டெலஸ்கோப் மாமா...
எனக்கு மூன்று மாமாக்கள். அதில் பிடித்த மாமா டெலஸ்கோப் மாமாதான்.டெலஸ்கோப் மாமா உயரமாக இருப்பார். தாடி மீசையுடன் கம்பீரமாக இருப்பார்.அவர் என்ன வேலையில் இருந்தார் என்பது யாருக்கும் சரியாகத் தெரியவில்லை. குறிப்பாக என் அப்பாவுக்கு அவரை கொஞ்சம் கூட பிடிக்காது. தன் சகோதரர் என்பதால் அம்மா டெலஸ்கோப் மாமா பற்றி யாராவது தவறாகப் பேசினால் ரொம்ப வருத்தப்படுவார்.
எனக்கு அப்போது என்ன வயது என்பது மறந்துவிட்டது. நான் ஏழாவதோ எட்டாவதோ படித்துக் கொண்டிருந்தேன். நாங்கள் அப்போது குன்னூரில் வாழ்ந்தோம். அப்பா பஞ்சாயத்து கிளார்க் என்பதால் அவ்வப்போது ஊர் மாற்றமும் வந்துகொண்டு இருந்தது. நானும் என் ஒரே தங்கையும் அங்கே குன்னூரில் ஒரு கிருத்துவ மிஷனரி பள்ளியில் படித்தோம்.
எனக்கும் டெலஸ்கோப் மாமாவுக்கும் இடையிலான சிறப்பு உறவு எப்படித் தொடங்கி யது தெரியுமா? ஏதோ ஓர் ஊரிலிருந்து வேலை நிமித்தமாக வேறு ஏதோ ஓர் ஊருக்குப் போகும் வழியில் அவர், டெலஸ்கோப் மாமா, எங்கள் வீட்டில் ஒருவாரம் தங்குவதற்கு வந்தார்.‘‘இந்தா... இந்த தேனீரை கொண்டுபோய் மாமாவிடம் கொடு...’’ என்றார் அம்மா.
நான் எங்கள் குட்டி சமையல் கட்டிலிருந்து மாமா உட்கார்ந்திருந்த வாசல் படிக்கட்டுக்கு டீ கிளாஸை சுமந்து சென்றேன். அதிகாலை என்பது குன்னூரில் எட்டுமணி.‘‘ஸ்டான்லி… இன்றைக்கு ஸ்கூல் போகணுமா?’’ அவர் கேட்டார். என் பெயரை அவர் உச்சரிக்கும் விதத்தில் நான் காந்தம் போல கவரப்பட்டேன்.நீலநிற டவுசர் போட்டிருந்தார். குன்னூர் குளிர் அவரை எதுவும் செய்யவில்லை. புசு புசு என்று முடி முளைத்திருந்த மாரைக் காட்டியபடி மேலுக்கு சர்ட் இல்லாமல் இருக்க அவரால் முடிந்தது.
கையில் இரண்டு மூன்று குழாய்கள். ஒரு முக்காலி ஸ்டாண்டு. அதுதான் டெலஸ்கோப் என்பது எனக்கு அப்போது தெரியாது. அதை எண்ணெயோ எதுவோ வைத்து ஒரு மஞ்சள் ஸ்பாஞ்ஜ் துணியால் துடைத்துக் கொண்டிருந்தார்.தேனீரை முதல் உறிஞ்சு உறிஞ்சிவிட்டு ‘‘ஸ்டான்லி இன்று என்னோடு வருகிறாயா..?’’ என்று கிசுகிசுத்த குரலில் கண்சிமிட்டியபடி ரகசியமாகக் கேட்டார். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. சாகச மனம் விழித்தது. ‘‘அப்பா திட்டுவாங்க...’’ என்று தயங்கியபடி சொன்னேன். தவிர அம்மாவும் லீவுபோட விடமாட்டார்.
‘‘நீ வழக்கமாக பள்ளிக்குப் போவது மாதிரி போ… நான் வழியில் உன்னை அழைத்துக் கொள்வேன்...’’ என்றார்.அடுத்த நிமிடத்தில் இருந்து எனக்கு வியர்த்துக் கொட்டியது. குன்னூர் குளிரில் உங்களுக்கு நெற்றி வியர்த்தால் ஏதோ கோளாறு என்று உடனே சொல்லிவிடலாம். நான் அதுவரை கிளாசுக்கு கட் அடித்ததே கிடையாது. அதுதான் விஷயம். ஒருபக்கம் பயமாக இருந்தாலும் மறுபக்கம் வாழ்நாளில் அதுவரை அனுபவிக்காத ஒரு பர பரப்பு உடலில் ஏற்பட்டது.
