ரத்த மகுடம்-113



பிரமாண்டமான சரித்திரத் தொடர்

‘‘நல்லது விநயாதித்தா...’’ சாளுக்கிய இளவரசனின் தோள்களில் கையைப் போட்டபடியே அரண்மனை வாயிலை நோக்கி நடந்தார் பாண்டிய மன்னர் அரிகேசரி மாறவர்மர்.பின்னாலேயே ஸ்ரீராமபுண்ய வல்லபரும், பாண்டிய இளவரசன் கோச்சடையன் இரணதீரனும். அவர்களுக்கும் பின்னால் பாண்டிய பணியாளர்கள் சீர்வரிசை தட்டுகளுடனும் வந்தார்கள்.

அரண்மனை வாயிலில் ரதங்களும் புரவிகளும் தயார் நிலையில் நின்றன.வந்தவர்களை நோக்கித் தலைவணங்கிய சாளுக்கிய வீரர்கள் பணிவுடன் ரதங்களின் கதவுகளைத் திறந்தார்கள்.பாண்டிய பணியாளர்கள், தாங்கள் கொண்டு வந்த சீர்வரிசைகளை அதனுள் பத்திரமாக அடுக்கினார்கள்.

‘‘சென்று வாருங்கள்... தங்களுக்கான அன்ன ஆகாரங்கள் வழியிலுள்ள சத்திரங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன...’’ விநயாதித்தனை அணைத்தார் அரிகேசரி மாறவர்மர். ‘‘சாளுக்கிய மன்னரைக் கேட்டதாகச் சொல். உதவ முடியாமல் நான் இருப்பதை எடுத்துச் சொல்...’’‘‘கண்டிப்பாக மன்னா...’’ விநயாதித்தன் குனிந்து பாண்டிய மன்னரின் கால்களைத் தொட்டு வணங்கினான். அவருக்குப் பின்னால் நின்றிருந்த இரணதீரனை இறுக அணைத்தான்.

கண்களாலேயே பாண்டிய இளவரசனிடம் விடைபெற்றான்.ராமபுண்ய வல்லபர் முன்னால் வந்து அரிகேசரி மாறவர்மரை வணங்கினார். ‘‘பாண்டியர்களின் விருந்தோம்பலை என்றும் மறக்க மாட்டோம்...’’‘‘சாளுக்கியர்களின் நட்பை எப்பொழுதும் நினைவில் வைத்திருப்போம்...’’ அரிகேசரி மாறவர்மரின் உதடுகளில் புன்னகை மலர்ந்தது. விடைபெற்ற விநயாதித்தனும் ராமபுண்ய வல்லபரும் தங்கள் பரிவாரங்கள் இருக்கும் இடத்தை அடைந்தார்கள்.சாளுக்கிய வீரர்கள் ரதங்களின் கதவுகளைத் திறந்தார்கள்.

அதைத் தவிர்த்துவிட்டு இருவரும் புரவிகளின் அருகில் வந்தார்கள். குதிரைகளின் மேல் ஏறினார்கள்.பாண்டிய மன்னரையும் பாண்டிய இளவரசனையும் பார்த்துக் கையசைத்துவிட்டு இருவரும் தங்கள் கால்களால் புரவியின் வயிற்றைத் தட்டினார்கள்.‘‘சாளுக்கிய இளவரசர்...’’‘‘வாழ்க... வாழ்க...’’
‘‘சாளுக்கிய போர் அமைச்சர்...’’
‘‘வாழ்க... வாழ்க...’’

பாண்டிய வீரர்களின் ஜெய கோஷங்களைக் கேட்டபடியே மதுரைக் கோட்டை வாயிலை நோக்கி நகர்ந்தார்கள்.தன் மைந்தனின் தோளை அணைத்தார் அரிகேசரி மாறவர்மர்.‘‘இந்த நாடகம் எதற்கு மன்னா..?’’ இரணதீரனின் குரலில் மரியாதை வழிந்தது.
‘‘நாடகமா..? சாளுக்கியர்களை நல்லமுறையில்தானே வழியனுப்பி இருக்கிறோம்..?’’‘‘ஆனால் சிவகாமியையும் கரிகாலனையும் நாடகமாடி அல்லவா அனுப்பியிருக்கிறீர்கள்..? நீங்கள் நினைத்திருந்தால் பாண்டிய வீரர்களையும் சாளுக்கிய வீரர்களையும் இரவோடு இரவாகக் கோட்டைக்கு வெளியே அனுப்பி, பாதாளச் சிறையில் இருந்து தப்பித்த சிவகாமியையும் உடன் சென்ற கரிகாலனையும் பிடித்திருக்கலாம்.

