தமிழக முதல்வரின் மண்டலத்தில் தலித் வன்கொடுமைகள்!ஆமாம். வெறும் ஐம்பதே நாட்களில் தமிழகத்தில் 40க்கும் மேற்பட்ட தலித் ஒடுக்குமுறைகள் அரங்கேறியுள்ளன. கொலைகள், கவுரவக் கொலைகள், சாதி அடிப்படையிலான அவமானங்கள், காவல்துறை சித்திரவதைகள்… என சகலமும் இதில் அடங்கும்.இந்த சாதிய குற்றங்கள் பெரும்பாலும் வடக்கு மாவட்டங் களில் அரங்கேறியுள்ளன.  மற்றவை உள் மாவட்டங்கள், புதுக்கோட்டை, சேலம் மற்றும் தெற்கு மாவட்டமான கன்னியாகுமரி… போன்ற பகுதிகளில் பதிவாகியுள்ளன.

பலியான இளம் தலித்துகள் பெரும்பாலும் ஊரடங்கின் காரணமாக நகரங்களிலிருந்து சொந்த ஊருக்குத் திரும்பியவர்கள். ஊரடங்கு காலத்திலேயே இந்த நிலை என்றால்... மற்ற சமயங்களில் தலித் மக்களின் நிலை என்ன..? யோசிக்கவே அச்சமாக இருக்கிறது.
இச்சூழலில் தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களில் ஆண்டாண்டு காலமாக நடைபெற்று வரும் தலித் மக்களின் மீதான ஒடுக்குமுறைகள் குறித்து யாருமே பேசுவதில்லை என்று கவலை தெரிவிக்கிறார் சமூக செயற்பாட்டாளரான பழனிச்சாமி.

கடந்த 15 ஆண்டுகளாக கோவை, ஈரோடு, திருப்பூர், சேலம் போன்ற மாவட்டங்களில் தலித், ஆதிவாசி மக்கள் மீது நடக்கும் சாதிய வன்கொடுமைகளை ஆய்வு செய்து வரும் இவர், பாதிக்கப்பட்டவர்களுக்கு சட்ட ரீதியாக உதவி அவர்களது வாழ்க்கைக்கு வழிகாட்டியும் வருகிறார்.

“கொங்கு பகுதியில் நடை பெறும் வன்கொடுமைகள் குறித்த கணக்குகள், சொற்ப அளவில்தான் வெளியில் வந்துள்ளன. அவையும் மிகப்பெரிய தடைகளைத் தாண்டி காவல் நிலையத்திற்கு வந்தவை.

இப்படி காவல்நிலையத்துக்கு வரும் அனைத்து வழக்குகளையும் உடனே பதிய மாட்டார்கள். காவலர்களும் சாதிய சம்பிரதாயங்களால் கட்டமைக்கப்பட்டவர்கள்தானே!எனவே, ஒரு வன்கொடுமை வழக்கை பதிவு செய்வது என்பது அவ்வளவு எளிதானதல்ல.

சட்டம் என்னதான் இருந்தாலும் அந்த சட்டத்தை நடைமுறைப் படுத்துகிற ஆட்கள் சட்டப்படி நடந்துகொள்வதில்லை. இதுதான் இவ்வளவு பிரச்னைகளுக்கும் காரணம்.

தென் மாவட்டங்களில் இருக்கும் தலித்களுக்கும், மேற்கு மாவட்டங்களில் இருக்கும் தலித் களுக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன.

மேற்கு மாவட்டங்களில் எதிர்த்துப் பேசமாட்டார்கள். அடித்தாலும் வாங்கிக்கொள்வார்கள். தென் மாவட்டங்களில் முன்பு இப்படி இருந்தது. இப்போது அமைப்புகள், இயக்கங்கள் அங்கு உருவாகி மக்களை விழிப்படைய வைத்துள்ளதால் அங்கு எதிர்த்து உரிமைகளுக்காகக் குரல் கொடுக்கிறார்கள்...’’ என்ற பழனிச்சாமியிடம் மேற்கு மாவட்டங்களில் முற்போக்கு இயக்கங்கள் வேலை செய்யவில்லையா என்ற கேள்வியை முன் வைத்தோம்.

“பெரியாரியத்தை உள்வாங்கியவர்கள் சூத்திர சமூகம்தான். அதை மறுக்கவில்லை. அவர்களில் சிலர் தங்களுக்குக் கீழ் ஒரு சாதி வேண்டுமென்ற மனநிலையில்தான் இருக்கிறார்கள்.

அதேபோல் இடதுசாரி கட்சி களும் வர்க்க ரீதியாக அனைத்தையும் பார்த்துப் பேசுவதில் காட்டும் தீவிரத்தை சாதிய கட்டமைப்பை நொறுக்குவதில் காண்பிப்பதில்லை. இந்த விஷயத்தில் ‘தீண்டாமை ஒழிப்பு முன்னணி’ மட்டுமே களமாடுகிறது...’’ என்றவர் தலித்கள் சந்திக்கும் பிரச்னைகளையும் அடுக்கினார்.

“தமிழகத்தில் எஸ்சி பிரிவில் இருப்பவர்களில் பெரும்பான்மையினர் ஆதிதிராவிடர் என்று சொல்லக்கூடிய பறையர் சமூகம்; தேவேந்திரகுல வேளாளர் என்று சொல்லக் கூடிய பள்ளர் சமூகம்; அருந்ததியர் என்று சொல்லக் கூடிய சக்கிலியர் சமூகம் ஆகியோர்தான்.