நான் வீட்டிற்குள் போகத் திரும்பினேன். ‘‘இப்படி உட்காரு ஸ்டான்லி… இதுவரை டெலஸ்கோப் பார்த்திருக்கிறாயா?’’ என்றார். நான் அருகே சென்று உட்கார்ந்தேன். மெல்ல அந்தக் கருவியை கச்சிதமாக இணைத்து விழிலென்சு பகுதியின் வழியே பார்க்கச் சொன்னார் டெலஸ்கோப் மாமா.
எதிரே இருந்த நாகலிங்க மரத்தின் கிளையும் இலையும் கைக்கு எட்டும் கிட்டத்தில் பெரிதாகத் தெரிந்தது. சூப்பர். சக வகுப்பு மாணவர்களுக்கு கிடைக்காத விஷயம். என் மனம் துள்ளியது.‘‘யாருக்கும் தெரியாது… பள்ளி விடும்போது மாலை நாலு நாலரைக்குள் வந்து விட்டுவிடுவேன். நீ பள்ளி போவது போலவே இருக்கட்டும்...’’ என்றார்.என் தங்கை பள்ளிக்கு அந்த நாட்களில் ரிக்ஷாவில் போவது வழக்கம். நான் சைக்கிளில்தான் போவேன். எனவே வசதியாகப் போயிற்று. திருட்டு சாக்லெட் சாப்பிடும் குதூகலம் என்னுள் பின்விளைவுகளை நினைக்கவிடாமல் செய்தது.
எங்கள் வீட்டிலிருந்து இரண்டு தெருக்கள் தள்ளி ராவுத்தர் டீக்கடையில் தன் மோட்டார் பைக்குடன் மாமா நின்றார். டீக்கடைக்காரரை ‘‘நண்பரே...’’ என்று அழைத்தார். நாங்கள் என் சைக்கிளை ராவுத்தர் கடையில் விட்டோம். புத்தகப்பை ரொம்ப கனக்கவில்லை. அதை என்னுடன் வைத்துக்கொண்டேன்.
‘‘நீ இதுவரை காளகத்தி அருவிக்கு போயிருக்கிறாயா?’’ மாமா கேட்டபடியே பைக்கை கிளப்பினார். இல்லை; நான் போனது கிடையாது. கேள்விப்பட்டிருக்கிறேன்.வண்டி விருட்டென்று பறந்தது. உற்சாகமாக இருந்தது. நாங்கள் அரை மணி நேரத்தில் காளகத்தி கிராமத்தில் இருந்தோம். ஊட்டி மலைமுழுதுமே காடுதான் என்றாலும் காளகத்தி ரொம்ப அடர்ந்த காடு. ‘‘அங்கே டூரிஸ்டுகள் கூட அதிகம் போக மாட்டார்கள்...’’ என்றார். தன் வண்டியை இன்னொரு டீக்கடையில் டெலஸ்கோப் மாமா விட்டார். அந்த டீக் கடைக் காரரையும் ‘‘நண்பரே...’’ என்றுதான் அவர் அழைத்தார். அந்த கிராமத்திலிருந்து இரண்டு கிலோமீட்டர் நடந்தால் அருவி என்றார்கள்.
அப்போதும் எனக்கு மாமா எதற்காக அங்கே வந்திருக்கிறார் என்பது தெரியவில்லை. அடர்ந்த காட்டுக்குள் வெளிச்சம் குறையும் அளவுக்கு மரங்கள். கடும் குளிர்காலம் என்பதால் சூரியனே உதிக்காத சூழல்.நான் சட்டென கவனித்தேன். டெலஸ்கோப் மாமா தொப்பியை அணிந்தார். அந்த தொப்பியில் ஒரு செடியின் கிளையைச் சேர்த்துக் கட்டியிருந்தார். ஏரி போன்ற நீர் நிலை வந்தது. அவர் சட்டையைக் கழட்டினார்.
