7.5% ஒதுக்கீடு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு நல்லதா ஏழரையா?



மருத்துவப் படிப்புகளுக்கு தேசிய அளவிலான நுழைவுத் தேர்விலிருந்து (நீட்) தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிக்கப்பட வேண்டும் என்று அனைவரும் வலியுறுத்தி வரும் நிலையில், இந்தத் தேர்வால் பாதிக்கப்பட்டிருக்கும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு நிவாரணம்போல 7.5% இடஒதுக்கீட்டை அறிவித்திருக்கிறது தமிழக அரசு.

மாநில பாடத்திட்டத்தின்படி ஆண்டுதோறும் மேல்நிலைக் கல்வியை முடிக்கும் சுமார் 8 லட்சம் தமிழக மாணவர்களில், கிட்டத்தட்ட மூன்றில் இரு பங்கினர் அரசுப் பள்ளி களைச் சேர்ந்தவர்கள். ஆனால், நீட் தேர்வு நடைமுறைக்கு வந்த பிறகு கடந்த மூன்றாண்டுகளில் 14 அரசுப் பள்ளி மாணவர்கள் மட்டுமே மருத்துவப் படிப்புக்கான வாய்ப்பைப் பெற்றார்கள்.

அரசுப் பள்ளி மாணவர்கள் திறனில் குறைந்தவர்கள் இல்லை, தேர்ந்தெடுக்கும் முறையே மோசமானது என்று பல தரப்பினரிடமிருந்து கருத்துக்கள் வந்தன. இது தொடர்பாக அரசுக்கு பரிந்துரைக்க நியமிக்கப்பட்ட நீதிபதி பொன்.கலையரசன் தலைமையிலான குழு, 10% இட ஒதுக்கீட்டைப் பரிந்துரைத்தது. அரசு அதைக் குறைத்து 7.5% என்று அறிவித்துள்ளது.    

“ஒரு காலத்தில் பனிரெண்டாம் வகுப்பு முடித்தவுடன் மருத்துவத்திற்கென நுழைவுத்தேர்வு எழுத வேண்டும் என்ற நிலை மாறி, பனிரெண்டாம் வகுப்பு மதிப்பெண் மட்டுமே போதும் என்றானது. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக மத்திய அரசு மருத்துவப் படிப்பிற்கென அகில இந்திய அளவில் நுழைவுத்தேர்வு நடத்த வேண்டும் என முடிவெடுத்தபோது தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் கடுமையான எதிர்ப்புகள் கிளம்பின.

தமிழகத்தில் பலதரப்பு மக்களின் எதிர்ப்பை எல்லாம் பொருட்படுத்தாமல் அப்போதைய முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கையெழுத்திட, தமிழகமும் மத்திய அரசிற்கு இணங்கிப்போனது...” என்று பேச ஆரம்பித்தார் பேராசிரியர் சம்பத்குமார்.‘‘தேசிய தேர்வு முகமை எனப்படும் (National Testing Agency-NTA) அமைப்பு மருத்துவப் படிப்புகளுக்காக தேசிய தகுதி & நுழைவுத்தேர்வை (National Eligibility and Entrance Test - NEET) ஆண்டுதோறும் நடத்தி வருகிறது.

இதில் மத்திய அரசின் மருத்துவ பல்கலைக்கழக இடங்களில் மொத்தமாகவும், ஒவ்வொரு மாநிலத்தில் உள்ள இடங்களில் 15% மத்திய தொகுப்பு எனவும் கணக்கிடப்படும். இந்த இடங்களில் மத்திய அரசின் இட ஒதுக்கீட்டு அளவான எஸ்சி - 15%, எஸ்டி - 7.5%, ஓபிசி - 27%, இடபிள்யூஎஸ் - 10%,
பிடபிள்யூடி - 5% என்று மொத்தத்தில் 64.5% இடங்கள் இட ஒதுக்கீட்டின்படி நிரப்பப்படும். மீதமுள்ள இடங்களை அந்தந்த மாநிலங்கள் தங்களது இட ஒதுக்கீடு கொள்கையின் அடிப்படையில் நிரப்பு வார்கள்.

‘சமூக நீதித் தொட்டில்’ என்று அழைக்கப்படும் தமிழகம் ஏற்கனவே 69% இட ஒதுக்கீட்டைப் பின்பற்றி வருகிறது. SC - 15%, SC.A - 3%, ST - 1%, BC - 26.5%, BC.M - 3.5%, MBC - 20% என இருந்த இட ஒதுக்கீட்டில் இப்போது புதிதாக அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீடு வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இதை கல்வியாளர்களும், பெற்றோர்களும், மாணவர்களும் வரவேற்றாலும் தமிழக அரசு இதை எப்படி அமல்படுத்தப் போகிறது என்ற கேள்வியும் எழுகிறது. ஏனெனில் இது வெறும் அறிவிப்பு மட்டுமே (Notification). இது அரசு ஆணையாக (Government Order) வரும்போதுதான் அதிலுள்ள நுணுக்கங்களைத் துல்லியமாக அறிந்துகொள்ள முடியும்.

மத்திய அரசு புதிதாக உருவாக்கிய பொருளாதார அடிப்படையில் உயர்சாதியினருக்கு வழங்க வேண்டிய (EWS) 10% குறித்து எவ்வித முடிவும் எடுக்கப்படாத நிலையில் கொரோனாவால் தமிழக முதல்வர் எடப்பாடியாருக்கு ஏற்பட்ட அவப்பெயரை மீட்கும் முயற்சியாக இதைப் பார்ப்பது தவிர்க்க இயலாது.

