பிடித்த பாடல்களை ஒன்று கூடி வாரம்தோறும் பாடி வருகிறார்கள்...50 வருடங்களாக சேர்ந்திசையைத் தொடர்கிறார்கள்!

பிடித்த பாடலை மனதாரப் பாடி மகிழ யாருக்குத்தான் பிடிக்காது? ஆனால், அதற்கான இடமும், மைக்கும்தான் அவ்வளவு எளிதில் வாய்ப்பதில்லை.

ஒருவேளை ஒன்றுகூடி, பாடி மகிழ ஒரு குடும்பம் போன்ற குழுவும், வாய்ப்பும் எவ்வித செலவுமின்றி கிடைத்தால் எப்படி இருக்கும்..?
அதைத்தான் கடந்த ஐம்பது வருடங்களாக ‘சென்னை இளைஞர்கள் சேர்ந்திசைக் குழு’ செய்து வருகிறது.

ஐம்பது ஆண்டுகளாக ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக் கிழமைகளில் ஒன்று சேர்ந்து பாடும் இக்குழு சுனாமி, புயல் போன்ற இயற்கைச் சீற்றக் காலங்களில் கூட தங்களின் சந்திப்பை தவிர்த்ததில்லை! ‘‘முதலில் இந்த சேர்ந்திசைக் குழு அப்படின்னா என்னனு சொல்லிடறேன்...’’ என்று ஆரம்பித்தார் சென்னை இளைஞர்கள் சேர்ந்திசைக் குழுவின் கலை இயக்குநரான இராமச்சந்திரன்.

‘‘பெரும்பாலும் மதங்கள்ல வாரத்தில் ஏதாவது ஒரு நாள் ஒன்று கூடி கடவுளைப் பிரார்த்தனை செய்து பாடி மகிழ்வாங்க. அதே பாணில ஆனா, நாங்க மொழி கடந்து, மதம் கடந்து நாட்டுப்பற்றுப் பாடல்கள், புகழ்பெற்ற கவிஞர்களுடைய பாடல்கள், கவிதைகள், சமூகப் பற்றுப் பாடல்கள்னு பாடறோம்.

ஒவ்வொரு வருடமும் இதற்கான சேர்க்கை ஆன்லைன் தளம் மூலம் நடக்கும். வயது வித்யாசமே இல்லாம பலநூறு பேர் ஆர்வம் காட்டி சேர்க்கைக்குப் பதிவு செய்வாங்க.

ஆனா, நாங்க 45 நபர்களுக்கு மேல எடுக்கறதில்லை. அனைவருக்கும் வாய்ப்பு கொடுக்கணும். பயிற்சிகளும் முறையா சேரணும். அதனாலதான் இந்தக் குறிப்பிட்ட எண்ணிக்கை...’’ என்னும் இராமச்சந்திரன் இந்த சேர்ந்திசைக் குழு உருவான வரலாறு குறித்து பகிர்ந்து கொண்டார்.

‘‘1970ம் ஆண்டு ஆகஸ்ட் 19ம் தேதி எங்க குருவும் கர்நாடக இசைக் கலைஞருமான அமரர் எம்.பி.ஸ்ரீனிவாசன் வழிகாட்டுதலோடு இந்த சேர்ந்திசைக் குழு அகில இந்திய வானொலியின் ‘இளைய பாரதம்’ நிகழ்ச்சியில தன் முதல் சேர்ந்திசை நிகழ்ச்சியை அரங்கேற்றி பண்ணினது.

நிகழ்ச்சிக்குக் கிடைத்த மிகப்பெரிய வரவேற்பையும் ஆதரவையும் பார்த்து தொடர்ந்து சேர்ந்திசைக் குழுவை நடத்தணும்னு எம்.பி. னிவாசன் விரும்பினார்.

குழந்தைகளிடையேயும் இளைஞர்களிடையேயும் சேர்ந்திசையின் மூலம் நாட்டுப்பற்று, ஒற்றுமை, உலக அமைதி, மதச்சார்பின்மை, மனித விழுமியம்,
இந்தியக் கலாசாரம், பண்பாடு, சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தணும் என்பதுதான் சென்னை இளைஞர் சேர்ந்திசையின் குறிக்கோள். சப் - ஜூனியர், ஜூனியர்...

இப்படி குழந்தைகளுக்காக இருவேறு வயதுப் பிரிவுகளில் பாடல்களைச் சொல்லிக் கொடுக்கிறோம். எங்கள் சேர்ந்திசைப் பயிற்சியாளர்கள் ஒவ்வொரு வாரமும் குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்குமான நேர்முக வகுப்புகளை நடத்துவார்கள்.

மொழி பாகுபாடுகள் இல்லாமல் 12 மொழிகளில் இருக்கும் புகழ்பெற்ற கவிஞர்களுடைய பாடல்கள், பக்திப் பாடல்கள், நாட்டுப்பற்றுப் பாடல்கள், சமூகப் பாடல்கள்னு எல்லாமே பாடுவோம்.சில நேரங்களில் சமூகம் சார்ந்த சினிமா பாடல்களும் கூட இடம்பெறும்.