என்னை தன் சட்டை மற்றும் பொருட்களின் காவலாக கரையில் இருக்கச் சொல்லிவிட்டு பையிலிருந்து எதையோ எடுத்தார். கேமரா. ஒரு கையில் டெலஸ்கோப், மறுகையில் கேமரா, கழுத்தில் பைனாக்குலர். அவர் தன் பையில் கைவிட்டு ஒரு சிறிய பைனாக்குலரை எடுத்து என் கையில் கொடுத்தார். ‘‘பறவைகளைப் பார்… சத்தமே போடக்கூடாது...’’ என்றார். அப்போதுதான் கவனித்தேன்.
அந்தப் பகுதியில் ஏராளமான பறவைகள். என் பைனாக்குலரை வைத்து என்னைப் பார்க்க வைத்தார். ‘‘அதோ பார்த்தாயா...’ என்றார் சன்னமான குரலில். ‘‘இதுதான் வெண் வயிற்று மரங்கொத்தி...’’ மரங்களில் பறந்து தாவிய அதன் வயிறு வெள்ளையாய் இருந்தது. ‘‘இதோ தீக் காக்கை...’’ என்றார். ‘‘எவ்வளவு பெரிய காக்கா..?’’ நான் அசந்து போனேன். பிறகு ஒவ்வொரு திக்காக பார்த்தேன். என் கவனம் நீல வால் பறவை ஒன்றின்மீது விழுந்தது. பறவையின் அலகில் மீன். ‘வாவ்’ என்றேன்.
ஆனால், மாமா அங்கில்லை. அவர் பறவைகள் மொய்த்திருந்த அந்த ஏரியில் இருந்தார். டெலஸ்கோப்பிலேயே கேமராவைப் பொருத்தி இருந்தார். புதர் மண்டிய இடத்தில் அவரது தொப்பி மட்டும்தான் வெளியே தெரிந்தது. மாமா தண்ணீருக்குள்ளே இருந்தார்.
பைனாக்குலரை வைத்து பறவைகளைப் பார்ப்பதைவிட தொப்பி மட்டும் தெரியும் அசையாத மாமாவை மட்டுமே நான் ஆச்சரியமாகப் பார்த்துக் கொண்டிருந்தேன். அவரால் தண்ணிக்குள் எப்படி இருக்க முடிகிறது என வியந்தேன். பறவைகளுக்கு அவர் இருப்பதே தெரியவில்லை. பலவகை வாத்துகள், செந்நிற கொக்குகள்… அவைகளின் வெகு அருகே அவரது செடிவைத்த தொப்பியும் தண்ணீர் மேல் டெலஸ்கோப் கேமராவும் மட்டும் தெரிந்தது.
இப்போது அங்கே தண்ணீரில் சலசலப்பே இல்லை. நான் கரையில் மாமாவின் பை, அவரது சட்டை மற்றும் குடிநீர் கேன் இவற்றோடு உட்கார்ந்திருந்தேன். கருப்பு ஆரஞ்சு வண்ண நாரைகள், நீள் கழுத்து கரண்டிவாய் கொக்கு என அவ்விடத்தில் நான் அதிசயிக்க பலவிதமான பறவைகள் இருந்தன.
இருந்தாலும் அன்று எனக்கு என் மாமாவைவிட எதுவுமே அதிசயமாகத் தெரியவில்லை.அருகில் நண்டுகள், ஓணான், குருட்டுப்புழு, பெரிய மரவட்டை என்று என்னைச் சுற்றிலும் புதரில் ஏனைய வகை உயிரிகள் தலைகாட்டின. எத்தனை மணிநேரம் அப்படி இருந்தோமோ…திடீரென்று பக்கத்தில் உர்ரென்று ஒரு சப்தம்.எனக்கு இரண்டு கண்கள் மட்டும்தான் தெரிந்தன. பைனாக்குலர் வைத்து பார்த்தேன்… ‘இவ்வளவு பெரிய நாயா…’ ‘‘அய்யோ..’’ என்று என்னையும் அறியாமல் கத்தினேன்.
ஒன்று, இரண்டு, மூன்று... பள்ளிக்கூடத்தில் கேள்விப்பட்டிருக்கிறேன் செந்நாய்கள். ‘‘மாமா…’’ நான் அலறினேன். ஒரு நாய் என்னை நோக்கி ஓடிவந்தது. ஆனால், என் மிக அருகே நின்றிருந்த பெருத்த நீள கழுத்து கொக்கை அது லபக்கென பிடித்தது. நான் பிழைத்தேன்.ஆனால், மற்றொன்று என்னை கவனித்துவிட்டது. வன நாய்கள் என்றும் சொல்வார்கள். என்னை அது நெருங்குவதற்குள் மாமா தன் டெலஸ்கோப்போடு அதன்முன் நின்றிருந்தார்.
