கொரோனாவின் தாய்மடியான சீனா இப்போது...



கொரோனாவின் தாய்மடி என்று வர்ணிக்கப்படும் வூஹான் இப்போது கொரோனா பாதிப்பிலிருந்து வெளியேறிவிட்டது. மெல்ல இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிவிட்டது. ஆனாலும் பொது இடங்களில் மக்கள் மாஸ்க் அணிந்துகொண்டேதான் செல்கின்றனர்.
ஒரு கோடியே பத்து லட்சம் பேர் வசிக்கும் மிகப் பெரிய நகரமான வூஹான், கடந்த ஜனவரி மாதக் கடைசியில் கொரோனாவால் லாக்டவுனுக்குள் நுழைந்தது.

ஹூபெய் என்ற பிராந்தியத்தின் தலைநகர்தான் வூஹான். இங்கு கொரோனாவால் 83,531 புதிய நோயாளிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், 4,634 பேர் மரணமடைந்துள்ளனர். ஆறு மாதங்கள் ஆன பிறகும், இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிய பிறகும் கொரோனா பீதி மக்களைவிட்டு நீங்கவில்லை. சில பாதுகாக்கப்பட்ட இடங்களில் கொரோனா பீதி இல்லை என்பதால் மாஸ்க் அவசியம் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் மக்கள் மாஸ்க்கை கழற்றுவதே இல்லை.

வாகன நெரிசல் முன்பைப் போல் வூஹானின் தெருக்களில் நிறைந்திருக்கிறது. ஷாப்பிங் மால்களிலும், அலுவலகங்களிலும் டெம்பரேச்சர் ஸ்க்ரீனிங் இயந்திரங்கள் வைத்திருக்கிறார்கள். கையைக் கழுவ சானிடைசர். சில நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு மாஸ்க்கையும் வழங்குகின்றன. நிலைமை கட்டுக்குள் இருப்பதால் அனைவரின் முகத்திலும் ஒருவகையான நிம்மதியைப் பார்க்க முடிகிறது.

*77சிக்கிக்கொண்ட பெய்ஜிங்

உலகின் மிகப் பெரிய நகரங்களில் பெய்ஜிங்கும் ஒன்று. மிகுந்த மக்கள் நெரிசல் மிக்க நகரங்களிலும் முக்கியமானது. கொரோனா பரவத் தொடங்கியபோது உலகமே பெய்ஜிங்கை நினைத்துதான் அச்சமடைந்தது. அத்தனை நெரிசலான மக்கள்தொகை கொண்ட நகரம் என்ன ஆகுமோ என்று அஞ்சினார்கள்.

ஆனால், அரசு திட்டமிட்ட நடவடிக்கைகள் மூலம் பெய்ஜிங்கை மீட்டது. இன்றும் பெய்ஜிங்கில் சராசரியாக நாள் ஒன்றுக்கு ஏழு கொரோனா நோயாளிகள் இருந்தாலும் பெய்ஜிங்கின் மக்கள் தொகைக்கு இந்த எண்ணிக்கை கிட்டத்தட்ட ஒன்றுமில்லை என்கிறார்கள்.

கொரோனா பாதிப்பு வூஹானில் தொடங்கியதுமே பெய்ஜிங் அதனை எதிர்கொள்ள ஓரளவு தயாராகிவிட்டது. அப்படி இருந்தும் கொரோனா பெய்ஜிங்கை சூறையாடியது.

