யூ டியூப்பி இல் வெளியான தமிழ்ப்படம்!



‘‘நிச்சயமாக நான் எதுவும் சாதித்துவிட்டதாக நினைக்கவில்லை. இன்னும் என் எந்த ஒரு படைப்புக்கும் இறுதி வடிவம் கொடுக்கவில்லை என்றுதான்

நினைக்கிறேன்.
தேடுதல்ங்கிற பேரில் யதார்த்தத்தைத் தொலைக்கிற ஆள் நானில்லை. அதுதான் என் ஒரே சந்தோஷம். கதைக்காக, களத்துக்காக இங்கே அலைய வேண்டிய அவசியமே இல்ல. இன்னும் நாம் திரும்பிப் பார்க்காத இடம், மனிதர்கள்னு நிறையவே இருக்காங்க.

தமிழ் சினிமாவில் மனிதர்களின் புற உலகமும், மகிழ்ச்சிக் கணங்களுமே சித்தரிக்கப்படுகிறது. எளிய மனிதர்களின் வேதனைகள், இடர்கள் அதிகம் எடுத்துக் கொள்ளப்படுவதில்லை. நம்மைப் பற்றிய சில கசப்பான உண்மைகளைக் காட்டத் தவறிவிட்டோம். துக்கத்தின் வேர்களைச் சென்றடைகிற பயணம் இங்கே குறைவு. இங்கே நான் வேறுவிதமாக அதை அடைய முயல்கிறேன்.

இந்த இடத்தில் என்னை வைத்துக் கொள்ளலாம்...” அலைபேசியில் அழுத்தம்திருத்தமாகப் பேசுகிறார் இயக்குநர் அருண் கார்த்திக். அவரது ‘நசீர்’ திரைப்படம் யூ டியூப்பில் வெளியாகி மிகுந்த கவனத்தை அடைந்திருக்கிறது. சினிமா ஆர்வலர்களின் ஒட்டு மொத்த கவனத்தை ஈர்த்திருக்கிறார்.

உங்கள் ஆதி அந்தம் சொல்லுங்க...கோவையில் ‘கோணங்கள் ஃபிலிம் சொசைட்டி’யில் அயல் சினிமாக்கள் பார்த்ததின் விளைவுதான் இது. நம் டிவியில் காட்டுகிற படங்களுக்கும், திரைப்பட விழாவில் வாழ்க்கையை விதவிதமாகக் காட்டுவதற்கும் வித்தியாசம் இருந்தது. சினிமா ஒரு மாபெரும் கலை வடிவம்னு புரிஞ்சது.

கோவைக்கு பக்கத்தில் தடாகம்னு மலையடிவார ஊர் என்னுடையது. அப்பா, வியாபாரம் செய்கிறவராகவும், அம்மா டீச்சராகவும் இருந்து பிஇ படிக்க வைத்தார்கள். படிப்பில் கவனம் போகாமல் கல்வியை நிறுத்திக் கொண்டு சினிமாவுக்குள்ளே வந்திட்டேன். நான் எதையெல்லாம் போலி என நினைக்கிறேனோ அதைத் தவிர்க்க நினைச்சேன்.

சினிமாவுக்கு ஓர் அர்த்தம், பயன்பாடு, ஒரு பிரச்னையை உள்வாங்கிட்டு பேசணும்னு நம்புறேன். சென்னைக்குப் போய் உதவியாளனாகச் சேரணும்னு ஆசையும் வரலை, முயற்சியும் செய்யலை. நல்ல சினிமாவைப் பார்த்து, சரியான புத்தகம் படித்து கேமராவை எடுத்துக்கிட்டு நமக்குத் தெரிஞ்சதை எடுக்கிறதை சினிமான்னு நினைச்சேன்.

திரைப்படப்பயிற்சிப் பள்ளிக்குக் கூட நான் போகலை. சினிமாவை சென்னையிலிருந்துதான் எடுக்கணுங்கிறதை நான் நம்பறதும் இல்லை.
‘நசீர்’ படத்தில் ஏதோ மறைந்திருந்து ஒரு வாழ்வை பதிவு செய்த மாயம் இருக்கு...என் கதை மாந்தர்களும் கோவையில்தான் இருக்காங்க. அடுத்து நான் பண்ற படத்திற்கும் கோவைதான் சூழல். நம் நிலப்பரப்போட கதைகள் சொல்லணும். என் கதை மாந்தர்கள் இங்கே இருந்தால் நான் ஏன் வேறு இடத்திற்குப் போகணும்?

