லவ் ஸ்டோரி -காதலிக்காததுபோல் நடித்துக் கொண்டிருக்கிறேன்!



பாடலாசிரியர் யுகபாரதி

ஒருவர்மீது ஒருவர் வைக்கும் நம்பிக்கையே காதல். எனக்கோ காதல்மீதே நம்பிக்கையில்லாத காலம் ஒன்றிருந்தது. ஆயிரத்திற்கும் மேலான காதல் திரைப்பாடல்களை எழுதிய நானா இப்படிச் சொல்வது எனக் கேட்கலாம். காரணம், எங்கள் வீட்டில் நடந்த காதல் திருமணங்கள். அப்பா கம்யூனிஸ்ட் கட்சி பிரமுகராக இருந்ததால், ஊரில் யார் காதலித்தாலும் அவரிடமே அடைக்கலம் கேட்டு வருவார்கள்.

அவரும் இரண்டு பேரையும் தீர விசாரித்துவிட்டு, உள்ள உறுதியைக் கணக்கிலெடுத்து திருமணத்திற்கு ஏற்பாடு செய்துவிடுவார். ஒன்றிரண்டல்ல.  நானறிய, முப்பது திருமணங்களாவது எங்கள் வீட்டின் முற்றத்திலும் மொட்டைமாடியிலும் நடந்திருக்கும். பத்துப் பதினைந்து தோழர்கள் இணைந்து, சமூக மாற்றத்திற்கு காதலே சிறந்தவழி என்றெல்லாம் சொல்லி, சீர்திருத்தமுறைப்படி திருமணத்தை நடத்தி வைப்பார்கள்.  

ஒருவர் இன்னொருவரை விரும்புகிறார். எனவே, இணைந்து வாழ்வதே சரி. மனதுக்குப் பிடித்த வாழ்வை அமைத்துக்கொள்ள சமூகமோ சாதியோ குறுக்கே வந்தால் அதை எதிர்த்துச் சாகவும் தயார் என்பதே அப்பாவின் தீர்மானம். அம்மாவுக்கோ அதில் கொஞ்சம்கூட பிடித்தமிருக்காது. அப்பாவின் நடவடிக்கைகளைக் கடுமையாக எதிர்ப்பாள். `பெற்றவர்கள் இருக்கும்போது அவர்களுக்கு ஒரு வார்த்தை சொல்லாமல் நீங்களாக சின்னஞ்சிறுசுகள் எடுக்கும் முடிவுக்கு துணை போகிறீர்களே...’ என்பாள்.

`புரியாத வயதில் எதையோ நினைத்து, வீட்டைவிட்டே ஓடிவருபவர்களை திருத்தி வீட்டுக்கு அனுப்பாமல், இன்னொரு வீட்டைப் பிடித்துக்கொடுத்து தனியாக வாழுங்கள் என்கிறீர்களே… இதுதான் நீங்க செய்யிற புரட்சியா...’ என குமைந்துபோவாள். அத்துடன், `நமக்கும் குழந்தைகள் இருக்கிறதே. நாளைக்கு அதுகளும் இதே மாதிரி யாரையாவது கூட்டிக்கிட்டு வந்து நின்னா இப்படித்தான் பண்ணுவீங்களா...’ என்றும் பொருமுவாள்.

எல்லாவற்றையும் அமைதியாகவோ ஆழ்ந்த புன்னகையுடனோ வெற்றிலைப் பாக்கைப் போட்டுக்கொண்டே அப்பா கடந்துவிடுகிறார். பூந்தோட்டக் காவல்காரன் போல அப்பா அந்த நேரத்தில் தலையைச் சிலுப்பிக்கொண்டு அம்மாவை முறைப்பது அதீத நகைச்சுவை.

