சொப்ன தங்க ஸ்கலிதம்!கடந்த வாரம் கேரள மீடியாவை மையம் கொண்டிருந்த கேள்விதான் இது. யார் இந்த ஸ்வப்னா சுரேஷ்..?ஆனால் இன்று, அவரைப் பற்றி கேரள மீடியாக்கள் ஒரு திரைப்பட ஸ்கிரிப்ட் அளவுக்கான தகவல்களை வெளியிட்டு வருகின்றன. அந்தத் தகவல்கள் எல்லாமே அதிர்ச்சி ரகம்.
கடந்த காங்கிரஸ் ஆட்சியின் போது சோலார் பேனல் மோசடி வழக்கில் கேரளாவை உலுக்கிய பெயர் சரிதா நாயர் என்றால், இப்போது கம்யூனிஸ்ட் ஆட்சியைப் புரட்டிப் போடும் பெயர் தங்கக் கடத்தல் வழக்கில் சிக்கியிருக்கும் ஸ்வப்னா சுரேஷ் என்கின்றன மலையாள ஊடகங்கள்.  

ஏனெனில், இரண்டு வழக்கிலும் முக்கிய குற்றவாளியாக குற்றம் சாட்டப்பட்டவர்கள் பெண்கள். அதுமட்டுமல்ல. முதல் வழக்கில் கேரள முதல்வராக இருந்த உம்மன் சாண்டி பெயர் அடிபட்டது. இதனால், எதிர்க்கட்சியான கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டத்தில் குதித்தனர். அதுபோல, இந்த வழக்கு இப்போதைய முதல்வர் பினராயி விஜயனை மையப்படுத்தி சுழன்று வருகிறது. இப்போது காங்கிரஸும், பிஜேபியும் இந்தப் பிரச்னையை கையில் எடுத்துள்ளன. இதனால், கொரோனா காலத்திலும் இந்த வழக்கு பரபரக்கிறது.

கடந்த ஜூலை 4ம் தேதி திருவனந்தபுரத்திலுள்ள ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தூதரகத்திற்கு அதன் வர்த்தக பொறுப்பாளர் ரஷீத் பெயரிட்டு ஒரு பார்சல் வந்தது. சுமார் ஐம்பது கிலோ எடை கொண்ட அந்தப் பார்சலில் தூதரகம் ஆர்டர் செய்த பேரீச்சை, ஓட்ஸ் உள்ளிட்ட பொருட்களுடன் 30 கிலோ தங்கமும் வந்ததுதான் பிரச்னை. இதன்மதிப்பு சுமார் 14 கோடி ரூபாய் என்கிறார்கள்.  

இந்தத் தகவல் முன்கூட்டியே கஸ்டம்ஸ் அதிகாரிகளுக்குக் கசிய, அந்தப் பார்சலை வாங்க யார் வருவார்கள் என்பதை அவர்கள் ரகசியமாகக் கண்காணித்தனர். அப்போது தூதரகத்தின் முன்னாள் பிஆர்ஓவான சரீத்குமார் அங்கு வந்து சேர, உடனடியாக அவர் கஸ்டம்ஸ் வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டார்.

வியன்னா மாநாட்டு ஒப்பந்தத்தின்படி தூதரகத்தின் பார்சலைத் திறக்க உயரதிகாரி களின் அனுமதி பெற வேண்டும். இதனால், தில்லியிலுள்ள
வெளியுறவுத் துறை மற்றும் எமிரேட்ஸ் தூதர் ஆகியோரிடம் கஸ்டம்ஸ் அதிகாரிகள் அனுமதி பெற்று பார்சலைத் திறந்து பார்த்தனர்.
அதில் முப்பது கிலோ தங்கம் இருந்தது. அதிர்ச்சியடைந்தவர்கள் சரீத்குமாரிடம் அதிரடியாக விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது சரீத்குமாருடன் பணியாற்றிய முன்னாள் தூதரக ஊழியரான ஸ்வப்னா சுரேஷ்தான் இதன் மையம் என்பதும், இப்படி தூதரகத்தின் வழியாக பார்சல் வருவது முதல் முறையல்ல என்பதும் தெரிய வந்தது. அந்நேரமே யார் இந்த ஸ்வப்னா சுரேஷ் என்கிற கேள்வி கஸ்டம்ஸ் அதிகாரிகளுக்கு எழுந்தது.

