C U Soon!மலையாள சினிமா தனது புதிய அத்தியாயத்தை எழுதியிருக்கிறது. அதுவும் வெகு சிறப்பாக.இந்தியாவின் முதல் கம்ப்யூட்டர் ஸ்கிரீன் ஃப்லிம்மாக வெளியாகியிருக்கிறது ‘C U Soon’. இந்த வருடத்தின் முக்கியமான மலையாளப் படம்.
ஆன்லைன் வழியாக அரங்கேறும் காதலுடன், வீட்டு வேலை மாதிரி சின்னச் சின்ன வேலைகளுக்காக வெளிநாடு செல்லும் பெண்கள் சந்திக்கும் பிரச்னைகளையும் அலசுகிறது இந்தப் படம். துபாயில் வேலை செய்து கொண்டிருக்கும் இளைஞன் ஜிம்மி. அப்பா இல்லை. அம்மா இன்னொரு இடத்தில் இருக்கிறாள்.

தனியாக இருக்கும் ஜிம்மிக்கு டேட்டிங் ஆப்பில் அனுவின் அறிமுகம் கிடைக்க, இரவு பகல் பாராமல் சாட் செய்கிறார்கள். பேச ஆரம்பித்த ஒரு நாளிலேயே அனுவிடம் புரபோஸ் செய்து, அம்மாவையும் தங்கையையும் அறிமுகம் செய்கிறான் ஜிம்மி. அவனது அம்மா அனுவைப் பற்றிய தகவல்களை விசாரிக்க, உறவினரான கெவினிடம் உதவி கேட்கிறாள். கம்ப்யூட்டரில் ஜித்தனான கெவினும் சில நிமிடங்களில் அனுவின் ஹிஸ்டரியைக் கொடுக்கிறான்.

சீக்கிரத்தில் அனுவைக் கல்யாணம் செய்து வீட்டுக்கு அழைத்து வருவது ஜிம்மியின் பிளான். இவையெல்லாம் ஒரு வாரத்துக்குள் போன் கால், ஆடியோ மற்றும் வீடியோ சாட் மூலம் அரங்கேறுகிறது. யாரும் யாரையும் நேரில் சந்திக்கவே இல்லை. வீடியோ காலில் அனுவிடம் பேசும்போது அவள் முகத்திலுள்ள காயங்கள் ஜிம்மியை அதிர்ச்சியடைய வைக்கிறது.

காயத்துக்கான காரணங்களை அனு சொல்ல மறுக்கிறாள். கவலைப்படும் ஜிம்மி, அனுவைத் தன் அபார்ட்மெண்ட்டுக்கு அழைத்து வந்துவிடுகிறான்.
ஜிம்மி வேலைக்குச் சென்ற நேரமாகப் பார்த்து தற்கொலை செய்யப்போவதாக ஒரு வீடியோவை அனு தட்டிவிட, ஜிம்மி நிலைகுலைந்து போகிறான்.
அவசர அவசரமாக ஜிம்மி வீட்டுக்குக் கிளம்பி வந்தால் அனு அங்கே இல்லை. ஜிம்மியைக் கைது செய்ய போலீஸ் வருகிறது.

காவல்துறையிடமிருந்து ஜிம்மியைக் காப்பாற்ற அனுவின் உண்மையான பின்புலத்தை கெவின் எப்படி கண்டுபிடிக்கிறான் என்பதே சீட் நுனியில் உட்கார வைக்கும் திரில்லிங் திரைக்கதை. காலம் காலமாக வறுமையில் வாடும் பெண்கள் அனுபவிக்கும் ஒரு கொடூரத்தை இவ்வளவு அழுத்தமாக சமீபத்தில் எந்தப் படமும் சொல்லவில்லை. அந்தக் கொடூரம் என்னவென்று தெரிய அமேசான் ப்ரைமில் டிரெண்டிங்கில் இருக்கும் இப்படத்தை ஒரு முறையாவது பார்த்துவிடுங்கள்.

இந்திய சினிமாவுக்கு புது வடிவத்தையும் ரசிகர்களுக்குப் புது அனுபவத்தையும் தந்திருக்கிறார் இயக்குநர் மகேஷ் நாராயணன்.

பகத் ஃபாசிலைப் பற்றி சொல்லவே வேண்டாம். கெவினாக அடி தூள் ஆக்டிங். தர்சனா ராஜேந்திரனை இனிமேல் அனு என்றுதான் அழைப்பார்கள். ஜிம்மியாக நடித்த ரோஷன் மேத்யூ கவனிக்கத்தக்க நடிகராக உருவாகி வருகிறார்.

தொகுப்பு: த.சக்திவேல்