ஃப்ரெண்ட்ஸ்!
அப்போது தோனி, மேற்கிந்தியத் தீவுகளில் உலகக்கோப்பைப் போட்டிகளில் விளையாடிக் கொண்டிருந்தார். இங்கே குர்கான் நகரில் ஒரு மருத்துவ
மனையில் தோனியின் மனைவி சாக்ஷிக்கு மகள் பிறந்திருந்தாள்.திருமணமாகி ஐந்து ஆண்டுகள் தவமாய்த் தவமிருந்து பிறந்த மகள். சாக்ஷி, தன் கணவருக்குக் கூட விஷயத்தைச் சொல்லவில்லை.“அண்ணா, அவருக்கு மகள் பிறந்திருக்கிறாள்...” என்று முதன்முதலாக எஸ்எம்எஸ் மூலம் அவர் தகவல் சொன்னது சுரேஷ் ரெய்னாவுக்குத்தான்!
‘தல’ தோனியும் ‘சின்ன தல’ சுரேஷ் ரெய்னாவும் அப்படிப்பட்ட நண்பர்கள்.‘தளபதி’ படத்தின் ரஜினி - மம்மூட்டி மாதிரி.கடந்த நண்பர்கள் தின விழாவின்போது தோனி தனக்கு யாரென்று மனம் திறந்து டுவிட்டர் சமூகவலைத்தளத்தில் சொன்னார் ரெய்னா. “தோனி எனக்கு வெறும் நண்பனல்ல. கடினமான சந்தர்ப்பங்களில் என்னை வழிநடத்தும் சக்தி...” என்று கிட்டத்தட்ட கற்பூரம் ஏற்றி ஆரத்தியே எடுத்தார்.
அந்த நண்பர்கள் தினம் முடிந்து சரியாக பதிமூன்றாவது நாள், ஆகஸ்ட் 15 அன்று சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து, தான் ஓய்வு பெறுவதாக அறிவித்தார் தோனி.அடுத்த சில நிமிடங்களிலேயே சற்றும் யோசிக்காமல், “உன்னோடு இணைந்து விளையாடிய மகிழ்ச்சியே போதும் தோனி. நானும் உன் பாதையிலேயே நடக்கிறேன்...” என்று கூறி தன்னுடைய கிரிக்கெட் ஓய்வையும் அறிவித்து விட்டார் ரெய்னா.நட்பு என்றால் அப்படிப்பட்ட நட்பு.
பொதுவாக ஓர் இந்திய கிரிக்கெட் வீரர், ஓய்வை அறிவிக்கும்போது முதலில் கிரிக்கெட் கண்ட்ரோல் போர்டுக்கு கடிதம் மூலம் தன் முடிவைத் தெரிவிக்க வேண்டும். அதன் பின்னரே அறிவிக்க வேண்டும் என்பது மரபு.தோனிக்காக இந்த மரபையே உடைத்து விட்டார் ரெய்னா.ஓய்வை அறிவித்து விட்டு மறுநாள்தான் கண்ட்ரோல் போர்டுக்கு கடிதம் அனுப்பினார்.
தோனி, 2014ல் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் முடிவைக் கூட முதலில் ரெய்னாவிடம்தான் ஆலோசித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அப்போது தன்னுடைய ஜெர்சியைக் கழற்றி அதில் கையொப்பமிட்டு ரெய்னாவுக்குத்தான் தந்தார்.இருவரையும் இந்தளவுக்கு இணைத்த புள்ளி எது? இருவருமே சிறுநகரங்களில் இருந்து கிரிக்கெட் ஆட வந்தவர்கள்.
