தல! sixers story-9



30 கிலோமீட்டரைக் கடக்க 5 மணி நேரம்!

உலகக் கோப்பையை வென்ற பதினைந்து இந்திய வீரர்களும் சூட்டோடு சூடாக அடுத்த இரண்டு நாட்களுக்குள்ளாகவே தாயகம் திரும்பினார்கள்.

செப்டம்பர் 26, 2007.மும்பை சத்திரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையத்தை நோக்கி அந்த விமானம் வந்து கொண்டிருந்தது.
வானம் மேகமூட்டத்துடன் இருந்தது.கையில் இருந்த கோப்பையைப் பார்த்துக் கொண்டே கீழே தாயக மண்ணைப் பார்த்தார் தோனி.

விமான நிலையத்தைச் சுற்றி எறும்புகள் போல பல்லாயிரம் மக்கள் திரண்டிருந்தது அவருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.அருகிலிருந்த வீரர்களிடம் காட்டினார்.குறிப்பாக சேவாக்கிடம்.“யாரோ முக்கியமான அரசியல் விஐபியை வரவேற்கக் காத்திருக்கிறார்கள் போலிருக்கிறது… அப்படியே பேரணியா போவாங்க...” என்றார் சேவாக்.

தில்லிக்காரர் ஆச்சே? தில்லி விமான நிலையத்தில் இதுபோல அரசியல் விஐபிகளுக்கு தரப்பட்ட எத்தனை வரவேற்புப் பேரணிகளைப் பார்த்திருப்பார்?
யுவராஜ்சிங்தான் சந்தேகத்தோடு சொன்னார். “ஒருவேளை நம்மை வரவேற்க கூடியிருப்பார்களோ?”“நம்மையா? தில்லியில் ஆறு மாசத்துக்கு முன்னாடி கொடுத்த வரவேற்பை அதுக்குள்ளே மறந்துட்டியா யுவி?” தோனிதான் கேட்டார்.

“ஒரு பஸ்சுலே ஏத்தி பேய் வேகத்திலே போலீஸ் ஸ்டேஷனுக்கு கூட்டிட்டுப் போய் காப்பாத்தினாங்களே? மறக்கவா முடியும்?” சிரித்துக் கொண்டே சொன்னார் சேவாக்.“அப்ப நாம வெறுங்கையோட வந்தோம். இப்ப உங்க கையிலே என்ன இருக்குன்னு பாருங்க…” யுவராஜ் சுட்டிக்காட்ட, தான் ஏந்தியிருந்த கோப்பையை கண்கள் மின்னப் பார்த்தார் தோனி.
“இருந்தாலும் எனக்கு நம்பிக்கையில்லை…”
இதற்குள் விமானம் தரையிறங்கி இருந்தது.

வெற்றி வீரர்களை தாயக மண்ணில் முதலில் வரவேற்றது மழை.சடசடவெனப் பொழிந்த மழையைத் தவிர்க்கும் பொருட்டு, விறுவிறுவென விமான நிலையத்துக்குள் ஓடினார்கள் வீரர்கள்.வேகமாக ஓடி வந்துகொண்டிருந்த தோனியை இருகரங்கள் மறித்து அப்படியே அணைத்துக் கொண்டன.
அவை, சரத்பவாரின் கரங்கள்! அப்போதைய மத்திய அமைச்சர். கிரிக்கெட் கண்ட்ரோல் போர்டின் தலைவரும் கூட.
“சார்… நீங்க இங்க…” தழுதழுத்தார் தோனி.

உடன் வந்த வீரர்களுக்கும் இன்ப அதிர்ச்சி.அமைச்சரே தங்களை வரவேற்க நேரடியாக வந்து நிற்பார் என்று எவரும் எதிர்பார்க்கவில்லை.
“ஏன், உங்களை வரவேற்க நான் வரக்கூடாதா?”“இருந்தாலும் ஏர்போர்ட்டுலயே எதிர்பார்க்கலை சார்…”
“மூணு நாள் முன்னாடிதானே போனில் பேசினோம். அப்ப நீங்க என்ன சொன்னீங்க?”
“என்ன சொன்னேன்?”

