அணையா அடுப்பு - 14



அருட்பெருஞ்ஜோதி
அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை
அருட்பெருஞ்ஜோதி

தங்கமானது இரும்பு!

வள்ளலார் சங்கம் அமைத்த காலத்தில் அவர் புதிய சீடர்களை, நண்பர்களைப் பெற்றார். சிலரை இழக்கவும் செய்தார்.பித்தச்சாமி என்கிற வீராசாமி நாயக்கர் அவர்களில் ஒருவர்.சென்னை வாழ்வை வள்ளலார் துறந்தபோதே, அவருடன் சென்ற வெகு சிலரில் இவரும் ஒருவர்.உடல் மற்றும் மனரீதியான பிரச்னைகள் இவருக்கு ஏராளமாக இருந்ததை வள்ளலார், அந்நாளில் நண்பர்களுக்கு எழுதிய கடிதங்கள் வாயிலாக அறிய முடிகிறது.
சன்மார்க்க சங்கம் அமைக்கப்பட்ட காலக்கட்டங்களில் அடிக்கடி வள்ளலாரிடம் வருவதும், சொல்லாமல் கொள்ளாமல் எங்காவது செல்வதுமாக இருந்திருக்கிறார் வீராசாமி.

ஒரு கட்டத்தில், தானே குருவென்று அறிவித்துக் கொண்டு, வள்ளலாரை நாடி வந்தவர்களில் சிலரை அழைத்துகொண்டு தனியே சென்றிருக்கிறார்.
சாதி, மதப் பிடிப்புகளைத் துறக்க வேண்டும் என்கிற வள்ளலாரின் கருத்துகளில் மாறுபாடு கொண்ட சிலர் வீராசாமியின் பின்னால் திரளவும் செய்திருக்கிறார்கள்.சென்னையில் இருந்த ரத்ன முதலியாருக்கு வள்ளலார் எழுதிய கடிதம் ஒன்றில், “என்னிடம் அறிய வேண்டிய விஷயங்களை அறிய முயற்சிக்காமல் தான்தோன்றி சாமியாக, மனம் சென்ற வழி சென்று பித்தச்சாமி என்று தனக்கு விசேஷ பெயர் சூட்டிக் கொண்டிருக்கிறார்...” என்று
இவரைப்பற்றிக் குறிப்பிடுகிறார்.

அதன் பின்னர், பித்தச்சாமிக்கும் வள்ளலாருக்கும் தொடர்பு இருந்ததற்கான ஆதாரங்கள் எதுவுமில்லை.அதே சமயத்தில் கடலூர் அப்பாசாமி செட்டியார் போன்ற புதிய சீடர்களும், வள்ளலார் வழியில் சன்மார்க்க நெறிக்கு வந்தார்கள்.அப்பாசாமி செட்டியாரின் அண்ணன் ஒருவருக்கு நாக்கில் புற்று உண்டாகி கவலைக்கிடமாக இருந்தார்.கடுமையான மனவுளைச்சலில் இருந்த நிலையில்தான் வள்ளலாரைப் பற்றிக் கேள்விப்பட்டு கருங்குழிக்கு வந்தார் அப்பாசாமி.

தன்னை வணங்கி கண்ணீர் விட்ட அப்பாசாமியை ஏறெடுத்துப் பார்த்தார் வள்ளலார்.மடியிலிருந்த திருநீறை எடுத்து அவருக்கு கையளித்தார். “மூன்று முறை உன் அண்ணனின் நாக்கில் பூசு…” என்று மட்டும் சொன்னார்.

வள்ளலார் கொடுத்த திருநீறோடு ஊருக்குத் திரும்பிய அப்பாசாமி, அதுபோலவே செய்தார்.அதுநாள்வரை எந்தவித மருத்துவத்துக்கும் அடங்காத புற்று, வள்ளலார் கொடுத்த திருநீறால் சரியானது.அப்பாசாமி குடும்பத்தார் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.
வள்ளலாரை தங்கள் இல்லத்துக்கு வரவழைத்து உபசரித்தனர்.அதன்பிறகு கடலூர் செல்லும்போதெல்லாம் வள்ளலார், தேரடி தெருவில் இருந்த அப்பாசாமி வீட்டில் தங்குவதே வழக்கம்.ஒருமுறை பங்குனி உத்திரத் திருவிழா.

அப்போது வள்ளலார், அப்பாசாமி வீட்டில்தான் இருந்தார். திருவிழாவையொட்டி அப்பாசாமி வீட்டுக்கு ஏராளமான உறவினர்கள் வந்திருந்தனர்.
திண்ணையில் அங்காளி, பங்காளிகள் பேசிக்கொண்டிருக்கையில் துறவி போன்ற தோற்றமுடைய ஒருவர் வேகமாக வீட்டுக்குள் நுழைந்தார்.நேரடியாக வள்ளலார் தங்கியிருந்த அறைக்குள் சென்றார்.

என்ன ஏதுவென்று விசாரிக்க அப்பாசாமியும், அவருடன் இருந்தவர்களும் வள்ளலாரின் அறைக்குச் சென்றனர்.
அங்கே வள்ளலாரைத் தவிர வேறு எவருமில்லை.
“சாமி, இங்கே ஒருவர் இப்போ வந்தாரே?”
“ஆமாம். சித்தர் ஒருவர்
வந்தார்...”
“அவர் இப்போ எங்கே?”

