கொரோனாவுக்குப் பின் ரிலீசான படங்கள்... சீனாவில் மட்டும் ரூ.3,600 கோடி வசூல்!



கொரோனாவின் தாக்கத்தால் அதிகமாக பாதிக்கப்பட்ட துறைகளில் சினிமாவும் ஒன்று. திரையரங்குகள் மூடல், ஷூட்டிங்கிற்கு தடை என உலகம் முழுவதும் சினிமாவின் கையையும் காலையும் கட்டி சிறைக்குள் அடைத்துவைத்ததுபோல் ஒரு நிலை. உள்ளூர் சினிமா முதல் ஜேம்ஸ் பாண்ட் படம் வரை அனைத்து வகையான திரைப்படங்களின் ரிலீஸ் தேதிகள் தள்ளிப்போயின. ஆறுதலாக சில படங்கள் OTTயில் வெளியாகி கவனம் ஈர்த்தன.
இனிமேல் திரையரங்குகள் திறக்கப்படுமா? அப்படியே திறந்தாலும் மக்கள் வருவார்களா? என்ற சந்தேகம் கூட பரவலாக எழுந்தது.

இந்நிலையில் ஜூலை இறுதியில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் சீனாவில் திரையரங்குகள் திறக்கப்பட்டன. ஒரு திரையரங்கில் அதிகபட்சமாக 50%  இருக்கைகளை மட்டுமே நிரப்ப வேண்டும். சீனாவைத் தொடர்ந்து பல நாடுகளில் உள்ள திரையரங்குகளும் செயல்படத் தொடங்கின. ஆனால், அங்கேயும் இதே கட்டுப்பாடுகள். அதனால் புதிய திரைப்படங்கள் பெரிதாக ரிலீஸாகவில்லை.

ஆம்; போட்ட காசை எடுக்க முடியாது என்று தயாரிப்பாளர்களும் விநியோகஸ்தர்களும் படங்களை ரிலீஸ் செய்யவில்லை. உதாரணத்துக்கு, கடந்த மே மாதம் உலகளவில் 80% திரையரங்குகள் திறக்கப்பட்டால் மட்டுமே கிறிஸ்டோபர் நோலனின் ‘டெனெட்’ ரிலீசாகும் என அறிவித்தது வார்னர் பிரதர்ஸ் நிறுவனம்.

அப்போதுதான் படத்தின் பட்ஜெட்டான 1600 கோடி ரூபாயை வசூலிக்க முடியும். அதனால் திரையரங்குகள் திறக்கப்பட்டாலும் உலகமே ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த ஹாலிவுட் படமான ‘டெனெட்’ ரிலீஸாவது தள்ளிப்போய்க்கொண்டே இருந்தது.

கடைசியாக ஆகஸ்ட் இறுதியில் இங்கிலாந்து உட்பட 41 நாடுகளில் ரிலீஸாகி 53 மில்லியன் டாலரை ஒரே வாரத்தில் வசூலித்துள்ளது. அதாவது சுமார் 380 கோடி ரூபாய். வீட்டைவிட்டு வெளியே வர மக்கள் பயப்படும் காலத்தில் இந்த வசூல் ஒரு சாதனைதான். அத்துடன் மக்களை மீண்டும் திரையரங்குக்கு அழைத்து வந்து, சினிமா பிசினஸைத் தூக்கி நிறுத்தும் ஒரு படமாக ‘டெனெட்’ இருக்கும் என்று திரைப்பட ஆர்வலர்கள் கருதுகிறார்கள்.

விஷயம் இதுவல்ல.ஒரு வாரத்தில் 41 நாடுகளில் ‘டெனெட்’ வசூலித்ததை விட அதிகமாக உள்நாட்டிலேயே வசூலித்து வரலாறு படைத்திருக்கிறது சீனப் படமான ‘தி எய்ட் ஹண்ட்ரட்’. 1937ல் சீனாவுக்கும் ஜப்பானுக்கும் இடையில் நடந்த யுத்தத்தை மையமாக வைத்து உருவாகியிருக்கும் இப்படத்தின் பட்ஜெட் சுமார் 600 கோடி ரூபாய். முழுக்க முழுக்க ஐமேக்ஸ் கேமராவால் படமாக்கப்பட்ட முதல் சீனப்படமும் இதுவே.

ஆகஸ்ட் 21ம் தேதி சீனாவில் உள்ள 633 ஐமேக்ஸ் உட்பட ஆயிரக்கணக்கான ஸ்கிரீன்களில் வெளியான இப்படத்தின் முதல் வார வசூல் சுமார் 600 கோடி ரூபாய்!இரண்டாவது வார இறுதியில் (வெள்ளி, சனி, ஞாயிறு மட்டும்) 500 கோடி ரூபாய். சமீபத்தில் உலகளவில் வெளியான படங்களில் வார இறுதியில் அதிகம் வசூலித்த படம் இதுவே.

மட்டுமல்ல, ஆகஸ்ட் 28ம் தேதி முதல் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா, நியூசிலாந்தில் ரிலீசாகி சக்கைப்போடு போட்டுக்கொண்டிருக்கிறது ‘தி எய்ட் ஹண்ட்ரட்’. இப்போது மொத்த வசூல் 2,400 கோடி ரூபாயைத் தாண்டிவிட்டது. இந்த வருடத்தில் அதிக வசூல் செய்த இரண்டாவது படம் இதுதான்.

முதல் இரண்டு இடங்களில் ‘Bad Boys for Life’, ‘Sonic the Hedgehog’ ஆகியவை இருக்கின்றன. திரையரங்குகள் 100 சதவீத இருக்கைகளுடன் இயங்கிக் கொண்டிருந்த காலத்தில் இவை ரிலீஸானது குறிப்பிடத்தக்கது.

உண்மையில் சீனாதான் கொரோனா பீதியைக் கடந்து மக்களை திரையரங்குக்கு அழைத்து வந்திருக்கிறது. யெஸ். கடந்த ஆகஸ்ட் மாதம்  சீனாவில் வெளியான படங்களின் மொத்த வசூல் சுமார் 3,600 கோடி ரூபாய்! திரையரங்குக்கு வந்த ரசிகர்கள் எண்ணிக்கை 9.5 கோடி! இந்த வருடத்தில் ஆகஸ்ட் வரை 6,209 கோடி ரூபாய் வசூலியாகியுள்ளது.

அமெரிக்காவுக்குப் பிறகு வசூலை அள்ளுவதில் இரண்டாம் இடத்தில் இருக்கும் சீனாவின் சினிமா பிசினஸ் மீண்டது உலகமெங்கும் திரையரங்குகள் திறக்கப்படுவதற்கான நம்பிக்கையை அளித்துள்ளது.   

த.சக்திவேல்