தோனி ஜார்க்கண்டின் ராஞ்சி நகரிலிருந்தும், ரெய்னா உத்தரப் பிரதேசத்தின் முராத் நகரிலிருந்தும் கிளம்பி வந்து சர்வதேச கிரிக்கெட்டில் சாதித்தவர்கள்.வளரும் நிலையில் இருந்தபோது பெருநகரங்களில் இருந்து வந்த வீரர்களின் கேலி, கிண்டல், ஒடுக்குமுறைகளை ஒரே மாதிரியாக எதிர்கொண்டவர்கள்.ஆரம்பத்தில் ஆங்கிலம் பேசுவது இருவருக்குமே பெரிய பிரச்னையாக இருந்தது.இதுவே போட்டிகளின் போது இருவரும் ஒரே அறையைப் பகிர்ந்துகொள்ளக் காரணமானது.
“கிரிக்கெட் டூருக்காக வெளியூர்களுக்குப் போகும்போது தூக்கம் வராமல் மிகவும் சிரமப்படுவேன். சரியான அறை நண்பராக தோனி அமைந்த பின்னரே நான் நிம்மதியாகத் தூங்க ஆரம்பித்தேன்...” என்று ஒருமுறை மனம் திறந்தார் ரெய்னா.2005ம் ஆண்டு இலங்கை அணி, இந்திய சுற்றுப் பயணத்துக்கு வந்தபோதுதான் தோனி - ரெய்னாவின் மிடில் ஆர்டர் பார்ட்னர்ஷிப் என்பது, இந்திய அணியின் தொடர் வெற்றிகளுக்கு அத்தியாவசியமான வரலாற்றின் தொடக்கம்.
மிடில் ஆர்டரில் இவர்களது கூட்டணி அமைத்திருக்கும் சாதனைகள், இன்னும் பல ஆண்டு களுக்கு எந்தவொரு பார்ட்னர்ஷிப்பாலும் நினைத்துக்கூடப் பார்க்க முடியாத அளவுக்கு வலிமையானது.இருவரும் இணைந்தாலே எத்தகைய இலக்கையும் எட்டி விடுவார்கள் என்று எதிரணிகள் அஞ்சி நடுங்கின. கிட்டத்தட்ட பதிமூன்று ஆண்டுகள் இருவரும் இணைந்து விளையாடினார்கள்.
எத்தனையோ வெற்றிக் கொண்டாட்டங்கள், தோல்விகளின் போதும் ஒருவருக்கு ஒருவர் ஆறுதலாக இருந்த சந்தர்ப்பங்கள். எனவேதானோ என்னவோ, ஐபிஎல் தொடங்கியபோதும் தன்னுடைய நம்பிக்கைக்குரிய பார்ட்னரை தன் அணியிலேயே சேர்த்துக் கொண்டார் தோனி.
ஐபிஎல்லின்போதுதான் தோனியை ‘தல’ என்று தமிழக ரசிகர்கள் கொண்டாட ஆரம்பித்தார்கள். தோனி ‘தல’ ஆகிவிட்டதால், ஆட்டோமேட்டிக்காக ரெய்னாவும் ‘சின்ன தல’ ஆகிவிட்டார்.இப்போது கிரிக்கெட் ஓய்விலும் தன்னுடைய நட்புக்கு மரியாதை செய்திருக்கிறார் ‘சின்ன தல’.
இதுநாள்வரை கிரிக்கெட் உலகில் இத்தகைய நட்பு பாராட்டுதலுக்கு முன்னுதாரணமே இல்லை.தோனி - ரெய்னாவின் இந்த நட்பு அடுத்த தலைமுறைக்கும் தொடர்கிறது.
ரெய்னாவின் மகள் கிரேசியாவும், தோனியின் மகள் ஸிவா-வும் நெருங்கிய தோழிகளாகி இருக்கிறார்கள்!தான் ஓய்வு பெறுவதாக தோனி அறிவித்த சில நிமிடங்களிலேயே, தானும் ஓய்வு பெறுவதாக சொன்னார் ரெய்னா. காரணம் நட்புதான்! இதுநாள் வரை கிரிக்கெட் உலகில் இத்தகைய நட்பு பாராட்டுதலுக்கு முன்னுதாரணமே இல்லை!
யுவகிருஷ்ணா
|