இந்தி பேசத் தெரியாத மாணவர்களுக்கு ஆப்பு வைக்கிறது பாஜக!
ஒரே நாடு... ஒரே பணியாளர் தேர்வு முகமை..
மத்திய அரசு காலிப் பணியிடங்களுக்கு ஒரேமாதிரியான கல்வித் தகுதிகள் இருந்தாலும், வெவ்வேறு தேர்வாணையங்கள் மூலம் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. அவை அனைத்தையும் பொதுத்தகுதித் தேர்வு என்ற ஒற்றைத் தேர்வு மூலம் தவிர்க்கலாம் என கடந்த பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்திருந்தார்.
அதன்படி, மத்திய அரசுப் பணியிடங்களை நிரப்ப நாடு முழுவதும் ஒரே தகுதித் தேர்வை (சிஇடி) நடத்துவதற்காக, ‘தேசிய அரசுப் பணியாளர் தேர்வு முகமை’ (என்ஆர்ஏ) அமைக்கும் திட்டத்திற்கு மத்திய அரசு இப்போது ஒப்புதல் அளித்துள்ளது.
இதில், தேசிய அரசுப் பணியாளர் தேர்வு முகமை நடத்தும் தேசிய பொதுத் தகுதித் தேர்வை எழுதி ஒருவர் தேர்ச்சி பெற்றால், அடுத்த 3 ஆண்டுகளுக்கு அவர் மத்திய அரசு மற்றும் பொதுத்துறை வங்கிகளின் பணிகளுக்கு நேரடியாக விண்ணப்பித்து வேலைவாய்ப்பில் பங்கேற்கலாம்.
தேசிய அரசுப் பணியாளர் தேர்வு முகமையில் ரயில்வே, நிதித்துறை, அரசுப் பணியாளர் தேர்வாணையம் (SSC), ரயில்வே பணியாளர் வாரியம் (RRB), இன்ஸ்டிடியூட் ஆஃப் பேங்கிங் பெர்சனல் செலக்ஷன் (IBPS) ஆகிய துறை சார்ந்த அதிகாரிகள் பிரதிநிதிகளாக இருப்பார்கள்.
இந்த அமைப்புகள் தங்களுக்கு வேண்டிய ஊழியர்களை, தேசிய அரசுப் பணியாளர் தேர்வு முகமையில் இருந்து எடுக்கும். மத்திய அரசு பணியிடங்கள் மட்டுமின்றி எதிர்காலத்தில் மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுப் பணிகள், பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் தனியார் துறை வேலைவாய்ப்பிலும் பொதுத் தகுதித் தேர்வு மதிப்பெண்கள் கணக்கில் கொள்ளப்படும் என்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் மூன்று முறை அக்கட்சி சார்பில் சட்ட மன்ற உறுப்பினராக இருந்தவருமான பீட்டர் அல்போன்ஸ் “இந்த ‘ஒரே நாடு, ஒரே பணியாளர் தேர்வு முகமை’யால் இந்தி பேசத் தெரியாத மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள்...” என வேதனை தெரிவிக்கிறார்.
“கொரோனா நோய்த் தொற்றை சாதகமாக வைத்துக் கொண்டு, பொதுமக்களும், மக்கள் பிரதிநிதிகளும் எந்தவிதமான பயனுள்ள வாதங்களிலும், ஆலோசனைகளிலும் ஈடுபட முடியாத சூழ்நிலையை தங்களுக்குச் சாதகமாக வைத்துக் கொண்டு, இந்தியாவின் எதிர்காலத்தை பாதிக்கக் கூடிய பல முக்கியமான கொள்கை முடிவுகளை மத்தியில் ஆளும் பாஜக அரசு தொடர்ந்து எடுத்து வருகிறது.
