ஒரு நடிகையின் காதல்!
இருபது வருடங்களுக்கு முன் வெளியாகி வசூலைக் குவித்த ஆங்கிலப்படம் ‘நட்டிங் ஹில்’. இத்தனை வருடங்களுக்குப் பிறகும் ‘அமேசான் ப்ரைமி’ல் பார்வையாளர்களை இப்படம் வசீகரிக்கிறது. திரைப்பிரபலங்கள் இந்தப் படத்தைப் பற்றி பெருமையாக டுவிட்டிக் கொண்டிருக்கின்றனர்.
உலகப் பிரபலமான நடிகைக்கும் உள்ளூரிலேயே பெரிதாக அறிமுகமில்லாத இளைஞனுக்கும் இடையில் காதல் மலர்ந்தால்... அதுதான் ‘நட்டிங் ஹில்’. லண்டனில் உள்ள நட்டிங் ஹில் என்ற இடத்தில் பயணம் சம்பந்தமான புத்தகக்கடை நடத்தி வருகிறான் வில்லியம் தாக்கர். வியாபாரம் அவ்வளவாக இல்லை. சில நாட்களுக்கு முன்பு வில்லியத்தின் மனைவி அவனை விட்டுவிட்டு இன்னொருவருடன் போய்விட்டாள். அதனால் பெரிய பிடிப்பு இல்லாமல் வாழ்ந்துவருகிறான்.
கடைக்குப் பக்கத்தில் இருக்கும் ஒரு பிளாட்டில் நண்பனுடன் வசித்து வரும் வில்லியத்தின் வாழ்க்கையையே புரட்டிப்போடும் நேரம் வருகிறது.
வழக்கம்போல காலையில் சலிப்புடன் கடைக்கு வருகிறான். உற்சாகமே இல்லாமல் வாடிக்கையாளர்களுக்காக காத்திருக்கிறான்.
திடீரென்று ஓர் இளம்பெண் கடைக்குள் நுழைகிறாள். அவள் உலகப் புகழ்பெற்ற ஹாலிவுட் நடிகை அன்னா ஸ்காட். அவளுக்கு அமெரிக்காவில் ஒரு பாய் ஃபிரண்ட் இருக்கிறான். அன்னாவை மற்ற வாடிக்கையாளர்களைப் போல சாதாரணமாகவே அணுகுகிறான் வில்லியம். இது அவளை வெகுவாகக் கவர்கிறது.
இன்னொரு நாள் அன்னாவை எதேச்சையாக சந்திக்கும்போது அவள் மீது ஜூஸைக் கொட்டி விடுகிறான். பக்கத்தில் இருக்கும் தன்னுடைய பிளாட்டுக்கு அழைத்துப்போய் அன்னாவின் ஆடைகளைச் சுத்தம் செய்ய உதவுகிறான். அவனது இந்தப் பண்பும் அன்னாவுக்குப் பிடித்துப் போய்விடுகிறது.
பிறகு இருவரும் அடிக்கடி சந்திக்கிறார்கள். காதல் மலர்கிறது. பிரபல நடிகைக்கும் புத்தகக்கடை நடத்தும் சாமான்யனுக்கும் இடையிலான காதலை அறிந்துகொள்ள பத்திரிகைகள் கேமராவுடன் இருவரையும் துரத்துகின்றன.
இருந்தாலும் ரகசியமாக அன்னாவும் வில்லியமும் தங்களின் காதலை வளர்க்கின்றனர். அப்போது எதிர்பாராதவிதமாக அமெரிக்காவிலிருந்து அன்னாவின் பாய் ஃபிரண்ட் வந்துவிடுகிறான். இது வில்லியத்திற்குத் தெரிய வர, மறுபடியும் உடைந்துபோகிறான்.
அவனது நண்பர்கள் வில்லியத்தை மீட்டெடுக்க வேறு ஒரு பெண்ணைத் தேடுகிறார்கள். அவனுக்கு யாரையும் பிடிப்பதில்லை. சில மாதங்களுக்குப் பிறகு அன்னா மறுபடியும் நட்டிங் ஹில்லிற்கு வருகிறாள். அதற்குப் பிறகு நடக்கும் சம்பவங்களை ஃபீல் குட்டாக முடித்திருக்கிறார் இயக்குநர் ரோஜர் மிச்செல்.
அன்னா ஸ்காட்டாக நடித்த ஜூலியா ராபர்ட்ஸ் சிரிப்பிலேயே நம்மைக் கட்டிப்போட்டுவிடுகிறார். காதல், நகைச்சுவை, பாடல் என சுவாரஸ்யமாகச் செல்கிற இப்படத்தை எவ்வளவு முறை வேண்டுமானாலும் பார்க்கலாம். ஜூலியாவின் சிரிப்பைப் போல!
|