Face B(JP)ook -பாஜகவின் கைப்பாவையா ஃபேஸ்புக்கும் வாட்ஸ்அப்பும்..?
மினி தொடர் 1
இந்தியாவில் பிஜேபியின் வளர்ச்சி பற்றி பலவிதமான சதிக் கோட்பாடுகள் உலவிக் கொண்டிருக்கின்றன. அதில் ஒன்று மீடியாக்களை பிஜேபி விலைக்கு வாங்கிவிட்டது என்ற தியரி. குறிப்பாக, சமூக வலைத்தளங்களான ஃபேஸ்புக், வாட்ஸ்அப் போன்ற நுண் இணையவெளிகளை பிஜேபியும், ஆர்எஸ்எஸ் அமைப்பும் தங்களுக்கான அமைப்பாக வளைத்துள்ளன என்ற பேச்சு பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது.
கடந்த வாரம் ‘வால்ட் ஸ்ட்ரீட் ஜர்னல்’ என்ற அமெரிக்க பத்திரிகை, தனது வணிகக் காரணங்களுக்காக பிஜேபியினர் வெளிப்படுத்தும் வெறுப்புப் பேச்சுக்களை ஃபேஸ்புக் தடை செய்யாமல் இருக்கிறது என ஒரு கட்டுரையை வெளியிட்டுள்ளது.ஃபேஸ்புக் இந்தியாவின் பப்ளிக் பாலிசி இயக்குனர் அங்கி தாஸ் தனது ஊழியர்களிடம் பேசியதை அந்தக் கட்டுரை குறிப்பிடுகிறது.
அதில், ‘ஃபேஸ்புக்கின் விதிகளை மீறிய பதிவுகள் எழுதியதற்காக பிஜேபியினரை தண்டிப்பது, இந்தியாவில் தமது வணிக வளர்ச்சியைப் பாதிக்கும்’ என்பதாக அவர் பேசியிருக்கிறார். இந்த அங்கி தாஸின் நெருங்கிய உறவினர் ஒருவர் ஆர்எஸ்எஸ் அமைப்புடன் தொடர்பில் இருக்கிறார் என்பதையும் நாம் கவனிக்க வேண்டும்.
தெலுங்கானாவைச் சேர்ந்த பாஜக சட்டமன்ற உறுப்பினரான டி.ராஜா சிங் இஸ்லாமியருக்கு எதிரான வெறுப்புக் கருத்து ஒன்றை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். பல்வேறு ஃபேஸ்புக் பயனாளர்கள் அவரது கருத்துக்கு கண்டனம் தெரிவித்திருந்தனர். அந்தப் பதிவை நீக்க வேண்டும் என ஃபேஸ்புக் நிறுவனத்துக்குக் கோரிக்கை வைத்தபடி இருந்தனர்.
ஆனால், ஃபேஸ்புக் அதை நீக்கவில்லை. ‘வால் ஸ்ட்ரீட் ஜர்னலி’ன் அந்தக் கட்டுரையைத் தொடர்ந்து உருவான சர்வதேச அழுத்தங்களுக்குப் பிறகே ஃபேஸ்புக், ராஜா சிங்கின் சில பதிவுகளை நீக்கியிருக்கிறது.
இதைத் தொடர்ந்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ‘பிஜேபி & ஆர்எஸ்எஸ் அமைப்புகள்தான் ஃபேஸ்புக் & வாட்ஸ்அப் போன்றவற்றை இந்தியாவில் கட்டுப்படுத்துகின்றன. இவை போலியான தகவல்களை தங்கள் தேர்தல் வெற்றிக்காகப் பரப்புகின்றன. இதை அமெரிக்கப் பத்திரிகை ஒன்று அம்பலப்படுத்தியிருக்கிறது’ என்று டுவீட் செய்தார்.