தொழிற்சங்க உரிமைகளைப் பறிப்பது, சுற்றுப்புறச் சூழலுக்காக உருவாக்கப்பட்ட பல்வேறுவிதமான விதிகளைத் தளர்த்துவது, கல்வியைத் தனியார்மயம் ஆக்குவதற்கான புதிய கல்விக் கொள்கை… என்று மாநில அரசு களைக் கலந்தாலோசிக்காமல் நிறைவேற்றத் துடிக்கிறது.
அந்த வரிசையில் குற்றவியல் சட்டங்கள் முழுவதையும் மறுபரிசீலனை செய்வதற்காக ஒரு குழுவையும் அமைத்திருக்கிறார்கள். அந்தக் குழு நாட்டில் குற்ற வழக்குகளும், குற்றச் சட்ட முறைகளும் எப்படி இருக்க வேண்டும் என்பதை பரிந்துரை செய்யப் போகிறது.
அதில் மாநிலங்களுக்குப் பிரதிநிதித்துவம் இருக்கிறதா? மாநிலங்களை கலந்து ஆலோசித்திருக்கிறார்களா? நாட்டில் நடக்கக் கூடிய பல குற்றங்கள் பெண்களுக்கு எதிராகவும், தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, சிறுபான்மை மக்களுக்கு எதிரானதாகவும் இருக்கிறது. இவர்களுடைய பிரதிநிதிகள் அந்தக் குழுவில் இருக்கிறார்களா என்று தேடிப் பார்த்தால், இல்லை.
இதனை அடுத்துதான் ‘தேசிய அரசுப் பணியாளர் தேர்வு முகமை’ அறிவிப்பு வந்திருக்கிறது. இதைப்போன்ற ஒரு முடிவை பாராளுமன்றத்தில் விவாதித்து, எல்லா தரப்பு உறுப்பினர்களின் கருத்துக்களைக் கேட்டு நிறைவேற்றினால் ஆட்சேபணையில்லை. இரு மொழியில் தேர்வு நடத்தப் போவதாகச் சொல்கிறார்கள். வருங்காலங்களில் 12 மொழிகளில் நடத்த வாய்ப்பிருப்பதாக செய்திகள் வந்துள்ளன. இந்த மாதிரி ஒரு சூழல் இந்தி பேசாத மாணவர்களுக்கு பெரும் இழப்பாக அமையும்.
தேர்வுகள், வேலைவாய்ப்புகள், பாடத்திட்டங்கள் என எல்லாவற்றையும் ஒரே புள்ளியில் கொண்டு போய் வைப்பது கூட்டாட்சி தத்துவத்திற்கு விரோதமான செயல். மாநிலங்களின் ஒன்றியம்தான் இந்தியா. அதை ஒற்றை புள்ளிக்குக் கொண்டு போகத்தான் இத்தனை அவசரப்படுத்துகிறார்கள். பாஜக ஒரு ஃபார்முலா வைத்துள்ளது. அவர்களுக்கு வேண்டியது 51% வாக்குகள்தான். அந்த 51% வாக்குகளை உருவாக்குவதற்கு என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ அதைத் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறார்கள். மீதியிருக்கும் 49% பற்றிக் கவலைப்படுவதோ, கரிசனப்படுவதோ, பொருட்படுத்துவதோ கிடையாது.
தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தெலங்கானா, மேற்கு வங்காளம் போன்ற மாநிலங்களில் அவர்களுக்கான நாடாளுமன்ற உறுப்பினர்கள் குறைவு. ஆனால், மற்ற மாநிலங்களில் போதுமான உறுப்பினர்கள் உள்ளனர். அவர்களுக்கு அதுமட்டும் போதும். அதனைத் தொடர்ந்து தக்கவைத்துக் கொள்வதற்கான முயற்சிகள்தான் இந்த நடவடிக்கைகள் எல்லாம்.
