இப்ப நான் டாக்டர் ஆர்.பாண்டியராஜன்!



‘கன்னிராசி’, ‘ஆண்பாவம்’ உட்பட பல சுவாரஸ்யமான காமெடி ப்ளஸ் எமோஷனல் படங்களை இயக்கியவர் ஆர்.பாண்டியராஜன். சமீபத்திய ‘பொன்மகள் வந்தாள்’ வரை நடிகராகவும் தொடர்ந்து பயணிக்கிறார். சினிமாவில் நடிக்க வருவதற்கு முன்னர், எஸ்.எஸ்.எல்.சி. படிப்பை மட்டுமே முடித்தவர் இப்போது பிஎச்.டி முடித்து முனைவர் பட்டம் பெற்றிருக்கிறார்! மூன்று பல்கலைக்கழகங்களுக்கு விசிட்டிங் புரொஃபஸராகவும் அசத்தும் அவர், லாக் டவுன் பீரியடில் ஆன்லைனில் டைரக்‌ஷன் கற்றுக் கொடுக்கிறார். சமீபத்தில் அவர் இயக்கிய ‘ஹெல்ப்’ என்ற குறும்படத்தை 2 கோடியே 72 லட்சம் பேருக்கு மேல் பார்த்து ரசித்துள்ளனர்.

‘‘சினிமாவில் நிறைய க்ளைமேக்ஸ்கள் உண்டு. க்ளைமேக்ஸுக்கு முன்னாடி ஒரு க்ளைமேக்ஸ், ஆன்டி க்ளைமேக்ஸ்னு எல்லாம் இருக்கு. ஆனா, இந்த லாக்டவுன் காலகட்டத்துல க்ளைமேக்ஸ் என்னானு தெரியாமலேயே வாழ்ந்துட்டிருக்கோம். இது புதுவகையா இருக்கு. நடக்கறது, நடக்கப் போவது... அதை மாத்த முடியாது. ஆனா, எதையும் எதிர்கொள்ளணும்னு மனசுக்குள்ள ஒரு பக்குவம் வந்திருக்கு.

வீட்ல எல்லாரும் ஒரே இடத்துல உட்கார்ந்திருப்போம்னு நினைச்சுப் பார்த்திருப்போமா? இதுவரைக்கும் இப்படி ஒரு பிரச்னையை நாம சந்திச்சதில்ல. சினிமாவில அதிர்ச்சி தர்ற விஷயம் நிறைய வரும். அதை ஜெயிச்சு வர்றவன்தான் வெற்றி கொள்வான்...’’ நிறைவாகப் பேசுகிற பாண் டியராஜனின் பேச்சு, அவரது பிஎச்.டி பக்கம் திரும்பியது.

‘‘நான் நடிகர் ஆகணும்ங்கிற ஆசைல இங்க வரல. டைரக்டர் ஆகணும்னுதான் வந்தேன். சூழல்களால நடிப்பும் அமைஞ்சிடுச்சு. இதெல்லாம் ஒரு கொடுப்பினைதான். நான் சினிமாவுக்கு வந்தப்ப 10வது வரைக்கும்தான் படிச்சிருந்தேன். ஆனாலும் இயக்குநராகிட்டேன். எனக்கு படிப்புல ஆர்வம் குறையல. அதே டைம்ல எங்க அப்பாவால என்னை மேலே படிக்க வைக்க முடியாத அளவுக்கு எங்க குடும்ப சூழல் இருந்துச்சு.

நான் பத்தாவது முடிச்சதும் அப்பா என்கிட்ட ‘நீ ஏதாவது வேலை பாருப்பா’ன்னார். நான் படிக்க ஆசைப்பட்டப்ப, ‘இதுக்கு மேல என்ன படிக்கப் போற’ன்னார். இருந்தாலும் நான் விடலை. 2004ல அஞ்சல் வழில எம்.ஏ. முடிச்சேன். 2007ல எம்.பில். அப்புறம், பிஎச்.டியும் முடிச்சிட்டேன். நான் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட தலைப்பும் சினிமாதான். ‘தமிழ் திரைப்படக் கலைஞர்களின் சமுதாயப் பங்களிப்பு’!

