Face B(JP)ook-மினி தொடர் 3



இந்தியாவில் முதன் முதலில் ஃபேஸ்புக் பாலிசி டைரக்டராக நியமி க்கப்பட்டவர் மோடியின் பேத்திதான்!

இந்தியாவில் ஃபேஸ்புக் தனது அலுவலகத்தை முதன் முதலில் 2011ம் ஆண்டு தொடங்கியது. அப்போது இங்கே அதன் பயன்பாட்டாளர்கள் ஒன்றரைக் கோடிப் பேர். அப்போது வாட்ஸ்அப்பை அது விலைக்கு வாங்க இன்னமும் மூன்று ஆண்டுகள் இருந்தன.ஹைதராபாத்தில் இருந்த அதன் புதிய அலுவலகத்தில் பணியாட்களாக இருந்தவர்களில் பெரும்பகுதியினர் விற்பனைப் பிரதிநிதிகள்தான்.

ஒரு வருடம் கழித்து அங்கிதாஸ் என்பவரை ஃபேஸ்புக் தனது பாலிசி டைரக்டர் என்னும் கொள்கை இயக்குனர் பதவியில் அமர்த்தியது.
இந்த அங்கிதாஸ்தான் சமீபத்தில் ஃபேஸ்புக் & பாஜக நெட்வொர்க் தொடர்பான சர்ச்சையில் சிக்கியிருக்கிறார். ஃபேஸ்புக்கின் கொள்கைகள் மற்றும் அரசு விவகாரங்களைக் கவனித்துக் கொள்வது இவருக்கு அளிக்கப்பட்ட பணி.

இந்தப் பணிக்கு இவர் மிகப் பொருத்தமானவர் என்கிறார்கள். இந்தியாவின் முக்கியமான அரசியல்வாதிகள், அரசியல் கட்சிகள், இயக்கங்கள், அதிகாரத் தரப்புகளோடு நல்ல தொடர்பில் இருக்கும் பெண்மணி. ஃபேஸ்புக்கில் இணைவதற்கு முன்பு பில்கேட்ஸின் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் இந்திய தகவல் தொடர்பு அதிகாரியாக உச்சபட்ச பொறுப்பில் இருந்தவர்.

இவர் தலைமையில் ஃபேஸ்புக் இயங்கத் தொடங்கியதுமே அதிரடியான செயல்பாடுகள் முடுக்கிவிடப்பட்டன. ஆர்எஸ்எஸ், பாஜக போன்ற ஆளும் தரப்பினரோடு நெருங்கிய வலையில் இருக்கும் அங்கிதாஸ் இரண்டையும் பரஸ்பரம் ஒருவர் நலனுக்காக ஒருவர் ஒத்துழைக்கும் அமைப்புகளாக மாற்றியதில் குறிப்பிடத்தக்க பங்குவகிப்பவர்.

பெயர் குறிப்பிட விரும்பாத முகநூல் அதிகாரி ஒருவர், ‘‘அங்கிதாஸை நாங்கள் தமாஷாக ‘மோடியின் பேத்தி’ என்றுதான் குறிப்பிடுவோம்...’’ என்று புன்னகைத்தார்.ராகுல் பாத்தியா என்பவர் கடந்த மே 2016ம் ஆண்டில் ‘கார்டியன்’ இதழில் இதைக் குறிப்பிட்டு எழுதினார்!

ஃபேஸ்புக் தன் அலுவலகத்தை இந்தியாவில் திறந்திருந்த நாட்களில் பாஜக முக்கியமான எதிர்க்கட்சியாகக் களமாடிக் கொண்டிருந்தது. மோடி அலையை இந்திய, சர்வதேச மீடியாக்கள் திட்டமிட்டு உருவாக்க முயன்று அதில் கணிசமான வெற்றியும் பெற்றிருந்தனர். ஊழலுக்கு எதிரான கோஷங்கள் மூலை முடுக்கெங்கும் ஒலிக்கத் தொடங்கின.  