ஏற்கனவே தமிழகத்தில் உள்ள மருத்துவப் படிப்பிற்கான இடங்களில் மத்திய தொகுப்புக்கு 15% இடங்களை வழங்குவதாலும், கடந்த ஐந்து மாத காலமாக கொரோனா பரவலால்  நுழைவுத் தேர்வுக்கு மாணவர்கள் தயாராகாத நிலையிலும் இந்த ஆண்டு நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுக்கிறது.லட்சக்கணக்கான ரூபாயை நீட் நுழைவுத் தேர்வு பயிற்சிக்காக அனைவராலும் செலவழிக்க முடியாது. எனவே பணம் உள்ளவர்களுக்கு மட்டுமே கல்வி என்ற சமூக ஏற்றத்தாழ்வுகளை நீட் உருவாக்கி விட்டது.

நிர்வாகத் திறனற்ற அரசு இருக்கும் இந்த நேரத்தில், ஊரடங்கு காலத்தில் தமிழகம் முழுக்கவே மாநில அரசுக்கு எதிராக எதிர்ப்பு கிளம்பி வருகிறது. இதை சமாளிக்கவும் மக்களிடம் நல்ல பெயரை எடுக்கவும் தமிழக அரசு இப்படி அறிவித்துள்ளது. எனவே இதை வெறும் கண்துடைப்பாகப் பார்க்கவேண்டிய நிலை உருவாகியுள்ளது...” என அழுத்தமாகச் சொல்கிறார் சம்பத்குமார்.

பேராசிரியர் ப.சிவகுமாரும் இதை எதிரொலிக்கிறார். ‘‘வீட்டு வேலை, கூலி வேலை… செய்பவர்களின் பிள்ளைகளும், ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களும் பெரும்பான்மையாக அரசுப் பள்ளிகளில் படிக்கிறார்கள். மத்தியதர வர்க்கத்தினர் அரசுப் பள்ளிகளில் படிப்பது குறைவு.

எனவேதான் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு என தனி இடஒதுக்கீடு வழங்கவேண்டும் என பலகாலமாக குரல் கொடுத்து வருகிறோம்.
இதை ஏற்று மருத்துவம் உள்ளிட்ட தொழிற்கல்வி படிப்புகளில் கிராமப்புற மாணவர்களுக்கான 15% இட ஒதுக்கீட்டை 1996ல் அப்போதைய முதல்வர் கலைஞர் தொடங்கி வைத்தார். அதன் முக்கியத்துவத்தை உணர்ந்த ஜெயலலிதா 2001ல் அதை 25% ஆக உயர்த்தினார்.  ஆனால், இந்த இடஒதுக்கீடு நீதிமன்றத்தால் ரத்துசெய்யப்பட்டது.

அதுபோன்ற ஒரு நிலை இந்த புதிய ஒதுக்கீட்டுக்கும் நேராமல் பார்த்துக்கொள்ள வேண்டியது தமிழக அரசின் கடமை. நீட் தேர்வை எதிர்த்து உச்ச நீதிமன்றம் போனோம். நீட்டிற்கு தடை வாங்க முடியவில்லை. காரணம், அனைத்துக் கட்சியினருடன் சேர்ந்து தமிழக அரசு நீட்டுக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுக்கவில்லை.எல்லாவற்றிற்கும் நீதிமன்றங்களைத்தான் அணுகி தீர்வு காண முற்படுகிறோம். இதற்கு சமமாக மக்கள் திரள் போராட்டங்கள் வழியாகவும் நல்லதொரு முடிவை எடுக்க முடியும் என்பதை நம்ப மறுக்கிறோம்.

நீட் ஒரு போட்டித் தேர்வு. இதற்காக இரண்டு ஆண்டுகளுக்கும் மேல் பல லட்சங்களை செலவழித்து பணக்கார வீட்டுப் பிள்ளைகள் பயிற்சி எடுக்கிறார்கள். இதற்கு வழி இல்லாத அரசுப் பள்ளி மாணவர்களுக்கு அரசுத் தரப்பில் நீட் பயிற்சி தரப்படுகிறது. ஆனால், அரசு கொடுக்கும் பயிற்சியை எடுப்பவர்களால் ஏன் நீட் தேர்வில் வெற்றி பெற முடியவில்லை..? இதுகுறித்தும் நாம் யோசிக்க வேண்டும்.  

இந்த புதிய ஒதுக்கீடு அரசுப் பள்ளியில் பயிலும், ஒடுக்கப்பட்ட பிரிவைச் சேர்ந்த, வறிய நிலையில் உள்ள மாணவர்களுக்கு உதவி செய்யக் கூடியதாக இருக்கும். ஆனால், நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்யப் போராடு வதே நிரந்தரத் தீர்வுக்கு வழி வகுக்கும்.போலவே மருத்துவம், பொறியியல், வேளாண்மை… போன்ற கல்விகளும், அதைத் தீர்மானிக்கும் உரிமையும் மாநில அரசிடம் இருக்க வேண்டும்.அரசுப் பள்ளிகளைக் காப்பாற்ற அதிக நிதிகளை ஒதுக்குவது, போதிய ஆசிரியர்களை நியமிப்பது, கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவது… மட்டுமே சாலச் சிறந்தது. அதை விட்டுவிட்டு இப்படி இடஒதுக்கீட்டு அறிவிப்பை வெளியிடுவது வெறும் கண்துடைப்புதான்...” என்கிறார் பேராசிரியர் ப.சிவகுமார்.

அன்னம் அரசு