YouTube க்கு தாவும் கோலிவுட்!



பாலிவுட்டிலிருந்து, கோலிவுட் வரை பிரபலங்கள் பலருக்கும் இப்போது டுவிட்டர், ஃபேஸ்புக் மீதான மோகம் குறைந்து, யூ டியூப் மீது கவனம் செலுத்த ஆரம்பித்திருக்கிறார்கள்.
நடிகைகள் ஸ்ருதிஹாசன், ஹன்சிகா மோத்வானி உட்பட சிலர் தங்களின் ஒரிஜினல் பெயர்களிலேயே கலக்குகின்றனர். தனித்திறமைகள், புரொமோஷன், செல்ஃப் மார்க்கெட்டிங், லைவ் மீட்டிங்... என டெக் குயின்களாகவும் மின்னுகிறார்கள்.
இன்னொரு பக்கம் இசையமைப்பாளர் டி.இமான் தனது ஹிட் கலெக்‌ஷன் பாடல்கள், அது உருவான விதம், அதன் பின்னணி குறித்த சீக்ரெட்ஸை போட்டு உடைக்கிறார்.

தயாரிப்பாளரும் நடிகருமான சித்ரா லட்சுமணனின் ‘டூரிங் டாக்கீஸ்’ தளத்திற்கு வரவேற்பு குவிய, அடுத்தடுத்து ‘டூரிங் சினிமாஸ்’, ‘ஆன்மீக டாக்கீஸ்’ என வெரைட்டி காட்டுகிறார்.

சின்னத்திரை நட்சத்திரங்களுக்கும் இந்த மோகம் இருக்கிறது. யூ டியூப்களில் கணிசமான வருமானமும் குவிந்து வருவதால், பெரிய திரை, சின்னத்திரை வித்தியாசமில்லாமல் பலரும் தங்களுக்கென இதில் ஒரு தளம் தொடங்க ஆர்வம் காட்டுகின்றனர். அதுவும் சமீபத்திய லாக்டவுன் சீஸனில் களத்திலும் குதித்துவிட்டார்கள். யூ டியூப்பில் அசத்தும் சிலரிடம் பேசினோம்...

Shruti Haasan ஸ்ருதி

ஸ்ருதிஹாசனை ஒரு ஹீரோயினாக தெரிந்தவர்களுக்கு அவரது யூ டியூப் சேனல், பிரமிப்பூட்டும். ஆங்கிலத்தில் பாடல்கள் எழுதி ஒரு இசைக் கலைஞியாக தனது யூ டியூப்சேனலில் கெத்து காட்டுகிறார்.‘‘ரசிகர்களோட நேரடியா தொடர்பில் இருக்கணும்னு எப்பவும் நினைப்பேன். அதனாலதான் சோஷியல் மீடியாவுல ஆக்ட்டிவ்வா இருக்கறேன்.

இப்ப அடுத்த கட்டமா யூ டியூப்புக்கு வந்திருக்கேன். என் ஒரிஜினல் படைப்புகளை இதில் நீங்க எதிர்பார்க்கலாம். என் மியூசிக் ஆல்பம், கன்சர்ட் எல்லாமே இனி நீங்க பார்க்க முடியும். லாக்டவுனுக்கு முன்னாடி பிரிட்டன் முழுவதும் மியூசிக் டூர் அடிச்சேன். அடுத்த ஆல்பத்துக்கான ஒர்க் போயிட்டிருக்கு. இந்தப் பயணமும் சந்தோஷமா இருக்கு...’’ என்கிறார் ஸ்ருதி.

வேஸ்ட் பேப்பர் மனோபாலா

இயக்குநரரும், நடிகருமான மனோபாலா இப்போது தன் ‘வேஸ்ட் பேப்பர்’ யூ டியூப்பில் பிசியாகிவிட்டார். ‘‘லைஃப்ல நீங்க எதையுமே வேஸ்ட்னு சொல்லக் கூடாது. எல்லாமே பயன்தரக் கூடியதுதான். குப்பைல கூட கோமேதகம் கிடைக்கும். அதனாலதான் இப்படி ஒரு பெயர் வைச்சேன்.

ஒன்றரை வருஷங்களாவே யூ டியூப் சேனல் ஆரம்பிக்கணும்னு ஆசை. அதனால இந்தத் துறைல ஏற்கெனவே சாதிச்ச மதன் கௌரி, ராஜ்மோகன், புட்சட்னி, எருமசாணினு எல்லாத்தையும் கவனிச்சேன். ஒரு விஷயம் புரிஞ்சது. என்னோட ப்ளஸ் சினிமா. அதனால சினிமாவையே டாபிக்கா எடுத்துட்டேன்.