ஆனால், லாக் டவுன், டெஸ்ட்டிங் எண்ணிக்கையை அதிகரிப்பது, நோயாளிகளைத் தனிமைப்படுத்தி சிகிச்சை தருவது என சீன அரசு காட்டிய துரிதமான மற்றும் முன்னுதாரணமான நடவடிக்கைகள் பெய்ஜிங்கை மீட்டன. மேலும், நோய்ப் பரவலைத் தடுக்க தடுப்பு அரண்களை அமைத்து போக்குவரத்தைத் துண்டிப்பது, வீட்டை விட்டு வெளியே வருபவர்களுக்கு தண்டனைகள் தருவது, ஒவ்வொரு வீட்டினருக்கும் இடையே தடுப்பரண்கள் உருவாக்குவது, குழந்தைகள் பள்ளிக்குச் செல்வதைத் தடுத்து ஆன்லைன் வகுப்புகளை நடத்த ஊக்குவித்தது, பணியாளர்களை வீட்டிலிருந்தபடியே வேலை செய்யக் கேட்டுக்கொண்டது என மற்ற நடவடிக்கைகளும் முக்கியமானவையே.

*அதிகப்படுத்தப்பட்ட சோதனைகள்

சீனாவில் கொரோனா சமூகப் பரவலாக இருந்ததைவிடவும் கிளஸ்டராக இருந்ததே அதிகம் என்று சொல்லப்படுகிறது. நாடு முழுதும் 130 கிளஸ்டர் கேஸ்கள் கொரோனா பரவலுக்கு அடிப்படை என்பதைக் கவனித்த சீன வல்லுநர் குழு, இந்த கிளஸ்டர் பாதிப்பு உள்ள இடங்களை முதல் கட்டமாகத் தனிமைப் படுத்தினர். இவ்விடங்கள் நேரடி யாக அதிபர் ஜிங்பிங்கின் பார்வையின் கீழ் வந்தன.

கொரோனா அதிகம் பாதித்த ஹூபெய் மாகாணத்திலும் அதன் தலைநகரான வூஹானிலும் கடுமையான பரிசோதனைகள் முடுக்கிவிடப்பட்டன.
ஆரம்பத்தில் மக்கள் இதற்காகக் கோபம் கொண்டாலும் பின்னர் அரசு தங்களுக்காக உழைப்பதைப் புரிந்துகொண்டு ஒத்துழைக்கத் தொடங்கினர்.

இதனால், அதிகப்படியான பரிசோதனைகள் நிகழ்ந்தன. கொரோனா நோயாளிகள் வேகமாக அடையாளம் காணப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டனர்.
அதிகப்படுத்தப்பட்ட பரிசோதனைகளே கொரோனாவை சீனா வென்றதன் பின் உள்ள முக்கியமான சாதனை. அவ்வளவு விரிவான பரிசோதனைகளை நடத்தாமல் விட்டிருந்தாலோ, ஊரடங்கை அமல் படுத்தாமல் விட்டிருந்தாலோ கொரோனா பாதிப்பு இன்னமும் மோசமாகி யிருக்கும்.

*தனிமை மருத்துவமனைகள்

சீனா கொரோனாவை வெற்றிகொள்ள உருவாக்கிக் காட்டிய இன்னொரு புதுமை, புத்தம் புதிய கொரோனா சிறப்பு மருத்துவ மையங்கள். இவற்றை மிகச் சில நாட்களில் நாடு முழுதும் ஆங்காங்கே உருவாக்கிக் காட்டினார்கள் சீனாவின் கட்டுமானத்துறையினர்.

வூஹானுக்கு வெளியே உருவாக்கப்பட்ட இந்த மிகப் பெரிய கொரோனா மையத்துக்கு ஊரில் இருந்த அத்தனை கொரோனா நோயாளிகளும் கொண்டு செல்லப்பட்டனர். அங்கு, இவர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியான அறைகள், பிபிஈ போன்ற அதிநவீன தடுப்பு உடைகள், மருத்துவர்கள் நேரடியாக நோயாளி களைச் சென்று பார்ப்பதைத் தவிர்ப்பதற்காக கண்காணிப்புக் கருவிகள், செவியலியருக்குப் பதிலாக இயந்திர ரோபோக்கள் என முற்றிலும் புதியதொரு மருத்துவ சேவையை அறிமுகப்படுத்தினர்.

