லவ் ஸ்டோரி-இயக்குநர் அதியன் ஆதிரை



காதல் கொண்ட சமூகம்தான் அனைவரையும் சுயமரியாதையுடன் நடத்தும்!

‘இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’ படத்தில் தனித்துத் தெரிய வந்தவர் இயக்குநர் அதியன் ஆதிரை.
வித்தியாச கதைக்களன், அமைப்பு, இயக்குதல் என பொறுப்பு வகித்த அதியனின் வாழ்க்கை ஒரு உள்ளோடிய கிராமத்தின் உழைக்கும் மனிதர்களிடமிருந்து தொடங்குகிறது. அதியனும் ஆதிரையும் கணவன் மனைவியாக நிறைந்த அன்பில் ஒளியூட்டும் கண்களுடன் பேச... தொடர்ந்தது உரையாடல்...

அதியன்:
இங்கே காதல் திருமணங்கள்தான் அதிகம். நான் கல்லூரியில் படிக்கும்போது ஊரில் நடக்கும் திருவிழா நிகழ்ச்சிகளில் காதல் குறித்து கருத்துக்களைப் பகிர்வேன். கேட்ட பெண்களெல்லாம் அம்மாகிட்ட வந்து ‘உன் பையன் தப்பு தப்பா பேசுறான்’னு சொல்வாங்களாம். ‘களையெடுக்கிற நேரத்துல எல்லா பொண்ணும் சொல்லிச் சொல்லி சிரிக்கிறாளுங்க. பேசாம இருடா’ன்னு அம்மா சொல்லுவாங்க. சினிமா தாக்கத்தில அப்ப எல்லாத்திலேயும் காதல் கலந்துதான் பேச முடியும்.

எங்க மாமா பொண்ணு இதே ஊரில் இன்னொரு தெருவில் இருந்தாங்க. இங்கே மிஞ்சிப் போனால் 200 வீடுகள் இருக்கும்.

மாமா பெண்ணை போகும்போதும் வரும்போதும் பார்ப்பேன். அழகா இருப்பாங்க. பார்க்கப் பார்க்க கண்ணில் அன்பு வழியும். விழாக்களில் அவங்களைத் தேடி கண்ணு சந்திச்ச வினாடியில அவங்க கண்ணும் என்னைத் தேடி நிக்குறது தெரியும்.

அவங்க வீட்டில கருவாட்டுக் குழம்பு வெச்சா எங்க வீட்டுக்கு எடுத்துட்டு வருவாங்க. பழகுற விதத்திலயும் குட்டிக் கண்ணுல அன்பை விதைச்ச பொண்ணுதான் ஆதிரை. உலகம் முழுவதும் பெண்களோட மனசுதான் விசாலமாகி நம்மையெல்லாம் தகுதி பார்க்காம தாங்கிட்டுக் கிடக்குதுன்னு சொல்வேன். அப்பெல்லாம் ஊர்ல பத்து வீட்டிலதான் அயர்ன்பாக்ஸ் இருக்கும்.

அதைக் கடன் வாங்குற சாக்குல அவங்களை பார்க்கப் போறது நடக்கும். வெள்ளிக்கிழமை ‘ஒளியும் ஒலியும்’ ஒரு மணிநேரம் தூர்தர்ஷன்ல போடுவாங்க. வெள்ளிக்கிழமை மத்தியானமே காலேஜ் கட் பண்ணிட்டு விழுப்புரம் பஸ் ஏறிடுவேன். வீட்டுக்கு வந்து முகம் கழுவி வெளியே வந்து பார்த்தால் தூரத்தில் அவங்க முகம் தெரியும். அட்டெண்டன்ஸ் போட்டாச்சு.

அவங்களை திரும்பித்  திரும்பிப் பார்க்க மனசு நிறையும். இளையராஜா பாட்டை பதிவு செய்து கொடுக்குறது... சேகரிச்சு கொடுத்த பாட்டெல்லாம் நானே அவங்களைப் பார்த்து பாடுறமாதிரி இருக்கும்.காதலை நான் சொல்றதா, அவங்க சொல்றதானு போட்டி மிகுந்து போக நானே ‘கல்யாணம் பண்ணிக்கலாமா’ன்னு கேட்டேன். அவங்க மறுநாள் காலையில ‘சம்மதம்’னு சொன்னாங்க. எங்க ரெண்டு பேரு அப்பா அம்மாவும் கூலி வேலைக்குப் போக நாங்க ரெண்டு பேரும் அவங்க வீட்டுத் திண்ணையில உட்கார்ந்து பேசிக்கிட்டிருப்போம்.

தோழிகளோடு தண்ணி பிடிச்சிட்டு வரும்போது, வெறகு பொறுக்கப் போகும்போது, டியூஷன் போகும்போது, கோயிலுக்குப் போகும்போது நாகரீகமான தூரத்துல பின்தொடர்ந்து போவேன். சரி இந்தப் பயலுக்கு கல்யாணம் கட்டிவைக்க வேண்டியதுதான்னு வீட்டுல செய்து வெச்சுட்டாங்க.

காதல்தான் இன்னொரு உயிருக்காகக் களம் இறங்குது. நம்ம அப்பா அம்மா அவங்க குடும்பம்னு சேர்த்து அரவணைக்குது. காதல் கொண்ட சமூகம்தான் பிற மனிதர்களை சுயமரியாதையுடன் நடத்தும்.

