ரத்த மகுடம்-108பிரமாண்டமான சரித்திரத் தொடர்

அதிர்ச்சியின் விளிம்பில் ஊசலாடினார் ஸ்ரீராமபுண்ய வல்லபர். ‘‘பதினைந்து பேர்... பதினைந்து பேர்...’’ அவரையும் அறியாமல் அவர் உதடுகள் முணுமுணுத்தன. மனதில் குருதி வடிய கடிகை பாலகன் சிரித்த  காட்சி வந்து போனது.‘‘பதினாறு மன்னா...’’ திகைப்பை வெளிக்காட்டாமல் விநயாதித்தன் பதில் சொன்னான். ‘‘கடிகை பாலகனிடம் இருந்தது ஒரே மாதிரியான பதினைந்து செய்திகள்தான். ஆனால்...’’‘‘... பாதாளச் சிறையில் சிவகாமி தன் பங்குக்கு உங்களிடம் அதே செய்தியைக் கொடுத்தாள். எனவே அவளையும் சேர்த்து பதினாறு என்கிறாய்... அப்படித்தானே..?’’

நிதானமாகக் கேட்டுவிட்டு பாண்டிய மன்னரான அரிகேசரி மாறவர்மர் வாஞ்சையுடன் விநயாதித்தனை நோக்கினார்.
தன் தலையை அசைத்து ஆம்... என ஆமோதித்தான் சாளுக்கிய இளவரசன்.‘‘சிவகாமியை கணக்கிலேயே கரிகாலன் சேர்க்கவில்லை
விநயாதித்தா... அவனது குறி பதினைந்து பேர்! இவர்களுக்காகத்தான் பாண்டியர்களாகிய நாங்கள் சாளுக்கியர்கள் பக்கமோ அல்லது பல்லவர்கள் பக்கமோ சாயாதபடி காய்களை நகர்த்துகிறான்...’’‘‘யார் அந்த பதினைந்து பேர்...’’ ஸ்ரீராமபுண்ய வல்லபர் பட படத்தார்.

‘‘உங்கள் மன்னருக்கு தெரியும்!’’ கம்பீரமாக அறிவித்தார் அரிகேசரி மாறவர்மர்.‘‘சாளுக்கிய மன்னரா... அவர் இதை அறிவாரா..?’’ புருவங்கள் உயர... நயனங்கள் விரிவடைய... உதடுகள் துடிக்க சாளுக்கிய போர் அமைச்சர் குழறினார்.‘‘அப்படித்தான் நினைக்கிறேன்... கடிகை பாலகன் குறித்து எனது ஒற்றர்கள் தெரிவித்ததும் அந்த நினைப்பு உறுதியானது...’’குழப்பத்துடன் ஸ்ரீராமபுண்ய வல்லபரும் விநயாதித்தனும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள்.

இரணதீரன் தன் தந்தையான அரிகேசரி மாறவர்மரை பெருமைபொங்கப் பார்த்தான்.‘‘விநயாதித்தா... உண்மையிலேயே மாவீரரும் மிகச்சிறந்த ராஜதந்திரியுமான விக்கிரமாதித்தருக்கு நீ மகனாகப் பிறந்திருக்கிறாய்... ஸ்ரீராமபுண்ய வல்லபரே... தலைசிறந்த மன்னருக்கு நீங்கள் போர் அமைச்சராகப் பணிபுரிகிறீர்கள்... இதை என்றும் மறக்காதீர்கள்...’’ அரிகேசரி மாறவர்மரின் கண்கள் கனவில் சஞ்சரித்தன.

‘‘தன் தந்தையின் மரணத்துக்கு பழி தீர்க்க விக்கிரமாதித்தர் வந்திருப்பது புதிதல்ல... எல்லா மகனும் செய்யக் கூடியதுதான். போலவே தன் நாட்டுக்கு ஏற்பட்ட களங்கத்தைத் துடைக்க பல்லவ நாட்டின் மீது விக்கிரமாதித்தர் படையெடுத்ததும் அப்படியொன்றும் சிறப்பான செய்கை அல்ல. அடிபட்ட எல்லா நாட்டு மன்னர்களும் மேற்கொள்ளும் நடவடிக்கைதான் அது.