இதை நான் தொடங்கி ஒரு வருஷம் ஆகிடுச்சு. சித்ராலட்சுமணன் மூன்றரை வருஷங்களுக்கு முன்னாடியே ஆரம்பிச்சிட்டார். அவருக்கு இப்ப மூன்றரை லட்சம் சப்ஸ்கிரைபர்ஸ் இருக்காங்க. ஆனா, எனக்கு இப்பவே ரெண்டரை லட்சத்தைத் தொடுது. சினிமா என்கிற ஃபேஸ் வேல்யூ எங்களுக்கு இருக்கறதால, சப்ஸ்கிரைபர்கள் ஈஸியாகிடுது.

ஆரம்பத்துல ‘பிஹைண்ட் த சீன்ஸ்’ மாதிரி நிகழ்ச்சிகள் பண்ணினேன். இப்ப நேர்காணல்கள் பண்றேன். பிரபலங்கள் ஆரம்பிச்ச யூ டியூப் சேனல்ல முதன்முதலா மேடையில் ஏறி விருது வாங்கின பெருமை எனக்கு உண்டு. ‘பிளாக்‌ஷிப் டிஜிட்டல் அவார்டை’ எங்க இயக்குநர் பாரதிராஜா, கமல்ஹாசன்கிட்ட இருந்து வாங்கினேன்.

எனக்கு முன்னாடி இருக்கற சித்ரா லட்சுமணனுக்கு ஏன் இந்த விருது கொடுக்கலைனு எனக்குத் தெரியல. சக சினிமா இயக்குநர்கள்ல இருந்து நேத்திக்கு வந்த மகத் வரை பேட்டி எடுக்கறேன். இதுல வருமானம் வருது. நம்ம சேனலை நாலாயிரம் மணி நேரம் பார்த்திருந்து... ஒரு லட்சம் பேர் சப்ஸ்கிரைப் பண்ணியிருந்தா யூ டியூப்பில் இருந்து நமக்கு சில்வர் மெடல் கிடைக்கும். அந்த நாலாயிரம் மணிநேரம் தாண்டினபிறகுதான் மானிட்டர் செஷன் வரும். வருமானம் வரும். விளம்பரங்கள் தேடி வரும்.

சினிமா மட்டுமே பண்ணாமல், பன்முகமும் கொண்டு வரணும்னு திட்டமிட்டிருக்கேன். கிச்சன் சேனல் ஆரம்பிக்கப் போறேன். குக்கரி ஷோவுக்கு எப்பவுமே தனி ரீச் உண்டு. தவிர ஒரு வார இதழ்ல என்னென்ன கன்டென்ட் இருக்குமோ அந்த கன்டென்ட்களை யூ டியூப்பிலும் கொண்டு வர்ற ஐடியாவும் இருக்கு...’’ என்கிறார் மனோபாலா.

இட்ஸ் விஜி

‘சென்னை 28’ ஹீரோயினும் இயக்குநர் அகத்தியனின் மகளுமான விஜயலட்சுமி, ‘its VG’ என்ற பெயரில் ஆரம்பித்திருக்கிறார்.
‘‘ரொம்ப வருஷங்களா இப்படி ஒண்ணு ஆரம்பிக்கறது பத்தி தோணிக்கிட்டே இருந்துச்சு. கைல நிறைய கன்டென்ட்களுக்கான ஐடியாஸும், டைமும் இந்த லாக்டவுன்ல அமைய, சட்டுனு ஆரம்பிச்சிட்டேன்.

எனக்கு கார் ரொம்ப பிடிக்கும். அதனால, முதல் வீடியோவே என்னோட மினி கூப்பர் காரை வச்சு, ‘வீல்ஸ் வித் விஜி’னு பண்ணினேன். செம ரெஸ்பான்ஸ். அடுத்த வீடியோ வேற டாபிக். அடுத்தடுத்து என்ன வரும்னு யாரும் கணிக்க முடியாதபடி, புதுப்புது கான்செப்ட் யோசிச்சு வச்சிருக்கேன்.