தீஸீஸ் சப்மிட் பண்ணிட்டு, முனைவர் பட்டமும் வாங்கிட்டேன். என் ஆய்வை கூடிய சீக்கிரமே புத்தகமா கொண்டு வர்ற ஐடியா இருக்கு. ‘தேடல்’, ‘தூக்கம் வராதபோது சிந்தித்தவை’, ‘கற்றது விசில் அளவு’ புத்தகங்களுக்கு அடுத்து, இதையும் கொண்டு வரப்போறேன்...’’ உற்சாகமானவர், தனது ஷார்ட் ஃபிலிம் பற்றியும் சொல்கிறார்.‘‘ஆக்சுவலா, ‘ஹெல்ப்’ என்னோட ரெண்டாவது குறும்படம். ஏழெட்டு வருஷங்களுக்கு முன்னாடி ரூ.85 ஆயிரம் செலவுல ‘மகன்’னு ஒரு ஷார்ட் ஃபிலிம் பண்ணினேன். அப்ப ஃபிலிம்ல ஷூட் பண்ணியிருந்தோம். அவார்டு எதுவும் கிடைக்கல.
ஆனா, ஃபிலிம் டிவிஷன்ல அதை வாங்கிட்டு எனக்கு ஒரு லட்சத்து 85 ஆயிரம் ரூபா பணம் கொடுத்தாங்க.

ஒரு குறும்படம் எடுத்து ஒரு லட்சம் லாபம் சம்பாதிச்ச ஆளு நான்தான். இந்தப் படம் (‘ஹெல்ப்’) எடுத்து ஏழு வருஷத்துக்குப் பிறகுதான் யூ டியூப்ல போட்டேன். இப்ப மூணு கோடி பார்வையாளர்களை நெருங்கிட்டிருக்கு. இதுவரைக்கும் அஞ்சு லட்ச ரூபாய் வருமானம் கொடுத்திருக்கு. இதெல்லாம் பெருமைக்காக சொல்லல. நீங்க குறும்படம் நிறைய எடுங்க. நல்ல எதிர்காலம் இருக்கு.

ஆனா, ஒரு விஷயம். ஏனோதானோனு எடுக்காதீங்க. கொஞ்சம் சின்ஸியரா உழைங்க. ‘ஹெல்ப்’ எடுக்க நான் பட்ட பாடு எனக்குத்தான் தெரியும்.
சில வருஷங்களுக்கு முன்னாடி ஒரு டாக்டர்கிட்ட பேசிட்டிருந்தேன். ஒரு தாய் ஒரு செக்ஸ் டாய் வாங்கிட்டுப் போனார்னு சொன்னதைக் கேட்டதும் அப்படியே ஷாக் ஆகிட்டேன்.

அப்புறம் ஒரு முறை அந்த செக்ஸ் டாயைப் பார்த்தேன். இயற்கைக்கு முரணான எந்த ஒரு பொருளையும் நம்ம நாட்டுக்குள்ள கொண்டு வந்துட முடியாது. இங்க அப்படியொரு சட்டம் இருக்கு. இதையெல்லாம் கனெக்ட் பண்ணி ஒரு குறும்படத்துக்கான கதையை ரெடி பண்ணிட்டேன். ஆனா, அதை வெளிப்படையா யார்கிட்டேயும் சொல்ல முடியாம தவிச்சேன். அவ்வளவு ஏன், என் பொண்டாட்டிகிட்டகூட கதையைச் சொல்ல முடியல. சொன்னா, ‘இந்த மனுஷன் ஏன் இப்படி யோசிக்கறார்’னு நினைச்சுடுவாங்களோனு பயம் இருந்தது.