ஆனால், அப்படி எதுவும் நடந்துவிடக் கூடாதே என்று கவனமாக இருந்தீர்கள். ஏதேதோ பேசி விநயாதித்தனையும் ஸ்ரீராமபுண்ய வல்லபரையும் இரவு முழுக்க உங்களுடனேயே இருக்க வைத்தீர்கள்... இதன் மூலம் கரிகாலனும் சிவகாமியும் பத்திரமாக பாண்டிய நாட்டின் எல்லையைக் கடக்க துணை  புரிந்திருக்கிறீர்கள்... காரணத்தை நான் அறியலாமா..?’’

கேட்ட இரணதீரனை நோக்கி கண்களால் சிரித்தார் அரிகேசரி மாறவர்மர். ‘‘வருங்கால பாண்டிய மன்னர் கண்டிப்பாக அறிய வேண்டும்...’’
சொல்லிவிட்டு பார்வையால் சுற்றிலும் அலசினார். பாண்டிய வீரர்கள் இருபதடி இடைவெளி விட்டே நின்றிருந்தார்கள். இரணதீரனும் தன் குரலைத் தாழ்த்தியே வினவியிருந்தான்.

என்றாலும் பாண்டிய மன்னர் தன் மகனை அணைத்து அவன் செவியில் முணுமுணுத்தார். ‘‘இரண்டு நாழிகைகளில் மந்திராலோசனை நடைபெற இருக்கிறது...’’இரணதீரன் பதிலேதும் சொல்லாமல் அமைதியாக நின்றான்.  ‘‘நேற்று மதியத்துக்கு மேல் அனைவருக்கும் தகவல் தெரிவித்தாகிவிட்டது...’’ அணைப்பில் இருந்து விலகி தன் மகனின் கருவிழிகளை உற்றுப் பார்த்தார்.

‘‘ஆம்... சிவகாமியும் கரிகாலனும் பாதாளச் சிறையில் இருந்தபோதே இன்றைய மந்திராலோசனைக்கான ஏற்பாடுகளைத் தொடங்கிவிட்டேன்!’’ மகனை அணைத்தபடியே அரண்மனைக்குள் நுழைந்தார் அரிகேசரி மாறவர்மர். ‘‘தளபதிகளும் உப தளபதிகளும் குறுநில மன்னர்களும் சபைக்கு வருவதற்குள் நீ ஒரு காரியம் செய்ய வேண்டும்...’’‘‘உத்தரவிடுங்கள் மன்னா...’’தன் இடுப்பில் இருந்து ஒரு பொருளை எடுத்து இரணதீரனின் கைகளில் திணித்தார்.

‘‘உன் அறைக்குச் சென்று இதைப் பார்... பாதாளச் சிறையில் சிவகாமியிடம் இருந்து கரிகாலன் கைப்பற்றிய பொருள் இது... அவள் முன்னிலையில் அவன்தான் என்னிடம் கொடுத்தான். இது சொல்லும் சேதி அனைத்து உண்மைகளையும் உனக்குப் புரிய வைக்கும்!’’

மல்லைக் கடற்கரை சுங்கத் தலைவரின் முகத்தில் எந்த மாறுதலும் இல்லை. அலுவலில் இருக்கும்போதும் இல்லாதபோதும் எப்படி இருப்பாரோ அப்படியே இப்பொழுதும் இருந்தார். உதட்டில் மலர்ந்த புன்னகை அவர் வதனத்துக்கு அழகு சேர்த்தது.

இடுப்பில், தான் மறைத்து வைத்திருந்த சுவடியை சாளுக்கிய மன்னர் கைப்பற்றியதை நினைத்துப் பார்த்தார். முதல் ஓலையில் இருந்த காபாலிகனின் குறிப்பைப் பார்த்து தன்னை விக்கிரமாதித்தர் விசாரித்தது அவர் நினைவுக்கு வந்தது. உதட்டின் புன்னகையும் அதிகரித்தது.
நிச்சயம் அந்தச் சுவடியில் இருக்கும் குறிப்புகளை ஒருபோதும் சாளுக்கிய மன்னரால் புரிந்துகொள்ள முடியாது!

நெஞ்சையும் தலையையும் உயர்த்தினார். தன்னைச் சுற்றிலும் சாளுக்கிய வீரர்கள் வாட்களுடனும் வேல்களுடனும் வந்ததை அவர் பொருட்படுத்தவேயில்லை. செல்லும் இடம் குறித்த தெளிவு இருந்ததால் அந்தப் பயணம் அவருக்கு சுகமாகவே இருந்தது.