இதுல என்னோட கணவர் பெரோஸின் பங்கு அதிகம். அதிக லைக்ஸை குவிச்ச கார் வீடியோ, அவரோட ஐடியாதான்.
அடுத்ததா, ஊரடங்கு காலத்துல வீட்டுக்குள்ள நடக்கற ஒரு த்ரில்லர் ஷார்ட் ஃபிலிம் பதிவிட்டோம். நானும் அவரும் சேர்ந்து நடிச்சிருந்தோம். நல்ல வரவேற்பு. இப்ப கணவரும் நிறைய சப்போர்ட் பண்றார். சந்தோஷமா இருக்கு...’’ வியப்பில் ஆழ்கிறார் விஜயலட்சுமி.

Singer பத்மலதா

‘தனி ஒருவனி’ல் ‘கண்ணால... கண்ணால...’; ‘உத்தம வில்லனி’ல் ‘காதலாம் கடவுள்...’; ‘ஒருநாள் கூத்து’வில் ‘அடியே அழகே...’ என பல ஹிட் பாடல்களைப் பாடியவர் பத்மலதா. டோலிவுட்டிலும் ஹிட் பாடல்கள் பாடியவர்; பாடுபவர். இப்போது ‘singer Padmalatha’வாக யூ டியூப்பிலும் அசத்துகிறார். ‘‘ஆடியன்ஸுக்கும் நமக்கும் ஒரு நேரடித் தொடர்பு இந்தத் தளத்துல இருக்கு. வீடியோவோட ப்ளஸ், மைனஸ்களை கமெண்ட்ல சொல்லிடறாங்க. அவங்களோட எதிர்பார்ப்பு என்ன என்பதையும் தெரிஞ்சுக்க முடியுது. என்னோட ஒர்க் பார்த்துட்டு இதன் மூலமாகவும் நிறைய வாய்ப்புகள் வருது.

இப்படி ஒரு பாடகியா இதுல எனக்கு நிறைய ப்ளஸ்கள் இருக்கு. நான் இந்துஸ்தானி சிங்கர்னாலும் இப்ப வெஸ்டர்ன் கிளாசிக்கல்ல ஆபரா இசையும் படிச்சிருக்கேன். சினிமா பாடல்கள்ல ஜாஸ், ப்ளூஸ்னு நிறைய வருது. ஒரு பாடல்ல ராகம் எப்படி பயன்படுத்தப்பட்டிருக்குனு அந்த பாடலோட நாம விளக்கி சொல்லும்போது, அதுக்கு கிடைக்கும் வரவேற்பு தனியா இருக்கு.

சினிமா பாடல்ல அது எப்படி கையாளப்பட்டிருக்குனு சொல்லும்போது எல்லாருமே ஆச்சரியமா கேட்டு ரசிக்கறாங்க. சில நேரம், ‘மேம் இதுல அப்படி வந்திருக்கே.. அது சரிதானா?’ என டவுட்ஸும் கேட்கறாங்க. ஃப்ரெஷ் கன்டென்ட்களுக்கு வரவேற்பும் அதிகம். டிரெண்டிங்லயும் வரும். இதுல ஓட்டிங் முறையும் உண்டு. யூ டியூப்பிலேயே லைவ், ப்ரீமியம் எல்லாம் உண்டு.

சமீபத்திய ஹிட்டான ‘கோப்ரா’ படத்தில் வரும் ‘தும்பித் துள்ளல்...’ பாடலைக் கூட இசை விமர்சனம் பண்ணினேன். சொந்தமா சிங்கிள் பாடினாலும் நிறையப் பேர் என்கரேஜ் பண்றாங்க. இப்ப ஒரு விஷயம் வைரல் ஆனாலே நமக்கு சினிமாவில் வாய்ப்புகள் தேடி வரும். என்னோட சிங்கிள்ஸ் கேட்டுட்டு நிறைய ஆஃபர்ஸ் வருது. எம்.எஸ்.வி. சாரின் ‘முத்துக்களோ கண்கள்...’ வீடியோவை பார்த்துட்டு எஸ்.பி.பி. சாரே கமெண்ட் பண்ணியிருந்தார்.

சில வருஷங்களுக்கு முன்னாடி பொதிகையில் ஏ.ஆர்.ரஹ்மான் சாரின் ‘மேக்கிங் ஆஃப் ரங்கீலா ஹை ராமா’னு ஒரு விஷயம் விளக்கியிருப்பேன்.
அதை இப்ப போஸ்ட் பண்ணினேன். அது செம வைரலாகிடுச்சு. ‘உங்க வீடியோ பார்த்துட்டுதான் அந்தப் பாடலை இப்ப மறுபடியும் கேட்டுப் பார்க்கறேன்’னு கமெண்ட்களும் குவிஞ்சிடுச்சு. இந்த ட்ராவலும் சந்தோஷமா இருக்கு...’’ என்கிறார் பாடகி பத்மலதா.