காதல் வாழ்க்கையும் கல்யாண வாழ்க்கையும் வேற வேறயா இருக்கு. எவ்வளவு வாசித்தாலும் நடைமுறை வாழ்க்கைக்கு ஒரு விஷயத்தைக் கொண்டு வரும்போது நிறைய சிக்கல்கள் இருக்கு.ஆதிரைக்கு நீதின்னா நீதிதான். தப்புன்னா தப்புதான்னு உரக்கப் பேசுகிற மனசு. என்னை சினிமாவில் கொண்டுபோய் ‘வேலை பாரு’ன்னு சேர்த்தது ஆதிரைதான். இது காதல் திருமணமா இல்லாமல் போயிருந்தா மாப்பிள்ளைக்கு என்ன வேலைன்னு கேட்டால் பதில் இல்லை. கனவை சுமக்குற கருப்பை காதல் கொண்ட மனசுக்குத்தான் உண்டு.

இந்தப் பன்னிரண்டு வருஷங்கள்ல ஒரு நாளும் ‘சினிமாவை விட்டு வா’ன்னு சொன்ன தில்லை. சினிமாவில் நான் சாதிப்பேன் என்கிற நம்பிக்கை என்னைவிட ஆதிரைக்கு அதிகமாகவே இருந்தது. ஆண் என்கிற திமிர் இல்லாமல் என்னை செயல்பாட்டு வடிவத்தில் கொண்டுவந்தது ஆதிரைதான்.

எவ்வளவோ தேவைகளைக் குறைத்துக்கொண்டு என்னை அள்ளி எடுத்துக்கொண்டதும் ஆதிரைதான். முரண் வந்தாலும் யாரு முதலில் சமாதானமாவது என்கிற போட்டிதான் நடக்கும். அதனால் எங்கள் வாழ்க்கை ஒவ்வொரு நாளும் புதிதாகவே இருக்கிறது.

ஆதிரை:
ஒருத்தர் மேல அன்பா இருக்கிறதுக்கு காரணம் சொல்ல முடியுமா! எனக்கு அதியன் மாமாவை ரொம்பப் பிடிக்கும். அவங்க அம்மா ‘நீதாண்டா அவளைப் பார்த்துக்கிடணும்’னு சொல்வாங்க. எனக்கு சிரிப்பா வரும். நாங்க ரெண்டு பேரும்தான் சரிக்கி சமமா சுமந்து வாழ்க்கையைக் கொண்டுபோறோம்னு அவங்களுக்குத் தெரியுமா? என்னடா இவ்வளோ படிச்சிட்டு காலேஜ் வாத்தியார் வேலைக்குப் போயிருக்கலாம்னு சொல்வாங்க,
நான்தான் மாமா மனசுப்படி சினிமாவுல ஜெயிக்கணும்னு சென்னைக்கு அனுப்பினேன்.

சின்னப்புள்ளையா இருக்கும் போது அவர்கிட்ட சண்டை போட்டுக்கிட்டு ரொம்ப நாள் பேசாம இருந்தேன். படிக்கும்போது ஸ்கூலுக்கு ஆறு மைல் தூரம் நடந்தே போவோம். அப்ப என்னை பத்திரமா பார்த்துக்குவார் மாமா. அவங்க வீட்டுல மூணு பேர். இந்த மாமாதான் எனக்கு உசிரு. எந்தப் பழக்கமும் இல்லை. மனசறிஞ்சு பொய் பேசாது. எதிலும் உண்மையா இருக்கும். ஆனால், கஷ்டப்பட்டு சம்பாதித்த சொந்தக் காசில் புக் வாங்கிட்டு நண்பர்கள் கொடுத்தாங்கன்னு பொய் சொல்லும். புத்தகத்துக்கு நடுவுல வாங்கின ரசீதைக்கூட மறைக்கத் தெரியாது!

அவங்க படிச்சி முடிச்ச பிறகு பார்க்காத வேலை இல்லை. போட்டோ கடையில வேலை பார்த்திருக்காங்க. தெருத் தெருவா சிப்ஸ் வித்திருக்காங்க. இரும்புக் கடையில வேலை பார்த்தாங்க. அதனால தோல் கன்னிப் போய் பிச்சிக்கும். உள்ளங்கையில கொப்புளம் கொப்புளமா இருக்கும். அடிக்கடி ஆணி குத்தி ரத்தம் கொட்டும். ஆனால், வீட்டுக்கு வந்தா ஒண்ணுமில்லைன்னு சிரிக்கும் மாமா.

திலீபன் சேகுவேரா, தமிழ் முகிலன்னு ரெண்டு பசங்க. நாங்க எப்பவாவது கோவத்துல முட்டிக்கிட்டா ரெண்டு கையும் சேர்த்து வெச்சு ஆடிப்பாடி சிரிப்பை வரவழைச்சுடுவாங்க. ஆக, பத்து நிமிஷத்துக்குள்ள எங்க சண்டை சமாதானத்துல முடிஞ்சிரும். அவரு சொல்ற மாதிரி எனக்கு விவரமா சொல்லத் தெரியாது. எழுதி முடிச்சதும் என்கிட்ட ஸ்கிரிப்ட்டைக் கொடுத்து ‘படிக்கிறியா ஆதிரை’ன்னு கேட்பார்.

‘மக்களோட மக்களா உட்கார்ந்து திரையில பார்க்கிறேன் மாமா’ன்னு சொல்லிடுவேன். அவரோட அன்புக்கு அனுசரிச்சுப் போகிற வாழ்க்கையில எனக்கு வருத்தமே இல்லை. இன்னும் சொன்னால் இப்படி கொஞ்சமா அவரைப் பத்தி பேச முடியாதுங்கறதுதான் உண்மை!                

நா.கதிர்வேலன்