“வந்தார். பிரசாதம் தந்தார். இப்போது காசிக்கு போய் விட்டிருப்பார்...” என்று சொன்னவாறே, தனக்கு முன்னிருந்த தட்டைப் பார்த்தார்.
அந்தத் தட்டில் பெரிய லட்டு ஒன்று இருந்தது.அந்த லட்டை எடுத்துப் பிட்டு அனைவருக்கும் தந்தார் வள்ளலார்.
“சித்தர்கள் இப்படித்தான். வருவதும் தெரியாது. போவதும் தெரியாது. காற்றின் வேகத்தில் பயணிப்பார்கள்...” என்று விளக்கினார் வள்ளலார்.
இதை நம்புவதா வேண்டாமா என்று அங்கிருந்தவர்கள் குழம்பினாலும், ஒருவர் மாயமானதை நேரடியாகவே கண்டதால்
நம்பித்தான் ஆகவேண்டும் என்கிற நிலைக்கு வந்தனர்.

அப்பாசாமியின் வாழைத்தோப்புக்கு வள்ளலார் சென்றிருந்தார்.வாழை மரத்தில் இருந்த நாகம் ஒன்று சட்டென்று சீறி, அவரது தலையில் தீண்டியது.
தோட்டத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தவர்கள் இதைக்கண்டு பதறி ஓடிவந்தனர்.வள்ளலாரோ கைநிறைய திருநீறு எடுத்து பாம்பு தன்னை தீண்டிய இடத்தில் பூசிக்கொண்டு நடந்து செல்ல ஆரம்பித்தார்.அவர் வருவதற்கு முன்பே அப்பாசாமி வீட்டுக்கு ஓடிச்சென்று தகவலைச் சொன்னார்கள் வேலைக்காரர்கள்.

அப்பாசாமி அடித்துப் பிடித்து ஓடிவந்துகொண்டிருக்கையில் எதிரில் வள்ளலார் வந்தார்.“சாமி, உங்களை பாம்பு கடிச்சிடிச்சின்னு சொன்னாங்களே?”“ஆமாம். தீண்டியது. என்னைக் கொல்வதற்காக அல்ல. பாவம், தன்னை மாய்த்துக் கொள்வதற்காக...” என்று சொன்னார்.எதுவும் புரியாமல் தோட்டத்துக்கு ஓடிப்போய் பார்த்தார் அப்பாசாமி.அங்கு பாம்பு இறந்து கிடந்தது!கடலூரில் வள்ளலார் தங்கியபோதெல்லாம் இதுபோல நிறைய அதிசயங்கள் நிகழ்ந்தன.

தேவநாயகம் பிள்ளை என்பவர் இருந்தார். அவரது தந்தையார் மரணப் படுக்கையில் இருந்தபோது, “ஒரு ஞானி வருவார். பிரம்பால் இந்த இடத்தைத் தட்டி, ‘இங்குதான் உன் தகப்பன் இருந்தானா?’ என்று கேட்பார். அவரையே உன் குருவாக ஏற்றுக் கொள்...” என்று விசித்திரமான ஒரு கட்டளையைப் பிறப்பித்துவிட்டுக் காலமானார்.சில ஆண்டுகளுக்குப் பிறகு தேவநாயகம் வீட்டுக்கு வள்ளலார் வந்தார்.கையில் வைத்திருந்த பிரம்பை ஓரிடத்தில் தட்டி அவ்வாறே கேட்டார்.

அசந்துபோன தேவநாயகம், வள்ளலாரை வணங்கி, “நீங்களே என் குரு...” என்று ஏற்றுக் கொண்டார்.தேவநாயகம் பிள்ளைக்கு இரும்பை தங்கமாக்கும் ரசவாதத்தில் பெருத்த ஆர்வமும், நம்பிக்கையும் இருந்தது.அந்த முயற்சிகளுக்கு ஏராளமான பணத்தை செலவழித்திருந்தார்.“தேவநாயகம், ஓர் இரும்புத் துண்டை கொண்டுவா...” என்றார் வள்ளலார்.அவர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க ஓர் இரும்புத்துண்டை வைத்தார் தேவநாயகம்.கையால் அதை தேய்த்துக் கொண்டே இருந்தார் வள்ளலார்.

சற்று நேரத்தில் இரும்பின் நிறம் பளபளத்து மின்னி, மஞ்சளாகி கொஞ்சம் கொஞ்சமாக அப்படியே தங்கமாக மாறியது.தேவநாயகம் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.ஆசையோடு அந்த தங்கத் துண்டை வள்ளலாரின் கையில் இருந்து கிட்டத்தட்ட பிடுங்கினார் தேவநாயகம்.இவரது கைக்கு வந்ததுமே அது பழையபடி இரும்புத்துண்டு ஆயிற்று.“இச்சையற்றவனுக்கே இதெல்லாம் சாத்தியம். இனியும் பொன்னாசையில் காலத்தை வீணாக்காதே...” என்றார் வள்ளலார்!

(அடுப்பு எரியும்)

தமிழ்மொழி

ஓவியம்: ஸ்யாம்