முழு மகாபாரதத்தையும் தமிழில் மொழி பெயர்த்த தமிழன்!மகாபாரதத்தை தமிழில் முழுமையாக மொழிபெயர்த்திருக்கிறார் அருட்செல்வப் பேரரசன்.   இத்தகைய மொழிபெயர்ப்பை செய்யத் தூண்டியது எது?

வீடுதான். அப்பாவும் அம்மாவும் சதா மகாபாரதம் குறித்து பேசிய வண்ணம் இருப்பார்கள். அது கிட்டத்தட்ட விவாதம்தான்.
கேட்டுக் கேட்டு அதில் ஆர்வம் வந்துவிட்டது. அப்பாவும் அம்மாவும் தமிழ் ஆசிரியர்கள். திட்டுவதும் அன்பு காட்டுவதும் கூட மகாபாரதத்தை மேற்கோள் காட்டித்தான். அப்பொழுதுதான் ராஜாஜியின் ‘வியாசர் விருந்து’ புத்தகம் எனக்கு படிக்கக் கிடைத்தது. படித்தவுடன் அப்பா, அம்மா எழுப்பும் விவாதங்களில் எனக்கு கூடுதல் கேள்விகளும் எண்ணங்களும் முளைத்தன.

பிறகு கிசாரி மோகன் கங்குலியின் ஆங்கில மகாபாரதத்தை முழுமையாகப் படித்து முடித்தபிறகு அது குறித்த சில விவாதங்களில் சுலபமாக ஈடுபட முடிந்தது.பணியின் நிறைவில் உங்கள் மனம் நிறைந்திருக்கிறதா?

நான் கணினி வரைகலைத் தொழில் செய்து வருவதால் இரவு ஒன்பது மணி வரை அதிலேயே இருப்பேன். பிறகு இரவு 11 முதல் 2 மணி வரை மொழிபெயர்ப்புக்கு நேரம் ஒதுக்கினேன். ஏறக்குறைய 86,000 சுலோகங்கள், 2116 அத்தியாயங்கள், 100 உப பர்வங்கள், 18 பர்வங்களைக் கொண்ட மொழிபெயர்ப்புப் பணி இது. ஏழு வருடங்கள் எடுத்துக் கொண்டது. இது 16000 பக்கங்கள் கொண்ட மொழிபெயர்ப்பு.

பல மகாபாரதங்கள் இருந்தாலும் ம.வீ.ராமானுஜாச்சாரியாரின் கும்பகோணம் பதிப்பு முழுமையானது. நான் செய்திருப்பது கங்குலியின் மஹாபாரதத்தைச் சேர்ந்தது. குறிப்பெடுக்கவும் ஆய்வு மேற்கொள்ளவும் தற்கால எளிய மொழிநடையில் செய்திருக்கிறேன்.

அந்தக் காலத்தில் கணினி கூட இல்லாமல் நூலகம் நூலகமாக அலைந்து திரிந்த முன்னோர்களை வணங்குகிறேன். அவர்கள் அனுபவித்த இன்னல்களை கொஞ்சம் கூட அனுபவிக்காத எனக்கு அவர்களின் பணியினை நினைக்கும் போது அவர்கள் கடவுளாகத் தோன்றுகிறார்கள்!

செய்தி: நா.கதிர்வேலன்

படங்கள்: ஆ.வின்சென்ட் பால்