பிரச்னை எங்கே வருமென்றால் அவர் யாருக்குத் திருமணம் செய்து வைக்கிறாரோ, அந்தப்பெண் வீட்டிலிருந்தோ பையன் வீட்டிலிருந்தோ இரண்டொரு நாளில் ஒரு படை அப்பாவைக் கடும்கோபத்துடன் தாக்க வரும். அதை அவர் நேர்மையுடன் எதிர்கொள்வார். காதலின் உன்னதங்களைப் பற்றி வகுப்பெடுப்பார். காப்பியோ டீயோ கொடுத்து, `அதாவது நான் என்ன சொல்றேன்னா...’ என்று ஆரம்பிப்பார். சிலர் பொறுமையாகக் கேட்பார்கள். சிலர் வாய்க்கு வந்ததை வீசி வைவார்கள்.

எனக்குக் கெட்டவார்த்தைகள் தெரிந்ததே அப்படித்தான் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். சிலர் கொதிநிலை உச்சத்தை எட்டியதும் `நீயெல்லாம் நாசமா போயிடுவ, ஒம் புள்ளங்க தெருவுல நிக்கும். யாரு புள்ளக்கி யாருடா கல்யாணம் பண்ணி வைக்கிறது...’ எனச் சபிப்பார்கள்.
சில அம்மாக்கள், கல்லையும் மண்ணையும் வாரித் தூற்றிய சம்பவங்களும் உண்டு.

காதலை நான் உணர்ந்ததும் அதிலிருந்து ஒதுங்கியதும் அப்படித்தான்.அவ்வப்போது யாரோ ஒரு பெண், என் ரகசியங்களுடன் பேசியிருக்கிறாள். என் ரசனைகளைப் பார்த்தும் பழகியுமிருக்கிறாள். ஆனால், அவை எல்லாமே மாயத் தொடுகையைப்போல மர்மமானவை. வெளிப்பட்டால் விபரீதமென்று எனக்குள் நானே புதைத்துக் கொண்டவை.

கவனத்தையும் மீறி பதின்பருவத்தில் அகஸ்த்மாத்தாக காதல்போல ஒன்று தோன்றியது. ஆனாலும், அதை வளர்க்கவோ பெரிதாக்கவோ தெரியாமல் அம்மாவிடம் சொல்லிவிட்டேன். என்னை விரும்பியதாகச் சொன்னவளுக்கு அதிர்ச்சியிலும் அதிர்ச்சி. `போயும்போயும் உன்னைப் போய்...’ என்று திட்டிவிட்டு என் வாசமே இல்லாத திக்கைநோக்கி பறந்துவிட்டாள்.

கொஞ்சநாள் வருந்தினேன். அம்மாவுக்கு அதுவும் புரிந்தது. என்னைத் தேற்றினாள். வயதின் அவஸ்தைகளைப் பக்குவமாக விளக்கினாள். பாலகுமாரனின் கதைகளில் வரும் அம்மாபோல எதை எதையோ கூறி மடைமாற்றினாள். கவிதைகளையும் இலக்கியத்தையும் வாசிக்க வைத்தாள். தாமே தோழியென்றாள். தேவையும் ஆர்வமும் மிகும் நேரங்களில் சினிமா பாடல்களைக் கேட்க வைத்தாள். வேறொரு பெண்வாடையே என்மீது விழாதவாறு வேவு பார்த்தாள். ஒரு தாய்க்கோழியின் அடைகாப்பில் அந்நிய அன்பே என்னை அண்டாமல் போனது.

கிழித்தகோட்டைத் தாண்டாத மகனாகவே வளர்ந்தேன். அத்துடன், அம்மா என்னை கண்காணிப்பு வளையத்திற்குள்ளேயே வைத்திருந்தாள். ஏனெனில், ஊரார் அளித்த சாபங்கள் பலித்து விடுமோ என்னும் அச்சம் அவளுக்கிருந்தது. ஒருவேளை அது பலித்தே விட்டால் என்ன செய்வதென்று பதறிபடியே நாட்களை நடத்தினாள்.  

அப்பா காதல் திருமணம் செய்துவைத்து அதிகமான பாவம் செய்துவிட்டார் என்னும் நம்பிக்கை இப்போதும் அவளிடமுண்டு.
காதல் பாவம், காதல் விஷம், காதல் கொல்லும், காதல் கழுத்தறுக்கும் என்று பொத்தாம் பொதுவாகப் பேசும் சராசரி பெண்ணே அவள்.
ஆனாலும், என் எண்ணங்களில் அவள் ஏற்றிய அன்பின் ஊசியை நான் வன்முறையாகக் கருதவில்லை. வாழ்வை நெறிப்படுத்தக் கிடைத்த வாய்ப்பாகவே கருதுகிறேன்.