மறுபுறம் தலைநகரான தில்லியில் நிகழ்ந்த நிர்பயாவின் பாலியல் வல்லுறவும் மரணமும் தேசம் முழுதும் பெருங் கொந்தளிப்பை ஏற்படுத்தின. ஆளும் காங்கிரஸ் தரப்பின் சட்டம் ஒழுங்கு சார்ந்த தோல்வி இது என்ற விமர்சனங்கள் எழுந்தன. அப்போதைய மன்மோகன் சிங் தலைமையிலான அரசு எல்லா வகையிலும் தோல்வியடைந்து விட்டதாக ஊடகங்களால் பரப்புரை செய்யப்பட்டது.

இந்த சரிவுகளில் இருந்தெல்லாம் இந்தியாவை மீட்பதற்கான ஒரே மீட்பரும் ஆபத்பாந்தவனும் மோடி மட்டுமே என்ற பரப்புரையும் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டிருந்தன. நரேந்திர மோடியின் பெயர்ச் சுருக்கமான நமோ என்ற சொல் இந்து மதத்துக்கு கீதை தந்த வைணவத்தின் இறையியல் சொல்லான ‘நமோ நாராயணாய’ என்ற சொல்லுக்கு இணையாக உயர்வாக்கம் செய்யப்பட்டது.

இதில் எல்லாம் ஃபேஸ்புக்கின் கைங்கர்யம் கணிசமாக இருந்தது என்பதைச் சொல்ல வேண்டியதில்லை.ஃபேஸ்புக் இந்தியாவில் தொடங்கப்பட்ட இரண்டே வருடங்களில் அரசியல் உரையாடல்கள் நிகழ்வதற்கான முக்கியமான பொது வெளியானது.

குழம்பிய, நடுநிலையான கருத்துகளைக் கொண்ட வாக்காளர்களைத் தங்கள் பக்கம் இழுப்பதற்கான வலையாக முகநூலைக் கண்டது பாஜக. அதற்கு அது கையில் எடுத்த ஆயுதம்தான், ஊழல், சட்ட ஒழுங்குப் பிரசனை, இஸ்லாமியருக்கு எதிரான வெறுப்புப் பிரசாரம் ஆகியவை.

இந்தியாவில் 2011ம் ஆண்டு ஒன்றரைக் கோடியாக இருந்த முகநூல் பயன்பாட்டாளர்களின் எண்ணிக்கை ஒரே வருடத்தில் இரண்டு கோடியே எண்பது லட்சமாக உயர்ந்தது. இதில் இன்னொரு முக்கியமான விஷயம் என்னவென்றால் இப்படி, புதிதாக, ஆர்வமாக ஃபேஸ்புக் கணக்கைத் திறந்தவர்களில் பெரும்பாலானவர்கள் 17 - 35 வயதுக்குட்பட்டவர்கள் என்பதுதான்.

முதல் முறையாக வாக்களிக்கும் ஆர்வத்தில் இருந்த பலரை முகநூல் அரசியல் உரையாடல்கள் நிச்சயம் பாதித்திருக்கவே செய்திருக்கும்.
கடந்த 2014ம் ஆண்டு ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க், இந்தியாவில் அரியானா மாநிலத்தில் உள்ள சந்திராலி என்ற கிராமத்துக்கு வருகை தந்தார்.

தனது பிரத்யேகமான மஞ்சள் வண்ண ஹெலிகாப்டரில் பறந்துவந்த அவர், இந்தியாவின் சராசரியான மக்களை ஃபேஸ்புக் எப்படி பாதித்திருக்கிறது என்பதைக் கண்டறிவதற்காக வந்திருந்தார்.

அந்த வருகையின்போது தில்லிக்குச் சென்ற அவர் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து, டிஜிட்டல் இந்தியாவை உருவாக்க வேண்டியதன்
அவசியத்தை வலியுறுத்தினார். தொடர்ந்து மார்ச் 2015ம் ஆண்டு ஃபேஸ்புக் தனது ‘இண்டர்நெட்.ஓஆர்ஜி’ திட்டம் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்று டஜன் இணையதளங்களைப் பயன்படுத்துவதற்கான இலவச ஆக்சஸை வழங்கியது.

