வீட்டு சாப்பாடு மாதிரியான ஃபீலிங்குல ஒரு திரில்லர்!
‘‘ஒரு பெண்ணின் வாழ்க்கையும் ஒரு சைக்கலாஜிக்கல் திரில்லரும் சேர்ந்து வந்து தமிழில் எவ்வளவு நாளாச்சு யோசிச்சுப் பாருங்க. உங்கள் ஞாபகத்துக்குள் அது அடங்காது. பொதுவாக ரோம்காம் திரில்லர்னா பயமுறுத்தும்... பதறிப் பதறி நடுங்க வைக்கும். அப்படியில்லாமல் கதை அழுத்தமா இருக்கிற திரில்லர் இது.
முதல் பாதி முழுக்க ஒரு பெண்ணின் அவஸ்தைகள், அவருக்கு வீட்டிலும், வெளியிலும், அலுவலகத்திலும் இருக்கிற நெருக்கடிகள், அடுக்கடுக்கா வந்து விழும் முடிச்சுகள், பாய் ஃப்ரெண்டும், தாய் மாமனும், ஆபீஸ் மேனேஜரும் பல்வேறு சூழலில் இறக்கும் விதம், அவை அவிழ்கிற விதம்னு படம் போகும்.
இதில் பெண்ணின் உளவியலும் சேர்ந்து வருது. தமிழ் சினிமாவுக்கு நிச்சயம் புதுசு. லைஃப் லைன் ரொம்ப சிறுசுங்க. ரொம்பவும் சிம்பிள். ‘கடவுளை நம்பு, ஆனா, உன் காரையும் பூட்டு’னு சொல்வாங்க. அது மாதிரி, என்னதான் நம்ம திறமையில் நம்பிக்கை வெச்சாலும் திரைக்கதையில் அவ்வளவு கவனம் வைக்கணும்.
‘ஜாஸ்மின்’னு தலைப்பு கிடைச்சதே சந்தோஷமா இருந்தது. எனக்கு சினிமா ஒரு தீராத கனவு. டைரக்டர் ஆனதை ஒரு மாற்றமாக நினைக்கிறேன். தானாக கனிகிற விஷயம் இது. நல்ல அவகாசம் எடுத்துக்கிட்டு என்னையும் புதுப்பிச்சுக்கிட்டு செய்திருக்கிற படம் இது...’’ தெளிவாகப் பேசுகிறார் இயக்குநர் ஜெகன் சாய்.
பயப்பட வைக்கிறது சாதாரண வேலையில்லையே? ரோம்காம் திரில்லர் என்பதால் இதில் பயங்கர காட்சிகள் எதுவும் இருக்காது. இப்ப பேய் வரப்போகுதுன்னு நினைக்கிறபோது பேய் வராது. எப்பவும் இது மாதிரி படங்களில் சில காட்சிகள் வரும். திடீர்னு புறாக்கள் றெக்கைகளை அடிச்சுப் பறக்கும். திடீர்னு ஒரு பெண் எழுந்து வெறித்துப் பார்த்துக்கொண்டு நிற்பார். கழுத்தில் ஒரு கை விழும்.
பதறியடித்துப் போய் நாம் பார்த்தால் அவள் கணவர் ‘ஏன் தூக்கம் வரலையா’னு கேட்டு அரவணைப்பார். அப்படியெல்லாம் உங்களை பயமுறுத்தமாட்டோம். வெறும் திரில்லராக இல்லாமல் இதில் பெண்ணின் நுணுக்கமான மன உணர்வுகள் உட்பட பல உணர்வு களைக் கொண்டுவந்து காட்ட முடிந்தது.
இதில் ஜாஸ்மின் கேரக்டரின் எமோஷனும் முக்கியமான அம்சம். இதில் ஹீரோவுக்கு பெரிய இடம் இல்லை. இந்தக் கதைக்குள் நீங்கள் வந்தால் இதுவரை இல்லாத புது உணர்வைப் பெறலாம். உண்மையில் திரில்லரில் உட்கார வைப்பது கஷ்டம். அதை நன்றாக உணர்ந்திருக்கிறேன். பாலிவுட்டிலும் படம் பார்க்கணும்னு கேட்டு இருக்காங்க.