“கோப்பையோட வர்றோம் சார். பாராட்டு விழாவுக்கு ஏற்பாடு பண்ணுங்கனு சொன்னீங்களா இல்லையா?”
அப்போதுதான் நினைவு வந்தவர் போல தன் கையிலிருந்த கோப்பையைத் தூக்கி சரத்பவாரிடம் கொடுத்தார் தோனி.
ஒவ்வொரு வீரராக சரத்பவாரைக் கட்டியணைத்து தங்கள் மகிழ்ச்சியைத் தெரிவித்தார்கள்.

அங்கு சரத்பவார் மட்டுமல்ல.மகாராஷ்டிர அமைச்சரவையே வீரர்களை வரவேற்கத் திரண்டிருந்தது!முதலமைச்சர் விலாஸ்ராவ் தேஷ்முக் உட்பட அமைச்சர்கள் பலரும், கிரிக்கெட் கண்ட்ரோல் போர்ட் முக்கியஸ்தர்களும், வெங்சர்க்கார் தலைமையிலான தேர்வுக்குழுவினரும் திரண்டிருந்தார்கள்.
இத்தகைய வரவேற்பை தோனி & கோ நினைத்துக்கூடப் பார்க்கவில்லை.

ஆறு மாதங்களுக்கு முன்பு இதேபோல தாயகம் திரும்பியபோது, தில்லியில் பட்ட அவமானங்களின் சுவடு மறைவதற்குள் இப்படியொரு வரவேற்பா?
“வெளிய வந்து பாருங்க. உங்களைப் பார்க்க மும்பையே திரண்டிருக்கு!’’ புன்னகையோடு சொன்னார் தேஷ்முக்.“நான்தான் அப்பவே சொன்னேனில்லை?” உற்சாகமாக தோனியின் தோள் தட்டி கிசுகிசுத்தார் யுவராஜ்சிங்.

வீரர்கள் விமான நிலையத்துக்கு வெளியே வந்து பார்க்கும்போது, காணும் திசையெல்லாம் மக்கள் கூட்டம்.“தோனி வாழ்க… இந்தியா வெல்க...” என்று விண்ணதிர கோஷம்.ஒவ்வொரு வீரரின் பெயரையும் சொல்லி வாழ்த்தொலிகள் முழங்கின.அருகில் வந்த சரத்பவார் சொன்னார்.“நேரா பாராட்டு விழாவுக்கு வந்திருங்க… வாங்கடே ஸ்டேடியத்தில் நடக்குது...”“இப்பவேவா சார்?”“ஆமா. இப்பவேதான். நீங்க வர்றதுக்கு எப்படியும் நாலஞ்சு மணி நேரம் ஆயிடும்… ஏர்போர்ட்டுலயே சாப்பிட ஏற்பாடு ஆகியிருக்கு…”விமான நிலையத்திலிருந்து வாங்கடே ஸ்டேடியத்துக்கு போக நாலஞ்சு மணி நேரமா?எல்லோருமே குழம்பினார்கள்.

“ஆமாம். பேரணியா வரப்போறீங்க…” சொல்லிவிட்டு சரத்பவாரும், மற்ற விஐபிகளும் கிளம்பினார்கள்.ஏர்போர்ட்டில் சிரமபரிகாரம் செய்துகொண்டு வீரர்கள் கிளம்பினர்.இரட்டை அடுக்கு பஸ் ஒன்று அவர்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
மாடியில் டாப் ஓப்பன்.