இதில் அருந்ததியர் சமூகத்தில் இருந்து எந்தவொரு தலைவரும் உருவாகாதபடி மற்றவர்கள் பார்த்துக் கொள்கிறார்கள். இதனால்தான் அருந்ததியர் சமூகத்தில் அதிக வன்கொடுமைகள் அரங்கேறுகின்றன.

அருந்ததியரும் முன்னேற வேண்டும் என்ற நோக்கில் கலைஞர் அந்த சமுதாயத்துக்கு 3 சதவிகித இடஒதுக்கீட்டை வழங்கினார். இதன் பிறகே இச்சமூகத்தைச் சேர்ந்தவர்களால் வாழ்க்கையில் முன்னேற முடிந்தது.என்றாலும் இப்படி முன்னேறுபவர்கள் தங்கள் சமூகத்தைச் சேர்ந்த மற்றவர்களும் முன்னேற வேண்டும் என பெரும்பாலும் நினைப்பதில்லை.

உதாரணமாக, இன்று தமிழக சட்டசபை சபாநாயகராக தலித் சமூகத்தைச் சேர்ந்தவரே இருக்கிறார். போலவே மத்தியில் ஆளும் பாஜகவின் தமிழ் மாநிலத் தலைவராக இருப்பவரும் தலித்தான்.

ஆனால், இவர்கள் எந்த அளவுக்கு சமூகநீதிக் கோட்பாட்டுடன் இயங்குகிறார்கள் என்பது கேள்விக்குறி அல்லவா..? தலித் மக்கள் நாள்தோறும் வன்கொடுமைகளுக்கு ஆளாகிறார்கள். இதனைக் கண்டித்து இவர்கள் இருவரும் எத்தனை முறை பேசியிருக்கிறார்கள்..?

நாட்டின் முதல் குடிமகன் என இந்திய ஜனாதிபதியைக் குறிப்பிடுகிறோம். இப்பதவியில் இருப்பவர் வடமாநிலத்தில் உள்ள ஒரு கோயிலுக்குச் செல் கிறார். கடவுளை வணங்கிவிட்டு அவர் சென்றதும் அவர் நின்ற இடங்களை எல்லாம் தண்ணீர் ஊற்றி கோயில் நிர்வாகம் கழுவுகிறது.

இச்சம்பவம் நடைபெற்றபோது தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணைத் தலைவராக இருந்தவர் யார் தெரியுமா..? இப்போது தமிழக பாஜகவின் தலைவராக இருப்பவர்தான்!ஆனால், ஜனாதிபதிக்கு நேர்ந்த அவமானம் குறித்து ஒரு வார்த்தைகூட அவர் பேசவில்லை. எங்கள் தரப்பில் இருந்து நாங்கள் புகார் அளித்தோம். ஆணையத்திலிருந்து கடிதம் மட்டுமே வரும்.

இது என்ன போஸ்ட்மேன் வேலையா..?’’ என்ற பழனிச்சாமி, நீதிமன்றங் களில் வன்கொடுமை வழக்குகள் நீர்த்துப்போகக் காரணம் அரசுத் தரப்பு வழக்கறிஞர்களும் புலன்விசாரணை அதிகாரிகளுமே என்கிறார்.‘‘வன்கொடுமை சம்பவம் ஒரு மாதிரி இருக்கும். புகாரோ வேறு மாதிரி எழுதப்பட்டிருக்கும். விசாரணை இதற்கெல்லாம் மாறாக நடைபெற்றிருக்கும்.

இதையெல்லாம் மீறி ஒன்றிரண்டு வழக்குகள் நீதிமன்றம் செல்கின்றன. அப்போது சம்பவம் / புகார் / விசாரணை எல்லாம் ஒன்றுக்கு ஒன்று தொடர்பில்லாமல் இருப்பதைச் சுட்டிக்காட்டி எதிர்த்தரப்பில் வாதாடி வழக்கை எளிதாக உடைக்கிறார்கள்.

இப்படித்தான் நிறைய வழக்குகள் அப்பீலுக்குக் கூடப் போகாமல் நீர்த்துப் போகின்றன. அரசுக் தரப்பு வழக்கறிஞரோ, ‘பாதிக்கப்பட்டவர்கள் யாரும் சொல்லவில்லை...’ என்று கூலாக சொல்லிவிட்டு செல்கிறார். இப்படிப்பட்ட சூழலில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எப்படி நீதியின் மீது நம்பிக்கை வரும்..?
இதற்கு ஒரே தீர்வு, தலித் மக்கள் கல்வி கற்று முற்போக்காக சிந்திக்கத் தொடங்குவதுதான்.

பழைய கட்டமைப்புகளை உடைத்து அவர்கள் வெளியில் வரவேண்டும்.இன்று கல்வி கற்க வேண்டும் என்ற விழிப்புணர்வு தலித் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. ஆனாலும் வறுமை காரணமாக பலரும் பாதியிலேயே படிப்பை நிறுத்திவிடுகின்றனர். இந்நிலை மாறவேண்டும்...’’ என்கிறார் பழனிச்சாமி.

அன்னம் அரசு