நோயாளிகளைப் பராமரிப்பது முதல் இறந்தவர்கள் உடலை அடக்கம் செய்வது வரை இயன்றவரை மனிதர்கள் இல்லாமல் நடைமுறைகளைப் பின்பற்ற ஆராய்ச்சிகள் நடைபெற்றன. இதற்கென, புத்தம் புது ஆய்வு மையங்களையும் உடனடியாகத் தொடங்கி ஆய்வுகளை மேற்கொண்டனர். இத்தனை துரிதமான மற்றும் அதிநவீன சிகிச்சைகளால்தான் சீனா கொரோனாவை வெற்றிகரமாகக் கடந்து வந்தது.

*தடுப்பு மருந்தும் தயார்

கொரோனாவுக்கான தடுப்பு மருந்து தயாரிப்பில் உலகம் முழுதும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மருத்துவக் கழகங்கள், மருந்துக் கம்பெனிகள் களத்தில் இறங்கியுள்ளன. பல்லாயிரம் விஞ்ஞானிகள் இரவு பகல் பாராது இதற்கான பணியில் இறங்கியிருக்கிறார்கள்.

இத்தனை மருந்துகளில் சீனாவில் தயாராகிக் கொண்டிருக்கும் தடுப்பு மருந்துதான் முதல் இடத்தில் இருப்பதாகச் சொல்கிறார்கள். கடந்த இரு மாதங்களுக்கு முன்பே தயாராகிவிட்ட இம்மருந்தை, மனிதர்களுக்குக் கொடுப்பதற்கான புரோட்டோகால் நடவடிக்கைகள் மற்றும் காத்திருப்பு காலங்களுக்காக வைத்திருக்கிறார்கள்.

அந்த நடவடிக்கைகளுக்குப் பிறகு இவை சந்தைக்கு வரும். இப்போதே ஐரோப்பிய நாடுகள் கொரோனாவுக்கான தடுப்பு மருந்தை தங்களுக்குத்தான் தர வேண்டும் என்று ஒரு தொகை கொடுத்து அட்வான்ஸ் புக்கிங்கும் செய்துவிட்டன. சீனா இப்படி தடுப்பு மருந்து விஷயத்திலும் முதலாவது இடத்தில் இருக்கிறது.

*என்னென்ன விதிமுறைகள்

கடந்த ஜனவரி இறுதி வாரமே சீனாவின் 93 கோடி மக்கள் மீது கடுமையான விதிமுறைகள் அமலாகின.ஒவ்வொரு வீட்டிலிருந்தும் ஒரே ஒருவருக்கு மட்டுமே வெளியே வருவதற்கான அனுமதிச் சீட்டுகள் வழங்கப்பட்டன.அப்படி வருபவர்களையும் கட்டடத்தை விட்டு வெளியேறும்போது ஒரு பதிவு, உள்ளே வரும்போது ஒரு பதிவு என்று கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டது.

ஒவ்வொரு இடத்திலும் இருந்த பல்வேறு வருகைப் பதிவேடுகள் பயணிகளின் நடமாட்ட வரைபடத்தை கண்காணித்தனகண்காணிப்பு கேமராக்கள் முழுமையாகப் பயன்படுத்தப்பட்டனமக்களின் செல்போனில் இருந்த ஜிபிஎஸ் டிவைஸும் அவசியம் எனில் கண்காணிக்கப்பட்டது.

ஒவ்வொரு கட்டடத்தில் நுழையும் முன்பும் உடல் வெப்பநிலை தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டது.மக்களின் அடிப்படைத் தேவையான உணவு மற்றும் மருந்துகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்காக பல்லாயிரம் வாகன ஓட்டிகள் உடனடியாகத் தயார் செய்யப்பட்டனர்.

பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டு ஆன்லைன் வகுப்புகள் தொடங்கப்பட்டன.நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை வீட்டிலிருந்தே வேலை செய்ய கேட்டுக்கொள்ளப்பட்டன.

இளங்கோ கிருஷ்ணன்