கொரோனா தொற்றில் இந்தியா சொதப்பக் காரணம் Datasஇல் கவனம் செலுத்தாததுதான்!



கொரோனா நமக்கு எத்தனையோ கசப்பான பாடங்களைக் கற்றுக் கொடுத்திருக்கிறது. அவற்றில் முக்கியமானது நமது தகவல் சேகரிப்பு மற்றும் தொகுத்தல் முறையில் இருக்கும் குறைபாடுகள் பற்றிய புரிதல்.
முன்பும் பல்வேறு அறிஞர்கள் பல்வேறு சமயங்களில் இது பற்றி ஏற்கெனவே பல ஆண்டுகளாகப் பேசி வந்திருந்தாலும் இந்த கொரோனா சூழல் இது பற்றிய தீவிரமான விமர்சனங்களையும் உரையாடல்களையும் உருவாக்கியிருக்கிறது.
தகவல்கள்தான் செல்வம் என்று சொல்வார்கள்.
ஒரு தேசம் முறையாக இயங்க அதன் பல்வேறு முனைகளிலும் இருந்து பெறப்படும் பல்வேறு வகையான தகவல்களை முறையாக தொகுத்தும் பகுத்தும் அணுக வேண்டியது அவசியம்.

தகவல்களைப் பெறுவது, ஆவணப்படுத்துவது, அதைக் கொண்டு திட்டங்கள் வகுப்பது, வகுத்த திட்டங்களை நடைமுறைப்படுத்துவது, நடைமுறைப்படுத்துதலை ஆவணப்படுத்திக் கண்காணிப்பது, விளைவுகளைப் பதிவு செய்வது, ஆராய்வது, அடுத்த திட்டங்களில் பழைய திட்டங்களின் பாடங்களை கவனத்தில் கொள்வது என்று ஓர் அரசு உயிரோட்டமாக இயங்க அடிப்படை அஸ்திவாரமே தகவல்கள் எனும் டேட்டாதான்.

பல்வேறு வகையான கணக்கெடுப்புகள் மூலமாக திரட்டப்படும் புள்ளிவிவரங்கள், சாம்பிள்கள் ஆகியவைதான் இந்த டேட்டாவின் ஆதாரம்.
ஆக்கபூர்வமான அரசு ஒன்றிடம் தன் குடிமக்கள் பற்றிய சகலவிதமான டேட்டாவும் விரல் நுனியில் இருக்க வேண்டும். அப்படி இருக்கும் அரசு ஒன்றால்தான் போர் உள்ளிட்ட எந்த அசாதாரணமான சூழ்நிலையையும் எளிதாகச் சமாளிக்க முடியும்.

கொரோனாவும் கிட்டத் தட்ட போர்ச்சூழல் போன்ற நெருக்கடி நிலைதான். ஆனால், போதுமான டேட்டா இல்லாமலும், இருக்கும் டேட்டாவுக்கு இடையிலான தொடர்புகள் போதாமையாலும் நமது மத்திய, மாநில அரசுகள் இந்த கொரோனா காலத்தில் செய்யும் சொதப்பல்கள் கொஞ்ச நஞ்சமல்ல. இந்தியாவில் ஆவணப்படுத்துதல் என்பது புதிதல்ல. அர்த்தசாஸ்திரம் முதல் அய்னி - அக்பரி வரை இங்கு பல்வேறு வகையான அரசியல் நூல்கள் எழுதப்பட்டுள்ளன.

அவை ஒவ்வொன்றும் குடிமக்கள் சார்ந்த விவரங்களை எப்படித் தொகுப்பது, குடிமக்களை எப்படிக் கையாள்வது, நீதி பரிபாலனம், சட்ட ஒழுங்கு பரிபாலனம் செய்வது எப்படி என்றெல்லாம் விரிவாகப் பேசுகின்றன. அவை ஒவ்வொன்றும் அந்தந்தக் காலத்துக்கான நீதிகளை மையமாகக் கொண்டு இயங்கின. குறிப்பாக, நிலவருவாய் அடிப்படையில் மக்களை வருமானத்துக்கான ஆதாரமாகப் பார்த்தன.