ஆனால்...’’விநயாதித்தனை நெருங்கி அவன் தோள்களில் தன்னிரு கரங்களையும் பதித்தார் பாண்டிய மன்னர். ‘‘எந்த இடத்தில் உன் தந்தை தனித்த ஆளுமையாக... மிகச்சிறந்த ராஜதந்திரிகளில் ஒருவராக வெளிப்படுகிறார் தெரியுமா..? பதினைந்து பேரை இனம் கண்ட விஷயத்தில்!’’  
‘‘வேலைகள் சிறப்பாக நடக்கின்றதா சுங்கத் தலைவரே...’’குரல் வந்த திசையை நோக்கி அதிர்ச்சியுடன் தன் தலையை உயர்த்தினார் மல்லைக் கடற்கரை சுங்கச் சாவடியில் அமர்ந்திருந்து தன் பணிகளை மேற்கொண்டிருந்த சுங்கத் தலைவர்.

‘‘மன்னா...’’
‘‘எழுந்திருக்க வேண்டாம்... அமருங்கள்...’’ என்றபடியே தரைவிரிப்பில் சகஜமாக அமர்ந்தார் சாளுக்கிய மன்னர் விக்கிரமாதித்தர்.அங்கிருந்த அலுவலர்கள் யாருமே மன்னரின் வருகையை எதிர்பார்க்கவில்லை. அது அவர்களது உடல்மொழியிலும் முக மாறுதலிலும் அப்பட்டமாகவே எதிரொலித்தது.

‘‘ஏன் சிலையாகி விட்டீர்கள்... வணிகர்கள் காத்திருக்கிறார்கள் அல்லவா... மரக்கலங்கள் புறப்பட வேண்டுமல்லவா..? பணிகளை கவனியுங்கள்...’’ அலுவலர்களுக்கு உத்தரவிட்டுவிட்டு தன் பார்வையால் சுங்கச் சாவடியை ஆராய்ந்தார் விக்கிரமாதித்தர்.சுங்கத் தலைவருக்கு உள்ளூர உதறல் எடுத்தது. மரக்கலங்களைப் பார்வையிடச் சென்ற மன்னர் அப்படியே புறப்படுவார்... அவரை வழியனுப்ப, தான் சென்றால் போதும் என்று நினைத்திருந்தார். இப்படி அரவமின்றி சுங்கச் சாவடிக்குள் நுழைந்து தன் எதிரே அமர்வார் என்று துளியும் எதிர்பார்க்கவில்லை.

நடுக்கத்தை மறைத்தபடி தன் முன் இருந்த ஓலையில் எழுதப்பட்டிருந்த பொருட்களின் விவரங்களைப் பார்வையிட்டார். மனமோ இடுப்பில் மறைத்து வைத்திருந்த சுவடியைச் சுற்றியே வட்டமிட்டது.‘‘சுங்கத் தலைவரே...’’‘‘மன்னா...’’அவரது கருவிழிகளை உற்றுப் பார்த்தபடியே விக்கிரமாதித்தர் கேட்டார். ‘‘பதினைந்து பேரைக் குறித்து என்ன நினைக்கிறீர்கள்?!’’‘‘பதினைந்து பேர்... ஆம்... பதினைந்து பேர்...’’ அழுத்தமாகச் சொன்னார் அரிகேசரி மாறவர்மர். ‘‘ஆனால், இவர்கள் வெறும் நபர்களல்ல... தமிழகப் பகுதிகளின் வேர்கள்!’’அங்கிருந்த மூவரும் தங்கள் சுவாசத்தின் ஒலி கூட இடையூறாகி விடக் கூடாதே என்ற கவனத்துடன் அமைதியாக பாண்டிய மன்னரையே பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

‘‘புரியவில்லையா..? குறுநில மன்னர்கள்! தமிழக நிலத்தின் அடிவேர்களே இந்தப் பதினைந்து பேர்தான்! தலைமுறைக்கு தலைமுறை ஆட்கள் மாறுவார்கள்... ஆனால், பதினைந்து என்ற எண்ணிக்கை மட்டும் குறையாது. எப்படி ஆலமரத்தின் கிளைகளே விழுதுகளாகி மரமாக வளர்கிறதோ... அப்படித்தான் இந்த பதினைந்து பேரும் தமிழகப் பரப்பைக் காத்து நிற்கிறார்கள்.