அது அவரைப் பார்த்து ‘உர்...’ என பல்லைக்காட்டியது. சேறு அப்பிய அவரது முதுகுதான் எனக்குத் தெரிந்தது.அவசரத்தில் பதட்டத்துடன் தன் டெலஸ்கோப்பால் ஓங்கி அதன் மண்டையில் ஒன்று வைத்தார். கொக்கு பிடித்த நாய் ஓட்டமெடுத்தது. ஆனால், மற்ற இரண்டு செந்நாய்கள் எங்களை வேட்டையாட முடிவெடுத்திருந்தது போலிருந்தது.
கைக்கு ஒன்றாக டெலஸ்கோப் குழாய் பாகங்களைக் கொண்டு அவற்றை சுழற்றி சுழற்றி அவர் அடித்தார். பிறகு ஒரு கட்டத்தில் ‘‘ஓடி விடலாம் ஸ்டான்லி… எல்லாவற்றையும் எடுத்துக்கொள்...’’ என்றார்.பலவகை நாரைகள் கொத்தாக வந்து அருகில் இறங்கிய தருணத்தில் நாங்கள் ஓட்டமெடுத்தோம். காட்டில் வேறு வழியை நோக்கி தலைதெறிக்க ஓடத் துவங்கினோம். முதலில் திக்கிற்கு ஒருவராக ஓடினோம். பிறகு எனக்கு ரொம்பவே பயமாகிவிட்டபோது… மாமா என் அருகே என்னோடு ஓடினார்.
எத்தனையோ தூரம் இருக்கும். விரைவில் எனக்கு மூச்சு வாங்கியது. இருந்தாலும் புத்தகப் பை, மாமா சட்டை, பைனாக்குலர் என எல்லாவற்றையும் சுமந்து ஓடினேன். உர்உர்ரென்று கொஞ்ச தூரம் அவை எங்கள் பின்னால் வந்ததுபோல இருந்தது.பலவகை மரங்கள், புதர்கள் கடந்து ஓடிக்கொண்டே இருந்த நாங்கள் விரைவில் வழியைத் தவறவிட்டுவிட்டோம். ஒருவழியாக பைக் நிறுத்தப்பட்ட அந்த டீக் கடைக்கு வந்து சேர்ந்தபோது இருட்டிவிட்டது. மாமா தன் சட்டையை அணிந்துகொண்டார்..
அந்த டீக் கடையைப் பார்த்த போதுதான் எனக்கு மதியம் நான் சாப்பிடவில்லை என்பதே நினைவுக்கு வந்தது. இருந்த பரபரப்பில் பசி இல்லை. ‘‘வன நாய்களுக்குப் பின்னே புதரில் ஒரு கருஞ்சிறுத்தையைப் பார்த்தேன். அதனால் தான் ஓடச்சொன்னேன்...’’ என்று சொன்னவாறு டெலஸ்கோப் மாமா பைக்கைக் கிளப்பினார்.
வீட்டருகே இருந்த தேனீர் கடையில் என் சைக்கிளை எடுத்தபோது… ‘‘டெலஸ்கோப்பை ரிப்பேருக்கு கொடுத்து விட்டு வருகிறேன்... நீ வீட்டுக்குப்போ...’’ என்று சொல்லிவிட்டு மாமா எஸ்கேப் ஆனார்.நான் சைக்கிளை சத்தமே இல்லாமல் ஸ்டாண்டு போட்டுவிட்டு பதுங்கியபடி வீட்டிற்குள் நுழைந்தேன். புத்தகப்பை முழுதும் ஈரமாகி இருந்தது. கனத்தது.
அப்பாவும் அம்மாவும் வாசலையே பார்த்தபடி ஹாலில் நிசப்தமான வீட்டில் உட்கார்ந்திருந்தார்கள்.சேற்று அழுக்கும், சகதி முகமுமாக நின்ற எனக்கு அப்பாவிடம் விழுந்த உதையும் அடியும் வசவும் கொஞ்சநஞ்சமல்ல. ஆனால், அதுபற்றி நான் என் வகுப்புத் தோழர்களிடம் சொல்லவில்லை..மாமாவுடனான சாகசங்களை மட்டும் கருஞ் சிறுத்தையோடு, காட்டுயானை, கரடி என பலவற்றைச் சேர்த்து சொல்லி அவர்கள் மத்தியில் சூப்பர் ஸ்டார் அந்தஸ்து பெற்றேன்.
