20 வருடங்களாக இந்தியாவின் முக்கிய ஒளிப்பதிவாளர்களில் ஒருவராக இருக்கிறார்...



ஆனால், இதுதான் அவரது முதல் பேட்டி!

“போட்டோகிராபியில் ஆர்வம் இருந்தது. அப்பாவுக்கு சினிமா வியாபாரம் தெரியும். பட விநியோகத்தில் இருந்தார். இதிலிருக்கிற கஷ்ட, நஷ்டங்கள் தெரியும். அதனால் நான் சினிமாவுக்கு வர்றதை அவ்வளவாக விரும்பவில்லை. இந்தச் சமயம்தான் ஆனந்த் தியேட்டர்ல ‘கீதாஞ்சலி’ பார்க்கிறேன். அடுத்தடுத்து டைட்டில் கார்டு வந்துகிட்டே இருக்கு. பி.சி.ராம்னு பேர் வரும்போது விசில் பறக்குது.

‘அட, என்னடா கேமராமேனுக்கு இவ்வளவு மரியாதையா’னு எனக்கு ஆச்சர்யம். அந்த அரை இருட்டில வெளிச்சத்திற்கான என் கனவு ஆரம்பிச்சிருக்கலாம். அவருக்கு முன்னாடி எத்தனையோ கேமரா மேன்கள் இருந்திட்டுப் போயிருக்கலாம். ஆனால், கேமராமேனுக்கான வேல்யூ அவருக்கு முன்னாடி வெளிப்படையாகத் தெரிஞ்சதில்லை...” அணுக்கமாக பேசத் தொடங்குகிறார் ஒளிப்பதிவாளர் பி.எஸ்.வினோத்.

தெலுங்கில் இவருக்காக தயாரிப்பு நிறுவனங்களும், கதாநாயகர்களும் காத்திருக்கிற காலம் இது. தெலுங்கு சினிமாவே வினோத்தை செல்லம் கொஞ்சிக் கொண்டிருக்கிறது. மெகா ஹிட் படங்களையே அவர் செய்கிறார். தமிழில் ‘ரிதம்’, ‘ஆரண்ய காண்டம்’, ‘விக்ரம் வேதா’, ‘சூப்பர் டீலக்ஸ்’… தெலுங்கில் ‘அலா வைகுந்தபுரம்லோ’, ‘மனம்’, ‘ஹலோ’… எல்லாமே அவர் திறமைக்கு சில சோற்றுப் பதங்கள்.  
தெலுங்கிலும், தமிழிலும் கிடைக்கிற எதிர்பார்ப்பு உங்களை எப்படி வைத்திருக்கிறது?

எல்லாத்துக்கும் சந்தோஷ் சிவன் சாருக்கு நன்றி சொல்லணும். இன்ஸ்டிடியூட்டில் படிச்சுட்டு இருக்கும்போதே அவர்கிட்டே போய் உதவியாளராக சேர்ந்திட்டேன். அவர் நல்ல ஒளிப்பதிவாளர் என்பதற்கு முன்னாடி ரொம்ப நல்ல மனுஷன். அவர்கிட்ட சுமுகமாக, நட்புறவாக இருக்க முடியும்.  Smooth flow of communication எப்பவும் இருக்கும். அஞ்சு வருஷங்கள்ல கிட்டத்தட்ட 40 படங்கள். அத்தனை கதைக் களன்கள், லொகேஷன்ஸ், நடிகர்கள்னு பெரிய அனுபவம் கிடைக்க, வெளியே வந்து என் ரூட்டை பிடிச்சபோது நிறைய உதவியாக இருந்தது.

தெலுங்கில் ஆரம்பத்தில் எல்லாமே ஈஸியாக இல்லை. நிறைய கம்பெனிகள் ஏறி இறங்கியிருக்கேன். அப்புறம் ஒரு பாடலை ஷூட் பண்ணப்போக, அதைப்பார்த்திட்டு இயக்குநர் வஸந்த் சார்கிட்டே யாரோ சொல்ல கிடைச்சதுதான் ‘ரிதம்’. உங்களுக்கு தெலுங்கில் இருக்கிற மரியாதை வேறு யாருக்கும் கிடைச்சதில்லைனு சக ஒளிப்பதிவாளர்களே சொல்றாங்க…

அப்படியெல்லாம் இல்லை... ஏதோ பாசத்தில் சொல்றாங்க. என்னைவிட வேலை தெரிஞ்சவங்க வெளியில் இருக்கிறார்கள் என்பதே நிஜம். எல்லாத்துக்கும் மேலே லக் வேறே இருக்கு. அது பெரிய factor. யாரும் என்னை விடவும் Hard work செய்யலைன்னு சொல்லிட முடியாது. அமையணும். க்ளிக் ஆகணும். வெற்றி போக, படம் பேசப்படணும். இதெல்லாம் சங்கிலித்தொடர் மாதிரி நடக்கணும்.