பேரரசுகள் உருவாகும்... மறையும்... மன்னர்கள் தோன்றுவார்கள்... கரைவார்கள்... திடீரென பல்லவர்கள் மொத்த தமிழகப் பரப்பையும் ஆட்சி செய்வார்கள்... பிறகு பாண்டியர்கள் தலையெடுப்பார்கள்... பின்னர் சோழர்கள் தங்கள் ராஜ்ஜியத்தை விரிவுபடுத்துவார்கள்... இவையெல்லாம் நடக்கலாம்... அல்லது நடைபெறாமலும் போகலாம்...

ஆனால்...’’நிறுத்திவிட்டு ஆறு கருவிழிகளையும் ஒருசேர தன் நயனங்களால் நோக்கினார். ‘‘எது நடந்தாலும்... எந்த அரசு பேரரசாக வளர்ந்து தமிழகத்தை ஒரு குடையின் கீழ் ஆட்சி செய்ய முற்பட்டாலும் அதற்கு இந்த பதினைந்து பேர் துணையிருக்க வேண்டும்! இந்தப் பதினைந்து வேர்கள் தாங்கிப் பிடிக்காமல் எந்த மரமும் வளராது!

அதனால் தான்  உங்கள் மன்னர் விக்கிரமாதித்தர் பதினைந்தையும் தன் பக்கம் இழுக்க முற்படுகிறார்... ஏனெனில் தமிழக வரலாற்றை அவர் கசடற கற்றபிறகே தன் பழிவாங்கலைத் தொடங்கியிருக்கிறார்... இந்த நிலப்பரப்பின் வதனத்தில் ஓடும் பதினைந்து ரேகைகளையும் வசப்படுத்துவதற்கான காரியங்களில் இறங்கியிருக்கிறார்...

’’நிறுத்திய அரிகேசரி மாறவர்மர், புன்னகையுடன் தன் சிரசை சாய்த்தார். ‘‘கோபம் உயிரினத்தின் ஆதி உணர்ச்சி ஸ்ரீராமபுண்ய வல்லபரே... ஆனால், அந்த ஆதி உணர்ச்சியை... கோபத்தை... எந்த இடத்தில்... எப்பொழுது... ஏன்... எதற்காக... யாருக்கு எதிராக... எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்பதை யார் அறிகிறானோ... எவன் இந்தக் கலையில் வல்லவனாகிறானோ... அவனே தன் இலக்கை அடைகிறான்... சாளுக்கிய மன்னர் அப்படி தன் நோக்கத்தை நோக்கிப் பயணிக்கிறார். அதனால்தான் விநயாதித்தா உன் தந்தையை தனித்த ஆளுமை கொண்டவர் என்கிறேன்!’’

‘‘கரிகாலன் என்ற ஒற்றை நபரால் எப்படி இதைத் தடுத்து நிறுத்த முடியும் மன்னா..?’’ புருவங்களை உயர்த்தியபடி விநயாதித்தன் வினவினான்.
‘‘அவன் பெயரே கரிகாலன் என்றிருப்பதால்!’’ இடியென நகைத்தபடி தன் மீசையை நீவினார் அரிகேசரி மாறவர்மர்.

‘‘புரியும்படி சொல்கிறேன்... அதற்கு முன்னால்... பல்லவர்களின் ஒற்றர் படையில் ஒரேயொரு காபாலிகன் உண்டு... பல திங்களாக அவனைக் காணவில்லை... அவன் என்ன ஆனான் என்று தெரியுமா... அவனுக்கும் பதினைந்து பேர்களுக்குமான தொடர்பை அறிவீர்களா..? இது தெரிந்தால் மட்டுமே கரிகாலன் - காபாலிகன் - சிவகாமி என்கிற முக்கூடல் சங்கமம் உங்களுக்குப் புரியும்!’’

(தொடரும்)

கே.என்.சிவராமன்

ஓவியம்: ஸ்யாம்