பிஜேபி-யின் ரவிசங்கர் பிரசாத் இதற்கு ‘மக்களைக் கவர முடியாமல் தோற்றுப் போனவர்கள்தான் இவ்வுலகையே பிஜேபியும் ஆர்எஸ்எஸ் அமைப்பும் கட்டுப்படுத்துவதாகச் சொல்வார்கள்’ என்றிருக்கிறார். மேலும், ‘கேம்ப்ரிட்ஜ் அனலிட்டிகா மற்றும் ஃபேஸ்புக்கை தேர்தலுக்குப் பயன்படுத்த முயன்று கையும் களவுமாக பிடிபட்ட உங்களுக்கு பாஜகவை குற்றம்சாட்ட என்ன தகுதியிருக்கிறது’ என்றும் கேட்டிருக்கிறார்.
ரவிசங்கரின் பேச்சு காங்கிரஸை கார்னர் செய்வதாக இருக்கிறதே தவிர பாஜக ஃபேஸ்புக்கை பயன்படுத்தவில்லை என்று சொல்வதாக இல்லை என்பதை நாம் கவனிக்க வேண்டும்.இந்தியாவில் மிக வலிமையான ஊடகமாக ஃபேஸ்புக் உருவெடுத்திருக்கிறது. இன்றைய தேதியில் இந்தியாவில் மட்டும் சுமார் முப்பத்தாறு கோடிக்கும் மேற்பட்டவர்கள் ஃபேஸ்புக்கைப் பயன்படுத்துவதாகத் தெரிகிறது.
இது இந்தியாவின் மக்கள் தொகையில் கிட்டத்தட்ட நான்கில் ஒரு பங்கு. அதாவது, நாலு இந்தியரில் ஒருவர் ஃபேஸ்புக்கைப் பயன்படுத்துகிறார். இத்தனை செல்வாக்கு நிறைந்த இந்தத் தளத்தை ஒவ்வொரு அரசியல் கட்சியும் பயன்படுத்த நினைப்பதில் தவறு இல்லைதான். ஆனால், விதிகளை வளைத்து அந்த நிறுவனத்தையே தனது பகடைக் காயாக மாற்றி விளையாடுவதுதான் விவகாரம்.
தொடக்கத்தில் பிஜேபியின் வளர்ச்சிக்கு நவீன தொழில்நுட்பங்களை அவர்கள் எவ்வளவு லாவகமாகக் கையாள்கிறார்கள்... என வியப்புடன் பலரும் சொல்லி வந்தார்கள். குறிப்பாக, ஃபேஸ்புக், வாட்ஸ்அப் போன்ற சமூக வலைத்தளங்களை அவர்கள் மிகவும் ஆக்கபூர்வமாக, தங்கள் பிரசார வாகனமாகப் பயன்படுத்தி வருவதாக சொல்லப்பட்டது. கடந்த 2017ல் அமித்ஷா ஒரு கூட்டத்தில் இதனை பகிரங்கமாகச் சொன்னார்.
சுமார் அறுபது லட்சம் வாட்ஸ்அப் பயன்பாட்டாளர்கள் கொண்ட வலைப்பின்னல் ஒன்று தம்மிடம் இருப்பதாகவும் அதைக்கொண்டு தங்களுக்கு வேண்டிய எந்த ஒரு கசப்பான, இனிப்பான, புளிப்பான செய்தியையும் மக்களிடம் கொண்டு சேர்க்க தம்மால் முடியும் என்றும், பிஜேபியின் வெற்றிக்கு இப்படியான வலைப்பின்னலும் ஒரு முக்கியக் காராணம் என்றும் அதற்கான சேவகர்களுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் பேசினார்.
அமித்ஷாவின் இந்த வெளிப்படையான பேச்சு அப்போதே கடும் அதிர்வலைகளை எழுப்பியது. கசப்பான, இனிப்பான செய்திகள் என்றால் என்ன பொருள்..? தாங்கள் நினைத்தால் எந்த ஒரு பொய்யையும் உண்மை போல மக்களிடம் எடுத்துச் செல்ல இயலும் என்ற உட்கருத்தும் இதில் இருக்கிறதுதானே...