ஒரு கப் டீ ஏகாதசி

மழையும் மண் வாசனையும் வீசும் ‘ஒத்த சொல்லால...’; ‘கம்பத்து பொண்ணு...’; ‘கத்தரிப் பூவழகி...’ சமீபத்திய ஹிட் ‘சூரரைப் போற்று’வில் வரும் ‘மண்ணுருண்ட மேல...’ என பல ஹிட் பாடல்களை எழுதிய ஏகாதசி, ‘ஒரு கப் டீ’ என்ற பெயரில் சிங்கிள் மேன் ஆர்மியாக
யூ டியூப்பிலும் கலக்குகிறார்.

‘‘சினிமால சாத்தியப்படாத விஷயங்களை இதுல சாத்தியப்படுத்துறேன். இப்ப மூணு லட்சம் சப்ஸ்கிரைபர்ஸை நெருங்கறேன். இது ஒன்மேன் ஷோ. நானும் என் மொபைலும்தான் ஆபீஸ்னு சொல்லலாம்.

கஜா புயல், அப்பா, அம்மாவைப் பத்தி, ஒரு கல்யாணமாகாத கன்னிப்பெண், தண்ணீர் பிரச்னைனு எழுதறேன். பாடல் எழுதின பிறகு நண்பர்கள் சர்க்கிள்ல உள்ள இசையமைப்பாளர்கள், எடிட்டிங்னு பக்காவா ரெடி செய்து யூ டியூப்ல பதிவிடறேன். தவிர எனக்கு பிடிச்ச புத்தகங்களை வாங்கி, அதையும் விமர்சிக்கறேன்...’’ என்கிறார் ஏகாதசி.

ஊரு நாயம் கவிதாபாரதி

இயக்குநரும், நடிகருமான கவிதா பாரதியின் தளத்தின் பெயர், ‘ஊரு நாயம்’. ‘‘‘கண்களால் கைது செய்’ ரைட்டர் பிரேம், என் நண்பர். கடந்த ரெண்டு வருஷங்களா ‘நீங்க ஒரு யூ டியூப் சேனல் ஆரம்பிங்க’னு சொல்லிட்டே இருந்தார். நான் இப்படி ஒரு விஷயம் பண்றதுக்கு முன்னாடி, எல்லா யூ டியூப்களையும் கவனிச்சேன். எல்லாமே சோஷியல் மீடியாவில் இயங்குறவங்களுக்கான தளங்களாகத்தான் இருந்தது. ஒரு கிராமத்து மனுஷனுடைய பார்வையிலோ, இல்ல அவங்கள நோக்கியோ எந்த தளமும் இல்ல.

வட்டார வழக்குக்குனு ஒரு சிறப்பு உண்டு. அதாவது ஒவ்வொரு அம்மாவுக்கும் ஒவ்வொரு கைப்பக்குவம் உண்டு. இன்ஸ்டன்ட் மசாலா பாக்கெட் வந்த பிறகு எல்லா சமையலும் ஒரே மாதிரி ஆகிப்போனது மாதிரி இப்ப எல்லா மொழிகளும் ஒரே தட்டையா
ஆகிடுச்சு.

அந்தந்த வட்டார வழக்கு மொழியை அவங்கவங்க மீட்டு எடுத்தா நல்லா இருக்கும்னு தோணுச்சு. விளைவு-கொங்கு வட்டார மொழியில ‘ஊரு நாயம்’ பொறந்திடுச்சு. சுப.வீ., கரு.பழனியப்பன், அறிவுமதினு பலரும் பாராட்டினாங்க. யூ டியூப்பில் புகழ்பெற்ற வீரமணி என்கிறவர், இதோட டெக்னிக்கல் விஷயங்களை எப்படி டீல் பண்றதுனு சில டிப்ஸ்களை சொன்னார்.

தோணுற விஷயங்களை பண்ணிட்டிருக்கேன். இதோட உள்ளடக்கத்தை வலுவாக்கறது பத்தி இன்னும் திட்டமிட வேண்டியிருக்கு. என்னோட தளத்துல சாதாரண விஷயத்தை சொன்னாலும் சரி, அதுல ஒரு பொலிடிகல் சட்டயர் இருக்கணும்னு விரும்புறேன்...’’ என்கிறார் கவிதாபாரதி.

