ஆற்காடு நவாப்கள் சென்னைக்கு என்ன செய்தார்கள்?
ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் மாதத்தில் சென்னை தினம் கோலாகலமாகக் கொண்டாடப்படும். இந்த வருட கொண்டாட்டத்தை கொரோனா முடக்கிவிட்டது. இருந்தாலும் சில அமைப்புகள் சளைக்கவில்லை. ஆன்லைனிலேயே பல நிகழ்ச்சிகளை வழங்கி திக்குமுக்காட வைத்துவிட்டார்கள்.
காயிதே மில்லத் மீடியா அகாடமி வழங்கிய நிகழ்ச்சியில் ‘சென்னையில் ஆற்காடு நவாப்கள்’ என்னும் தலைப்பில் ஆய்வாளர் அன்வர் பேசியது மிகவும் சுவாரஸ்யம். அவரை அலைபேசியில் பிடித்தோம்.
‘‘17ம் நூற்றாண்டின் இறுதி. ஹைதராபாத்தை தலைமையிடமாகக் கொண்ட கோல்கொண்டா சுல்தான்களை முகலாயர்களின் படை வெற்றிகொண்டது. அப்போது தமிழ்நாட்டின் செஞ்சியை ஆண்டது மராத்தியர்கள். முகலாயர்களுக்கு செஞ்சியின் மீதும் ஒரு கண். அவர்களின் ஒரு படை செஞ்சி நோக்கி வந்தது. அதற்கு தலைமை வகித்தவர் முகலாயர்களின் இராணுவப் பிரிவில் இருந்த ஒரு டெப்யுட்டி. டெப்யுட்டி என்றால் பிரதிநிதி என்று அர்த்தம். இதைத்தான் நவாப் என்கிறார்கள்.
முதன்முதலில் தமிழ்நாட்டுக்கு வந்த நவாப்பின் பெயர் சுல்ஃபிகார் கான். அவர் வந்த ஆண்டு 1690...’’ என்று ஆரம்பித்த அன்வர், ஆற்காடு நவாப் என்னும் பெயர்க் காரணத்தை விவரித்தார்.‘‘மராத்தியர்களுடன் போர் புரிய சுல்ஃபிகார் தேர்ந்தெடுத்த இடம்தான் ஆற்காடு. 6 ஆண்டுகள் வரை போர் நீடித்தது. இந்தக் காலங்களில் நவாப்பின் படை ஆற்காட்டைச் சுற்றி வாழ்ந்தது. இதனால் ஆற்காடு ஒரு புதிய நகரமாகவே உருவாகியது. இதை வைத்துதான் ஆற்காட்டை நவாப்களுக்குச் சொந்தமான இடமாக வரலாறு சொல்கிறது.
ஆற்காடு நவாப்களை 4 பிரிவாகப் பிரிக்கலாம். முதலாவதாக முகலாயப் பேரரசரான ஔரங்கசீப்பின் நேரடி நியமனம். இரண்டாவதாக நவாயித். அடுத்து வாலாஜா. நான்காவதாக இவர்களின் வாரிசுகள் என்றில்லாமல் நவாப் என்னும் பெயரை மட்டும் சூட்டிக்கொண்டவர்கள். முதல் பிரிவில் சுல்ஃபிகார் கான், தாவூத் கான், இரண்டாம் பிரிவில் மிகவும் பிரபலமான சதாத்துல்லா கான், சந்தா சாகிப். வாலாஜா பிரிவில் முகமது அலி மற்றும் இறுதிப் பிரிவில் குலாம் கவுஸ் கான் என்பவர்கள் இந்த நவாப் இராஜ்ஜியத்தில் முக்கியமானவர்கள்...’’ என்கிற அன்வர், நவாப்களின் ஆட்சி நிர்வாகத்தில் நிகழ்ந்த சுவாரஸ்யமான மாற்றங்களையும் பட்டியலிட்டார்.