கேரளத்தைப் பூர்வீகமாகக் கொண்ட ஸ்வப்னா சுரேஷ், பிறந்து வளர்ந்ததெல்லாம் ஐக்கிய அரபு எமிரேட்ஸில். மலையாளம், ஆங்கிலம், அரபிக் என பன்மொழி திறமை கொண்டவர். இதனால், செல்வாக்குள்ளவர்களுடன் மிக எளிதாக அவரால் நெருக்கத்தை ஏற்படுத்த முடிந்துள்ளது. இதில் பல உயரதிகாரி களும் அடக்கம்.  

துபாயில் ஒரு டான்ஸ் பாரின் முன்அலுவலக மேலாளராக தன்னுடைய வேலையைத் தொடங்கியவர், திருமணத்திற்குப் பிறகு திருவனந்தபுரத்திற்கு வந்தார். பெண் குழந்தை பிறந்த பிறகு கணவருடன் ஏற்பட்ட கருத்து மோதலினால் மீண்டும் துபாய்க்கே திரும்பினார். பின்னர், இரண்டாவது திருமணம் முடிந்து ஓர் ஆண் குழந்தை பிறந்தது தனிக்கதை.  

பிறகு மீண்டும் திருவனந்தபுரம் வந்தவர், சிறிதுநாட்கள் ஏர்இந்தியா சாட்ஸ் நிறுவனத்தில் பணியாற்றியுள்ளார். ஏர்இந்தியாவின் கூட்டுநிறுவனமான இது சரக்குகள் கையாளுதல் உள்ளிட்ட பணிகளைச் செய்கிறது. இதில் மேலதிகாரியாக இருந்த எல்.எஸ்.ஷிபு என்பவர் மீது 17 பெண்களின் போலி கையெழுத்துடன் பாலியல் புகார் கொடுத்துள்ளார் ஸ்வப்னா.

இது பொய்ப் புகார் எனக் கண்டுபிடித்தனர் குற்றப்பிரிவுப் போலீசார். உடனே, ஸ்வப்னா மீது விசாரணையைத் துவக்கயிருந்த நிலையில் போலீஸ் உயரதிகாரிகளின் தொடர்பால் விசாரணை அதிகாரிகளுக்குப் பல நெருக்கடிகளை ஸ்வப்னா தந்துள்ளார். பின்னர், அதிலிருந்து தப்பிய ஸ்வப்னா, ஏர்இந்தியா நிறுவனத்திலிருந்தும் வெளியேறினார்.

2016ல் திருவனந்தபுரத்தில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தூதரகம் திறக்கப்பட, அங்கே நிர்வாகச் செயலாளராகப் பணிக்குச் சேர்ந்தார்.இங்குதான் சரீத்துடன் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. இங்கேயும் ஸ்வப்னாவால் பிரச்னைகள் ஏற்பட்டு பலர் வேலையைவிட்டு நின்றுள்ளனர். 

ஸ்வப்னா தூதரகத்தின் முக்கிய நிகழ்ச்சிகள் அனைத்தையும் ஒருங்கிணைத்து நடத்தியுள்ளார். இதற்கு பல்வேறு அரசியல் தலைவர்களையும் அழைத்துள்ளார். இதனால், முக்கிய அரசியல்வாதிகள் மற்றும் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளின் பழக்கம் கிடைத்துள்ளது.

அப்படி ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட முதல்வர் பினராயி விஜயனுடன் ஸ்வப்னா இருக்கும் புகைப்படங்களைத்தான் இப்போது எதிர்க்கட்சியினர் வைரலாக்கி வருகின்றனர். ஸ்வப்னா அவ்வப்போது அந்த உயரதிகாரிகளுக்கு ஸ்ெபஷல் கிஃப்ட் அனுப்பி அவர்களுடன் தொடர்ந்து நட்பில் இருந்துள்ளார்.

ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் ஏற்பாடு செய்த ஹோலி விழாவிற்கு விருந்தினராக ஸ்வப்னா அழைக்கப்படும் அளவிற்கு அதிகாரிகளுடன் ஆழமான நட்பு இருந்துள்ளது. இதன் வழியாகவே கேரள முதல்வரின் முதன்மைச் செயலாளராகவும், தொழில்நுட்பத் துறைச் செயலாளராகவும் பதவி வகிக்கும் சிவசங்கருடன் நெருக்கமாகி இருக்கிறார். இருவரும் அடிக்கடி சந்தித்துப் பேசியுள்ளனர்.

