உள்ளம் உருகுதய்யா பாடலை எழுதியவர் ஒரு பெண்!



உள்ளம் உருகுதய்யா - முருகா
உன்னடி காண்கையிலே
அள்ளி அணைத்திடவே - எனக்குள்
ஆசை பெருகுதப்பா
பாடிப் பரவசமாய் - உன்னையே
பார்த்திடத் தோணுதய்யா
ஆடும் மயிலேறி - முருகா
ஓடி வருவாயப்பா...

- இந்தப் பாடல் ஒலிக்கும் திசையில் செல்கின்ற நாத்திகர்கள் கூட சில நிமிடங்கள் நின்று உருகி கேட்பார்கள். அப்படி ஒரு குரல்; அழகான வரிகள்.

டி.எம்.செளந்தர்ராஜன் ஒவ்வொரு மேடையிலும் இந்தப் பாடலைப் பாடி முடித்ததும் பின்வரும் தகவலைக் கட்டாயம் கூறுவார்:
‘‘ஒவ்வொரு கிருத்திகைக்கும் பழனிக்குச் சென்று முருகனை வழிபடுவது வழக்கம். எப்போதும் வழக்கமாக ஒரு லாட்ஜில் தங்குவேன். அங்கே சிறுவன் ஒருவன் உதவியாளனாக வேலை செய்தான். அடிக்கடி ஒரு பாடலை முணுமுணுத்துக் கொண்டே இருப்பான்.

ஒருமுறை அவனிடம் முழுப்பாடலையும் சத்தமாக பாடச்சொல்லி கேட்டேன். பாடலின் சொல்லிலும் பொருளிலும் சொக்கிப்போனேன். அதைவிட ஆச்சரியமான விஷயம் முருகன் பாடலைப் பாடிய அந்தச் சிறுவன் ஒரு முஸ்லீம்! பாடலை எழுதியது யார் என்று விசாரித்தேன். தட்டுத் தடுமாறி யாரோ ஒரு பாட்டி சொல்லித் தந்ததாகக் கூறினான்‘பரவாயில்லை. முழுப்பாடலையும் சொல்லு...’ என்று ஒவ்வொரு வரியாக அந்தப் பையன் சொல்லச் சொல்ல, அதை அப் படியே எழுதிக்கொண்டேன்.

பழனியிலிருந்து சென்னை வந்ததும் பாடலில் ‘அடா’ வரும் இடங்களை மட்டும் ‘அய்யா’ என்று பாடி பதிவு செய்தேன். வேறு எந்த மாற்றமும் செய்யவில்லை. அந்தப் பாடல்தான் ‘உள்ளம் உருகுதய்யா’... ஆம், நம் உள்ளம் உருகுதய்யா...’’- இப்படி டி.எம்.எஸ்., கூறியவுடன் கலை நிகழ்ச்சிக்கு வந்த மொத்த கூட்டமும் கைகளைத் தட்டும்.எப்படியாவது இந்தப் பாடலை எழுதியவர் யார் என்ற உண்மையை டி.எம்.எஸ். தேடிக்கொண்டே இருந்தார். பாடல் பிரபலமாகி பல வருடங்கள் கடந்தன.

சென்னையில் ‘இமயத்துடன்...’ எனும் தலைப்பில் டி.எம்.எஸ். பற்றிய ஒரு தொலைக்காட்சித் தொடருக்கு முதல்நாள் பூஜை போடப்பட்டது. அதற்காக தம்புச்செட்டித் தெருவில் உள்ள காளிகாம்பாள் கோயிலுக்குச் சென்றிருந்தார்கள் டி.எம்.எஸ்ஸும் இயக்குநர் விஜய்ராஜும்.

பூஜை முடிந்ததும் அங்கிருந்த அர்ச்சகர் ஒருவர் அவர்களைத் துர்க்கை சந்நிதிக்கு அழைத்துச் சென்றார். அங்கே ஒரு கல்வெட்டில் ‘உள்ளம் உருகுதடா...’ என்கிற அந்தப் பாடல் செதுக்கப்பட்டு, அதன் அடியில் ஆண்டவன் பிச்சை என அதை எழுதியவர் பெயரும் பதிக்கப்பட்டு இருந்தது!
அதைக்கண்டு வியப்பும் திகைப்புமாய் நின்றார் டி.எம்.எஸ்.

ஆண்டவன் பிச்சை ஒரு பெண்!
சென்னையைச் சேர்ந்த ஆண்டவன் பிச்சைக்கு பெற்றோர் வைத்த பெயர் மரகதவல்லி. இரண்டு வயதிலேயே தாயை இழந்த மரகதவல்லியை அவரது தந்தைவழிப் பாட்டி சுந்தரி அம்மாள்தான் வளர்த்து வந்தார். தீவிர முருக பக்தரான அவருக்கு சிறுவயதிலேயே திருமணம் செய்து வைத்துவிட்டார்கள்.

