பையனாக மாறி டீ விற்ற சிறுமி!கிருஷ்ணகிரியிலுள்ள புதுப்பேட்டையைச் சேர்ந்தவர் ரஹமத் பானு. இவருக்கு மூன்று பெண் குழந்தைகள் மற்றும் ஒரு பையன். கணவர் அயூப் பாஷா கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன்பே காலமாகிவிட்டார். வறுமையால் குடும்பம் தத்தளித்தது. இதனால் டீ விற்று குடும்பத்தைக் காப்பாற்றி வந்தார் ரஹமத் பானு.

இந்தக் கொரோனா காலத்தில் தன்னுடன் தன் ஒரு மகளையும், மகனையும் டீ விற்க அழைத்துச் சென்றுள்ளார்.இந்த விஷயம் தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்ட அதிகாரிகளுக்குத் தெரிய வர அவர்கள் இரண்டு குழந்தைகளையும் மாவட்ட குழந்தைகள் நல காப்பகத்திற்கு அனுப்பிவிட்டனர். இதனால் மனமுடைந்த ரஹமத் பானு தர்ணா போராட்டத்தில் குதிக்க, குழந்தைகள் மீண்டும் தாயுடன் இணைந்தனர்.  

‘‘என்னுடைய கணவர் புகையிலை வியாபாரம் பண்ணிட்டு இருந்தார். எதிர்பாராவிதமா அவர் ஒரு விபத்துல இறந்திட்டார். இதனால ரொம்ப கஷ்டப்பட்டோம். என் பெரிய பொண்ணு பெங்களூர்ல படிச்சிட்டு இருக்கும்போதே காதல் திருமணம் பண்ணிட்டு போயிட்டா.

இப்ப நான், இரண்டு பொண்ணு, பையனுடன் வாழ்ந்திட்டு வர்றேன். இதுல ஒரு பொண்ணு பத்தாவதும், அடுத்த பொண்ணு ஏழாவதும், பையன் இரண்டாவதும் படிக்கிறாங்க...’’ எனத் தன் வேதனையைப் பகிர்ந்தார் ரஹமத் பானு.

‘‘கணவர் இறந்ததால ஆதரவற்ற விதவை பென்ஷனா ஆயிரம் ரூபாய் உதவித் தொகை அரசுகிட்ட இருந்து கிடைக்குது. ஆனா, அந்தப் பணம் குடும்பம் நடத்தப் போதுமானதா இல்ல. இதனால, நான் கிரீன் டீ தயாரிச்சு சேல்ஸ் பண்றது, டீ, சுக்கு காபி விற்கறதுனு இருந்தேன். ஆனாலும், நிரந்தர வேலைவாய்ப்புனு எதுவும் அமையல. இதனாலதான், மாவட்ட நிர்வாகத்துக்கிட்ட ஆவின் பூத் வச்சித் தர கடந்த அஞ்சு வருஷங்களா கோரிக்கை மனு கொடுத்துட்டு இருக்கேன்.

இன்னைக்கு சமுதாயத்துல பெண் குழந்தைங்களுக்குப் பாதுகாப்பு இல்ல. யாரையும் நம்பி விட முடியாது. இதனால, என் மூணாவது பொண்ணு ஆஹியாவுக்கு பாப் கட்டிங் அடிச்சு பையன் மாதிரி தைரியம் கொடுத்தேன். கொரோனாவால பள்ளி விடுமுறையில் பசங்க வீட்டுல சும்மா இருந்தாங்க. அதனால, ஆஹியாவும் பையனும் ஒருபக்கமாவும், நான் ஒரு பக்கமாவும் சுக்கு காப்பியும், டீயும் வித்திட்டு வந்தோம். ஒருநாளைக்கு 150 ரூபாய் கிடைக்கும்.

இதைப் பார்த்துதான் அதிகாரிகள் குழந்தைகளை வேலைக்கு அனுப்பினது தப்புனு காப்பகத்துக்கு அழைச்சிட்டுப் போயிட்டாங்க. நான், சின்ன பசங்கள வீட்டுல தனியா விடவேண்டாம்னுதான் கூட அழைச்சிட்டு போனேன். அது தப்பாகிடுச்சு. இப்ப, முன்னாள் நகர்மன்றத் தலைவர் பரிதா நவாப் அம்மாவால என் குழந்தைங்க மீண்டும் வந்துட்டாங்க. எனக்கு கணவர் பக்கம் இருந்தோ, உடன் பிறந்தவங்ககிட்ட இருந்தோ எந்த உதவியும் இல்ல.

எனக்கு 2006ம் ஆண்டு கலைஞர் முதல்வரா இருந்தப்ப, ஏழ்மையையொட்டி மூணு சென்ட் இடம் கொடுத்தார். அங்க குடிசை போட்டு இருந்தோம். ஆனா, அந்த இடத்துக்கு பட்டா கொடுக்காம விட்டுட்டாங்க. இதுக்கும் கடந்த அஞ்சு வருஷமா அலையறேன்.

இப்ப என் அம்மா இறந்துட்டதால அவங்க வீட்டுல இருக்கேன். எனக்கு நிரந்தரத் தொழிலா ஆவின் பூத் கிடைச்சா அதை வச்சு என் பசங்கள நல்லா படிக்க வச்சிருவேன். அரசு அதுக்கு உதவி செய்யணும்...’’ என்கிறார் ரஹமத் பானு.

செய்தி: பி.கே.

படங்கள்: சுரேஷ்