இந்தப் பொண்ணு ரூபா நாயர் அழகா இருக்காங்க... கண்ணு வைக்கிறீங்களே! சரி சரி, உங்களை மாதிரியானவர்கள் கண்ணு வைத்தால்தான் நல்லது. இந்தப் பொண்ணு ரூபா பெங்களூரு மாடல். மொத்தப் படத்தையும் தோளின் மீது சாய்த்து வைத்துக்கொள்வதற்கான அத்தனை பயிற்சிகளையும் கொடுத்து வெச்சோம். கடைசியில் அவரது யதார்த்தமான நடிப்பு நம் மனசில் நிற்கிற மாதிரி வந்துவிட்டது.
கதையின் ஃபிரெஷ்நெஸ்ஸை ரூபா அதிகரிச்சாங்க. கதைக்கு நடிப்பை எத்தனை தடவை வேண்டுமானாலும் அவங்ககிட்டே கேட்டு வாங்கலாம். ஒளிப்பதிவுக்கு அருமையா மெனக்கெட்டு இருக்கீங்க...
பகத்குமாரை இதில் கேமராமேனாக அறிமுகம் செய்கிறேன். நான் படப்பிடிப்புக்கு வரும்போது இந்தக் காட்சியை இவ்விதம்தான் படமாக்கணும்னு மனசுக்குள்ள கணக்கு போட்டிருப்பேன். அதற்கு பகத்குமார் கூடுதல் சுவாரஸ்யம், அழகு, முக்கியத்துவம் வரும்படி ஏதோ ஒரு மேஜிக் செய்திருப்பார். அப்படிப் பார்த்தாலும் மிகச் சிறப்பாகப் பணி செய்திருக்கிறார் பகத். பாடல்கள் அருமையா வந்திருக்கு... திகில் படத்துக்கு பின்னணி இசை அமைப்பது கடினமான பணி. அமானுஷ்ய பின்னணிக்கான அத்தனை விஷயங்களையும் இசையமைப்பாளர் சி.சத்யா பண்ணியிருக்கார். இதில் பின்னணிக்கு கடுமையான இடங்களும் வேலைகளும் இருக்கு.
மொத்தம் ஐந்து பாடல்கள். அதிலும் சித் ராம் பாடின ‘லேசா வலிச்சதா இமையோரம்...’ 2.5 மில்லியன் ஹிட்ஸ் தாண்டி இணையதளத்தில் போய்க்கிட்டிருக்கு. இன்னைக்கு இளைஞர்கள் மத்தியில் அதுதான் காதல் மந்திரமா மாறியிருக்கு.
படத்தின் டிரெய்லரும் பரபரப்பா போய்க்கிட்டு இருக்கிறது சந்தோசம். பெண்ணின் வாழ்க்கையின் மொத்த விஷயத்தையும் இழைச்சு இழைச்சு மெருகேத்தியிருக்கோம். பார்த்துப் பார்த்துப் பழகிய ஜானரில் படம் பண்ணக் கூடாதுன்னு நினைச்சேன். படம் ஃப்ரெஷ்ஷா இருக்குன்னு பார்த்தவங்க ரியாக்ஷன்ல தெரியுது.
நறுக்குன்னு எடிட் பண்ணிக் கொடுத்தது தமிழ்க்குமரன். படத்தில் குத்து டான்ஸ், ரத்தம் தெறிக்கிற ஃபைட்னு எதுவும் இல்லை. எதையும் அவசியமில்லாமல் திணிக்கிறது என் வேலை கிடையாது. எங்கயோ ஹோட்டல்ல போய் சாப்பிட்டு வந்தாலும் வீட்டில் சாப்பிட்டாதான் நல்லா பசியாறும். வீட்டு சாப்பாடு மாதிரி நம்ம படம்.
நா.கதிர்வேலன்
|