தல! sixers story-14
அன்றே சொன்னாள் அவள்!
கிரிக்கெட்டில் பிரபலமாக ஆரம்பித்துவிட்டாலும், பயிற்சிக்கும், உபகரணங்கள் வாங்கவும் பணத்துக்காக சிரமப்பட்டார் தோனி. அப்பாவிடமும் கேட்க முடியாது.கேட்டால் “படிப்பைப் பாரு, அப்போதான் நல்ல வேலை கிடைக்கும்” என்பார்.கிரிக்கெட் பற்றி அவருக்கு இன்னமும் நல்ல அபிப்ராயம் ஏற்படவில்லை.அப்போதுதான் கை கொடுத்தார்… மன்னிக்கவும்… பேட் கொடுத்தார் பரம்ஜித் சிங்.
ராஞ்சி நகரின் சாந்தி சவுக் பகுதியில் சிறிய அளவில் விளையாட்டுப் பொருட்களை விற்கும் கடை ஒன்றை நடத்தி வந்தார் பரம்ஜித்.
தெருவில் தோனி கிரிக்கெட் ஆடிக் கொண்டிருந்தபோது, பரம்ஜித்தும் அவரோடு விளையாடி இருக்கிறார்.தங்கள் ஊர்ப்பையன் கிரிக்கெட்டில் பிரபலமாகிக் கொண்டிருப்பதைப் பார்த்த பரம்ஜித், அவனை ஊக்குவிக்க வேண்டுமென நினைத்தார்.மனசு இருந்தது.
ஆனால் -செலவழிக்க அவ்வளவு பண வசதியில்லை.அப்போது பஞ்சாபின் லூதியானா நகரில் ‘பீட் ஆஃப் ஆல் ஸ்போர்ட்ஸ்’ என்கிற பெரிய விளையாட்டுத் தொழிற்சாலை இருந்தது.தரமான விளையாட்டு உபகரணங்களை இந்நிறுவனம்தான் தயாரித்து வந்தது.
தொழில்ரீதியாக இவர்களோடு உறவு கொண்டிருந்த பரம்ஜித், அந்நிறுவனத்தின் உரிமையாளர்களிடம் தோனியைப் பற்றி எடுத்துச் சொன்னார். “இந்தப் பையன் ஒருநாள் கிரிக்கெட் மூலம் உலகின் கவனத்தையே இந்தியாவின் பக்கம் திருப்பப் போகிறான். இவனுக்கு நீங்கள் உதவ வேண்டும்...” என்று கேட்டுக் கொண்டார்.
இதுபோல தினமும் எத்தனை கோரிக்கை மனுக்களைப் படித்திருப்பார்கள்?
எனவே வழக்கம்போல ‘பார்ப்போம்.. பார்ப்போம்’ என்று தட்டிக் கழித்தார்கள்.ஆனால் -பரம்ஜித்தோ தன்னுடைய வேலையை எல்லாம் விட்டு விட்டு லூதியானாவிலேயே உட்கார்ந்து கொண்டு தோனிக்கு உதவ வேண்டும் என்று சத்தியாக்கிரகப் போராட்டம் செய்தார்.
பரம்ஜித்தின் தொல்லை தாங்க முடியாமல் அந்த நிறுவனத்தினர் தோனிக்கு ஓராண்டுக்கு வேண்டிய கிரிக்கெட் உபகரணங்கள் அத்தனையையும் இலவசமாகத் தந்தனர்.வருடா வருடம் தங்கள் கிரிக்கெட் சீர்வரிசை தவறாமல் வந்து சேர்ந்துவிடும் என்று உறுதியளித்தனர்.
பரம்ஜித்தின் முயற்சியும், பீட் ஆஃப் ஆல் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தின் ஆதரவும் தோனிக்கு பெரும் ஊக்கமாக அமைந்தது.கிளவுஸ், பேட், காலுறை, ஷூ, யூனிஃபார்ம் என்று எல்லாமே புத்தம் புதுசாக கிடைத்தவுடன் உற்சாகமாகப் பயிற்சி பெற ஆரம்பித்தார் தோனி. அந்தக் காலத்திலேயே இதற்கெல்லாம் ஆயிரக்கணக்கில் செலவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
பரம்ஜித் மீது கொண்ட அபிமானத்தில்தான் தோனிக்கு அந்த நிறுவனம் உதவத் தொடங்கியதே தவிர தாங்கள் எதிர்கால இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனுக்கு உதவிக் கொண்டிருக்கிறோம் என்று துளியும் எதிர்பார்க்கவில்லை.பரம்ஜித்துக்கு மட்டும் தோனி மீது அதீதமான நம்பிக்கை இருந்தது.எதிர்காலத்தில் கபில்தேவ், டெண்டுல்கர் மாதிரி தன்னுடைய நண்பன் தோனியும் பெரிய கிரிக்கெட் வீரன் ஆவான் என்று. பரம்ஜித்தைப் போலவே தோனியின் எதிர்காலத்தை விளையாட்டாகக் கணித்தாள் மாணவி ஒருத்தி.