எதிர்பார்த்தது போலவே மல்லைக்கும் காஞ்சிக்கும் இடையில் இருந்த ஒரு தோப்புக்குள் அவர்கள் நுழைந்தார்கள். அந்தத் தோப்பினுள் இருந்த சத்திரம் கடந்த சில திங்கள்களாக சாளுக்கியர்களின் சிறைச்சாலையாக செயல்பட்டு வந்ததை அவர் அறிந்திருந்ததால் இங்குதான் தன்னை அடைப்பார்கள் என்பதை ஊகித்திருந்தார்.

சத்திரத்தை நெருங்கியதும் சாளுக்கிய வீரர்கள் வாசலிலேயே நின்றார்கள்.‘‘ம்...’’ வீரர்களின் தலைவன் குரல் கொடுத்தான். அவனைப் பின்தொடர்ந்தபடி சுங்கத் தலைவர் சத்திரத்துக்குள் நுழைந்தார்.எங்கும் அமைதி. சூரியன் உதயமாகி இரண்டு நாழிகை ஆன பிறகும் சத்திரத்துக்குள் எந்த நடமாட்டமும் இல்லை.சுங்கத் தலைவரை அழைத்துக் கொண்டு மேல் தளத்துக்குச் சென்ற வீரர்களின் தலைவன் அங்கிருந்த ஒற்றை அறையின் பூட்டைத் திறந்தான். சுங்கத் தலைவரை உள்ளே செல்லுமாறு சைகை செய்தான்.

மாறாப் புன்னகையுடன் அந்த அறைக்குள் சுங்கத் தலைவர் நுழைந்தார். தனக்குப் பின்னால் அறை பூட்டப்படும் ஓசை கேட்டது.எதிர்பார்த்தபடியே எல்லாம் நடப்பதில் சுங்கத் தலைவருக்கு பரம திருப்தி ஏற்பட்டது. உணவுக்கு இன்னும் நேரமிருக்கிறது. அதுவரை உறங்கலாம் என அந்த அறையைச் சுற்றிலும் பார்த்தவர் அதிர்ச்சியில் அப்படியே உறைந்தார்.

எதிர்பார்க்காத மனிதர் ஒருவர் அந்த அறையின் மூலையில் அமர்ந்திருந்தார்.அவர், அனந்தவர்மர். சாளுக்கிய மன்னர் விக்கிரமாதித்தரின் உடன்பிறந்த சகோதரர்!‘‘என்ன அப்படிப் பார்க்கிறாய்..?’’ விநயாதித்தனின் புரவியை ஒட்டி தன் குதிரையைச் செலுத்தியபடி ஸ்ரீராமபுண்ய வல்லபர் கேட்டார்.

‘‘மதுரை கோட்டை வாயில் புதியதாகவும் புதிராகவும்இருக்கிறது குருவே...’’‘‘அப்படியேதும் தெரியவில்லையே... கடந்த பல நாட்களாக மதுரையில்தான் நாம் தங்கியிருந்தோம்... பலமுறை கோட்டையை விட்டு வெளியே சென்றிருக்கிறோம்... திரும்ப வந்திருக்கிறோம்...

அப்பொழுது நாம் எப்படி கோட்டை வாயிலைப் பார்த்தோமோ அப்படித்தானே இப்பொழுதும் இருக்கிறது..?’’
‘‘கோட்டையின் அளவையோ மக்கள் கூட்டத்தையோ நான் குறிப்பிடவில்லை குருவே...’’
‘‘பிறகு..?’’‘‘இன்று மதுரையில் இருந்து வெளியேறும் மக்கள் கூட்டத்தைப் பாருங்கள்...’’
ராமபுண்ய வல்லபர் பார்த்தார். ‘‘ஆம்... வணிகர்களாக இருக்கிறார்கள்...’’

‘‘அதுவும் நெசவாளர்களாக இருக்கிறார்கள் குருவே... மாட்டு வண்டிகளில் வரும் கைவினைப் பொருட்களைப் பாருங்கள்...’’
‘‘ஆமாம்... அதற்கென்ன..?’’விநயாதித்தன் அவருக்கு பதில் சொல்லாமல் சாளுக்கிய வீரன் ஒருவனை அழைத்தான்.
‘‘இளவரசே...’’‘‘இந்த நெசவாளர்கள் எங்கு செல்கிறார்கள்..?’’
விசாரித்துவிட்டு வந்த வீரன், ‘‘காஞ்சி செல்கிறார்களாம் இளவரசே...’’ என்றான்.

