ஜான் விக்!‘நெட்பிளிக்ஸி’ல் பட்டையைக் கிளப்பிக்கொண்டிருக்கும் ஹாலிவுட் படம் ‘ஜான் விக்’. ஆறு வருடங்களுக்கு முன்பு வெளியாகி வசூலைக் குவித்த இப்படத்தின் ஸ்டைலீஷான மேக்கிங்கும் ஆக்‌ஷன் சீக்வென்ஸும் இன்னமும் புதுமை காட்டுகிறது. இத்தனைக்கும் இது ஒரு சாதாரண பழிவாங்கல் கதை.

ரஷ்ய மாபியா தரசோவால் கண்டெடுக்கப்பட்ட அனாதைச் சிறுவன் ஜான் விக். பணத்துக்காகக் கொலை செய்யும் ஹிட் மேனாக வளர்கிறான். அவனுக்குத் துப்பாக்கி சுடுதலும் தற்காப்புக் கலைகளும் அத்துப்படி. நூறு பேர் எதிர்த்து நின்றாலும் அசால்ட்டாக அடித்து நொறுக்குவது அவனுக்கு கைவந்த கலை. கண் இமைக்கும் நேரத்தில் எதிரிகளை சுட்டுப் பொசுக்கி எஸ்கேப் ஆகிவிடும் கில்லாடி.

ஹெலனைச் சந்தித்தபிறகு அவன் வாழ்க்கையே தலைகீழாக மாறுகிறது. அண்டர்வேர்ல்டு சமாசாரங்களிலிருந்து விலகி ஹெலனை மணந்து அமைதியாக ஒரு வாழ்க்கையை வாழ்கிறான்.

கடுமையான நோயினால் மனைவி இறந்துவிட, உடைந்துபோகிறான் ஜான். இறப்பதற்கு முன்பு ஒரு நாய்க்குட்டியை அன்புப் பரிசாக ஜானிற்கு கொடுத்திருந்தாள் ஹெலன். அந்த நாய்க்குட்டியுடனும் மனைவியின் நினைவுகளுடன் அவனது நாட்கள் நகர்கிறது.

ஒரு நாள் ஜானின் பழைய மஸ்டாங் காரை கேஸ் ஸ்டேஷனில் பார்த்து விடுகிறான் லோசெப். ஜான், ஹிட்மேனாக இருந்த மாஃபியா கூட்டத்தின் தலைவன் விக்கோவின் மகன்தான் லோசெப்.

அந்தக் காரை லோசெப் விலைக்குக் கேட்க, ஜான் தர மறுக்கிறான். கோபமடையும் லோசெப் தனது கூட்டாளிகளுடன் ஜானுடைய வீட்டுக்குள் புகுந்து நாயைக் கொன்று, காரைத் திருடுவதோடு, ஜானையும் கடுமையாகத் தாக்கி விடுகிறான். நாயைக் கொன்ற லோசெப்பை பழிவாங்க பழைய பன்னீர் செல்வமாக திரும்பி வருகிறான் ஜான் விக்.

இந்த விஷயம் விக்கோவிற்குத் தெரியவர, மகனைக் காப்பாற்ற அவரும் களத்தில் குதிக்கிறார். தன்னை வளர்த்தெடுத்த விக்கோவை எதிர்த்து லோசெப்பை எப்படி ஜான் பழிவாங்குகிறான் என்பதே மீதிக்கதை. ஜான் விக்காக அதகளம் செய்திருக்கிறார் ‘தி மேட்ரிக்ஸ்’ படப் புகழ் கீனு ரீவ்ஸ். 90 சதவீத சண்டைக்காட்சிகளில் இவரே நடித்திருக்கிறார். பொதுவாக ரிஸ்க் காட்சிகளில் தங்களுக்குப் பதிலாக ஸ்டண்ட் டபுளை இறக்கிவிடுவது ஹாலிவுட்டில் வழக்கம். அமெரிக்கன் ஸ்டண்ட்மேன் சட் ஸ்டஹெல்ஸ்கிதான் படத்தின் இயக்குநர்.

படத்துக்குக் கிடைத்த வரவேற்பால் இதன் அடுத்தடுத்த பாகங்கள் வெளியாகி சக்கைப்போடு போட்டன. 2022-இல் நான்காவது பாகம் வெளிவரப்போகிறது. இன்று ஸ்பைடர்மேன், பேட்மேன் வரிசையில் வைத்துக் கொண்டாடப்படும் ஒரு கதாபாத்திரமாக மாறிவிட்டார் ஜான் விக். இவர், மக்களைக் காக்கும் சூப்பர் ஹீரோ அல்ல; காசுக்காக கொலை செய்யும் ஹிட்மேன். ஆனாலும் ரசிகர்கள் மத்தியில் இவரும் சூப்பர் ஹீரோ.