‘‘6 ஆண்டுகள் போரிட்டும் சுல்ஃபிகார் கானால் மராத்தியர்களை வெல்ல முடியவில்லை. செஞ்சிக்குப் பக்கத்தில் உள்ள குறுநில மன்னனான யச்சம நாயக் எனும் நாயக்க மன்னன், ‘மராத்தியர்களைத் தோற்கடிக்க ஒரு வாரம் மட்டும் போதும்...’ என்று ஒரு கடிதத்தை ஒளரங்கசீப்புக்கு எழுதினான். ஆனால், அந்தக் கடிதம் சுல்ஃபிகார் கையில் சிக்கியது. யச்சம நாயக்கன் கொல்லப்பட்டான்.
ஒளரங்கசீப் தன் இளவரசன் ஒருவனை ஆற்காட்டுக்கு அனுப்பினார். ஆனால், அந்த இளவரசனை சுல்ஃபிகார் கைது செய்தான். பிறகு ஒளரங்கசீப் சுல்ஃபிகாரை தில்லிக்கு அழைத்துவிட்டு, ஸ்வரன் சிங் என்னும் ஒரு ராஜ்புத்தானத்து வீரனை ஆற்காட்டுக்கு அனுப்பினார். தவிர, சுல்ஃபிகாரிடம், யச்சம நாயக்கன் இடத்தில் அவன் மகனை நியமித்துவிட்டு தில்லி வரவேண்டும் என்ற கட்டளையையும் விடுத்தார்.
இதிலிருந்து முகலாய ஆட்சியாளர்கள் நியாயமற்ற போரை ஆதரிக்கவில்லை என்பது தெளிவாகிறது. சுல்ஃபிகார், தில்லிக்கு போகும் முன் இன்னொரு நவாப்பான தாவூத் கானை நியமித்துவிட்டுப் போனார். தாவூத் கான் செயின்ட் ஜார்ஜ் கோட்டையைப் பார்வையிடவேண்டும் என்று கேட்டார். ஆங்கிலேயர்கள் யோசித்தார்கள். அதனால் தாவூத் கான் ஆற்காட்டைவிட சென்னைக்கு அருகாமையிலேயே ஒரு கோட்டையைக் கட்ட முனைந்தார். ஆங்கிலேயர்கள் அதை விரும்பவில்லை.
அதே நேரத்தில் தாவூத்தின் நவாப் பதவிக்கு மரியாதை செலுத்துவதாக வாக்குறுதி கொடுத்துவிட்டு அவரிடமிருந்து 5 கிராமங்களை எழுதி வாங்கினர். தாவூத் கான் ஒரு மதுப்பிரியர். ஏதோ தவறு செய்துவிட்டோம் என்று நினைத்த தாவூத், ஆங்கிலேயரிடம் சென்று, ‘வர்த்தகம் மட்டுமே செய்யும் உங்களுக்குக் கோட்டையும் கொத்தளங்களும் எதற்கு...?’ என்று வினவினார். தான் கொடுத்த 5 கிராமங்களையும் திருப்பிக் கேட்டார்.
தில்லி திரும்பும்படி தாவூத்திற்குக் கட்டளை வர, சதாத்துல்லா கானை ஆற்காடு நவாப்பாக நியமித்துவிட்டு தில்லி சென்றுவிடுகிறார்...’’ என்கிற அன்வர், நவாப்கள் ஆற்றிய காரியங்களைப் பட்டியலிட்டார்.‘‘சதாத்துல்லா கானின் நிஜப் பெயர் முகமத் சயீத். நவாப்களிலேயே மிகவும் திறமை வாய்ந்தவர். ஆற்காட்டை ஒரு பூஞ்சோலை மிகுந்த நகரமாக வடிமைத்ததில் இவரின் பங்கு அளப்பரியது.
அவர் ஆட்சியில் சுற்றிலும் எதிரிகள். மராட்டியர்கள், ஆங்கிலேயர்கள், பிரஞ்சுப் படைகள் ஆற்காட்டை ஆக்கிரமிக்கப் பார்த்தன. இந்த நேரத்தில் காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் இருந்த சாமி சிலைக்கு ஆபத்து நேரலாம் என்று நினைத்த கோயில் நிர்வாகம், சிலையை பக்கத்தில் இருந்த உடையார்பாளையம் ஜமீனில் கொண்டுபோய் மறைத்து வைத்தது.