இங்கே சேர ஒரே தகுதி பாடணும் என்கிற ஆசைதான். முறைப்படி சங்கீதம் பயின்றவர்கள் வரணும், இசைப் பின்னணி உள்ளவர்கள்தான் வரணும்னு எந்த நிபந்தனையும் கட்டுப்பாடும் கிடையாது.

பாத்ரூம் சிங்கர்களாக இருந்தால் கூட பரவாயில்லை. ஒண்ணா சேர்ந்து சனி, ஞாயிறு தவறாம இந்த இசைப் பயிற்சிகள்ல கலந்துக்கணும்.

ஏன்னா ஒன்று கூடி பாடல் பாடுவது மட்டுமில்லாம சர்வதேச அளவில் பல கலை நிகழ்ச்சிகள், அரசு சார்ந்த இசை நிகழ்வுகள், சங்கீதக் கூட்டங்கள், மாநாடுகள் இப்படி பல இடங்களுக்கும் போயி எங்க குழு அரங்கேற்றம் செய்யறதுண்டு.

அதில் எல்லாம் கலந்துக்கணும்னா நிச்சயம் பயிற்சி இருக்கணும். அதனால்தான் நாங்க சேர்க்கை எடுக்கும் போதே ஜூனியர்கள் சனிக்கிழமையும், சீனியர்கள் ஞாயிற்றுக் கிழமையும் தவறாம மூணு மணி நேரம் பயிற்சிக்கு வரணும்னு கட்டுப்பாடு விதிக்கறோம்.மேலும் பல பள்ளிகள், கல்லூரிகளுக்கும் போயி அவர்களுடைய ஆண்டு விழா, கலை நிகழ்ச்சிகளுக்கு பாடல் உருவாக்கி மாணவர்களுக்கு சொல்லிக் கொடுக்கறோம்.

இந்த சேர்ந்திசைக் குழுவுக்கு நிரந்தர உறுப்பினர்களா நாங்க 42 பேர் இருக்கோம். எல்லோருமே 38 வயதில் இருந்து 60 வயதிற்கும் மேலே இருப்போம்.
‘என்ன இந்த வயதில் இளைஞர்கள் சேர்ந்திசையா’ன்னு கேட்கலாம், அமரர் எம்.பி.ஸ்ரீனிவாசன் அவர்களுடைய அடிப்படை பதிலே இதுதான். ‘மனதால் இளைஞர்கள் நாங்கள்... எக்காலத்திலும் இந்த ‘சென்னை இளைஞர்கள் சேர்ந்திசைக் குழு’ என்னும் பெயர் மாறாது’ அப்படின்னு சொல்லிட்டார்.

வேற்று மொழிப் பாடல்கள் பாடும்போது அந்தந்த மொழி வல்லுனர்கள் உதவியோடுதான் பாடல்கள் பாடுவோம். இந்த வருடம் ஆகஸ்ட் 19 எங்க சேர்ந்திசையின் பொன்விழா; செப்டம்பர் 19 எம்.பி.ஸ்ரீனிவாசன் பிறந்ததினம்... இந்த இரண்டையும் சேர்த்து பிரம்மாண்ட நிகழ்ச்சியா நடத்தலாம்னு முடிவு செய்தோம்.

கொரோனா தொற்று காரணமா அதை அடுத்த வருடம் செய்யலாம்னு தள்ளி வெச்சிருக்கோம். ஒண்ணு தெரியுமா..? கொரோனா காலத்தில் கூட ஆன்லைன் மூலம் எங்கள் குழு தொடர்ந்து இயங்கிட்டுதான் இருக்கு...’ என இராமச்சந்திரன் முடிக்க, செலவை எப்படி ஈடுகட்டுகிறோம் என விளக்கினார் குழுவின் செயலாளரான ராம்.

‘‘வகுப்புகள் நடத்த பாலமந்திர் பள்ளிக்கூடத்தில் ஒரு சிறிய இடம் கொடுத்திருக்காங்க. மத்திய அரசு அங்கீகாரம் கொடுத்த சேர்ந்திசைக் குழு என்கிறதால் மத்திய அரசின் ‘சங்கீத் நாடக அகாடமி’ மூலம் வருடந்தோறும் ஒரு குறிப்பிட்ட  தொகை நிதியா கிடைக்குது. இது தவிர உறுப்பினர்கள் தங்களால முடிந்த தொகையைக் கொடுக்கறாங்க.

அப்புறம் புதிதா சேர்கிற உறுப்பினர்கள் கிட்ட சின்னதா ஒரு தொகையை அட்மிஷன் ஃபீஸ் போல வருடத்துக்கு ரூ.500 வாங்குவதுண்டு. அதுவும் ஒரே நேரத்தில் கொடுக்க வேண்டும்னு இல்லை. எப்ப முடியுமோ அப்ப தரலாம். கொஞ்சம் கொஞ்சமாகவும் செலுத்தலாம்.அமெரிக்கா தொடங்கி பல நாடுகள்ல எங்க ‘சென்னை இளைஞர்கள் சேர்ந்திசைக் குழு’ இயங்கிக்கிட்டிருக்கு...’’
என்கிறார் ராம்.

ஷாலினி நியூட்டன்