என்று விவாதிக்கப்பட்டது.சமூக வலைத்தளங்களை பிஜேபி பயன்படுத்தும் விதத்தை மதிநுட்பமாகப் பார்க்கும் பார்வை போய், ஒரு கட்டத்தில் இந்த சமூக வலைத்தளங்களைத் தமது அதிகாரத்தால் மிரட்டியும், செல்வாக்கைக் காட்டி இணங்க வைத்தும் தமது கருத்தியல்களைப் பரப்பிக் கொண்டிருக்கிறார்கள் என்ற உண்மை புலப்படத் தொடங்கியது. இப்படியான சூழலில்தான் அமெரிக்கப் பத்திரிகையின் அந்தக் கட்டுரை ஒரு டைம் பாம் போல வெடித்திருக்கிறது. ராகுலின் பேச்சை ஆதரித்தும் மறுத்தும் இரு தரப்பிலிருந்தும் கருத்துகள் டுவிட்டர் தளத்தில் அனலடித்துக் கொண்டிருக்கின்றன. தாங்கள் எந்த ஒரு கட்சி அல்லது அரசியல் தரப்புக்கும் ஆதரவானவர்கள் அல்ல என்று ஃபேஸ்புக் மறுத்திருக்கிறது.
பொதுவாக, ஃபேஸ்புக்கில் சர்ச்சைக்குரிய அல்லது விபரீதமான கருத்துக்கள் பகிரப்படும்போது அதனை நீக்கவும், கட்டுப்படுத்தவும் முகநூல் பலவிதமான சமூக தரக் கட்டுப்பாடுகளை வைத்திருக்கிறது. ஆபாசம், தனிமனித அவதூறு என இவற்றில் ஏதாவது ஒரு பிரிவின் கீழ் அந்தப் பதிவைக் கொண்டு சென்று நீக்க முடியும். தொடர்ந்து வெறுப்புப் பேச்சுக்களிலும் பிரிவினைவாத உரையாடல்களிலும் ஈடுபடுபவர்களை ஃபேஸ்புக் நினைத்தால் ஆபத்தான தனிநபர்கள் மற்றும் அமைப்புகள் என்ற பிரிவின் கீழ் நீக்க முடியும்.
ஆனால், ஃபேஸ்புக் இதைச் செய்வதில்லை என்பதுதான் நிதர்சனம். பாஜக தலைவர்கள் தொடங்கி அடிமட்டத் தொண்டர்கள் வரை பலரும் நாளொரு பொய்யும் பொழுதொரு புரட்டுமாக போலியான செய்திகள், கிராஃபிக் படங்கள், தவறான தகவல்கள்... என பரப்பிக் கொண்டிருக்கும்போதும் ஃபேஸ்புக் இவற்றை எல்லாம் அனுமதித்துக் கொண்டுதான் இருக்கிறது.
ஃபேஸ்புக் மற்றும் பிஜேபி இடையேயான இந்த கள்ளக்கூட்டு தொடர்பாக, நாடாளுமன்ற கூட்டுக் குழுவில் ஆராயப்பட வேண்டும் என்று கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் சீதாராம் யெச்சூரி கோரிக்கை வைத்திருக்கிறார். இந்த விசாரணை முடிவடைந்து அறிக்கை வெளியிடப்படும் வரை தேர்தல் ஆணையம் உள்ளிட்ட அரசியல் சாசன அமைப்புகளோடு இணைந்து ஃபேஸ்புக் செயல்படுவதைத் தடை செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைத்திருக்கிறார்.
வழக்கம் போலவே பிஜேபியும் ஃபேஸ்புக் நிர்வாகமும் இதனை மறுத்துவருகிறார்கள். ஃபேஸ்புக் மட்டுமில்லை... வாட்ஸ்அப்பும் பாஜகவின் கைப்பாவைதான் என்பதை பல்வேறு அரசியல் நோக்கர்கள் திரும்பத் திரும்பச் சொல்லி வருகிறார்கள்.உண்மை என்ன? இந்தியாவில் ஃபேஸ்புக்கும் வாட்ஸ்அப்பும் நுழைந்தது எப்படி? இதன் பின்னணியில் யார் யார் இருக்கிறார்கள்?
(தொடர்ந்து தேடுவோம்...)
இளங்கோ கிருஷ்ணன்
|