அப்போதெல்லாம் விடியற்காலையிலேயே எழுந்து கிரிக்கெட் மைதானத்துக்குப் போய் ஓரிரு மணி நேரங்கள் பயிற்சி செய்வார் தோனி. அதன் பிறகு வீட்டுக்குத் திரும்பி குளித்து, உணவு உண்டு தயாராகி பள்ளிக்கு ஓட்டமும் நடையுமாக விரைவார்.சில சமயம் அவருக்காக ஸ்கூல் பஸ் காத்திருக்கும்.தோனி வர நேரமானால் கிளம்பிவிடும்.அதன் பிறகு ஸ்கூலுக்கு ஓடித்தான் போகவேண்டும்.அன்றும் அப்படித்தான்.தோனி வரத் தாமதமாகி விட்டது.பஸ் கிளம்பி விட்டது.
பின்னாலேயே குரல் கொடுத்துக் கொண்டு ஓடி வந்து கொண்டிருந்தார் தோனி.ஒரே ஒரு மாணவி மட்டும் ஜன்னல் வழியாக அவரைப் பார்த்தாள்.உடனே குரல் கொடுத்தாள்.“அண்ணே! மகி ஓடி வந்துக்கிட்டிருக்கான். கொஞ்சம் நிறுத்துங்க…”சலிப்போடு பிரேக்கை மிதித்தார் டிரைவர்.
“இவனுக்கு இதே வேலையாப் போச்சு. ஒருநாளாவது பத்து நிமிஷம் முன்னே வந்து நிப்போம்னு இல்லை…” அவருக்குத் தெரியாது தோனி ஒரு கிரிக்கெட் வீரன், காலையில் பயிற்சிக்குப் போய்விட்டு வருகிறவர் என்று.“அண்ணே! அவனை எல்லாரும் இப்பவே நல்லா பார்த்துக்கங்க. யாருக்குத் தெரியும். நாளைக்கு அவன் பெரிய கிரிக்கெட் ஸ்டாரா ஆனாலும் ஆவான்…” அந்தப் பெண்தான் சொன்னாள். தோனி, பஸ்சுக்குள் நுழைந்தபோது சக மாணவர்களும், மாணவிகளும் ஓவென்று ஆர்ப்பரித்து அவரை வரவேற்றனர்.சாதாரணமாகவே கூச்ச சுபாவம் கொண்ட தோனிக்கு, இந்த வரவேற்பு மேலும் வெட்கத்தைத் தந்தது.ஒரு மாணவன் தோனியிடம் வந்து நோட்டை நீட்டி, “சார், ஒரு ஆட்டோகிராப் போட்டுக் கொடுங்க சார்...” என்று கலாய்த்தான்.“என்னடா இது?” என்று கேட்டார் தோனி.
“அதோ அவதான் சொன்னா. நீ பெரிய பிளேயர் ஆயிட்டேன்னா உன்னை நாங்கல்லாம் பார்க்கக்கூட அப்பாயின்ட்மென்ட் வாங்கணும்னு. அதனாலேதான் இப்பவே ஆட்டோகிராப் கேட்குறேன்…” என்று சொல்லியவாறே, அந்த மாணவியைக் கைகாட்டினான். அந்த மாணவிக்கு அன்று பிறந்தநாளோ என்னவோ, சேலை கட்டியிருந்தாள்.
பெண்களிடம் பேசுவதென்றாலே நம்ம ‘தல’க்கு கொஞ்சம் படபடப்புதான்.
அந்தப் பெண்ணை ஏறிட்டுப் பார்க்கக் கூச்சப்பட்டுக்கொண்டே மெதுவாக ‘‘தேங்க்ஸ்...’’ என்றார்.
“யாருக்குடா தேங்க்ஸ் சொல்லுறே? எனக்கா? அந்தப் பொண்ணுகிட்டே போய் சொல்லுடா…” என்று மேலும் வெறுப்பேற்றினான் ஆட்டோகிராப் கேட்ட நண்பன்.
அந்தப் பெண்ணிடம் போய், “உங்களுக்கு என்னைப் பத்தி என்ன தெரியும்னு தெரியலை. நீங்க விளையாட்டா சொன்னீங்களா, சீரியஸா சொன்னீங்களான்னும் தெரியலை. ஆனா, நிச்சயமா நான் ஒரு நல்ல பிளேயரா வருவேன். என்னை ஒருநாள் டிவியில் நீங்கல்லாம் பார்க்கதான் போறீங்க...” என்று சொல்லிவிட்டு தன் சீட்டுக்குத் திரும்பினார்.அந்த மாணவியின் வாய்முகூர்த்தம் பலித்தது.
டிவியில் தோனியைப் பார்த்தபோதெல்லாம் தன் கணவரிடமும், குழந்தைகளிடமும், “நான் அப்பவே சொன்னேன்...” என்று நிச்சயமாகப் பெருமையடித்துக் கொண்டிருப்பார்!
(அடித்து ஆடுவோம்)
- யுவகிருஷ்ணா
ஓவியம்: அரஸ்
|