இப்போது டெலஸ்கோப் மாமா மகாராஷ்டிராவில் மயானி பறவைகள் சரணாலயத்தில் பராமரிப்பு அலுவலராக வேலை கிடைத்து சேர்ந்துள்ளதாக அம்மா சொன்னார். இனி கொஞ்ச நாட்களுக்கு அவர் இந்தப் பக்கம் வரமாட்டார்.
கிளாமர் கார்டன்!
இங்கிலாந்தின் லிவர்பூல் நகரில் வசிக்கிறார் எமி ஜாக்சன். அங்கே தன் செல்லக் குழந்தையுடன் வசித்து வரும் அவர், சமீபத்தில் தன் வீட்டு மொட்டை மாடியில் போன்சாய் மரத் தோட்டம் போட்டிருக்கிறார். எலுமிச்சையில் இருந்து வீட்டிற்குத் தேவையான காய்கறிகள் வரை வளர்த்துவருகிறார். எக்ஸ்ட்ரா எனர்ஜிக்கு ஃபிட்னஸ் பக்கமும் கவனம் செலுத்தி, ‘பழைய பன்னீர்செல்வமாக’ திரும்பி வருவதற்கு யோகாவும் செய்து வருகிறார் எமி!
ஈரமுள்ள மனசு!
மும்பையில் மழைகொட்டித் தீர்த்திருக்கிறது. இப்படி பல வருஷங்களா சாலைகளில் தண்ணீர் ஆறாக ஓடுவதையும் பார்த்துட்டிருக்கேன். இந்த மழைக் காலங்களில் நீங்கள் வெளியே எங்கும் சுத்தாம வீட்டுல இருங்க. அதுதான் சேஃப்டி. உங்க வீட்டுல நாய், பூனைனு செல்லப் பிராணிகள் இருந்தால் அதையும் வீட்டுக்குள்ளேயே அடைச்சு வச்சுக்குங்க. ஏன்னா, தெருவில் திரியும் செல்லப் பிராணிகள் பாதுகாப்பாக இருக்கணும்...’’ - என கருணைக் குரல் பொழிந்திருக்கிறார் ‘அனேகன்’ ஹீரோயின் அமைரா தஸ்தூர்.
சவாலே சமாளி!
ஆரவ்வின் ஜோடியாக ‘ராஜபீமா’வில் சிலுசிலுக்கிறார் யாஷிகா ஆனந்த்.சமீபத்தில் வந்த தனது பர்த் டேவை சிம்பிளாக கொண்டாட எண்ணினார். ஆனால், யாஷிக்கு ஏகப்பட்ட கேக்குகள் தேடி வந்துவிட்டதாம். ‘‘நினைச்சுப் பார்க்கல, செம கிராண்டா செலிபிரேஷன் அமையும்’’னு என குஷியோ குஷியாகிறார். ‘‘இந்த லாக்டவுனில் பொழுது நல்லா போச்சு. ஃப்ரெண்ட்ஸ் விடுத்த சேலஞ்சஸை சவாலா எடுத்து பண்ணி ஜெயிச்சேன்...’’ என குத்தாட்டமாக குதிக்கிறார் யாஷி.
அன்னபூரணி!
தமிழில் ஒரு ரவுண்ட் வர ரெடியாகிவிட்டார் மனிஷா யாதவ். பெங்களூருவில் பொட்டிக் நடத்தி வந்தவர், இப்போது அதைக் கவனிக்க நேரமில்லாததால் தன் உறவினரிடம் ஒப்படைத்துவிட்டாராம். விலங்குகளை நேசிக்கும் மனம் படைத்த மனிஷா, சமீபத்திய லாக்டவுனின்போது சாக்குப்பை நிறைய உணவுப் பொட்டலங்களை எடுத்துக்கொண்டு வீதியோரத்தில் உள்ள நாய்களுக்கு உணவு அளித்து மகிழ்ந்திருக்கிறார்.
ஆயிஷா இரா.நடராசன்
|