பள்ளிகள் எப்போது திறக்கும்..?தமிழகத்தில் கொரோனா தீவிரமடைந்துள்ளது. இதனால் பள்ளிகள் திறக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஆன்லைனில் பாடம் கற்பிக்கப்படும் என்று அரசு அறிவித்ததுடன் சர்ச்சையும் எழுந்தது. உடனே ‘‘பள்ளி திறப்பது பற்றி இன்னும் முடிவு செய்யப்படவில்லை.
ஆனால், 10க்கும் மேற்பட்ட தொலைக்காட்சிகளில் அட்டவணைப்படி பாடம் நடத்தப்படும்...’’ என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம் அளித்தார். இது எந்தளவுக்கு சாத்தியம் என்றறிய கல்வியாளர் - முனைவர் எஸ்.காயத்ரியை சந்தித்தோம்.

பள்ளிகள் எப்போது திறந்தால் மாணவர்களுக்கு நல்லது?
சமுதாயத்தில் அனைத்து நிலையில் இருப்பவர்களையும் சமன் செய்வது கல்வியே. அதனால் கல்வி வேண்டும் என்றே கீழ்த்தட்டிலிருந்து மேல்தட்டு மக்கள் வரை அனைவரும் நினைப்பார்கள்.

ஆனால் இந்த கொரோனா சமயத்தில் கல்வியைவிட நோய்த் தொற்றை தடுப்பதே முதன்மையான விஷயமாகிறது. அதேநேரம் பள்ளிகள் திறக்கப்படுவது தள்ளிப் போகப் போக 2021ம் ஆண்டு பொதுத் தேர்வு எழுதவிருக்கும் மாணவர்களின் பெற்றோருக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது.

எனவே, ஐந்தாம் வகுப்பு வரை உள்ள குழந்தைகளுக்கு கொரோனா தொற்று முழுவதும் நீங்கிய பிறகும்; ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை நோய்த்தொற்று குறைந்த பிறகு ஒரு வகுப்பை இரண்டாகப் பிரித்து ஒருநாள் ஒரு பிரிவினரும் மறுநாள் அடுத்த பிரிவினரும் வகுப்புக்கு வருவதுபோலவும் அரசு பள்ளியைத் திறக்கலாம்.

ஒன்பதாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களையும் இப்படி ஒவ்வொரு வகுப்பையும் இரண்டாகப் பிரித்து காலையில் ஒரு பிரிவினருக்கும் மதியத்தில் மற்றவர்களுக்குமாக சமூக இடைவெளியுடன் அமர வைத்து செப்டம்பர் மாதத்துக்குப் பிறகு வகுப்புகள் நடத்த வழிவகை செய்யலாம்.

மாணவர்கள் கடந்த 4 மாத காலமாக பள்ளிக்குச் செல்லாமல் வீட்டில் உள்ளனர். இப்போது பள்ளிகள் திறந்தால் மாணவர்கள் ஆர்வத்துடன் வருவார்களா?இதே நிலை தொடர்ந்தால் பிள்ளைகளுக்கு கல்வியில் ஆர்வம் இல்லாமல் போகலாம். ஆப்பிரிக்காவில் இந்த 5 மாத இடைவெளியில் இடைநிற்றல் அதிகமாகியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவர்களை பள்ளிக்கு வரவைக்க வேண்டியது பெற்றோர் மற்றும் அரசின் கடமை.
இப்பொழுது இருக்கக்கூடிய சூழலில் ஆன்லைன் கல்வி மட்டுமே சாத்தியம். கொரோனா குறைந்த பிறகுதான் நேரடி வகுப்புகளைப் பற்றி அரசோ பெற்றோர்களோ ஆசிரியர்களோ யோசிக்க முடியும். ஏனெனில் இது பிள்ளைகளின் உயிர் சார்ந்த விஷயம்.

பத்துக்கும் மேற்பட்ட தொலைக்காட்சிகளில் கால அட்டவணைப்படி பாடங்கள் நடத்தப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அறிவித்திருப்பது சாத்தியமா..? இன்று பெரும்பாலான வீடுகளில் இரண்டு குழந்தைகளுக்கு மேல் இல்லை. அது போலவே எல்லா வீடுகளிலும் ஒரு தொலைக்காட்சிப் பெட்டியும் ஒரு அலைபேசியுமாவது இருக்கின்றன.

அரசு அறிவித்துள்ள ஏற்பாடு தற்காலிகமானது. பிள்ளைகளுக்கும் கல்விக்குமான தொடர்பு அறுபடாமல் பார்த்துக் கொள்வதற்கான ஒரு நடவடிக்கை. இது வகுப்பறைக் கல்விக்கு மாற்று அல்ல. எனவே இந்தமுறை சாத்தியமாவதற்கு அதிக சாத்தியக்கூறுகள் இருக்கின்றன. இதில் ஆசிரியர்களுடன் நேரடித் தொடர்பில் இருப்பது சாத்தியமில்லை.

எனினும் பாடத்தின் அடிப்படைத் தன்மையை பிள்ளைகள் புரிந்து கொள்வதற்கு இந்த வழி உதவியாக இருக்கும்.கல்லூரிகள் மற்றும் பாலிடெக்னிக் போன்றவற்றில் செப்டம்பர் மாதத்திற்குள் செமஸ்டர் தேர்வு நடத்த வேண்டும் என்று யுஜிசி உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்திலுள்ள பல்வேறு கல்வி நிறுவனங்களில் கொரோனா வார்டுகள் ஏற்படுத்தப் பட்டுள்ளதால் தேர்வுகள் நடத்த முடியுமா?ஐஐடி முதல் தனியார் பல்கலைக்கழகங்கள் வரை பலவற்றில் இணையதளம் வழியே இறுதி வருட மாணவர்களுக்கு தேர்வுகளை நடத்தி முடித்து விட்டனர்.

அதுமட்டுமின்றி, முந்தைய பருவத்தேர்வுகளில் மாணவர்கள் பெற்ற சராசரி மதிப்பீட்டின் அடிப்படையில் மதிப்பெண்கள் அளித்து அவர்களின் கல்வி ஆண்டை முடிப்பது குறித்து தமிழகத்திலுள்ள தனியார் பல்கலைக்கழகங்களிலும் பரிசீலித்து வருகிறார்கள். எனவே சாத்தியமில்லை என கூறிவிட முடியாது.

10 மாணவர்களுக்கு ஓர் ஆசிரியர் என கண்காணித்து மூன்று மணி நேரத்தை ஒன்றரை மணி நேரம் என குறைத்து வீட்டிலேயே மாணவர்களை தேர்வு எழுத வைத்து அதனை கல்லூரியில் குறிப்பிட்ட ஈமெயில் முகவரிக்கு பதிவேற்றம் செய்து விடைத்தாள்களைத் திருத்தி மதிப்பெண் தருவதென ஆந்திரா, தெலுங்கானாவில் உள்ள பல பல்கலைக்கழகங்கள் முடிவு செய்துள்ளன.நாமும் இதுபோன்ற சாத்தியமான விஷயங்களைப் பரிசீலிக்கலாம்.    

ஏ.சுதாகர்