இந்தக் குறும் படத்தை எடுக்கறதுக்குள்ள படாதபாடு பட்டுட்டேன். ஸ்கிரிப்ட்டை தமிழ்லதான் ஆரம்பிச்சேன். சில வார்த்தைகள் கொஞ்சம் கடுமையா போகவே, அப்படியே ஆங்கிலத்தில் எழுத ஆரம்பிச்சிட்டேன். சிலபேர்கிட்ட நடிக்கக் கேட்டுப் பார்த்தேன். பயந்து ஒதுங்கினாங்க. அந்த டைம்லதான் என்னோட சீரியலான ‘மாமா மாப்ளே’யின் இயக்குநர் சக்திவேல் சார்கிட்ட சொன்னேன்.

அவர்தான் ‘இது அருமையான தாட்’னு சொல்லி, தாய் கேரக்டரில் நடிக்க தேவி ப்ரியாவை ரெஃபர் பண்ணினார். பத்து நிமிஷத்துல மூணு விதமான கதாபாத்திரத்தை அந்த கேரக்டர் பிரதி பலிக்கணும். ஸ்மக்லர், ஏடாகூடமான பொம்பள, அருமையான தாய்னு மூணுவித ரியாக்‌ஷனும் தெரியணும். அவங்க நான் நினைச்சதை விட பிரமாதமா பர்ஃபார்ம் பண்ணினாங்க. டெல்லி கணேஷ், மோகன்ராம்னு பலரும் நடிச்சிருந்தாங்க. லெனின் சார் அற்புதமா எடிட் பண்ணினார். காந்த்தேவா இசையில் உருக வச்சிட்டார்.

ஷார்ட் ஃபிலிமை எடுத்து முடிச்சதும் வீட்ல வந்து ‘ஓ’னு அழுதுட்டேன். சந்தோஷ அழுகை அது. சொந்தக் காசு போட்டுத்தான் தயாரிச்சேன். பிரேசில்ல நடந்த ஒரு விழாவுல ‘பெஸ்ட் ஆக்ட்ரஸ்’ கேட்டகிரியில தேவி ப்ரியா நாமினேஷன்ல வந்தாங்க. பெங்களூர் ஃபெஸ்டிவல்ல அவங்களுக்கு அவார்டும் கிடைச்சிடுச்சு.

இதுல ஒரு விஷயம் புரிஞ்சுகிட்டேன். ஷார்ட் ஃபிலிம் எடுக்கறதை ஏனோதானோனு பண்ணாமல் சின்ஸியரா பண்ணினா, இதோட உச்சம் வேற லெவல். நீங்க பிரிண்டை தூக்கிட்டு சுத்த வேணாம். யூ டியூப்ல போட்டா போதும். சரக்கு நல்லா இருந்தா உலகம் முழுவதும் ரீச் ஆகிடும்.
டைரக்‌ஷன்ல அடிப்படை விஷயங்களைக் கத்துக்குங்க. உதாரணத்துக்கு சைக்கிள் ஓட்டினா குரங்கு பெடல் அடிச்சு கத்துக்குவோம் இல்லையா... அதைப்போல டைரக்‌ஷனையும் கத்துக்குங்க...’’ என சீரியஸாக சொன்னவர், டைரக்‌ஷனுக்கான சூட்சமங்கள் சிலவற்றையும் சொல்கிறார்.

‘‘சினிமானா என்ன..? திரையில பார்க்கும் போதே, அதோட கதை புரியணும். நாம எங்காவது ட்ராவல் பண்ணும்போது கூட, கதைக்கான கரு கிடைக்கும். அதை அப்படியே டெவலப் பண்ண முடியுமானு பாருங்க. அந்தக் கருவை நோக்கியே டிராவல் பண்ணுங்க. இப்படித்தான் கதை வளரும்.
நாலுபேர் உட்கார்ந்து பேசப் பேசத்தான் கதை நகரும். அப்ப கதை இலாகாவின் வேலையே அதுதான். இப்ப டைரக்‌ஷன் எவ்ளவோ மாறிடுச்சு.
கதையை சொல்ல அடிப்படை கோட்பாடுகள் நிறைய இருக்கு.