ஆங்கிலேயர்கள் காலத்தில் நவீன சமூகங்களின் உலகளாவிய எழுச்சியாலும் சில தனிமனி தர்களின் முயற்சியாலும் இந்தியாவிலும் தகவல் சேகரிப்பின் நவீன வடிவங்கள் நடைமுறைக்கு வந்தன. ஆனால், தொடக்க காலங்களில் அது பேரளவில் கல்கத்தாவுக்கும் லண்டனுக்குமான கடிதப் பரிமாற்றங்களுக்கான தகவல் திரட்டல்களாகவே இருந்தன. பிரிட்டீஷாரின் வளமான காலனிகளில் இந்தியா முதன்மையானது என்பதால், பொருளாதாரம், விவசாயம், நிலவருவாய், தொழில்துறை, உற்பத்தித் தொழில்கள் எனப் பல்வேறு வகையான துறைசார்ந்த தகவல்களும் இந்தக் காலகட்டத்தில் லண்டனுக்குச் சென்றன.

அப்போது முதலே, அதாவது 1930 முதலே புள்ளியியல் துறைக்கு ஒரு மையப்படுத்தப்பட்ட துறைசார் தலைமை ஒன்றை உருவாக்க, பவ்லி - ராபர்ட்சன் முதல் சுப்பிரமணியம் (1960ம் ஆண்டுகளில்) வரை முயன்றனர்.இந்திய புள்ளியியல் நிறுவனம் (Indian Statistical Institute - ISI) கல்கத்தாவில் தொடங்கப்பட்டது. இந்திய புள்ளியியல் துறையின் தந்தை என்று வர்ணிக்கத் தகுதியான பிரசாந்த் சந்திர மஹாலனோபிஸ் பிரசிடென்சி பல்கலைக்கழகத்தின் புள்ளியியல் ஆய்வகத்தின் மூலம் 1931ம் ஆண்டு இதை நிறுவினார். நேருவின் நம்பிக்கைக்குரிய மஹாலனோபிஸ், சுதந்திர இந்தியாவின் முதல் திட்டக்குழுவின் உறுப்பினர்களில் ஒருவராகவும் இருந்தார்.

திட்டக் கமிஷன் உத்தரவின்படி மத்திய புள்ளியியல் அமைப்பு (CSO) 1950ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, மஹாலனோபிஸ்க்கு இருந்த சர்வதேச அங்கீகாரத்தின் வழியாகவும் அவருக்கு இருந்த அனுபவங்களின் வழியாகவும் அமெரிக்கா மற்றும் ரஷ்யாவுக்கு அடுத்த நிலையில் மிகச் சிறந்த கட்டுமானம் கொண்ட புள்ளியியல் அமைப்பாக தேசிய சாம்பிள் சர்வே அமைப்பு (NSSO) உருவானது.   

இந்த அமைப்புகள் ஒவ்வொன்றுமே இந்தியாவின் பல்வேறு துறை சார்ந்த பங்களிப்புகளில் மிக முக்கியப் பங்காற்றியிருக்கின்றன. குறிப்பாக என்.எஸ்.எஸ்.ஓ., கடந்த எழுபதாண்டுகளாக மேற் கொண்ட சர்வேக்கள் அனைத்துமே முக்கியமானவை. வேலைவாய்ப்பு, நுகர்வு, சுகாதாரம், கல்வி, நிலவுடைமை, குடிப்பெயர்வு, விவசாயம், சமூகத் தேவைகள் தொடர்பாக சுமார் எண்பதுக்கும் மேற்பட்ட நாடு தழுவிய பெரிய கணக்கெடுப்புகளை இந்த நிறுவனம் நிகழ்த்தியிருக்கிறது.

இந்த சாம்பிள் சர்வேக்கள் வேலை வாய்ப்பு உள்ளிட்ட பல முக்கிய விவகாரங்களில் முடிவெடுக்க அரசுக்கு உதவியிருக்கின்றன.
தேசிய மக்கள் தொகைக் கணக்கெடுப்பு இந்த அமைப்பின் இன்னொரு மகத்தான சாதனை. நாடு முழுதும் உள்ள அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் என பெரும்படை திரண்டு ஈடுபட்ட மிகப் பெரிய கணக்கெடுப்பு இது.