‘நசீர்’ எடுக்கிறதுக்கு முன்னாடி அந்த முஸ்லீம் ஏரியாவில் இரண்டு வருஷம் தங்கியிருந்தேன். எதை எழுதணும், எதை எழுதக் கூடாதுன்னு தீர்மானிச்சேன். அந்த மக்களின் நம்பகத்தன்மையையும் நான் பெறணும். திலீப்குமார் எழுதிய ‘ஒரு குமாஸ்தாவின் கதை’யை 2013ல் படிக்கும் போதே என்னை மனதளவில் நகர்த்தியது. அதில் ரியாலிட்டி இருந்தது. ஒரு சாதாரண மனிதனைக் காட்சிப்படுத்துவது என் முன் நிற்கிற சவாலாக இருந்தது. இதற்கு வில்லனோ, காமெடியோ, பாட்டோ அவசியமே இல்லை.

இதில் ‘நசீரி’ன் அக உலகம், புற உலகம் எல்லாவற்றையும் காட்ட வேண்டி இருந்தது. திலீப்குமாரின் கதையே அதன் அளவில் போதுமானதாக இருக்க, சிறிய மாற்றங்களே அவசியப்பட்டது. எவ்வளவு துயரங்கள் படிந்தாலும், அதை வேலை நிலையில் காட்டாத பக்குவத்தை ‘நசீர்’ அடைந்திருக்கிறான். இதில் நான் வெற்றி அடைந்ததாக நினைத்துக் கொண்டிருக்கிறேன். இன்னும் அனைத்துத்தரப்பும் பார்த்து முடிவாகும்போது இது உண்மையாகும்.இதற்கான முயற்சிகள் என்ன..?

சென்னையின் Stray factory முதற்கொண்டு ஆறு புரடியூசர்கள் இதில் இணைந்தார்கள். நெதர்லாந்து, பாண்டிச்சேரி, ஜபல்பூர், மும்பை என பரந்து பட்டு நிதி ஆதாரங்கள் கிடைத்தன. நெதர்லாந்து அரசின் கோ-புரடக்‌ஷன் பிரிவின் ஐம்பதாயிரம் யூரோக்கள் பரிசாகக் கிடைத்தது.

எல்லோரும் சென்னையில் இந்த முயற்சியைத் தொடர்ந்தால் என்ன என்கிறார்கள். நம்ம கதையை நம் ஊரில் உட்கார்ந்து சொல்வதுதானே சரி! நமக்கு நடிகர்கள் வேண்டும். ஸ்டார்கள் தேவையில்லை.

மதுரை, கோவையில் ஆடிஷன் நடத்தி நடிகர்களைத் தேர்ந்தெடுத்தோம். ‘நசீர்’ புதுச்சேரியில் குமரன் வளவனாக இருந்தார். எல்லோரும் படத்திற்கு நியாயம் செய்திருந்தார்கள். யூ டியூப்பில் இலவசமாக திரையிட்டோம். 24 மணி நேரத்தில் 64,000 பேர் பார்த்திருந்தார்கள். இது ஒரு கணிசமான அளவே. இன்னும் நிறைய பட விழாக்களுக்கு போக வேண்டியது. உலகையே மிரட்டும் கொரோனா எங்களை இப்போதைக்கு நிறுத்தி வைத்திருக்கிறது.இப்படியான படங்கள் தொடர்ந்து வர என்ன தேவைப்படுகிறது?

நமக்கு மிக அருகாமையில் உள்ள வாழ்க்கையைப் புரிந்துகொள்ள வேண்டும். அதற்காக தமிழ் இளைஞர்கள் தயாராக வேண்டும். பொறுப்புணர்வு உள்ள, நம்பிக்கையான தயாரிப்பாளர்களும், விநியோகஸ்தர்களும் சில தியேட்டர்களை ஒதுக்கியாவது இடம் தரவேண்டும்.

தியேட்டரில் வெளியிட்டால் மட்டும் இயக்குநர் அந்தஸ்து கிடைக்கிறது என்பது உண்மை. சுயாதீன சினிமாக்கள் அதிகம் வரணும். உண்மை நிலையை எடுத்துரைக்காத சினிமாவைப் பார்த்து மக்கள் வலி நிவாரணி கிடைத்த மாதிரி மகிழ்ச்சியில் ஆழ்ந்து விடுகிறார்கள்.சென்னையில் இருக்கிற சில இயக்குநர்களும் இப்படியான நல்ல முயற்சிகளுக்கு வரவேற்பு அளிக்கலாம்.

நா.கதிர்வேலன்