடியாது...” என்றார் தோனி.தான், பார்க்கும் ஒவ்வொரு விஷயத்திலும் கிரிக்கெட்டுக்கான ஏதோ ஒரு படிப்பினையை அவர் பெற்றுக் கொண்டே இருந்தார்.

கிருஷ்ணாவின் அறையில் டிவியில் கிரிக்கெட் மட்டும்தான் பார்ப்பார் தோனி.கூட தங்கியிருந்த நண்பர்களில் ஒருவர் அமிதாப் பச்சன் ரசிகர்.
ஒருமுறை ஒரு சேனலில் கிரிக்கெட் ஓடிக் கொண்டிருக்கிறது. இன்னொரு சேனலில் அமிதாப் பச்சன் படம்.நண்பரோ  சினிமாதான் பார்க்க வேண்டும் என்று அடம் பிடிக்கிறார்.பொதுவாக அமைதியானவரான தோனி, அன்று சண்டைக்கு போய் விட்டாராம்.கடைசியில் தோனியே வென்றார். டிவியில் கிரிக்கெட்தான் ஓடியது.

அன்று துரதிருஷ்டவசமாக இந்தியா தோற்று விட்டது.“பேசாமே அமிதாப் படமே பார்த்திருக்கலாம்...” என்று நண்பர் சலித்துக்கொண்டபோது, “விளையாட்டுலே வெற்றி தோல்வியெல்லாம் சகஜம்தான், நம்ம ஆளுங்க வெற்றிக்கு கடுமையா முயற்சி பண்ணினாங்க இல்லையா? அதுதான் முக்கியம்...” என்றாராம் தோனி.

இந்தப் பண்புதான் பின்னாளில் வெற்றி, தோல்வியைப் பொருட்டாகக் கருதாத ‘மிஸ்டர் கூல் கேப்டனாக’ அவரை மாற்றியது.
தோனியுடன் தங்கியிருந்தவர்களில் ஒருவரான ராபின்தான் அப்போது தென்கிழக்கு ரயில்வே அணியின் கேப்டன்.வார இறுதிகளில் கேப்டனின் அனுமதியோடு ரூம் நண்பர்கள் கொஞ்சம் ஜாலியாக இருப்பார்கள்.

ஜாலியென்றால் லேசாக மது அருந்துதல்.தோனி, இந்த உற்சவத்தில் மட்டும் கலந்துகொள்ள மாட்டார்.மது, புகை என்று எந்த லாகிரி வஸ்துகளும் அவரை வெல்ல முடியவில்லை.இதுபோன்ற ஒரு மதுக்கூடலின் போது நண்பர்கள், தோனியை தொடர்ந்து கிண்டலடித்துக்கொண்டே இருந்தார்கள். அவரை வெறுப்பேற்ற ‘மிஸ்டர் சைட் டிஷ்’ என்று அழைத்தார்கள்.ரோஷம் வந்த தோனி, ஒரு மதுபாட்டிலை எடுத்து கடகடவென குடித்துக் காட்டினாராம்.

“என்னாலே குடிக்கவும் முடியும். ஆனா, அது எனக்கு வேணாம்னுதான் அதைத் தொடுறதில்லை...” என்று பஞ்ச் டயலாக்கும் அடித்திருக்கிறார்.
கரக்பூர் ரயில் நிலையத்தில் கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகள் பணிபுரிந்தார் தோனி.அந்த நான்கு ஆண்டுகளும் அவருக்கு இனிமையாகவே கழிந்தன.
ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் வந்தவர் என்பதால் பயிற்சிக்காக செல்லுவதற்கும், போட்டி களுக்கு தயார் ஆவதற்கும் பணியிலிருந்து தேவையான போதெல்லாம் விடுப்பு எடுக்க முடிந்தது.

(அடித்து ஆடுவோம்)

- யுவகிருஷ்ணா

ஓவியம்: அரஸ்