போர் அபாயம் விலகிய பின்பு சிலையைத் தரும்படிக் கேட்டார்கள். ஜமீன் தர மறுத்தது. சதாத்துல்லா கான் தலையிட்டு சிலையை மறுபடியும் வரதராஜப் பெருமாள் கோயிலில் வைக்க நடவடிக்கை எடுத்தார்...’’ என்ற அன்வர் சிறிது இடைவெளிவிட்டு தொடர்ந்தார். ‘‘சென்னைக்கு அருகாமையில் இருந்தால் பிரித்தானியர் ஆட்சியின் கீழ் பாதுகாப்பாக இருக்கலாம் என்று நினைத்தார் சதாத்துல்லா. ஆனால், முன்பு போலவே இப்போதும் ஆங்கிலேயர்கள் மறுத்ததால் கோவளத்தில் கடலை ஒட்டிய துறைமுகத்துக்கு எதிரே ஒரு கோட்டையைக் கட்டினார். இது தூரம் என்பதால் சைதாப்பேட்டையில் ஒரு மசூதியைக் கட்டினார். இதுதான் நவாப் சதாத்துல்லா கான் ஜும்மா மஸ்ஜித் அல்லது சவீதா பாத் என்றழைக்கப்பட்டது.
ஒருமுறை சென்னை பரங்கி மலை மேல் உள்ள சர்ச்சின் மேற்கூரையில் வரைந்திருந்த முப்பரிமாணக் கண்ணாடி ஓவியங்களில் மனதைப் பறிகொடுத்தார். அதேமாதிரியே இந்த மசூதியின் மேற்கூரையை அமைத்ததில் இருந்து அவர் மதத்தையும் தாண்டிய கூறுகளை தன் ஆட்சியில் கொண்டுவர முனைப்புக் காட்டி னார் என்பது தெரிகிறது. அத்துடன் அவரின் நிஜப் பெயரான சயீத் என்பதுதான் பிறகு சைதாப்பேட்டை என்று மாறிவிட்டது...’’ என்ற அன்வர், சந்தா சாகிப்பைப் பற்றியும் பகிர்ந்தார்.
‘‘நவாயித் வழியில் பிரபலமானவர் சந்தா சாகிப். இவர் காலத்தில் பாண்டிச்சேரியில் மேலாண்மை செலுத்தியவர் பிரஞ்சு கவர்னர் டூப்ளே. வீரமா முனிவர் என்னும் பெஸ்கி பாதிரியாருடன் சந்தா சாகிப்புக்கு நட்பு ஏற்பட்டது. பெஸ்கியைத் தன் திவானாகக் கூட நியமிக்க முயற்சிசெய்தார். இந்தக் காலத்தில்தான் தில்லியில் முகலாயர் ஆட்சி நாதிர் ஷா போரால் முடிவுக்கு வந்தது.
முகலாய ஆட்சி முடிவால் கிழக்கிந்தியக் கம்பெனியும், பிரஞ்சுப் படையும், மராத்தியப் படையும் தமிழகத்தையும் ஆற்காட்டையும் நெருக்கியது. சந்தா சாகிப்புக்கு டூப்ளேயின் ஆதரவு இருந்தது. இருந்தாலும் சந்தா சாகிப் ஆற்காட்டைவிட திருச்சியை மையமாக வைத்தே ஆட்சியின் நிர்வாகத்தைக் கவனித்தார்.
இந்த நேரத்தில் ஆற்காட்டை கவனிக்க ஹைதராபாத் நிஜாம் தன் இளவரசர்களில் ஒருவரான அன்வருதீனை அனுப்பினார். இதனால் சந்தா சாகிப் தஞ்சை மராட்டியர்களிடம் தஞ்சம் தேடினார். ஆனால், அவர்கள் சந்தா சாகிப்பைக் கொன்றுவிட்டனர். அதேபோல அன்வருதீனும் ஆம்புர் போரில் கொல்லப்பட்டார். அன்வருதீனின் மூத்த மகன் மாஃபூஸ் கான் மதுரைக்குச் செல்ல, இளைய மகன் முகமது அலி வாலாஜாவுக்கு பிரிட்டனின் ஆதரவு கிடைத்தது.
