பழமையடையாத பழைய படம்!ஊரடங்கு, பலரின் வாழ்க்கையை வீட்டுக்குள்ளேயே முடக்கிப் போட்டுவிட்டது. மனச்சோர்வும் மன அழுத்தமும் சர்வசாதாரணமாகிவிட்டது. எப்போது பயமில்லாமல் வெளியே போவோம்; பழைய நாட்கள் எப்போது திரும்பி வரும் என்று ஏக்கத்துடன் மக்கள் காத்துக்கிடக்கிறார்கள்.
இந்நிலையில் எல்லாவற்றையும் மறந்து இன்னொரு உலகிறகுப் போய் இன்னொரு வாழ்க்கையை வாழ்ந்தது போன்ற ஒரு புத்துணர்வைத் தருகிறது அமேசான் ப்ரைமில் காணக் கிடைக்கும் ‘ஜிந்தகி நா மிலேகி டோபாரா’ என்கிற இந்திப்படம்.

அர்ஜுன், இம்ரான், கபீர்- இம்மூவரும் பள்ளிப்பருவத்தில் இருந்து இணைபிரியா நண்பர்கள். குடும்பத் தொழிலைக் கவனித்துக் கொண்டிருக்கும் கபீருக்கு கோடீஸ்வர வீட்டுப்பெண்ணுடன் திருமணம் நிச்சயமாகிறது. அந்தத் திருமணத்தில் கபீருக்கு விருப்பமில்லை.

இதை அவனால் வெளியே சொல்லபும் முடியவில்லை. விளம்பரத்துறையில் காப்பி ரைட்டராக இருக்கிறான் இம்ரான். ஜாலியான இளைஞன். அம்மாவின் வயிற்றில் இருக்கும்போதே அப்பா குடும்பத்தை விட்டுச் சென்றுவிட்டார். அப்பாவை எப்படியாவது தேடிக் கண்டுபிடிக்க வேண்டும். தன்னையும் அம்மாவையும் விட்டுச் சென்றதற்கான காரணத்தை அறிய வேண்டும் என்ற கவலையிலே இருப்பவன்.

இந்த இருவரில் இருந்தும் வேறுபட்டவன் அர்ஜுன். எப்போதும் பணம் பணம் என்று வேலையிலே குறியாக இருப்பவன். அவனைப் பொறுத்தவரை வாழ்க்கையில் முக்கியமானது பணம்தான்.கபீரின் கல்யாணத்துக்கு முன் நண்பர்கள் மூவரும் ஸ்பெயினுக்கு ரோட் ட்ரிப் அடிக்க திட்டமிடுகிறார்கள். இது பல வருட திட்டம். ஆரம்பத்தில் வேலை இருக்கிறது, வர முடியாது என்று சொல்லும் அர்ஜுன் பிறகு சம்மதிக்கிறான்.

வெவ்வெறு இடங்களில் இருந்து புறப்படும் நண்பர்கள் ஸ்பெயினில் சந்திக்கிறார்கள். எல்லாவற்றையும் மறந்து மூன்று வாரங்கள் ஸ்பெயினில் மூழ்கிக் கிடக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். ஆனால், பயணத்தின்போது வேலை பற்றிய நினைப்பிலே இருக்கிறான் அர்ஜுன்.

அப்பாவைப் பற்றிய ஏக்கத்தில் இம்ரானால் எதையும் சரியாக என்ஜாய் செய்ய முடியவில்லை. கபீருக்கோ வருங்கால மனைவி அடிக்கடி கால் செய்து அவனை சந்தேகிக்கிறாள். இந்நிலையில் நண்பர்களுக்கு கடலில் டைவ் அடிக்க கற்றுக்கொடுக்கும் லைலா அறிமுகமாகிறாள். லைலா மீது காதலில் விழுகிறான் அர்ஜுன். இப்போது நால்வரும் ஸ்பெயினைச் சுற்றுகிறார்கள்.

இந்தப் பயணம் அவர்களின் வாழ்க்கையில் என்னென்ன மாற்றங்களை உண்டாக்குகிறது என்பதே கிளைமாக்ஸ்.ஸ்பெயினில் வலம் வந்ததைப் போன்ற உணர்வையும், அங்கே நடக்கும் எருதுச் சண்டை, தக்காளி திருவிழாக்களில் பங்கேற்றதைப் போன்ற அனுபவத்தையும் தருகிறது இந்தப் படம்.
ஹிருத்திக் ரோஷன், அபய் தியோல், பர்ஹான் அக்தர், காத்ரினா கைப் என்ற நட்சத்திரப் பட்டாளத்துக்கு மத்தியிலும் ஓர் இயக்குநரின் படமாகவே மிளிரும் ‘ஜிந்தகி நா மிலேகி டோபாரா’வை இயக்கியவர் ஜோயா அக்தர்.