இப்பவும் நானெழுதியுள்ள காதல் பாடல்களைக் கேட்கையில் அப்பாடல்களில் மிகுதியாக அம்மாவையே நினைவூட்டியிருக்கிறேன். `என் தாயோடும் பேசாத மெளனத்தை நீயே தந்தாய்/ காதல், பெத்தவளும் கட்டுகிற புடவைவாசம் / அதை ஒத்ததுதான் பெண்ணவளின் புதிய நேசம் / அன்னைமடிவாசம் உன்னில் தினம் வீச /  தாயின் உடல்சூட்டை மறவாத குழந்தைபோல / உசுரே உருகுதே...’ என கிடைத்த வாய்ப்பிலெல்லாம் அம்மாவை இணைத்திருக்கிறேன்.

திருமணமான புதிதில் என் மனைவி `ஏங்க எதுக்கெடுத்தாலும் காதல் பாட்டுல அம்மா அம்மான்னு எழுதுறீங்க...’ என்றாள்.
`அம்மாவாலதானே காதலிக்க முடியாமப்போச்சு. அதனால்தான் எல்லாப்பாட்டுலேயும் அவங்கள எழுதி வஞ்சம் தீக்குறேன்...’ என்றதும் சிரித்துவிட்டாள்.

`இப்பவும் ஒண்ணும் மோசமில்ல. வேணா டிரை பண்ணுங்க...’ என்று கேலி செய்வாள். `யாரையுமே காதலிச்சிடாதன்னு சொன்ன ஒங்க அம்மாவே என்னதான் ஓகே சொன்னாங்க. அதால என்ன மட்டும் கா…’ என்று வாக்கியத்தை முடிக்காமல் நகர்ந்துவிட்டாள்.

பூந்தோட்டக் காவல்காரரான அப்பாவுக்கு இப்பவுமே நான் அம்மாபிள்ளையாகி காதலிக்காமல் போனேனே என வருத்தமுண்டு. எத்தனையோ பேரின் காதலுக்கு துணையிருந்த அவர் என் திருமண ஏற்பாடு தொடங்கிய நேரத்தில், `உண்மையாவே நீ யாரையுமே காதலிக்கலையாப்பா...’ என்றார்.
விரக்தியும் வேதனையும் நிரம்பிய தொனியில் அவரை நான் தோற்கடித்துவிட்டதுபோல உதட்டைப் பிதுக்கினார். காதலித்திருந்தால் அம்மா தோற்றிருப்பாள்.

திருமணத்திற்குப் பின்னான என் வாழ்வில் எத்தனையோ மாற்றங்கள். காதலித்திருந்தால் கூட இப்படி ஒருத்தி எனக்குக் கிடைத்திருக்கமாட்டாள். அமைதியும் நிதானமும் கொண்ட அவள், என் சொற்களை மீறாதவள். எழுதத் தொடங்கியதும் எட்டி நின்று வேடிக்கை பார்ப்பாள். ஒவ்வொரு காதல் பாடலை முடித்து வாசிக்கையிலும் `ஒங்கள எப்படிங்க காதலிக்காம இந்தப் பொண்ணுங்க விட்டாங்க...’ என்பாள். `இதுக்குமேலும் எதுக்கும்மா ஒருத்தி...’ என்று பொய்யாகச் சமாளிப்பேன்.

அம்மாவும் மனைவியும் காதலின் எதிரிகளல்ல. கூடுதலான காதல் எதுவென்று உணர்த்துபவர்கள்.  ஆனாலும், நானெங்கே காதலிக்காமல் இருக்கிறேன்? காதலிக்காததுபோல் நடித்துக் கொண்டிருக்கிறேன்!

செய்தி: நா.கதிர்வேலன்

படங்கள்: ஆ.வின்சென்ட் பால்