கேமரா வீடு!கொரோனாவுக்கு நடுவில் கர்நாடகாவைக் கலக்கிக்கொண்டிருக்கிறது கேமரா வீடு. ராட்சத டிஎஸ்எல்ஆர் கேமரா போல காட்சியளிக்கும் இந்த மூன்று அடுக்கு மாடி வீடு பெல்காம் மாவட்டத்தின் சுற்றுலாத்தலமாகவே மாறிவிட்டது. புகைப்படக்கலையின் மீது தீராத காதல்கொண்ட ரவி மற்றும் அவரது மனைவி இணைந்து கேமரா வீட்டை தங்களின் மூன்று மகன்களுக்காக கட்டியிருக்கின்றனர்.

மூன்று மகன்களுக்கும் கேனான், எப்சன், நிக்கான் என்று கேமரா பிராண்டுகளையே பெயர்களாக வைத்திருப்பது ஹைலைட். வீட்டின் பெயர் கூட ‘க்ளிக்’ என்பது ஆச்சர்யம். ஜன்னல்களை லென்ஸ், மெமரி கார்டு, வியூ ஃபைண்டர் போல வடிவமைத்துள்ளனர்.

வீட்டின் உட்பக்க சுவர்கள் புகைப்படக்கலை சம்பந்தப்பட்ட கிராஃபிக்ஸ் காட்சிகளாக  டிசைன் செய்யப்பட்டுள்ளது. பழைய வீட்டை விற்றும், நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் கடன் வாங்கியும் கேமரா வீட்டை கட்டியிருக்கிறார் ரவி. இதன் கிளிக்குகள் இணையத்தில் லைக்குகளைக் குவித்து வருகிறது.

த.சக்திவேல்