நெட் நியூட்ராலிட்டி எனப்படும் இணைய சமநிலையைக் குலைக்கும் வேலை இது என்று எதிர்ப்புகள் உயர்ந்தன. ஆனால், ரிலையன்ஸ் போன்ற நிறுவனங்கள் களத்தில் குதித்தன. “காற்றும் சூரியனும் இலவசம் என்றால் இணையத்திற்கு மட்டும் எதற்கு கட்டணம்...” என்ற புகழ் பெற்ற விளம்பரம் பரப்புரை செய்யப்பட்டது. மக்களால் வரவேற்கப்படாத இந்தத் திட்டம் ‘ஃப்ரீ பேசிக்ஸ்’ என்ற புதிய நாமகரணத்துடன் மீண்டும் ட்ராயால் முன்வைக்கப்பட்டது.

ஃபேஸ்புக்கில் இதற்கான பரப்புரை ஜோராக நடந்தது. ஃபேஸ்புக்கின் ஒரு கோடியே அறுபது லட்சம் பயனாளர்கள் ‘ப்ரீ பேசிக்ஸ்’ திட்டத்துக்கு அரசை வலியுறுத்தலாம் என்று அழைப்பு விடுக்கப்பட்டது. இதனை மக்கள் கருத்து கேட்பு முடிவடைவதற்கு இரு நாட்கள் முன்பு ஜூக்கர்பெர்க், ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’வில் வெளியிட்டார். மேலும், இந்தியாவின் முக்கிய நாளிதழ்களில் இதற்கு விளம்பரங்கள் தரப்பட்டன.
இதை ஃபேஸ்புக் நிறுவனம் சுமார் 250 கோடி ரூபாய் செலவில் முன்னெடுத்தது.

சரி, இத்தனை செலவு செய்தது எதற்காக? மக்களுக்கு இலவசமாக டேட்டா கிடைக்க வேண்டும் என்ற பெருந்தன்மையிலா? உலகில் எந்த கார்ப்பரேட்டுக்கு இப்படி ஒரு தாய் மனநிலை இருக்கிறது? இந்தக் கேள்விகளுக்கான பதிலாகத்தான் இந்தியாவின் அரசியல் போக்கை வடிவமைக்கும் பிரசார வாகனமாக ஃபேஸ்புக்கை மாற்ற வேண்டும் என்ற ஆளும் அதிகாரத் தரப்பின் கணக்கு இருக்கிறது.

கலிபோர்னியாவின் சிலிக்கான் பள்ளத்தாக்கில் கடந்த 2015ம் ஆண்டு செப்டம்பர் மாதம் இந்தியப் பிரதமர் மோடி ஃபேஸ்புக்கின் நிறுவனரை ஆரத் தழுவி உரையாற்றினார். ஃபேஸ்புக்கின் தலைமையகமான மெனலோ பார்க்கில் நடந்த இந்த சந்திப்பைத் தொடர்ந்து, ஃபேஸ்புக்கின் நிறுவனர் இப்படிச் சொல்கிறார்...“இந்தோனேஷியா முதல் இந்தியா வரை, ஐரோப்பா முதல் அமெரிக்கா வரை சமீபத்திய உலகளவிலான தேர்தல் பிரசாரங்களில், ஃபேஸ்புக்கில் அதிகமாகப் பின் தொடரப்படும் தலைவர்களே வென்று வருகிறார்கள்!”    

இந்தக் கூற்று பொய்யல்ல. ஆனால், இது ஒருவகையில் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட உண்மை என்பதுதான் பிரச்னையே. ஃபேஸ்புக் இந்தியாவில் மட்டுமல்ல உலகம் முழுதும் பல நாடுகளில் உள்ள வலதுசாரி அமைப்புகள் மற்றும் மக்கள் விரோத சித்தாந்த அமைப்பினருடன் கூட்டணி அமைத்துக் கொண்டு, சாமர்த்தியமான பிரசாரங்கள் மூலமாக இதனைச் செய்து வருகிறது என்பதுதான் சிக்கலே. பணத்தைத் தவிர இதற்குப் பின்னால் ஃபேஸ்புக்குக்கு ஏதாவது ஆதாயங்கள் இருக்கிறதா? இந்த வெறுப்புப் பிரசாரங்களை எப்படி நிகழ்த்துகிறார்கள்..?

(தொடர்ந்து தேடுவோம்)

இளங்கோ கிருஷ்ணன்