அதில் நின்றவாறே கையில் கோப்பையை ஏந்திக்கொண்டு வீரர்கள் வருவதாக ஏற்பாடு.சுமார் 30 கிலோமீட்டர் தூரம்.சாலையின் இருமருங்கிலும் சாரைசாரையாக மக்கள் நின்று கொண்டிருந்தனர்.காலை எட்டு மணிக்கே விமான நிலையத்துக்கு வந்துவிட்டார்களாம் ரசிகர்கள்.இப்படிப்பட்ட வரவேற்பையும், மக்களின் அன்பையும் சத்தியமாக தோனி & கோ எதிர்பார்க்கவில்லை.

கண்கள் மின்ன நெகிழ்ச்சியோடு மக்களைப் பார்த்து கையாட்டிக்கொண்டே வந்தார்கள்.தோற்றுவிட்டு வந்தால் அடிப்பார்கள் என்று தெரியும்.வென்றுவிட்டு வந்தால் இப்படியா அன்பைக் கொட்டுவார்கள்?ஆம். அதுதான் இந்திய கிரிக்கெட் ரசிகனின் மனநிலை.1971ல் முதன்முதலாக மேற்கிந்தியத் தீவுகள் மண்ணில் டெஸ்ட் சீரிஸ் வென்றுவிட்டு வந்த அஜித் வடேகர் தலைமையிலான இந்திய அணியையும் இப்படித்தான் பேரணி கூடி வரவேற்றார்கள்.

1983ல் ஒருநாள் கிரிக்கெட் கோப்பையை வென்றுவிட்டு வந்த கபில்தேவ் மற்றும் வீரர்களுக்கும் இப்படித்தான் பிரும்மாண்ட வரவேற்பு கொடுத்தார்கள்.
அந்த வரிசையில் இப்போது தோனியும் அவரது குழுவினரும் கவுரவப்படுத்தப்பட்டனர்.மக்களின் அன்புமழையில் நனைந்துகொண்டிருந்தவர் களை, அவ்வப்போது இயற்கை மழையும் குறுக்கிட்டு திறந்தவெளி பேருந்தில் வந்துகொண்டிருந்தவர்களைக் குளிர்வித்துக் கொண்டிருந்தது.
வாங்கடே ஸ்டேடியத்திலோ பரிசு மழை.ஒரே ஓவரில் ஆறு சிக்ஸர் விளாசியதற்காக யுவராஜ்சிங்குக்கு வாக்களித்தபடி போர்ஷே காரின் சாவியை வழங்கினார் கிரிக்கெட் கண்ட்ரோல் போர்ட் துணைத்தலைவர் லலித்மோடி.

விக்கெட்டுகளாக வீழ்த்தித் தள்ளிய ஆர்.பி.சிங்குக்கும் போனஸாக மெர்சிடிஸ் பென்ஸ் கார் கிடைத்தது.அணியில் இடம்பெற்ற பதினைந்து வீரர்களுக்கும் தலா ரூ.80 லட்சத்துக்கு செக் வழங்கினார் சரத்பவார்.“இந்த இளம் சிங்கங்கள் கிரிக்கெட்டை அதன் அடுத்த பரிமாணத்துக்குக் கொண்டு சென்றிருக்கிறார்கள்…” என்று முழங்கினார் பவார்.எல்லோரும் மகிழ்ச்சியில் திளைத்துக் கொண்டிருந்த வேளையில் தோனியின் அருகே வந்து, “அடுத்து?” என்று கேட்டார் லலித்மோடி.

வெறுங்கையை பேட் மாதிரி விளாசி ஹெலிகாப்டர் ஷாட் அடித்துக் காட்டினார் தோனி.லலித்மோடியின் மனதில் உடனே ஐபிஎல் போட்டிகளும், அதன் மூலம் திரளப் போகும் பல்லாயிரம் கோடிகளும் தோன்றின.தோனிக்கோ, 20 ஓவர் போட்டி கோப்பைக்கே இப்படிக் கொண்டாடுகிறார்களே, ஒருநாள் கோப்பை போட்டியை வென்று வந்தால் எப்படி கொண்டாடுவார்கள் என்று தோன்றியது!

(அடித்து ஆடுவோம்)  

- யுவகிருஷ்ணா

ஓவியம்: அரஸ்