அடுத்தடுத்து ஒன்பது குழந்தைகளுக்குத் தாயானார். ஐந்தாவது பிரசவம் மிகக் கடுமையாக இருந்தது. கந்த சஷ்டிக்கு இரண்டு நாட்கள் முன்பு ஆண் குழந்தை பிறந்தது. கந்த சஷ்டி நாளன்று மாலை, குழந்தை முருகனை நினைத்து ஆனந்த சாகரத்தில் மூழ்கிய மரகதவல்லி, முதல் பாடலைப் பாட ஆரம்பித்தார்.

பிரசவ அறையில் உதவிக்கு இருந்த பெண் ஓடிச்சென்று பென்சிலும் காகிதமும் கொண்டு வந்து அப்படியே அவற்றை எழுதினார். படிப்பறிவு இல்லாத மரகதவல்லி அன்று துவங்கி இருநூறுக்கும் மேற்பட்ட பாடல்களை படைத்தும் பாடியுள்ளதும் ஆச்சர்யம்.இவரின் பல பாடல்களை டி.எம்.எஸ். பாடியுள்ளார். முருகனின் அழகையும் அன்பையும்தான் அதிகம் வர்ணித்து எழுதுவார். அனைத்துமே முருகன் பாடல்கள்தான். ஆறு படை வீட்டை அழகாக வர்ணித்து, அன்பு வார்த்தைகளோடு சேர்ப்பார்.

ஆண், பெண் என அனைவரும் முருகனைக் கடவுளாகப் பார்ப்பதைத் தாண்டி காதலோடு பார்க்கவேண்டும். அவனோடு ஐக்கியமாக வேண்டும். அதனால்தான் முருக பக்தர்கள் பலர் ஒருமையில் அன்போடு வாடா முருகா, போடா முருகா என அழைப்பார்கள். முருகன் மீதுள்ள காதலின் வெளிப்பாடுதான் இது என அவர் அடிக்கடி கூறுவார். கவிஞர் வாலி, ‘கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும்...’ பாடல் எழுதவும் இதுவே காரணம்.

முதுமையில் துறவறம் பூண்ட மரகதவல்லி, சென்னை காளிகாம்பாள் கோயிலில்தான் இருந்தார். பலர் அவரை மனநலம் பாதிக்கப்பட்டவர் என நினைப்பார்கள். எப்போதும் முருகன் பாடலைப் பாடிக்கொண்டிருந்தார். பின் இறைவனடி சேர்ந்தார். இறப்பதற்கு சில காலம் முன் கோயில் கோயிலாக போய் முருகன் துதியைப் பாடினார்.

ஒருமுறை காஞ்சி மடத்தில் அமர்ந்து பாடினார். அப்போது சிலர் இவரது தோற்றத்தை வைத்து பிச்சைக்காரி என நினைத்து துரத்தினர். காஞ்சி மஹா பெரியவர் அவரை அருகே அழைத்து பிரசாதமும் கொடுத்து ‘ஆண்டவன் பிச்சை’ என்று பெயர் சூட்டினார்!அவர் சென்னை காளிகாம்பாள் கோயிலில் பாடிய பாடல்களில் ஒன்றுதான் ‘உள்ளம் உருகுதடா’!

கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும்...

‘‘நான் ஐயங்கார் குடும்பத்தில் ஸ்ரீரங்கத்தில் பிறந்து வளர்ந்தவன். எப்படி எங்கள் குடும்பம் இருந்திருக்கும் என்று சொல்லத் தேவையில்லை.
ஆனால், நான் இன்று நெற்றியில் குங்குமமும், விபூதியும் பூசுகிறேன். காரணம், முருகன் மீதான காதல். டி.எம்.எஸ். அவர்களின் குரல் மிகவும் பிடிக்கும். அவரின் விலாசத்தை எப்படியோ கஷ்டப்பட்டு வாங்கிவிட்டேன்.

போஸ்ட் கார்டுலே ‘கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும்...’ என எழுதி அனுப்பிவிட்டேன். இருக்கும் பிஸியில் என் கார்டை எங்கு பார்ப்பார் என்று நினைத்து மறந்துவிட்டேன். முருகனின் கருணை டி.எம்.எஸ்., என் கார்டைப் பார்த்து, அவரே அதற்கு மெட்டும் போட்டு பாடிவிட்டார். பிறகு எனக்கு அவரிடம் இருந்து கடிதம் வந்தது. ‘‘என் முருகன் பாடலை நீ எழுதிக் கொடுத்தாய். மிகவும் நன்றாக இருந்தது.

நானே இசை அமைத்து பாடி உள்ளேன். வரும் திங்கள் அன்று வானொலியில் காலை 06.30 மணிக்கு ஒலிபரப்பாகும். கேட்டுவிட்டு உன் கருத்தை அனுப்பு. மெட்ராஸ்க்கு வா. உனக்கு நான் சன்மானம் தரணும். இதுபோன்று பாடல்கள் நிறைய நீ எழுத வேண்டும்...’ என்று எழுதியிருந்தார். இது டி.எம்.எஸ். போட்ட பிச்சை...’’ என்று பல இடங்களில் பதிவு செய்துள்ளார் கவிஞர் வாலி.

செய்தி: திலீபன் புகழேந்தி

படங்கள்: ஆ.வின்சென்ட் பால்