இந்த நேரத்தில் மைசூரில் ஹைதர் அலி மற்றும் அவர் மகன் திப்பு சுல்தானின் ஆட்சி கோலோச்சுகிறது. அவர்களின் இராஜ்ஜிய விரிவு கண்டு கலங்கினார் வாலாஜா. இதனால் பிற நவாப்கள் மாதிரியே சென்னைக்கு அருகேயே ஓர் அரண்மனையையும் கட்ட நினைத்தார். இதைப்பற்றி ஆற்காட்டு மக்கள் என்ன நினைப்பார்கள் என்ற எண்ணமும் வாலாஜாவுக்கு இருந்தது.
ஆனால், பாதுகாப்பு கருதி ஒரு ராஜ மாளிகையை சென்னை சேப்பாக்கத்தில் கட்டினார். இது 300 ஏக்கரில் அமைந்த ஒரு மாட மாளிகை. வாலாஜா ஒரு வர்த்தகர் இல்லை. இதனால் தனக்கான போரில் ஈடுபடும் பிரித்தானியர்களுக்கு சில பிரதேசங்களை எழுதிக் கொடுத்தார். ஆனாலும் இவரது சேப்பாக்கம் மாளிகையை நாடி வடநாட்டு இஸ்லாமியர்கள் சென்னைக்கு வந்தனர்.
வாலாஜாதான் சென்னை கபாலீஸ்வரர் கோயில் குளத்தை விரிவுபடுத்தினார். திருவல்லிக்கேணியில் இருக்கும் பெரிய மசூதி யான வாலாஜா மசூதியையும் கட்டினார். வாலாஜா இறக்க, அவரது மூத்த மகனான உம்தத் உல் உமரா ஆட்சிக்கு வந்தார். இவர் காலத்தில் பிரித்தானியர் சேப்பாக்கம் மாளிகையை கைப்பற்ற முயற்சித்தனர். மாளிகை பிரித்தானியர் கைக்கு வந்தது. உம்தத் உல் உமரா ஆட்சிதான் நவாப்களின் கடைசி ஆட்சி.
அடுத்து மூன்று பேர் பெயரை மட்டும் வைத்து சிலகாலம் ஆண்டனர். இறுதியாக அஜிம் ஜா என்பவர் ஆண்டார். அவருக்குப் பிறகு அவரின் மகன் சிறுவனாக இருந்ததால் சிறுவனின் மாமாவான குலாம் கவுஸ் கான் 1825 முதல் 1855 வரை ஆண்டார்.
இந்தக் காலங்களில் சென்னை திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், ஜாம்பஜார் போன்ற இடங்களில் வடநாட்டு நடன நங்கைகள் அதிகம் இருந்தனர். சுமார் 250 ஆண்டுகளாக இந்துஸ்தானி இசை சென்னையில் கோலாகலமாக நவாப்களால் வளர்த்தெடுக்கப்பட்டது.
குலாம் கவுஸ் கானும் இதற்கு விதிவிலக்கு அல்ல. அவர் ஒரு நடன நங்கையுடன் காதல் வயப்பட்டார் என்ற செய்தியும் இதில் அடக்கம். நடனத்துக்காக திருவல்லிக்கேணியில் கானாபாக் என்ற இடமும், பிறகு அதே இடத்தில் அமீர்மகாலும் கட்டப்பட்டது. இது 1850 வரையும் கூட நிகழ்ந்தது.
இப்போதைக்கு இந்த நவாப்களின் 8வது இளவரசரான முகமத் அப்துல் அலி ஒவ்வொரு ரம்ஜான் அன்றும் திருவல்லிக்கேணி வாலாஜா மசூதியில் இந்துக்களுக்கும் மற்ற இனத்தினருக்கும் கொடுக்கும் கஞ்சியைக் குடித்து தங்கள் நோன்பை முடிக்கின்றனர்...’’ என்று நவாப்களின் வரலாற்றை ஆதாரங்களுடன் எடுத்துரைத்தார் அன்வர்.
டி.ரஞ்சித்
|