இந்தியா முழுதும் உள்ள சுமார் இருபது கோடிக்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சந்தித்து நிகழ்த்தப்பட்ட இந்தக் கணக்கெடுப்பு சர்வதேச அளவில் மிகப் பெரிய புள்ளியியல் சவால்களில் ஒன்று. தேசிய குடும்ப ஆரோக்கியத்துக்கான கணக்கெடுப்புகள், தேசிய கல்விக்கான ஆண்டறிக்கை ஆகியவற்றிலும் இந்த அமைப்பின் பணி மகத்தானது. இன்னொரு கசப்பான உண்மையைப் பேச வேண்டுமானால் இந்தக் கணக்கெடுப்புகள் எந்த அளவுக்கு கடும் உழைப்பைச் செலுத்தி செய்யப்பட்டவையோ அதைவிட போதாமைகளும் நிறைந்தவை என்பது குறித்தும் உரையாட வேண்டும்.
இதை நாம் நேர்மையாக ஏற்றுக்கொள்ள வேண்டும். இதன் முக்கியமான போதாமைகளில் ஒன்று, இப்படி மேற்கொள்ளப்படும் ஏஜென்சிகளிடையே போதுமான தொடர்பின்மை.

இந்த சர்வேக்களை நாடு முழுதும் மாநிலத்துக்கு மாநிலம், ஊருக்கு ஊர் வேறு வேறு அமைப்புகள் மேற்கொள்கின்றன. இவற்றுக்கு இடையே எந்தவிதமான தகவல் பரிமாற்றமும் இல்லை. இவை ஒவ்வொன்றும் தங்களுக்குத் தெரிந்த அளவில் சுதந்திரமாகவும் தன்னிச்சையாகவும் கணக்கெடுப்பில் ஈடுபடுகின்றன. இதனால், ஒற்றைத்தன்மை இல்லாமல் பல குழப்பங்கள் நிறைந்ததாக இவை இருக்கின்றன.இந்த குழப்பங்களால் சர்வேக்களின் நம்பகத்தன்மை கேள்விக்குரியதாக மாறிவிடுகிறது.

சமீபத்திய உதாரணம், மிகத் தாமதமாக வெளியிடப்பட்ட 2017 - 18ம் ஆண்டுக்கான கொள்முதல் செலவுகள் பற்றிய டேட்டா.அறிவிக்கப்பட்ட உடனேயே இதில் குளறுபடிகள் இருந்ததாக திரும்பப் பெறப்பட்டது. இதேபோல் 2011 - 12 ஆண்டுக்கான வேலை வாய்ப்பு தொடர்பான சர்வேயையும் சொல்ல முடியும். இந்த குறையுடைய டேட்டா சாம்பிள்கள் இந்திய புள்ளியியல் துறையின் போதாமையைச் சொல்லுகின்றன.இந்திய நோயாளிகள், இந்தியாவின் ஆரோக்கியம் தொடர்பாக நம்மிடையே உள்ள தகவல்களில் அவ்வளவு போதாமைகள் உள்ளன.

இவை மாநிலத்துக்கு மாநிலம் எப்படி மாறுபடுகிறது, தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் ஓரளவு உட்கட்டுமானம் இருக்கும்போது உத்திரப்பிரதேசம், பீகார் போன்ற மாநிலங்கள் எப்படி சுகாதார விஷயங்களில் மக்களின் நிலை குறித்து முழு அறியாமையில் உள்ளன... என்பதை எல்லாம் கொரோனா புரிய வைத்துள்ளது.

தனியார் மற்றும் அரசுத் துறை என எல்லா மருத்துவ நிறுவனங்களிலுமே இந்தப் போதாமை இந்தியா முழுதும் உள்ளதையும் கொரோனா உணர்த்தியுள்ளது. திட்டமிடல் எல்லா வகையிலும் ஓர் அரசுக்கு இன்றியமையாத பணி. அதைச் செவ்வனே செய்வதில் புள்ளியல் ஆய்வு நிறுவனங்களின் பணி முக்கியமானது.

போதுமான உட்கட்டுமானங்களை ஏற்படுத்துவது, ஆள் பற்றாக்குறையைப் போக்குவது, நிதி ஒதுக்கீடுகளை நியாயமாக அதிகரிப்பது, தீவிரமான கணக்கெடுப்புப் பணிகளை முடுக்கிவிடுவது ஆகியவற்றை போர்க் கால அடிப்படையில் அரசு செய்ய வேண்டிய நேரம் இது. இந்திய புள்ளியியல் துறைக்கு இப்போது ஒரு மறுமலர்ச்சி தேவை. அதுவே நாளைய இந்தியாவை வடிவமைக்கும் முக்கிய சிற்பி என்பதை ஆள்வோர் மறக்கக் கூடாது.

இளங்கோ கிருஷ்ணன்