உதாரணமா, ‘ரைட், லெஃப்ட்’னு ஒரு விஷயம் இருக்கு. நான் ‘டார்லிங் டார்லிங்’ல ஒர்க் பண்ணும்போது புனே ஃபிலிம் இன்ஸ்டிடியூட்ல இருந்து ஒருத்தர் எங்க டைரக்டரை பார்க்க வந்திருந்தார். அவர்கிட்ட எங்க டைரக்டர் (பாக்யராஜ்) என்னைக் கைகாட்டி, ‘இவன் ரைட், லெஃப்ட்ல ரொம்ப கவனமா இருப்பான். அதுல வர்ற டவுட்டை கேட்டு க்ளீயர் பண்ணிக்கிட்டே இருப்பான்’னு சொன்னார்.

வந்தவருக்கு ஆச்சரியம். அவர் என்னைக் கூப்பிட்டு ஒரு அட்வைஸ் பண்ணினார். ‘உங்களுக்கு ரைட், லெஃப்ட் தெரியுதுங்கறதுக்காக உங்களுக்கு எல்லாம் தெரியும்னு அர்த்தமில்ல. ஆனா, ரைட், லெஃப்ட் தெரியலைனா உங்களுக்கு எதுவுமே தெரியலை’ன்னார். அது அவ்வளவு பெரிய விஷயம். ரைட், லெஃப்ட்னா, 46 ரைட்டு, 76 லெஃப்ட்னு கிடையாது. ஒரே ரைட், ஒரே லெஃப்ட்தான்.

காஸ்ட்யூம், மேக்கப்னு எல்லாத்தையும் டீட்டெயிலா கத்துக்குங்க. ஓர் இயக்குநருக்கு கேமராவைப் பத்தி எவ்வளவு தெரிஞ்சிருக்கணுமோ, அவ்வளவு தெரிஞ்சிருந்தா போதும். எங்க ஜூம் பண்ணணும்... எங்க டிராலி யூஸ் பண்ணணும்னு ஓர் இயக்குநருக்கு தெரியறது அவசியம்.அதே டைம்ல என்ன லைட் பயன்படுத்தணும்னு நமக்கு லைட்டிங் பத்தி தெரிஞ்சிருக்கணும்னு அவசியமில்ல. அது கேமராமேனோட வேலை. ஒரு ஷாட்டை எப்படி வைக்கணும்னு அந்த கதையும், சீனுமே தீர்மானிக்கும்.

நான் ஆன்லைன்ல கிளாஸ் எடுக்கும் போது, கொஞ்சம்தான் கத்துக் கொடுப்பேன். அப்புறம், ஸ்டூடண்ட்ஸ் அதைப் பிடிச்சுட்டு கேள்விகள் கேட்கக் கேட்க, விஷயம் விரிவடைஞ்சிட்டே போகும். சொல்ல வர்ற விஷயம் இதுதான். டைரக்‌ஷன்ல பேஸிக் கத்துக்கிட்டீங்கன்னா போதும், ஷார்ட் ஃபிலிம் எளிதாகும். ப்ரைட் ஃப்யூச்சர் இருக்கு...’’ புன்னகைக்கிறார் பாண்டியராஜன்.

இவரது மூன்று மகன்களில் மூத்த மகன் பல்லவராஜன் சாஃப்ட்வேர் துறையிலும், இரண்டாவது மகன் பிரித்வி ஹீரோவாகவும், மூன்றாவது மகன் பிரேம ராஜன் சினிமாவில் ட்ரோன் ஆபரேட்டராகவும் உள்ளனர். இவர் டோலிவுட், மல்லுவுட் படங்களில் ஒர்க் பண்ணுகிறார்.

மை.பாரதிராஜா