பெரிய ஆபத்தான கட்டத்திற்குள் இந்தியா போகிறது. இதைப்பற்றி எல்லோருமே கவனத்தில் எடுத்துக்கொண்டு இதற்கான முன்னெடுப்புகளை எடுக்கவில்லை என்றால் வரக்கூடிய காலங்களில் இந்த மாநிலங்களைச் சேர்ந்த இளைஞர்கள் பெரும் பாதிப்புக்குள்ளாவார்கள். இந்தத் தேர்வின் நடைமுறைகள் என்ன? எதன் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப் போகிறார்கள்? எல்லா தரப்பையும் உள்ளடக்கிய அமைப்பாக இருக்குமா? அதைத் தேர்வு செய்கிறவர்கள் யார்... என்பதெல்லாம் விடை தெரியாத வினாக்களாக இருக்கின்றன.
ஏற்கனவே தில்லியிலுள்ள கேபினட் மந்திரிகளிடம் துறைச் செயலாளர்கள் ‘ஆங்கிலத்தில் பேச மாட்டோம்; இந்தியில்தான் பேசுவோம்’ என்கிறார்களாம். சமீபத்தில் கூட திமுக எம்பி ஆன கனிமொழி, ஏர்போர்ட்டில் இப்படியொரு நிகழ்வை எதிர்கொண்டிருக்கிறார். இதையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது தேர்வுத் தாள் திருத்துபவர்கள் மனநிலை எப்படி இருக்கும் என்பதை அனுமானிக்க முடிகிறது. இந்தியில் எழுதும் மாணவர்களுக்கு ஆதரவாகவும், இந்தியில் எழுதாதவர்களைப் புறக்கணிக்கவும் கூட வாய்ப்பிருக்கிறதல்லவா? இது இந்தி பேசாத மாணவர்களுக்குச் சவால்தான்.
ஏற்கனவே இட ஒதுக்கீட்டில் முன்னேறிய வகுப்பினருக்கான கட் ஆஃப் மார்க்கை, மலைவாழ், பட்டியலின, பிற்படுத்தப்பட்ட மாணவர்களைவிடக் குறைவாக வைத்துள்ளனர். இப்போது இந்த தேர்வு முறையும் சேர்ந்து விளிம்பு நிலை மக்களுக்கும், சிறுபான்மையினருக்கும் பேரிழப்பாக அமையும். டிமானிடேஷன் நேரத்தில் பணக்காரர்களிடமிருக்கும் பணம் எல்லாம் வெளியே வந்து, கருப்புப் பணமே இல்லா நாடாகும்... தீவிரவாதம் எல்லாம் ஒழிந்து போகும்… என்றெல்லாம் சொன்னார்கள். ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை.
இவர்கள் என்றைக்குமே சொல்வது ஒன்றாகவும் செய்வது வேறாகவுமே இருக்கும். இது ஒரு முறை அல்ல பல முறை பார்த்துவிட்டோம். எப்போதும் மாநிலங்களைக் கலந்து ஆலோசிக்காமல் ஒவ்வொரு முடிவுகளும் எடுக்கிறார்கள். எது நல்லது என்பதை நாம்தான் முடிவு செய்ய வேண்டும்.
யாரோ ஒருத்தர் ‘உனக்கு நல்லது செய்கிறேன், இதுதான் நல்லது’ என்றால் ஏற்றுக் கொள்வதில் என்ன இருக்கிறது? எங்களுக்கு எது நல்லது, என்ன படிக்கிறோம் என்பதை நாங்கள் முடிவு செய்து கொள்கிறோம். அதற்குத்தானே அரசியல் சாசன சட்டம் எங்களுக்கு உரிமை வழங்கி இருக்கிறது? அதையெல்லாம் எடுத்துவிட்டு ‘நாங்கள் சொல்வதுதான் நல்லது, நாங்க சொல்றதுலதான் உங்களுக்கு எதிர்காலம் நல்லா இருக்கும்…’ என்று சொன்னால் அது சர்வாதிகாரம்!’’ காட்டமாகச் சொல்கிறார் பீட்டர் அல்போன்ஸ்.
அன்னம் அரசு
|