Thirsty crow அம்பானி சங்கர்

வடிவேலுவின் காமெடி டீமில் கலகலக்க வைத்தவர் நடிகர் ‘அம்பானி’ சங்கர். தனது ‘Thirsty crow’ தளத்தில் ஒரு லட்சம் சப்ஸ்கிரைபர்களைத்
தாண்டிவிட்டார். இதுவரை 64 காமெடி கான்செப்ட்களை பதிவிட்டுள்ளார்.‘‘2018ல ‘அன்னம்’, ‘தரு’, ‘ஆணவன்’, ‘அருணகிரி’னு நாலு ஷார்ட் ஃபிலிம்களை இயக்கி நடிச்சேன். இதுல ‘அன்னம்’ நைஜீரியாவில் நடந்த ஒரு ஃபெஸ்டிவல்ல பரிசும் வாங்கியிருக்கு.

‘அம்பாசமுத்திரம் அம்பானி’யில் நடிக்கறதுக்கு முன்னாடி வடிவேலு அண்ணன் டீம்ல சின்னச் சின்ன ரோல்கள்ல நடிச்சதால என் முகம் எல்லாருக்கும் தெரியும். ‘அம்பானி’யில் பெரிய ரோல் பண்ணினதால தொடர்ந்து பெரிய ரோல்கள் வரும்னு நினைச்சேன். ஆனா, எதிர்பார்த்த வாய்ப்புகள் வரல. ஒரு கட்டத்துக்கு மேல தாடி, மீசை வளர்ந்ததால என்னோட முகத்தோற்றமும் மாறிடுச்சு. ஃபீல்டிலும் காம்பிடிஷன் அதிகரிச்சிடுச்சு. அதனால என்னை மாத்திக்க வேண்டிய கட்டாயம் வந்திடுச்சு.

ஏற்கெனவே பாக்யராஜ் சார்கிட்ட ஸ்கிரிப்ட்ஸ் டைப் பண்ற ஒர்க்ல இருந்திருக்கேன். பல இயக்குநர்களுக்கும் ஸ்கிரிப்ட் டைப் பண்ணிக் கொடுத்திருக்கேன். தம்பி ராமையா சார் ‘மணியார் குடும்பம்’ இயக்கும்போது. அவர்கிட்ட நடிக்க சான்ஸ் கேட்டேன். அவருக்கு என்னைத் தெரியும். ‘நீதான் டயலாக் டைப் பண்ணுவியே.. இதுல அசிஸ்டென்ட் டைரக்டரா ஒர்க் பண்ணு’னு சொல்லிட்டார்.

அவர்கிட்ட ஒர்க் பண்ணிட்டு வந்த பிறகுதான், யூ டியூப் சேனல் ஐடியா தோணுச்சு. புரொட்யூசர்கள்கிட்ட அணுகறதுக்கு ஒரு விசிட்டிங் கார்டாக இருக்கும்னு ஆரம்பிச்சேன். நல்ல டீமும் அமைஞ்சது. இந்த லாக்டவுன்ல அவங்கவங்க சொந்த ஊருக்கு கிளம்பிப் போனதால, இப்ப டப்பிங்ல இருந்து கேமரா வரை எல்லாமே நானே பாத்துக்கறேன்.

ஒவ்வொரு வீடியோ வெளியானதும் வெங்கட் பிரபு சார், பிரேம்ஜி சார், மனோபாலா சார், சாம்ஸ் அண்ணன்னு பலரும் அப்டேட் கொடுப்பாங்க.
ஒரு வீடியோ உருவாக நாலு நாட்களாவது ஆகிடும். ஒருநாள் கன்டென்ட் எழுதுறது, ஒருநாள் ஷூட், ஒரு நாள் எடிட்டிங், மீதி வேலைகள், ஒரு நாள் டப்பிங்னு நாலு நாள்ல கொண்டு வந்திடலாம்.

என்னோட தளத்துல சினிமா நியூஸ் எல்லாம் பதிவிட்டதில்ல. எல்லாமே கன்டென்ட் காமெடிகள்தான். அடுத்து மினி வெப்சீரீஸ் இயக்குற ஐடியா இருக்கு...’’ ஆனந்தமாகிறார் ‘அம்பானி’ சங்கர்.

தொகுப்பு: மை.பாரதிராஜா