நான் சொன்னால் காது கொடுக்கிற இயக்குநர்கள், நடிகர்கள் கொஞ்சம் பேர் இங்கே இருக்காங்க. சில படங்கள் செய்யும்போது இந்த சந்தர்ப்பத்தை நழுவ விடாதேன்னு மனசுக்குள் ஏதோ ஒண்ணு எச்சரிக்கும். சில சமயம் எல்லாமே சரியாக நடக்கும். கிரிக்கெட்டர் வெங்சர்க்கார் ஒருமுறை, ‘ஃபார்மில் இருக்கும் போது பந்து வீசும்போதே தெரிஞ்சுரும். அதுவே பேட்ல பட்டுட்டு அதே வேகத்தில் பவுண்டரி போயிரும். நேரம் சரியில்லைனா பந்து கண்ணுலேயே படாது’னு சொன்னார்.

அப்படி இங்கேயும் சில விஷயங்கள் இருக்கு. ஒளிப்பதிவை எப்படி அமைச்சுக்கிறீங்க ?

கதை கேட்கும் போதே, அதில் ஒரு மார்க் இருக்கும். அதற்கு தேவையான அம்சம், கலர், மூட், அமைப்புனு அதுவே சொல்லிடும். கதை இதுதான் கேட்குதுனு புரிஞ்சிடும். ரிச் பேக்ரவுண்ட்னா அதற்கான இடங்கள், ஸ்டைல்னு நாமளும் கொஞ்சம் உழைச்சா நல்லாயிருக்கும். அந்த உழைப்பை தெலுங்கில் கணக்கில் எடுத்துக்கிறாங்க.  

நீங்க பொதுவெளியில் வருவதே இல்லையே… ஏன்?

அடிப்படையில் நான் ஒரு withdrawn man. கூச்ச சுபாவம் உள்ளவன். சமயங்களில் எனக்கு நானே நல்ல நண்பனா இருந்து நான் பேசுறதை மட்டுமே கேட்பேன். எதுவும் நம்ம கையில் இல்லைனு நம்புவேன். இப்பக்கூட ஐந்து மாதம் சினிமாக்கு ப்ரேக் விட்டுட்டு குழந்தைகள், மனைவியோடு இருந்துட்டேன்.

எது எப்படியிருந்தாலும் குடும்பத்திற்கான நேரம் வேணுமே! சினிமா சினிமான்னு இருந்துட்டு அந்த டயத்துல கை வைச்சிடக்கூடாது.

நான் சினிமாவுக்கு வந்து இருபது வருஷத்துல ஒரு பேட்டி கூட கொடுத்தது இல்லை. என் ஞாபகத்தில் உங்ககிட்ட பேசுறதுதான் முதல் தடவைன்னு நினைக்கிறேன்.

சில ஒளிப்பதிவாளர்களின் ஸ்டைல் படத்திலேயே தெரியுது. அதை எப்படி எடுத்துக்குவீங்க..?

அவங்களுக்கு கதைக்கு என்ன பெஸ்ட்னு தெரியும். பி.சி.ராம் செய்து பார்த்த எல்லா பரிசோதனையும் சினிமாவுக்கு உதவியாக இருந்தது. ‘அக்னி நட்சத்திரம்’, ‘நாயகன்’னு அவர் செய்தது எல்லாம் தவறாகப் போச்சுன்னு ஒருத்தரும் வாய்விட்டுச் சொல்லிட முடியாது. அப்படிப் பார்த்தால் பி.சி.ராம், சந்தோஷ் சிவன் மாதிரியானவங்க கதையை அடுத்த தளத்திற்கு கூட்டிட்டுப் போனாங்க. Bottomline ஆக அவங்க வேலைகள், கதைக்கு உதவியாக இருந்தது என்பதே உண்மை.

இங்கே ஒளிப்பதிவில் யாரைப்பிடிக்கும் ?

பட்டியல் நீளுமே! ஆனால், குறிப்பாக மலையாளத்தில் செம டேலண்ட்ஸ் இருக்காங்க. ‘கும்பளாங்கி நைட்ஸ்’ Shyju Khalid, கேமராமேன் ராஜிவ் ரவி - அனுராக் காஷ்யப் கூட்டணியில் வந்த படங்கள் எல்லாம் ரொம்ப பிடிக்கும். நீரவ் ஷா, ரத்தினவேலு ஒர்க் சீராக இருக்கும். இப்ப ‘கைதி’யில் சத்யன் சூரியனை ரசிச்சேன்.

உங்க ஃபேமிலி பத்தி…

இன்னும் பக்குவமானவனாக இருக்கணும்னு ஆசைப்படுகிறேன். அதற்கு உதவியாக மனைவி புஷ்பா இருக்காங்க. அவங்க டைரக்டராகவும் இருக்கறது நல்லாயிருக்கு. என் இரண்டு மகள்கள் ஸ்ருதி யும், ஷ்ரியாவும் என்மேல் தீராத அன்பு வைத்திருக்கிறார்கள். இவர்களே என்னை வழி
நடத்துகிறார்கள்.

நா.கதிர்வேலன்