இதனால், தூதரக வேலையை உதறிவிட்டு ஐடி துறையில் ஒப்பந்த அடிப்படையில் பணியில் சேர்கிறார். அதுவும் கேரள மாநில தகவல் தொழில்நுட்ப உள்கட்டமைப்பு நிறுவனத்தின் செயல்பாட்டு மேலாளராக! இதிலும் நிறைய நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார். கடந்த ஜனவரி 31ம் தேதி கோவளத்தில் நடந்த விண்வௌி தொழில்நுட்ப மாநாட்டிற்கான ஈவென்ட் மேனேஜராக இருந்துள்ளார் ஸ்வப்னா. இங்கேயும் உயரதிகாரி களுடனான நட்பை வளர்த்துக் கொண்டுள்ளார்.

ஆனால், ஸ்வப்னா படித்தது வெறும் பத்தாவது வகுப்பு வரைதான் என்கிறார்கள். பிறகெப்படி இந்தப் பணிக்கு வந்தார்?
இப்போதைய விசாரணையில் அவர் மகாராஷ்டிராவிலுள்ள பாபாசாகேப் அம்பேத்கர் டெக்னாலஜிக்கல் பல்கலைக்கழகத்தில் போலியாக டிகிரி சான்றிதழ் பெற்றது தெரிய வந்துள்ளது.கடத்தல் தங்கம் பிடிபட்டதும் ஸ்வப்னாவுக்கு வேலை கொடுத்தது எப்படி என்கிற கேள்வி எழ, முதல்வரின் முதன்மைச் செயலாளர் பதவி மற்றும் ஐடி செயலாளர் பதவி இரண்டில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார் சிவசங்கர்.  

ஒருபக்கம் லைம்லைட் வாழ்க்கை, இன்னொரு பக்கம் இருண்ட நிழல் உலக வாழ்க்கை என இரண்டு வாழ்க்கையை வாழ்ந்து வந்திருக்கிறார் ஸ்வப்னா.
இந்நிலையில், இந்த வழக்கை என்ஐஏ எனப்படும் தேசிய புலனாய்வு நிறுவனம் கையிலெடுத்துள்ளது. அவர்கள் பெங்களூரில் ஸ்வப்னாவையும் அவருக்கு உதவிய சந்தீப் நாயர் என்பவரையும் கைது செய்துள்ளனர். தவிர, துபாயைச் சேர்ந்த ஃபைசல் ஃபரீத் மற்றும் கே.டி.ரமீஸ் இருவரையும் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்துள்ளனர்.  

இவர்கள் இந்தக் கொரோனா காலத்தில் தங்கக் கடத்தலை கார்கோ விமானம் வழியாக நடத்தியுள்ளனர். கடந்த ஜனவரியில் இருந்து தூதரக பார்சல் வழியாக பத்து முறைக்கு மேல் தங்கக் கடத்தல் செய்துள்ளனர். இப்போது பிடிபட்ட தங்கத்தை கஸ்டம்ஸ் அதிகாரிகளிடம் பிடிபடாமல் கொண்டு வந்திருந்தால் ஸ்வப்னாவிற்கும், சரீத்திற்கும் முப்பது லட்சம் ரூபாய் பணம் கிடைத்திருக்கும் என விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இப்போது விசாரணை சூடுபிடித்துள்ளது. இந்நிலையில் கேரள அமைச்சர் ஜலீல் ஸ்வப்னாவுடன் பேசியதும், சபாநாயகர் ஸ்ரீராமகிருஷ்ணன் ஸ்வப்னாவுடன் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வீடியோவும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. அதனால், இந்த விவகாரம் பரபரக்கத் தொடங்கியிருக்கிறது.

இதற்கிடையே எமிரேட்ஸ் அதிகாரிகளும் அந்தப் பார்சலை கேரளாவிற்கு அனுப்பியது யார் என உள்கட்ட விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர். லாஸ்ட் பட் நாட் லீஸ்ட்... இந்தியாவில் ஒரு தூதரகத்தின் வழியாக தங்கக் கடத்தல் நடந்துள்ளதும் அது வழக்காகப் பதிவாகி இருப்பதும் இதுவே முதல்முறை!

பேராச்சி கண்ணன்