அவனைப் போகச் சொல்லிவிட்டு சாளுக்கிய போர் அமைச்சரை ஏறிட்டான் விநயாதித்தன். ‘‘குழப்பமாக இருக்கிறது குருவே...’’
‘‘இதிலென்ன குழப்பம் விநயாதித்தா... காஞ்சியில் நெசவாளர்கள் இருக்கிறார்கள். அவர்கள் நெய்யும் பட்டுத் துணிகள் மல்லைத் துறைமுகம் வழியே மற்ற தேசங்களுக்கு ஏற்றுமதி ஆகின்றன...’’‘‘... அதுதான் குருவே...’’ விநயாதித்தன் இடைமறித்தான். ‘‘போதுமான நெசவாளர்கள் காஞ்சியில் இருக்கும்போது எதற்காக கூடுதலாக மதுரையில் இருந்து செல்கிறார்கள்..?’’

‘‘எல்லாவற்றையும் சந்தேகக் கண்ணோடு நீ பார்ப்பது மகிழ்ச்சி யளிக்கிறது விநயாதித்தா... அதேநேரம், எழுகின்ற அனைத்தும் சந்தேகங்கள் அல்ல... வினாக்களும் அதில் அடங்கியிருக்கலாம்... சற்றே யோசித்தால் அதற்கான விடைகளையும் அறியலாம் என்பதை மறக்காதே...’’‘‘அப்படியானால் இப்பொழுது எனக்குள் முளைவிடுவது..?’’‘‘சந்தேகச் செடி அல்ல. வினா!’’‘‘அதற்கு விடை..?’’

‘‘யவனர்கள் அல்லது அராபியர்கள் அதிக எண்ணிக்கையில் பட்டாடைகள் கேட்டு செய்தி அனுப்பியிருப்பார்கள்... அதற்காக காஞ்சி நெசவாளர்கள் தங்கள் உறவினர்களான மதுரை நெசவாளர்களை அழைத்திருப்பார்கள்...’’‘‘நீங்கள் சொல்வது ஊகம்தானே..?’’‘‘காஞ்சிக்குச் சென்று அதை உறுதிப்படுத்திக் கொள்ளலாமே!’’விநயாதித்தன் சிந்தனையில் ஆழ்ந்தான்.

‘‘பல்லவ வாள் நெகிழ்ந்து குழையும் அதேநேரம் இறுகவும் செய்கிறது!’’ சிவகாமியின் மேனியைத் தன் விரல்களால் தடவியபடியே கரிகாலன் சுருதி சேர்த்தான்.

யாழின் நரம்புகள் என சிவகாமியின் தேகம் அதிர்ந்தது.மீட்டியபடியே தன் கண்களை மறைத்த அவள் கச்சையை அதற்குரிய இடத்தில் கரிகாலன் பொருத்தினான்!காற்று புக முடியாத அளவுக்கு அவன் இமைகள் மூடியிருந்தன.

சிவகாமிக்கு அது பிடித்திருந்தது. குழைந்தாள். நெளிந்தாள். பின்னினாள். அவன் கேசத்தைப் பிடித்தாள். ‘‘சாளுக்கியர்களின் பட்டையான வாளை எதிர்கொள்ள இந்த மெல்லிய வாள் போதும்...’’‘‘வாள் மட்டுமா மென்மை... உறையும்தான்...’’ கச்சையை முடிச்சிட்டான்.

‘‘அதனால்தானே உங்கள் கண்களை மூடிய பிறகும் உங்களால் பார்க்க முடிந்தது!’’
‘‘ஆம்... நன்றாகப் பார்த்தேன்..!’’‘‘கண்டது போதுமா... அல்லது...’’
‘‘இதுவே அதிகம்!’’ அவள் உதட்டைக் கவ்வினான். ‘‘பார்த்ததை மனதில் பதிய வைத்துக் கொண்டேன்!’’ தன் மார்பை அழுத்தினான்.
கச்சைக்குள் இருந்த அவள் கொங்கைகள் நசுங்கின.

‘‘எவ்வளவு மெல்லியதாக நெய்திருக்கிறார்கள்...’’ கைகளால் கச்சையைத் தடவியபடியே முணுமுணுத்தான்.‘‘பின்னே... நீங்கள் அடையாளம் காட்டிய நெசவாளர் அல்லவா நெய்தார்... உங்கள் மனமறிந்தல்லவா நெய்திருக்கிறார்..!’’சிரித்தான். சிரித்தாள். சிரித்தார்கள்!

(தொடரும்)

கே.என்.சிவராமன்

ஓவியம்: ஸ்யாம்